புதன், 13 ஜனவரி, 2021

 நூல் திறனாய்வு

ஹெகலும் மார்க்சும்:

ஹெகலியத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள உறவும் முரணும்

 

விமரிசனமும், நூலாசிரியரின் விளக்கமும்

இணைய வழியாக ஆன் டிமான்டில் பிரின்ட் செய்து விற்பனைச் செய்யும் வழியில்ஹெகலும் மார்க்சும்: ஹெகலியத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள உறவும் முரணும் இந்நுால் வெளியிடப்பட்டதால். தோழர் நாகரத்தினம், உடனுக்குடன் தன் நுாலில் மாற்றங்களைச் செய்வதும், புதியதாகச் சேர்க்க விரும்புவனவற்றைச் சேர்க்கவும் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது நுாலில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். எனக்குக் கடைசியாகச் செய்த மாற்றங்களோடு பிரின்ட் செய்யப்பட்ட புதிய பிரதி ஒன்று கொரியரில் கிடைத்தது.

அச்சில் பதிப்பிப்பதற்கும், இணையத்தில் மென்பொருளாகப் பதிப்பிப்பதற்கும் இடையிலான இடைவெளிகள் நமது காலத்தில் கறைந்து போய்க் கொண்டிருக்கிறது. இதில் உள்ள முக்கியமான சிக்கல், அச்சுப்பதிப்பின் நம்பகத்தன்மை (authenticity), பதிப்பு முறைமைகள், போன்றவை கேள்விக்குள்ளாகின்றன. இவை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினைகள்.

மென்பொருள் துறையில் versioning என்கிற ஒரு முறையைப் பின்பற்றுவார்கள். ஒவ்வொரு பதிப்பிற்கும் தரப்படுத்தப்பட்ட version எண்கள் கொடுப்பார்கள். இது அச்சுப் பதிப்பில் பயன்படுத்தப்படும் பதிப்பு ஆண்டு, பதிப்பு எண் போன்றவற்றின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவமாக இருக்கும். அது போன்ற ஒன்றையேனும் நாம் பயன்படுத்த வேண்டும். அது பக்கங்களை மேற்கோள்காட்டவும், எந்த versionயை முன்வைத்துப் பேசுகிறோம் எனக் குறிப்பிடவும், ஒவ்வொரு versionக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கண்டு கொள்ளவும், எத்தனை versionகள் வந்தன என அறிந்துக் கொள்ளவும், நம்மிடம் உள்ள version என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் பயன் உடையதாக இருக்கும். இதனை இது போன்ற முறையில் பதிப்பிக்கும் தோழர்கள் வருங்காலத்தில் கணக்கில் கொள்ள வேண்டும்.

என்னுடைய முதல் வாசிப்பனுபவத்தில் மனதில் வைத்திருந்தும் எழுதும் பொழுது மறந்துவிட்ட இந்நுால் குறித்த என்னுடைய ஒரு முக்கியமான விமர்சனத்தைப் பதிவு செய்துவிட விரும்புகிறேன். இந்நுாலில் உள்ளபொருள்முதல்வாத இயங்கியலும், இயங்கியல் பொருள்முதல்வாதமும் என்ற தலைப்பிலான அத்தியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பேச முயன்றால், அந்த அத்தியாயத்தில் சிக்கல் உள்ளதாகவும் தோன்றுகிறது.

பொருள்முதல்வாதியாகக் கருதப்படும் நபர் இயக்காவியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தால் அவர் கருத்துமுதல்வாதியாக மாறுவது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் புறநிலைக் கருத்துமுதல்வாதி என அறியப்பட்ட ஒருவர் இயங்கவியல் கண்ணோட்டத்தை முரணற்ற வகையில் கடைப்பிடிப்பாரானால் அவர் பொருள்முதல்வாதியாக மாறுவதற்காக வாய்ப்பு அதிகரித்த ஒன்றாகும் என்கிற தர்க்கத்தை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. இது போன்ற தர்க்க முடிவுகளுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? இப்படியெல்லாம் தத்துவத்தில் இயக்கத்தின் ஓட்டங்களையும், சுழிப்புகளையும், திசை மாறல்களையும் சுருக்கிவிட முடியுமா எனத் தெரியவில்லை.

கருத்துமுதல்வாதியாக இருந்த மார்க்ஸ் எங்கெல்ஸ் ஹெகலின் இயக்கவியலைப் பற்றிக் கொண்டதால் பொருள்முதல்வாதிகள் ஆனார்கள் என்றோ, பொருள்முதல்வாதியாக இருந்த ஃபாயர்பாக் இயக்கமறுப்பியல் வாதியாக இருந்ததால் பல அம்சங்களில் கருத்துமுதல்வாதியாகவும் இருந்தார் என ஒரு வேளை தோழர் கருதுகிறார் போலும். உண்மையில் ஃபாயர்பாக்கால் ஏன் முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதியாக மாறவில்லை என்பதற்கான காரணங்களை ஆராயும் எங்கெல்ஸ், அவருடைய தத்துவ நிலைப்பாடுகளைத் தாண்டி அவரின் வாழ்நிலையை விவாதத்திற்குக் கொண்டு வருவார். ஃபாயர்பாக் தொலைதுாரக் கிராமத்தில் வெளி உலகத்தோடும், பல்துறைகளிலான அன்றாட முன்னேற்றங்களிலிருந்தும் தன்னைத் துண்டித்துக் தனிமைப்படுத்திக் கொண்டதை முக்கிய விவாதமாக்குவார்.

பொருள் முதலா கருத்து முதலா என்பதைப் போலவே ஒரு எதிர்மையைப் பொருள்முதல்வாதத்துக்கும் இயக்கவியலுக்கும் இடையே இங்கு ஆசிரியர் உருவாக்குகிறார்.

பொருள்முதல்வாதம் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் இயங்கியல் எண்ணற்றப் பரிணாமங்களைக் கொண்டது என்கிற வாதம் குழப்பம் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

தத்துவப் பொருள் வேறு, இயற்பியல் பொருள் வேறு. தத்துவத்தில் பொருள் என்பது விரிந்த பொருள் கொண்டது. அது புறநிலை எதார்த்தம், சமூக நிகழ்வுகள், வாழ்வு, இயற்கை, அனைத்தும் பொருளே. சமூகக் கருத்துக்கள் கூடத் தத்துவத்தில் பொருள் வகைத் தன்மையதுதான். லெனின் இதனை மிகச் சுருக்கமாக மனித சிந்தனைக்கு வெளியே சுயேச்சையாக இருக்கும் அனைத்தும் பொருள்வகைத்தன்மையதே என்கிறார். பொருளின்றி இயக்கமோ, ஆற்றலோ இருக்கமுடியாது. இயக்கமும் ஆற்றலும் பொருளின் பண்புகள் என்பன போன்ற விளக்கங்களும், Materialism (பொருள்முதல்வாதம்) என்கிற தத்துவ அடிப்படையை விரித்துப் பொருள் கொள்ள வேண்டியதை வலியுறுத்துகின்றன.

புறப் பொருளுக்கும் அகப் பொருளுக்கும் இடையிலான உறவு முரண்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அவற்றிற்கு இடையிலான உறவை வலிமைப்படுத்துவதையும், முரணை மட்டுப்படுத்துவதையும் உறுதிப்படுத்துவது நடைமுறையே. அதைத்தான் மார்க்ஸ் மிக ரத்தினச் சுருக்கமாகப் பொருளைப் பற்றிய நமது அறிவு சரியா தவறா என்பது தத்துவப் பிரச்சினை அல்ல அது ஒரு நடைமுறை பிரச்சினை என்றார். பொருளை இயக்கத்தில் புரிந்து கொள்வது என்பதுதான் நம்மிடையே இருக்கும், நமக்குத் தேவைப்படும் பிரச்சினையே தவிர. பொருள்முதலா இயக்கம் முதலா என்பதல்ல.

அதுகாறுமானப் பொருள்முதல்வாதத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் பொழுது மார்க்ஸ் எதார்த்தம், புலனறிவு என்பனவற்றை வெறும் புறநிலையாக அல்லது ஆழ்ந்தச் சிந்தனைக்கு உரிய ஒன்றாகத்தான் புரிந்துக் கொண்டுள்ளது மாறாகப் புலனறிவு கொண்ட மனித நடவடிக்கையாக, செயல்பாடாக அகநிலையாகப் புரிந்துக் கொள்ளவில்லை. ஆகவேதான் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றாக, அந்தச் செயலுாக்கமுள்ள பகுதியை தோராயமாகக் கருத்துமுதல்வாதம் வளர்த்தது, அதே நேரத்தில் அது அதனை உண்மையான புலனுணர்வு உள்ள செயல் என்பதாகப் புரிந்து வளர்க்கவில்லை என்கிறார். ஆகக் கருத்துமுதல்வாதத்தில் இயக்கவியல் என்பது இயற்கையைப் பொருத்தவரை கடவுளின் அல்லது முழுமுதல் கருத்தின் செயலையும், மனித சமூகத்தைப் பொருத்தவரை கருவில் திருவானவர்களையும், மாபெரும் மனிதர்களின் செயலையும் பற்றியதாக உள்ளது. பொருள்முதல்வாத இயக்கவியலுக்கும் கருத்துமுதல்வாத இயக்கவியலுக்கும் இடையில் உள்ள கடக்க முடியாத அகழியைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆக இயக்கவியல் வழியாக இங்கிருந்து அங்குப் போகலாம், ஆனால் பொருள்முதல்வாத வழியாக அங்கிருந்து இங்கு வர முடியாது என்பதான எந்த உத்திரவாதமான வழித்தடங்களும் தென்படவில்லை.

மகேஷ், சென்னை

 

தோழர் மகேஷ் அவர்களின் விமரிசனத்திற்கு நூலாசிரியரின் விளக்கம்

தொழில்நுட்பம் சார்ந்து மகேஷ் அவர்களின் விமரிசனத்திலும், உணர்தலிலும் உண்மை இருப்பதை நானும் உணர்கிறேன். தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கில் சாதகமான அம்சங்களும் பாதகமாக அம்சங்களும் இருப்பதையும் உணர வேண்டியிருக்கிறது.

இப்போது விசயத்திற்கு வருவோம். பொருள்தான் அடிப்படையானது, பொருளிலிருந்துதான் கருத்துச் சார்ந்த அனைத்து விசயங்களும் உருவாகின்றன என்பதைப் பொருள்முதல்வாதம் வலியுறுத்துகிறது. பொதுவாக, மார்க்சியத்தைப் பயிலும்போது - மார்க்சியச் சிந்தனைக்கு அறிமுகமாகும்போது, ஒருவர் இத்தகைய மேலோட்டமான எளியப் பொருள்முதல்வாதத்தைக் கற்றுக் கொள்ளவும், கற்பிக்கவும் முடிகிறது. இதற்கு வெளிப்படையான காரணம், மார்க்சியத்தால் ஈர்க்கப்படுபவர்கள் பொதுவாக உழைக்கும் மக்களாகவோ அல்லது உழைக்கும் மக்களைச் சார்ந்தவர்களாகவோ இருப்பதுதான். ஆனால் பல பத்தாண்டுகளாக மார்க்சியராய் வாழ்ந்துவரும் நமக்கு, இயங்கியல் அணுகுமுறை இன்னமும் பெரும்பாலும் கைவரப் பெறாமல், இயக்கமறுப்பியல் சிந்தனையில் ஆட்பட்டிருக்கின்றோமே! அதற்கு என்ன காரணம்?

ஒட்டுமொத்த மார்க்சிய இயக்கத்தின் தலைமைப் பீடங்களில் இத்தகைய இயக்கமறுப்பியல் போக்குதான் உறைந்திருக்கின்றது என்பது எனது கருத்து.

பொதுவாக, இன்றைய மார்க்சியவாதிகளிடம் மேலோங்கி இருக்கும் எதிர்மறையான போக்கு கருத்துமுதல்வாதத் தத்துவமா? அல்லது இயக்கமறுப்பியல் அணுகுமுறையா? என்னைப் பொருத்தவரை, எல்லோரும் ஏதாவது ஒருவகையில் நடைமுறையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, பொருள்முதல்வாதிகள் என்று நம்மை ஒருவகையில் கூறிக்கொள்ளமுடியும். ஆனால் இயங்கியல்வாதிகள் என்று கூறமுடியுமா? முடியாது என்பது எனது கருத்து. பெரும்பான்மையோர் இயக்கமாறுப்பியல் வாதிகளாக இருக்கின்றோம் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

இன்று நிலவும் மார்க்சிய இயக்கங்கள் சமூகத்தை முற்றொருமையாக அணுகும் போக்குத் தீவிரமாக இருக்கின்றது. இதற்கு ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம். இந்தப் போக்குதான் சிந்தனை அளவில், பொருள்முதல்வாத்தை முற்றொருமையாக்கி விடுகிறது. இதுதான், இவ்வியக்கம் மாபெரும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருப்பதற்கான முதன்மையான அகநிலைக் காரணமாகும் என்று நான் கருதுகிறேன்.

பொதுவாக இயக்கமறுப்பியல் போக்கு ஆதிக்கம் செலுத்திவரும் இந்தச் சூழலில் முழுமையான இயங்கியலை வளர்த்தெடுப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்நூல் எழுதப்பட்டது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்து தங்களின் விமரிசனங்களுக்கு வருவோம்.

1.“பொருள் முதலா, கருத்து முதலா என்பதைப் போலவே ஒரு எதிர்மையை, பொருள்முதல்வாதத்துக்கும், இயக்கவியலுக்கும் இடையே இங்கு ஆசிரியர் உருவாக்குகிறார்.”

தாங்கள் இவ்வாறு கூறுவது வியப்பாக இருக்கிறது! வரலாற்றில் பொருள்முதல்வாதமும், இயங்கியலும் எப்போது இணைந்திருந்தன? வர்க்க சமூகத்தின் துவக்கக் காலத்தில் இருந்தே மனிதச் சிந்தனையின் பிரிந்தே பயணித்து வந்த பொருள்முதல்வாதமும், இயக்கவியலும் மீண்டும் இணைவதற்கு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது என்பது தங்களுக்குத் தெரியாதா?. மார்க்சியம் தானே இவ்விரண்டையும் ஒருங்கிணைத்தது. ஆனால் தற்போதைய நிலைமைகளில், மார்க்சியர்களின் சிந்தனையில், பொருள்முதல்வாதமும் இயங்கியலும் ஒருங்கிணைந்த நிலையில்தான் இருக்கின்றன என்பதைத் தங்களால் கூறமுடியுமா? பொருளும் இயக்கமும் ஒன்றுதான் என்பது கருத்தளவில் சரி. ஆனால் நமது சிந்தனையில் அவை எவ்வாறு பிரதிபலிக்கின்றன? நமது சிந்தனை அவற்றை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கின்றது? பொருளையும் இயக்கத்தையும் எதிர்மறையாக நான் ஒருபோதும் நிறுத்தவில்லை. நமது சிந்தனையில் அவை இரண்டும் ஒன்றிணைந்த வகையில் இருக்கவில்லை என்பதை உணர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

2.“பொருள்முதல்வாதியாகக் கருதப்படும் நபர் இயக்காவியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தால் அவர் கருத்துமுதல்வாதியாக மாறுவது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் புறநிலைக் கருத்துமுதல்வாதி என அறியப்பட்ட ஒருவர் இயங்கவியல் கண்ணோட்டத்தை முரணற்ற வகையில் கடைப்பிடிப்பாரானால் அவர் பொருள்முதல்வாதியாக மாறுவதற்காக வாய்ப்பு அதிகரித்த ஒன்றாகும் என்கிற தர்க்கத்தை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை.

இந்தப் போக்குகள் வரலாற்றில் இருந்தையே எனது கருத்தாக முன்வைத்துள்ளேன். அவ்வளவுதான். பாயர்பாக்கின் பொருள்முதல்வாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட எங்கல்ஸ்நாங்கள் அனைவரும் உடனே ஃபாயர்பாக்வாதிகள் ஆகிவிட்டோம் என்று கூறினார். வியசம், அத்தோடு முடிந்துவிடவில்லை. இது ஒரு துவக்கமாகவே இருந்தது. மார்க்சுக்கும் சரி, எங்கல்சுக்கும் சரி, பொருள்முதல்வாதத்தை நிறுவ எவ்வளவு முயற்சிகளை எடுத்துக் கொண்டனர். அவர்களின் முயற்சிகளுக்கு இயங்கியல் அணுகுமுறைகள் உறுதுணையாகவும், இன்றியமையாததாகவும் இருந்தன என்பதை உணரவேண்டும்.

சமூக இயக்கம், இயங்கியல் தன்மை கொண்டது. சமூக இயக்கத்தில் பங்கெடுக்கும் மக்கள் கருத்துமுதல்வாதச் சிந்தனைக்கு ஆட்பட்டிருந்தாலும், நடைமுறையில் இயங்கியல் வழி பட்டவர்களாக இயங்குகின்றனர். ஆனால் மார்க்சியர்கள் வறட்டுத்தனமான பொருள்முதல்வாதச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். எனவேதான், சமூக இயக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாத வகையில் இயக்க மறுப்பியல்வாதிகளாக இருக்கின்றனர்.

எனது கருத்துக்கு வலுச் சேர்க்க நூலிலிருந்து ஒரு பகுதியைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

குருட்டுத்தனமான பொருள்முதல்வாதத்தைவிட இயங்கியல் கருத்துமுதல்வாதம் மேலானது. இயங்காவியல் பொருள்முதல்வாதம் வறட்டுத்தனமானது. இது பொருளை முற்றொருமையாக்கி விடுகிறது. இது, பொருளின் ஒரு பண்பையோ அல்லது கூறையோ மட்டும் உயர்த்திப் பிடிப்பதோடு மட்டுமின்றி அதை முற்றொருமையாக்கவும் செய்கிறது.

மேலும் இது சமூகத்தில் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி ஆகியவற்றை இயங்கியல் வளர்ச்சிப் போக்கில் வைத்துப் பார்ப்பதில்லை. இந்த விசயத்தில் சிந்தனையை நிபந்தனைக்கு உட்பட்டதாகப் பார்க்கிறது. அது ஓர் உயிரோட்டம் உடையதாகவும், செயலூக்கம் உடையதாகவும் பார்க்கப் படுவதில்லை. இத்தகைய இயங்காவியல் பொருள்முதல்வாதத்தை முட்டாள்தனமான பொருள்முதல்வாதம் என்று கூறுவதில் தவறில்லை. இது மார்க்சியத்திற்கு எத்தகைய பங்களிப்பையும் செய்யப் போவதில்லை.

"அறிவார்ந்த கருத்துமுதல்வாதம், முட்டாள்தனமான பொருள்முதல்வாதத்தை விட அறிவார்ந்த பொருள்முதல்வாதத்திற்கு நெருக்கமானது" என்று லெனின், தனதுதத்துவ வரலாறுக் குறித்த ஹெகலின் விரிவுரைகளுக்கு எழுதிய குறிப்புகளில் எழுதியுள்ளதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

3. “பொருள்முதல்வாதம் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் இயங்கியல் எண்ணற்றப் பரிணாமங்களைக் கொண்டது என்கிற வாதம் குழப்பம் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

முதலில் பொருள்முதல்வாதம் என்பது ஒருமைவாத தத்துவம். எனவேதான் அதை வறையறைக்கு உட்பட்டதாக உணர்கிறேன். ஆனால் இயங்கியல் எண்ணற்ற வழிமுறைகளாயும், வகையினங்களையும் உள்ளடக்கியது.

பொருள்தான் அடிப்படை என்றால் அதை எவ்வாறு எதைக் கொண்டு நிறுவுவது, தத்துவத் தளத்தில் பொருள்முதல்வாதத்தை நிறுவ என்னென்ன வழிமுறைகள் உள்ளன? அதேபோல இயங்கியலை நிறுவ என்னென்ன வழிமுறைகள் உள்ளன, இயங்கியல் அணுகுமுறையை மேம்படுத்த என்ன முறைகள் உள்ளன? பொதுவாகப் பொருள்முதல்வாதம் இருப்பு, இருத்தல் சம்பந்தபட்ட தத்துவமாகும். ஆனால் இயங்கியல் வழிமுறைச் சம்பந்தப்பட்ட அணுகுமுறையாகும். இயங்கியலானது தர்க்கவியல், அறிவுத் தோற்றவியல் இன்னபிற அறிவுத்துறைகளைச் சார்ந்திருக்க வேண்டும். இது போன்ற இயங்கியல் அணுகுமுறை சார்ந்த துறைகளைக் கொண்டுதான் பொருள்முதல்வாதத்தை ஆணித்தரமாக நிறுவமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொருளின் இருப்பையும் இருத்தலையும் நிறுவ வேண்டுமானால் அதற்கு இயங்கியல் சார்ந்த அணுகுமுறை கருவிகள் இன்றியமையாதவை. பொருள்மீது எழும் ஐயப்பாடுகளை இயங்கியல் வழிமுறைகள்தாம் தீர்த்துவைக்கின்றன; பொருள்முதல்வாத புரிதலை முழுமைப்படுத்துகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். இதை வலியுறுத்தவே இந்தக் கூற்றை முன்வைக்கின்றேன்.

4. “இயக்கவியல் வழியாக இங்கிருந்து அங்குப் போகலாம், ஆனால் பொருள்முதல்வாத வழியாக அங்கிருந்து இங்கு வர முடியாது என்பதான எந்த உத்திரவாதமான வழித்தடங்களும் தென்படவில்லை.”

இயக்கவியல் வழியாக இங்கிருந்து அங்குப் போகலாம், ஆனால் பொருள்முதல்வாத வழியாக அங்கிருந்து இங்கு வர முடியாது என்பது போன்ற எந்த நிபந்தனையையும் நான் விதிக்க வில்லை. எங்கிருந்துத் துவங்குவது என்பது இன்றைய பருண்மையான அறிவுச் சூழல் தீர்மானிக்கும் என நினைக்கிறேன்.

மார்க்சிய வட்டாரத்தின் தத்துவார்த்தப் பலவீனம் நிலவுவதை நாமனைவரும் அறிவோம். பொத்தாம் பொதுவாகத் தத்துவப் பலவீனம் என்று சொல்ல முடியாது. இன்றைய சூழலில் நான் எந்தப் போக்குக்கு எதிராகப் போராடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்னைப் பொருத்தவரை, இன்றைய சூழலில் இயக்க மறுப்பியல் சிந்தனைகளை எதிர்த்தே போராடவேண்டி யிருக்கிறது. மார்க்சிய அறிவுப் புலத்தில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான முரண்பாட்டை விடவும் இயக்கமறுப்பியலுக்கும், இயங்கியல் சிந்தனை முறைக்கும் இடையிலான முரண்பாடே முதன்மையானது எனக் கருதுகிறேன்.

இந்த விவாதத்தின் முடிவாக நான் விளக்க முனைவது இதைதான்.

காலத்தாலும், இடத்தாலும், முடிவில்லாமல் பரந்து விரிந்து இயங்கிக் கொண்டிருக்கும், பொருள் சூழலைத்தான்பொருள் என்கிறோம். பொருள் புறவயமானது, பொருளீயத் தன்மை வாய்ந்தது, முழுமையானது, இயங்கிக் கொண்டிருப்பது, உயிரோட்டமுடையது. இதற்கு எல்லையோ, வரம்போ கிடையாது. பொருளுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை.   அனைத்தும் முடிவில்லா முழுமையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

பொருள்முதல்வாதம், ஓர் ஒருமைத் தத்துவமாகும். இது உயிரோட்டமுள்ள ஒரு முழுமையான தத்துவமாகும். பொருளின் எல்லையற்ற முழுமையின் இருப்பை வரையறுப்பது பொருள்முதல்வாதம். பொருளின் முடிவற்ற இயக்கத்தை விளக்குவது இயங்கியல் என்று எளிமையாகக் கூறலாம்.

இயங்கியல், தனது செயல் பரப்பை நிரந்தரமாக விரித்துக் கொண்டும், வளர்த்துக் கொண்டிருக்கும் தன்மைக் கொண்டது. இதற்கும் ஒரு முடிவே இல்லை.

இயங்கியலில் தோன்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு புதிய கூறும், பொருள்முதல்வாதத்தை  உயிரோட்டமுடையதாகவும், முடிவில்லா முழுமையை நோக்கி வளர்ந்துக் கொண்டே இருப்பதற்கும் இன்றியமையாத தேவையாக இருக்கின்றது.

மனித நடவடிக்கையின் மூலம் கணம் தோறும், எண்ணற்ற இயங்கியல் கூறுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.  இவை அனைத்தும் பொருளின் இயக்கத்திலிருந்துதான் தோன்றுகின்றன என்பதில் சந்தேகமில்லை. பொருளின் எல்லையற்ற இரகசியத்தை வெளிக்கொண்டு வருவது அறிவாற்றலின் முக்கியப் பணியாகும்.  இதன் மூலம், பொருளின் முழுமையை அறிகிறோம்.

நாம் கண்டறிந்த மற்றும் அறியாத அனைத்தும் பொருள் என்ற முழுமைக்குள் இருக்கின்றன.  கண்டறியும் ஒவ்வொன்றும், பொருளை மேலும் முழுமையாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் உணர்கிறோம். நாம் கண்டறியும் பொருளுக்கும் முடிவில்லை. எனவே கண்டறிவதும் முடியப் போவதில்லை.

 நமது அறிவாற்றலால் பெறப்படும் ஒவ்வொன்றிலும் இரண்டு தன்மைகள் உருவாகின்றன. ஒன்று பொருள்தன்மை. இன்னொன்று இயங்குதன்மை.  இதிலிருந்து பெறப்படும் பொருள்தன்மை பொருள்முதல்வாதத்தை வலுவூட்டுகின்றது. இதிலிருந்து பெறப்படும் இயங்குதன்மை  இயங்கியலின் பரப்பை மேலும் விரிவாக்குகிறது. ஒன்று வளரும்போது இன்னொன்றும் சேர்ந்து வளர்கிறது.

பொருள்முதல்வாதம், ஒருமை என்ற முடிவற்ற முழுமையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும், அதே கணத்தில் இயங்கியல், தனது எல்லையற்ற தளத்தை விரித்துக் கொண்டே இருக்கிறது.  இவை இரண்டும் தனித்தனியாக இயங்கவில்லை என்பதுதான் உண்மை.  இரண்டற கலந்து இருக்கும் பொருள்தன்மையும், இயங்கும் தன்மையும் பிரிப்பது செயற்கையாகத் தோன்றலாம். ஆனால் இரண்டையும் பிரித்து அறிவது பகுத்தறிவின் பாற்பட்டது.

அறிவின் செயல்பாடுகள், பொருள்முதல்வாதத்தை முழுமையானதாகவும், உயிரோட்டமுடையதாகவும் ஆக்கிக் கொண்டே இருக்கின்றன. ஆக, பொருள்முதல்வாதம் என்ற தத்துவ அமைப்பு முழுமை அடைவதற்கான அடிப்படையை இயங்கியல்தான் வழங்கிக் கொண்டிருக்கின்றன.   

இயங்கியல் உயிரோட்டமானது. இயங்கியல், பல பக்க அறிவைக் கொண்டது.  இதன் பக்கங்களின் எண்ணிக்கை நிரந்தரமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவே கிடையாது. இயங்கியலின் ஒவ்வொரு கூறிலிருந்தும் ஒரு தத்துவ அமைப்பு முழுவதுமாக வளர்ந்து வருகின்றது. ‘மெட்டாபிசிகல் பொருள்முதல்வாதத்துடன் ஒப்பிடும்போது, இயங்கியல் பொருள்முதல்வாதம் அளவிடமுடியாத அளவிற்கு வளமான உள்ளடக்கத்தைக் கொண்டது. இதுதத்துவக் குறிப்பேடுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ள லெனினின் கூற்றுகளின் சாரமாகும். 

அண்ணா.நாகரத்தினம்

annanaga@yahoo.com