புதன், 13 ஜனவரி, 2021

 

நூல் திறனாய்வு

ஹெகலும் மார்க்சும்:

ஹெகலியத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள உறவும் முரணும்

 

தோழர் அண்ணா நாகரத்தினம் தன்னுடைய ஹெகலும் மார்க்சும்: ஹெகலியத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள உறவும் முரணும் நுாலை கொரியரில் அனுப்பி வைத்தார். வாட்ஸ்அப்பில், நூலைப் படித்துவிட்டு கருத்துரையுங்கள் என்றார். நான் முன்பே தோழர் இத்தலைப்பில் தன்னுடையதத்துவப் போராட்டம் என்ற வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளையும், ஊடாட்டம் நடத்திய கருத்தரங்கில் இதே தலைப்பில் தோழர் படித்த கட்டுரையையும் படித்துள்ளேன்.

இந்நுால் அக்கட்டுரைகளின் சற்று விரிவாக்கவும், தொகுக்கவும் பட்ட நுாலாகவே அமைந்திருக்கலாம்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் நுால்கள் குறித்து சிறிய அறிமுகம் ஏற்பட்டவர்களுக்கும் நன்கு பரிச்சயமான ஜெர்மன் தத்துவஞானிதான் ஹெகல். மேலும் சற்று ஆழமாக மார்க்ஸ் எங்கெல்ஸ் நுால்களை படிப்பவர்களுக்கு ஹெகல் மீது ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுவது இயல்பானதே.

நான் இந்த நுாலை இரண்டு காரணங்களுக்காக படிக்க வேண்டும் என்று ஆர்வத்திற்கு உள்ளானேன். ஒன்று தோழர் அனுப்பி வைத்து படித்து கருத்துரைக்க கேட்டுக் கொண்டது. மற்றொன்று எனக்கு சமீபமாக மார்க்ஸ் எங்கெல்சின் ஜெர்மன் தத்துவஞானத்தை (இந்நுாலில்ஜெர்மானிய கருத்தியல் என்று தோழர் அண்ணா நாகரத்தினம் குறிப்பிடுகிறார்) படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதைப் படிப்பதற்குத் தேவையான ஒரு மனநிலையை, அறிமுகத்தை இந்நுால் தரலாம் என்ற எண்ணமும் தான்.

இந்நுாலுக்கு இரண்டு தோழர்கள் முன்னுரையும், கருத்துரையும் வழங்கியுள்ளனர். முன்னுரை வழங்கிய தோழரே குறிப்பிடுகிறார்இவருடைய நகைச்சுவை உணர்ச்சிக்கு நல்ல உதாரணம் இந்த நுாலைப் பற்றி எனது கருத்தை இவர் எழுதச் சொன்னார் என்கிறார். கருத்துரை வழங்கிய தோழர் குறித்த தனது கடுமையான விமர்சனத்தைஹெகலியத்திடமிருந்து மார்க்சியம் எதையெல்லாம் புறக்கணித்ததோ அவற்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கிறார் என தன் நன்றி உரையில் தோழர் நாகரத்தினம் குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற ஒரு ஜெர்மன் தத்துவம் பற்றிய நுாலுக்கு, தமிழில் இயக்கம் சார்ந்தோ, கல்வித்துறை சார்ந்தோ இயங்கும் தத்துவ அறிஞர்கள் யாரிடமேனும் முன்னுரை, கருத்துரை வாங்கி வெளியிட்டிருந்தால் இந்நுால் குறித்து புரிதலுக்கும், சிந்தனைகளுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்குமே என்பது என் எண்ணம்.

மார்க்சிய சிந்தனைத் துறையில் ஹெகலின் இடம் மிக முக்கியமானது என பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். இந்நுாலிலேயே இதன் ஆசிரியர் லெனினின் கருத்துக்களை குறிப்பிட்டு அதை விளக்குகிறார். இயக்கவியல் அதன் வகையினங்கள், குறித்தெல்லாம் மார்க்சும் எங்கெல்சும் ஏதும் தங்கள் தத்துவ கருத்துக்களை விரித்து தனி நுாலாக எழுதவில்லை எனவும், இயக்கவியல் குறித்து ஆழமாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ள விரும்புகிற ஒருவர் ஹெகல் நுால்களைத்தான் படிக்க வேண்டும் என்பதாகவும் ஒரு புரிதல் ஏற்படுகிறது.

தத்துவம் படிப்பதற்கு இரண்டு நோக்கங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒன்று தன்னையும், தன்னுடைய சுற்றுப்புறத்திற்கும் தனக்கும் இடையிலான உறவையும், அதனை விளங்கிக் கொள்வதில் நம்முடைய அறிவும், மனமும் செயல்படுகிற பாங்கையும் புரிந்து கொள்வது. இதில் தெளிவு பெற முடியாத ஒருவனால் உலகைப் புரிந்து கொள்வதோ, உலகின் பிரச்சினைகளுக்கான காரிய சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பதோ, மனித குலத்தின் விடுதலைக்கான வழிகாட்டுவதோ சாத்தியமில்லை. இரண்டாவது, முதல் கருத்தின் இரண்டாவது பாதியைப் பற்றியதாகும், அதாவது இந்த உலகைப் புரிந்து கொள்வது, மாற்றியமைப்பது தொடர்பானதாகும்.

புத்தரின் முகத்தில் காரியுமிழ்ந்த ஒருவன் அவர் கோப்படாதது கண்டு அதிர்ச்சியுற்றானாம். ஏன் கோபப்படவில்லை? என அவன் அதிர்ச்சியோடு கேட்ட கேள்விக்கு புத்தர் அளித்த பதில் என்னை வெகு நாட்கள் தொந்திரவு செய்து, அது குறித்தே யோசிக்க வைத்தது.

இந்நுாலில் ஓரிடத்தில்நம்மைப் பற்றிய உணர்வு என்பது எப்போதும் பிறரைப் பற்றிய உணர்வாகும். ஓர் அடிமையின் உணர்வு என்பது அவரைப் பற்றிப் பிறர் கொண்டிருக்கும் பார்வையின் அடிப்படையில் அடிமை உணர்வைக் கொண்டிருப்பதாகும். ஒரு பிரபுவின் உணர்வானது எப்போதுமே அடிமை உணர்வை மறுத்துச் சுதந்திரமானதாக இருக்கும். இவ்வாறு சுயஉணர்வு என்பதை ஒரு சமூக நிகழ்வுப் போக்காக ஹெகல் விளக்கினார்.” (பக். 64) வருகிறது. இவ்விடத்தை படித்த பொழுது சுயஉணர்வின் யதார்த்த நிலைக்கும் அதனை புரிந்து கையாள்வதன் மனித சிந்தனை மற்றும் மனத்தின் அடுத்த நிலைக்குமான போக்குகள் குறித்தும், இவற்றை விவாதத்திற்கு உள்ளாக்குவதன் ஊடாக மனித மனத்தை விடுதலை செய்யும் ஆற்றல் தத்துவத்திற்கு உள்ளாவது பற்றியும் நான் பல நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனையில் என் சுற்றுப்புறம் மறந்து இருந்தேன்.

தத்துவம் பந்தம், பாசம் போன்ற கட்டுக்களை அறுத்து விடுதலை அடைய வேண்டியது பற்றியும் அடைவதற்கான மார்க்கங்களையும் பேசுகிறது. இது இந்திய வைதீகத் தத்துவத்தில் தன் தத்துவார்த்த தன்மையை இழந்து இழிநிலையை அடைந்திருக்கலாம். பிறப்பு, உறவு, சாதி, சமயம், பிரதேசம், மொழி, இனம் போன்ற பந்த பாச கட்டுக்கள் மனத்தின் உள்ளாழத்தில் உடையாமல் விடுதலைக்கான தத்துவங்களை உள்வாங்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாது. இவைதான் சமூகத்தை விளங்கிக் கொள்ளவும், சமூகம் முழுதுக்குமான விடுதலைப் பாதையை தெளியவும், காட்டவும் முடிவதற்கு அடிப்படையாகும்.

இந்நுால் 15 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் செவ்வியல் கருத்துமுதல்வாத தத்துவஞானம் குறித்து கான்ட்டிலிருந்து துவங்கி ஹெகல் வரை ஒரு சுருக்கமான அறிமுகத்தை தருகிறது. கான்ட்டின் தத்துவத்தின் உள்ளடக்கம் என்ன?அவர் எழுதிய நுால்கள் யாவை? அவருடைய முக்கியமான விவாதப் பொருட்களாக எவை இருந்தன? அவர் காலத்தின் மனித அறிவுக்கும் அவருடைய தத்துவத்திற்கும் இருந்த உறவும் முரணும் என்ன? என்கிற புள்ளிகளை தொட்டுக் காட்ட முயல்கிறார். அவரிடமிருந்து பிஹ்டே, ஷெல்லிங் ஊடாக, ஜார்ஜ் வில்ஹெல்ம் பிரெட்ரிக் ஹெகலை நோக்கி அத்தியாயங்கள் வேகமாக முன்னேறுகின்றன. ஹெகலை வந்தடைந்தவுடன், சற்று நிதானித்து பல கோணங்களிலும் ஹெகலை விரிவாக பேச முயல்கிறது நுால்.

ஹெகலின் தத்துவம் தலைகீழாக இருந்தது என்றால் என்ன? ஹெகலின் தத்துவத்தை காலால் சரியாக நிற்க வைத்ததாக மார்க்சும் எங்கெல்சும் கூறிக் கொண்டதன் பொருள் என்ன? என்கிற புள்ளிகளை பல கோணங்களிலும் புரிய வைக்க விரிவாக அத்தியாயம் 6 ல் துவங்கி 15 வரை பேசுகிறார்.

மார்க்சியம் தொடர்பான நுால்களை படித்த பொழுது நாம் மிக எளிமையாக புரிந்து கொண்டிருந்தோம். மார்க்ஸ் ஹெகலிடமிருந்து இயக்கவியலையும், ஃபாயர்பாகிடமிருந்து பொருள்முதல்வாதத்தையும் எடுத்து மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தை உருவாக்கினார் என்பதாக. ஆனால் அத்தனை இயந்திரகதியாக, எளிமையாக, கொச்சையாக புரிந்து கொள்ளக்கூடிய விசயமல்ல.

கிரேக்க தத்துவத்தில் தன் ஆதி நிலையை எடுத்துக் கொள்ளும் ஜெர்மன் தத்துவஞானம் பேசிய பல புள்ளிகளும், பல சொல்லும் முறைகளும், பல விவாதப் புள்ளிகளும், ஆக மிக நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியும், விரிவும், விலகலுமாகவே மார்க்சியம் உள்ளது என்பதற்கு எண்ணிறைந்த இடங்களை இந்நுாலில் காண முடிகிறது. தலைகீழாக நின்றது, நேராக நிமிர்த்தியது போன்ற மொழியெல்லாம் கூட ஜெர்மன் தத்துவப் பாரம்பரியத்தில் இருந்தவையே என்பதை இந்நுாலின் பல இடங்களைப் படிக்கும் பொழுது புரிகிறது.

அதே போல மார்க்ஸ் கூறுவதாக நாம் சரளமாக அடிக்கடி பேசும்வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. சிந்தனை வாழ்நிலையை தீர்மானிப்பதில்லை என்பதெல்லாம் ஹெகலிய சிந்தனாமுறையின் ஆகச்சிறப்பான மார்க்சிய வெளிப்பாடு என்றே தோன்றுகிறது. மனித உணர்வு என்பதும் மனித அறிவு என்பதும் தனி மனிதர்களுடையது அல்ல, அவை அதுகாறுமான அச்சமூகத்தின் உணர்வும், சிந்தனையும்தான் என்பதெல்லாம் மிகச்சிறப்பாக ஹெகல் பேசியிருப்பதாக இந்நுாலில் அறிய வருகிறோம்.

Spirit என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, ‘ஆன்மா என்றும், ‘மனம் என்றும் தற்போது பொருள் கொள்ளப்படுகிறது. இதன் ஜெர்மானிய மூலச்சொல் Geist என்பதாகும். இச்சொல்லை ஹெகல்சமூகத்தின் கூட்டுணர்வு எனற பொருளில் பயன்படுத்தினார். spirit என்பது புறநிலையிலும் இல்லை, அகநிலையிலும் இல்லை. அது ஒட்டுமொத்த சமூகம் கொண்டிருக்கும் கருத்துக்களின் மூன்றாவது தளமாக விளங்குகிறது. அது சமூகத்தின் சுயஉணர்வாக விளங்குகிறது என்று கூறினார்

என்பது போன்ற ஜெர்மன் தத்துவஞானத்தில் விவாதிக்கப்பட்ட, முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியும், வளர்ச்சியும், அவற்றில் ஏற்பட்ட புரட்சியுமாகவே மார்க்சியத்தை பார்க்க முடிகிறது.

முரண்பாடுகளை இல்லாது ஒழிப்பதன்மூலம் மனிதச் சிந்தனை வளர்கின்றது என்று கான்ட் கூறினார். ஆனால் இதை ஹெகல் மறுத்தார். அவர் முரண்பாடுகளின் ஒற்றுமையில்தான் சிந்தனை முன்னேறுகிறது என்று கூறினார். வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு தருணத்திலும் புதிய புதிய முரண்பாடுகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான் ஹெகலிய இயங்கியலின் அடிப்படையாகும்.

மேலும், ஒரு கருத்தினத்தை மற்றொரு கருத்தினத்திற்கு எதிராகப் பிரித்து வைப்பதனால் மட்டும் சிந்தனையில் வளர்ச்சியை அடையவியலாது. மாறாக, அவற்றிற்கு இடையிலான ஒன்றுபட்ட கூறுகளை இணைத்துப் புதிதாக வேறு ஒரு கருத்தினம் உருவாக்கும்போதுதான் சிந்தனையில் வளர்ச்சியைக் காணயியலும் என ஹெகல் கூறினார்

இக்கருத்துக்களின் அடுத்த கட்ட வளர்ச்சியே மூன்று வகையான முரண்பாடு என மார்க்ஸ் கூறுவதாக வரும் பகுதி.

இவை போன்ற ஹெகலின் கருத்துக்களாக இந்நுாலில் கூறப்பட்டவையெல்லாம் நாம் முன்பு வாசித்த அறிமுகமான மார்க்சிய எழுத்துக்களின் பின்னணியில் படிக்கும் பொழுது, இவையெல்லாம் மார்க்சியத்தின் வளர்ச்சியில் எத்தனை ஆழமான பங்களிப்புகளை செய்துள்ளன என அறியமுடிகிறது. அதே போல மார்க்சிற்கு முந்தியவர்களின் சிந்தனை வளர்ச்சியின் சிக்கல்களையும், முன்னேற முடியாது தடைபட்டுப் போன முட்டுச் சந்துகளையும் மார்க்ஸ் எத்தனை ஒளிமிகுந்த பார்வையோடு பாய்ச்சலோடும் உடைத்துக் கொண்டு முன்னேறியிருக்கிறார் என மின்னல் கீற்று போல மனதில் தோன்றுகிறது.

மார்க்சின் மூலதனம் முதலாளித்துவ உற்பத்திமுறையை அம்பலப்படுத்துகிறது. அது உபரி மதிப்பு எவ்வாறு எந்ததெந்த முறைகளிலெல்லாம் திரட்டப்படுகிறது. தொழிலாளி எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறான் என்கிற விசயங்களை விரிவாக ஆராய்ந்து வெளிப்படுத்தும் நுாலாக மட்டுமே கேள்விப்பட்டும் படித்தும் வருகிறோம். ஆனால் அந்நுாலில் மார்க்ஸ் கையாண்டுள்ள அருவமானவற்றிலிருந்து பருண்மையானவற்றை நோக்கிய ஆய்வு முறை, பருண்மையானவற்றிலிருந்து அருவமானவற்றை நோக்கிய ஆய்வுமுறை, பகுத்தாராய்தல், தொகுத்தாராய்தல், தர்க்க வழிமுறை, வரலாற்று வழிமுறை ஆய்வு வழிமுறைகளையும், அந்த வழிமுறைகளை அவர் தேர்வு செய்ததற்கான காரணங்களையும், அந்த ஆய்வு முறைகளை அவர் எவ்வாறு ஹெகலிடமிருந்து கற்று மேம்படுத்தி புதிய உச்சங்களில் பயன்படுத்தினார் என்கிற அதில் செயல்படும் தொழில்நுட்ப அம்சங்களையெல்லாம் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள இந்நுால் அறிமுகம் செய்கிறது.

இந்த நுாலில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா, கான்ட் முதல் ஹெகல் வரையும், மற்றும் இளம் ஹெகலியன்கள் பற்றியும் இந்நுாலில் கூறப்படும் கருத்துக்களில், மேற்கோள்களில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்றெல்லாம் கருத்துக் கூறும் அளவிற்கு எனக்கு அவர்கள் குறித்த நுால்களில் விரிவான வாசிப்பு இல்லை. நானே இந்நுாலை முழுமையாக சரியாக புரிந்து கொண்டேனா என்கிற ஐயமும் இருக்கிறது.

நான் முறையாக தத்துவம் படிக்கவில்லை. தத்துவ நுால்களை படிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்டே பல நுால்களையும் படிக்கிறேன். அப்படியே இந்த நுாலையும் படித்தேன். கான்ட் முதல் ஹெகல் வரை இந்த நுாலில் எல்லாமும் பேசப்பட்டுவிட்டன எனக் கருதமுடியாது. மார்க்சியத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் எடுத்துக் கொண்டு அது ஜெர்மன் தத்துவஞானத்தில் படிப்படியாக எப்படி வளர்ச்சி பெற்று வந்தது என்பதையும், அதற்கு தேவைப்பட்ட தத்துவத்துறை வளர்ச்சியையும், சமூக அறிவுத் துறை வளர்ச்சிகளையும் இணைகோடாக வைத்து விரிவாக படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் துாண்டியது.

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்திலேயே நீண்ட காலம் காணாமல் போயிருந்தார். அவர் குறித்த விவாதங்கள் நின்று போய் இருந்தன. வரலாற்றில் பலமுறை அவர் மறைவதும் மீண்டும் விவாத களத்திற்கு வருவதுமாக இருந்தார் எனக் கேள்விப்படுகிறேன். இன்றைக்கு நம் காலத்தில் மீண்டும் அவர் உலகம் முழுவதும் வாசிக்கப்படுபவராகவும், விவாதிக்கப்படுபவராகவும் உள்ளார்.

இணையம், பேஸ்புக் ஆகியவற்றின் உதவியால் அந்த விவாதங்களில் பங்கேற்கவும், பார்வையாளனாக இருந்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. பேஸ்புக்கில் மட்டுமே அவர் எழுத்துக்கள், சிந்தனைகள் குறித்து உரையாடுவதற்கான, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுவதற்கான ஏராளமான பக்கங்கள் உள்ளன. அவற்றில் ஹெகல் குறித்து பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றும் பேராசிரியர்கள், அவர் நுால்களை ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள், அவர் நுாலுக்கான எளிய விளக்கவுரைகள் எழுதுவோர் வரை பலரும் பங்கெடுத்து வருகிறார்கள்.

18ம் நுாற்றாண்டின் இறுதியிலும், 19ம் நுாற்றாண்டின் துவக்கத்திலும், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட ஹெகலின் எழுத்துக்களை இன்றைக்கு ஒரு ஜெர்மானியினால் கூட நேரடியாக துணை நுால்களின் உதவியின்றி படிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஹெகல் பயன்படுத்தும் பல நுாறு கலைச்சொற்களுக்கான அவர் காலத்து பொருளும், அவர் பயன்படுத்திய பொருளும் குறித்து விரிவான அகராதிகள் எல்லாம் கூட அவர் எழுத்துக்களை படிப்பவர்களுக்கான கையேடுகளாகவும், துணை நுால்களாகவும் இன்றும் புதிதுபுதிதாக பதிப்பிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இது வரை வந்த எந்த நுால்களும் அவருடைய ஜெர்மன் மூல மொழியின் அர்த்தத்தை சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதையும், காலந்தோறும் மாறுகின்ற மொழி மற்றும் புரிதல்நிலைகளுக்கேற்ப மொழிபெயர்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது என்கிற உரையாடல்களையெல்லாம் வாசிக்கிறேன்.

ஜெர்மன் தத்துவஞானம் முதற்கொண்டு உலக தத்துவஞான கருத்துக்களின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் தான் மார்க்சியம் உருவாகிவிட்டதே. இன்னும் நாம் ஏன் அந்த பழைய தத்துவங்களை படிக்க வேண்டும் என்கிற கேள்விகள் பலரால் வைக்கப்படுகிறது.

இந்தக் கேள்விக்கான பதிலை மாவோ ஒரு நுாலில் அழகாக வெளிப்படுத்துகிறார்.

தோழர்களே நீங்கள் பொருள்முதல்வாதம் மற்றும் இயக்கவியல் குறித்து ஏற்கனவே அறிந்திருக்கலாம், நான் உங்களுக்கு அவற்றின் எதிரிடைகளான கருத்துமுதல்வாதம் மற்றும் இயக்கமறுப்பியல் குறித்தும் மேலதிகமாக படிப்பதற்கு பரிந்துரைக்கிறேன். நீங்கள் கான்டையும், ஹெகலையும், கன்பூசியசையும், சியாங்கே சேக்கையும் படிக்க வேண்டும், அவை உங்களுக்கு தேவைப்படும் எதிர்மறை அறிவு. நீங்கள் கருத்துமுதல்வாதம் மற்றும் இயக்கமறுப்பியல் வாதம் குறித்து எதுவும் தெரிந்து வைத்திருக்கவில்லையென்றால், நீங்கள் அவற்றிற்கு எதிராக எந்தச் சண்டையும் நடத்தி இருக்கவில்லையென்றால், உங்களுடைய பொருள்முதல்வாதமும், இயக்கவியலும் வலுவானவையல்ல. நமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் அறிவாளிகள் பலருடைய பிரச்சினையே அவர்கள் இந்த எதிர்மறை அறிவு குறித்து மிகக் குறைவாக அறிந்து வைத்திருப்பதுதான். அவர்கள் மார்க்சின் சில புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு, அதில் உள்ளவற்றையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களும் நமக்கு ஏற்றுக் கொள்ள முடிகிறவையாக இல்லை. நீங்கள் எதிர்மறை அறிவை படிக்கவில்லையென்றால் உங்களால் அவற்றை எதிர் கொள்ள முடியாது. ஆனால் மார்க்சோ, எங்கெல்சோ, லெனினோ அவ்வாறு இல்லை. அவர்கள் மிகப் பெரும் முயற்சி எடுத்து சமகால மற்றும் கடந்தகால அது போன்ற எல்லா விசயங்களையும் படித்து ஆய்வு செய்தார்கள், மற்றவர்களையும் அது போல செய்ய வலியுறுத்தினார்கள்.”

ஹெகலுக்கும் மார்க்சுக்கும் உள்ள உறவு மற்றும் முரணை கீழ்கண்டவாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். ஒவ்வொரு புள்ளியிலும் இணைவும் விலகலும் இருக்கின்றன. அவை குறுக்கிலும், நெடுக்கிலுமாக விரிந்து கொண்டே போகின்றன. ஒட்டு மொத்தத்தில் முற்றிலும் வேறான எதிர் எதிரான தத்துவங்களாக பரிணமிக்கின்றன.

எப்படியெல்லாம் மார்க்ஸ் ஒவ்வொரு விசயமாக ஹெகலின் கருத்துக்களை அலசி ஆராய்கிறார், அவற்றில் சரி தவறு என அவர் பகுப்பதற்கு எவற்றையெல்லாம் அடிப்படைகளாக கொள்கிறார், என்பனவற்றை பார்க்கும் பொழுது பல ஆயிரம் துண்டுகளை ஒன்று சேர்க்கும் ஒரு பெரும் புதிர் விளையாட்டைப் போலவும் அது விரிகிறது.

தத்துவ வாசிப்பு, தத்துவார்த்த சிந்தனைகள் என்பது வெறும் வார்த்தை விளையாட்டுகளோ, மேற்கோள் விவகாரங்களோ அல்ல. அந்தக் கடலின் உள்ளாழங்களுக்குள் நீந்த நாம் கடுமையாக நம்மை தயாரித்துக் கொள்ள வேண்டும். அநாவசியமான கணங்களை சுமப்பது நீந்தப் பெரும் தடையாகிவிடும். இவை இதுபோன்ற நுால்களை படிக்கும் பொழுது எனக்குத் தோன்றிய கருத்து. பொதுவான என் புரிதலை பகிர்ந்து கொண்டேன்.

தோழர் மகேஷ்,

ஊடாட்டம், சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக