செவ்வாய், 21 ஏப்ரல், 2009

இந்திய தத்துவ முரண்கள் - 1

வர்க்கமற்ற சமுதாயத்தில் மனித சிந்தனையானது பொருளையும் இயக்கத்தையும் பிரித்தறியாக நிலை இருந்தது. காரணம். மனித சிந்தனையானது, இயற்கையை முழுமையாக சார்ந்தும் முரண்பட்டும் வாழ்ந்ததாகும்.
வர்க்க பேதம் உருவான சமூகத்தில் சிந்தனை தளத்தில் பொருள் வேறாகவும், இயக்கம் வேறாகவும் பிரிந்தன. இதனால் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் போன்ற சிந்தனைகள் தோன்றின. இயற்கையுடனான போராட்டத்திலும், இயற்கையின் உண்மைத் தன்மையை அறிவதற்கான முயற்சியிலும்தான் இத்தகைய புதிய சிந்தனை போக்குகள் உருவாயின.
இயற்கையின் தோற்றத்திற்கு பொருள்தான் அடிப்படை என்று விளக்க முற்பட்டவர்கள் பொருள்முதல் வாதிகள் எனப்பட்டனர். அல்லவே அல்ல, கருத்துதான் அதற்கு மூலம் என்று விளக்க முற்பட்டவர்கள் கருத்து முதல்வாதிகளாக அணிதிரண்டனர்.
கருத்து முதல்வாதிகளாக இருந்தாலும் சரி, பொருள்முதல் வாதிகளாக இருந்தாலும் சரி, உலகின் இருப்பை, அதன் அடிப்படைகளை அறிவதற்கும் விளக்குவதற்கும் ஒரு முறையியல் தேவைப்பட்டது.
அதுதான் இயங்கியல். இவர்கள் இயக்கவியல் முறியை பயின்று உலகை அறிவதற்கும் விளக்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். இடைவிடாத முயற்சியினால், இயக்கவியல் எண்ணற்ற பரிமாணங்களில் பரந்து விரிந்து வளர்ந்துள்ளது.
மனித சிந்தனையின் துவக்க காலத்தில் பிரிந்தே பயனித்த பொருள் முதல்வாதமும், இயக்கவியலும் மீண்டும் இணைவதற்கு பல நூற்றாண்டுகள் கடக்க வேண்டியிருந்தது.
19ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் சிந்தனை துறையில் பொருள்முதல்வாத தத்துவமும், இயக்கவியல் முறையிலும் இணைவதற்கான தத்துவ வளர்ச்சி இலக்குகள் பருண்மையாக இருந்தது. ஜெர்மானிய மற்றும் பிரஞ்சு தத்துவ வளர்ச்சிகள் இதற்கு அடிப்படையாக அமைந்தன. அதாவது பாயர்பாக்கின் பொருள் முதல்வாதத்திருந்தும், ஜெகலின் இயக்கவியலிலிருந்தும் மார்க்சியம் முகிழ்ந்தது.
இவ்வாறு உருவான மார்க்சியம், இயங்கியல் பொருள்முதல்வாதம் ஆகும். உலகையும், சமூகத்தையும் விளக்கி, உலகையும், சமூகத்தையும் மாற்றுவதோடு சிந்தனையையும் மாற்றியமைக்கும் தத்துவமானது.
மார்ச்சும் ஏங்கெல்சும் மேதமைதன்மை வாய்ந்து அறிவார்நத் வகையில் மார்க்சியத்தை உருவாக்கினர். அதை ஒரு முறையியலாகவும், கண்ணோட்டமாகவும் அணுகுமுறையாகவும் காட்டினர். அத்தகைய முறையியிலையும், அணுகுமுறையையும் கொண்டு சமூகம், பொருளாதார அரசியல் கூறுகளை விளக்கமும் மாற்றவுமான கொள்கைகளையும் திட்டங்களையும் முன் வைத்தனர்.
மார்க்சோ, ஏங்கல்சோ பிரச்சனைகளுக்கு தீர்வு காணகூடிய நிரந்தர தீர்வுகளை எப்போதுமே வழங்கியதே இல்லை. மார்க்சியம் என்பது உலகையும், சமூகத்தையும், சிந்தனையையும் புரிந்து கொள்ளவும், மாற்றியமைக்கவுமான ஒரு கண்ணோட்டம். ஓர் அணுகுமுறை. ஒரு முறையியலே அன்றி வேறல்ல.
மார்க்சியம், ஒரு மூடுண்ட தத்துவம் இல்லை. அது மார்க்சோடோ அல்லது ஏங்கல்சோடோ முடிந்துவிடவில்லை. லெனினோடும் மாவோவோடும் முடிந்துவிடவில்லை. அவ்வாறு முடிந்துவிட்டதாக கருதினால் அது ஒரு மூடுண்ட தத்துவமாகிவிடும். லெனினிற்கு பிறகும், மாவோவிற்கு பிறகும் மார்க்சியத்தை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. இது ஒரு இடைவிடாத பெரும் தத்துவ போராட்ட பயணம்.
மார்க்சியத்தின் பன்முக பரிமாணங்களை உட்செரித்துக் கொள்ளாமல் இயங்கியல் வாதிகளாக முடியாது. அதேசமயம் அவற்றின் உட்சாரத்தை கிரகிக்க தவறுபவர்கள் பொருள் முதல்வாதத்திற்கு தீங்கிழைப்பவர்கள் ஆவார்கள்.
பொருள் முதல்வாதத்தைப் பாதுகாப்பதும், இயங்கியலை இடைவிடாது வளர்த்தெடுப்பதும்தான் மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனையாகும்.




 
இந்திய தத்துவ முரண்கள்  - 2

இந்திய தத்துவ முரண்கள் -‍ 3
இந்திய தத்துவ முரண்கள் - 4
இந்திய தத்துவ முரண்கள்  - 5

இந்திய தத்துவ முரண்கள் - 6

இந்திய தத்துவ முரண்கள் - 7


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக