தத்துவம் என்பது இயற்கை, சமூகம், சிந்தனைஆகிய மூன்றைப் பற்றிய பொதுவான கோட்பாடுகளும் கொள்கைகளும் கொண்டதாகும். இது மனித சிந்தனைச் சார்ந்த அனைத்து துறைகளையும் தழுவி நிற்கின்றது.
தத்துவமானது, இயற்கை, மனிதன், சிந்தனை ஆகிய மூன்றைப் பற்றியும் பல்வேறு வினாக்களைத் தொடுத்து விடை தேட முற்படுகின்றது.
உலகம் ஒரு பொருளா அல்லது கருத்தா ?
உலகம் இயக்கத்தில் உள்ளதா அல்லது நிலையாக உள்ளதா?
பொருளை அறிய வியலுமா அல்லது முடியாதா?
பொருளை மாற்றியமைக்க முடியுமா அல்லது முடியாதா?
மனித சிந்தனை இது போன்ற பல்வேறு கேள்விகனைகளைத் தொடுக்கின்றது.
இக்கேள்விகளுக்கு விடைத் தேடும் முயற்சியில் தான் பல்வேறு தத்துவப் போக்குகளும் அணுகுமுறைகளும் உருவாயின.
பொதுவாக கூறின் தத்துவம் என்பது ஒரு அறிதல் முறை என்று கூறுவர்.
பொதுவாக தத்துவ இயலை நான்கு கூறுகளாகப் பிரிக்கின்றனர்.
அவை:-அளவையியல், அழகியல், அறவியல் மற்றும் நுண்பபொருள் இயல் என்பனவாகும்.
இந்த உலகம் பொருள்தான் என்று வாதிட்டவர் பொருள்முதல் வாதி எனப்பட்டார். இந்த வகை தத்துவம் பொருள்முதல் வாதம் அல்லது பொருளியம் எனப்படுகின்றது.
இந்த உலகம் நம் மனதில் தோன்றும் வெறும் கருத்துமட்டுமே என வாதிட்டவர் கருத்துமுதல் வாதி எனப்பட்டார். இந்த வகை தத்துவம் கருத்துமுதல் வாதம் எனப்படுகின்றது.
இவ்வுலகமும் இவ்வுலகத்திலுள்ள பொருட்களும் இயக்கத்தில் உள்ளன என்று வாதிட்டோர் இயக்கவியல் வாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.
இவ்வுலகமும் இவ்வுலகத்திலுள்ள பொருட்களும் இயக்கத்தில் இல்லை என்றும் நிலையாக மட்டுமே உள்ளன என்றும் வாதிட்டோர் இயக்கமறுப்பியல் வாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.
இது போல உலகம் தனித்தனிபொருட்களால் ஆனவை என்போரும் உளர். இல்லை இல்லை உலகம் தனித்தனிப் பொருட்களால் அல்லாமல் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றன என்போரும் இருக்கின்றனர்.
தத்துவ வரலாற்றை நோக்கும் போது தத்துவாதிகளிடையே பல்வேறு கருத்தோட்டங்கள் உருவானதைக் காணவியலும். தத்துவாதிகளின் வாதப்பிரதிவாதங்கள் தாம் பல்வேறு தத்துவப் போக்குகள் உருவாவதற்கு காரணமாக அமைந்தன.
ஒவ்வொரு தத்துவாதியும் தனக்கு முன் உள்ள கருத்தோட்டங்களை பகுத்துப் பார்த்தோ அல்லது தொகுத்துப் பார்த்தோ தமக்கான புதிய தத்துவங்களைப் படைக்கின்றனர்.
அது மட்டுமின்றி தனக்கு முன் உள்ள கருத்தோட்டங்களை விமரிசனம் செய்தோ அல்லது செழுமைப் படுத்தியோ தமக்கான புதிய தத்துவங்களைப் படைக்கின்றனர்.
இந்த வரலாற்றுப் போக்கில்தான் மார்க்சியம் என்ற தத்துவம் தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக