வியாழன், 19 மார்ச், 2009

அனுபவ வாதம்


அறிவின் அனைத்துக் கூறுகளும் புலன் உணர்வு மூலமாகவே உருவாக்கப் படுகின்றன. எனவே அறிவின் தொடக்கமும் முடிவும் புலன் உணர்வே ஆகும். இது புலன் உணர்வை முதன்மையாகவும் சிந்தனையை இரண்டாம் பட்சமாகவும் மதிப்பிடுகின்றது.


புலங்களால் பெறப்படும் தகவல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. வெவ்வேறானவை. ஒன்றோடொன்று தொடர்பற்றவை. தொகுத்தல் மற்றும் பதிவு செய்தல் மூலமாகவே அத்தகவல்களுக்கிடையே பெறப்படும் அறிவு நிலையானதாகும் என்று விளக்குவது அனுபவவாதம்.

அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட அறிவாராய்ச்சியியலானது ஜான் லாக் என்பவரால் தோற்றிவிக்கப்பட்டது. அனுவபவாதச் சிந்தனை இங்கிலாந்து நாட்டில் பிறந்தது. அவர்கள் எண்ணங்களின் தோற்றம் இயல்பு ஏற்புடைமை ஆகிய அடிப்படைகளை ஆராய முற்பட்டனர். எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றன் என விரிவாக ஆராய்ந்து விளக்கமளித்தார் லாக். புறவுலகின் பொருளும் தொலைவும் எத்தகைய சிக்கல் நிறைந்த எண்ணங்கள் என்பதை எடுத்துக்காட்டினார் பார்க்லி. தத்துவ போராட்டத்தின் மையாமாக விளங்கும் செறிபொருளும் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையாய் விளங்கும் காரண காரியத் தொடர்பும் எந்த அளவு சிக்கல் நிறைந்தனவாய் இருக்கின்றன என்பதைக் காட்டியவர் டேவிட் ஹியூம் ஆவார். ஜான் லாக், பேர்க்லீ, டேவிட் ஹீயூம் போன்றோர் அனுபவ வாதிகள் ஆவ‌ர்.


அனுபவவாதம் அதன் வளர்ச்சிப்போக்கில் ஐயவாதமாகவும் (Skeptism) புலனறிவு வாதமாகவும் (Positivism) வளர்ச்சியடைந்தது.ஜான் லாக் அனுபவம் குறித்த அறிவாராய்ச்சியில் ஈடுபடுகின்றார். பகுத்தறிவினை மறுக்கின்றார். அனுபவ வாதத்தை ஏற்கின்றார். அனுவத்தின் மூலமே அறிவு விளைகின்றது என்றார். ஆனால் அனுபவத்தை பிறரைக் காட்டிலும் இவர் தெளிவாக விளக்குகிறார்.

அறிவாராய்ச்சியின் அடிப்படைக் கருத்துகளாக புலக்காட்சி, மனப்பதிவு, எண்ணம் ஆகிய மூன்றினை ஹியூம் குறிப்பிடுகின்றார். புறவுலகம் ஐம்பொறிகளைத் தாக்கி ஏற்படுத்தும் விளைவு புலக்காட்சி எனப்படும். பொறிகளின் கண் ஏற்படும் மாற்றம் முறையாக மனத்தில் பதிவாகின்றன. இவை மனப்பதிவுகள் நினைவாற்றலும் கற்பனையும் மனப்பதிவுகளை இணைத்தும் கூட்டியும் தொகுத்தும் தொடர்பு படுத்தியும் எண்ணங்களை உருவாக்குகின்றன.

பகுத்தறிவு சில அடிப்படை உண்மைகளை ஆதாரமாக கொண்டு சிந்தனையைச் சுழலவிடுதல் மூலமாகவும் அளவையியல் வழிகளைக் கைக்கொள்வதன் வாயிலாகவும் அனைத்தையும் அறியமுடியும் என்று பகுத்தறிவியலாளர்கள் கூறினர். அனுபவம் தவறான அறிவைத் தருகிறதெனக் கூறினர்.



பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோsக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

அனுபவ‌வாதம் மெய்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய ஒர் அணுகுமுறை ஆகும். அனுபவ‌வாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது.  அனுபவ‌வாதாமே அறிவியலுக்கு அடிப்படை ஆகும். குறிப்பாக ஆதாரபூர்வமாக, பரிசோதனைகள் மூலம் ஒரு கூற்றை நிறுவுவதை இது வலியுறுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக