திங்கள், 4 ஜூலை, 2011

அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 5


கிராம்சி

மரபுரீதியான மார்க்சியத்தின் முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய விஞ்ஞான ரீதியான விதிகளையும் அது முன் வைக்கும் புறவய சக்திகள் என்ற கருத்தாக்கத்தையும் விமரிசித்து அதற்கு மாற்றான கொள்கைகளை கிராம்சி முன்வைத்தார். இதற்காக இவர் மார்க்சியக் கட்டமைப்பில் எதிரிடையான மாற்றங்களைச் செய்தார். மார்க்சிய மரபில் இவர் இரு தலைகீழ் மாற்றங்களை முன்மொழிந்தார். 1.பொருளாதாரக் கட்டமைப்பின் இடத்திற்கு கருத்தியல் மேற்கட்டமைப்பை முதன்மை நிலைப்படுத்துதல், 2.அரசியல் சமூகத்தின் மீது சிவில் சமூகம் ஏற்படுத்தும் முதன்மை நிலை. அதாவது சிவில் சமூகம் உணர்வு ரீதியாகச் செயல்படுவதும், அரசியல் சமூகம் பலவந்தமாக செயல்படுவதுமாகும்”. என்று எம்.எஸ்.எம்.அனஸ், மெய்யியல் - கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை (2006) என்ற நூலில் கூறுகிறார்.


“மார்க்சிய சிந்தனையின்படி, பொருளாதாரத்தை அடித்தளம் (Basis) எனக் கொண்டால், அதன் மீது, கிராம்சியின் கருத்துப்படி, இருவகை மேற்கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. ஒன்று, நாம் ஏற்கனவே நன்கு அறிந்த அரசியல் மேற்கட்டுமானம், மற்றொன்று, கிராம்சி சொல்லும் குடிமைச் சமூக மேற்கட்டுமானம். அரசியல் கட்டுமானம் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம், அதிகாரம் போன்ற வன்முறை அல்லது பலாத்கார (Coercion) வடிவங்களை நேரடியாக எந்தவித ஒளிவுமறைவுமின்றி தொழில்படுத்துகிறது. மற்றொன்றான குடிமைச் சமூகக் கட்டுமானம் சமயம், குடும்பம், கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின் வழி ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான பொது மனோபாவம் ஒன்றை உருவாக்குகிறது. ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன் அல்லது அரசு எந்திரத்தின் அதிகாரம் எனும் ஒற்றைத் தளத்தைத் தாண்டி அதிகச் சிக்கலான, கூடுதல் பன்மைத்தன்மை கொண்ட ஒரு தளத்தை நோக்கி கிராம்சி பயணித்துள்ளார் என்று நாம் இதனை அடையாளப் படுத்த முடியும்’” (அந்தோனியோ கிராம்சியின் ‘குடிமைச் சமூகம்’ எனும் கருத்தாக்கம், ந.முத்துமோகன்)

‘அரசு, சிவில் சமூகம் என்ற இரண்டும் பொருத்தமான உறவில் ஒன்றாகத் தொடர்பு பட்டிருக்க வேண்டும்’ என்றார் கிராம்சி. மார்க்ஸ், கிராம்சி இருவரும் அரசை விட சிவில் சமூகத்தையே வலுயுறுத்திய போதிலும் இவ்விசயத்தில் கிராம்சி மார்க்ஸை விட ஹெகலியக் கருத்துக்களில் அதிகம் தங்கியுள்ளார் என கருதலாம். இதற்கான மெய்யியல் அணுகுமுறைகளை கிராம்சி ஹெகலிடமிருந்தே பெற்றுள்ளார். மேலும் ஹெகலின் சிவில் சமூகம் என்ற கருத்தை மேற்கட்டமைப்பு என்ற பொருளிலேயே அவர் எடுத்துக் கொண்டுள்ளார். ஹெகலின் சிவில் சமூகம் என்ற கருத்தை மேற்கட்டமைப்பாகவே தாம் புரிந்து கொண்டுள்ளாதாகவும் கிராம்சி கூருகிறார்”. என்று எம்.எஸ்.எம்.அனஸ், மெய்யியல் - கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை (2006) என்ற நூலில் கூறுகிறார்.

மார்க்ஸ் ஹெகலின் சிவில் சமூகக் கருத்தை முழுமையான பொருளாதார உறவுகளுடன் தொடர்புபடுத்தினார். அதாவது சிவில் சமூகம் கட்டமைப்பு முக்கியத்துவத்தினால் தீர்மானிக்கப் படுவதாயிற்று. ஆனால் கிராம்சி இதனை அடித்தளக் கட்டமைப்பாகக் கருதவில்லை. கிராம்சி மேற்கட்டமைப்புக் கோட்பாட்டை முன்வைக்கிறார். இதன் மூலம் அவர் சிவில் சமூகத்திற்கும் அரசிற்கும் இடையிலான உறவை ஆராய்கிறார். அரசியல் சமூகத்தை சிவில் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாது. அரசு அரசாங்கத்தை மாத்திரம் செயல்முறைக் கருவியாகக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. சிவில் சமூகத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். மேற்கட்டமைப்புக் கோட்பாடு வரலாற்றின் முழுமை பெற்ற இயக்கவியலாகக் கொள்ளப்படவேண்டும் என்பதை அவரது மேற்கட்டமைப்புக் கோட்பாடு கூறுகிறது. கட்டமைப்புப் பற்றிய விசயத்தில் மார்சின் கருத்திற்கும் கிராம்சியின் கருத்திற்கும் இடையில் வேறுபாடு இருந்தது என்று எம்.எஸ்.எம்.அனஸ், மெய்யியல் - கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை (2006) என்ற நூலில் கூறுகிறார்.

மார்க்சியத்திற்கான கிராம்சியின் மெய்யியல் ஒருமைப்பாட்டுக் கருத்தாக்கம் நடைமுறை ஆகும். கோட்பாட்டையும் நடைமுறையையும், சிந்தனையையும் செயல்முறையையும், அகவயத்தையும் புறவயத்தையும் ஒன்றிணைப்பது பற்றிய அவரது அறிவுப் பிரயத்தனத்தில் நடைமுறையியலுக்கு முக்கிய பங்கு இருந்தது.

“மரபுவாத மார்க்சியவாதிகள் (மார்க்ஸ் அல்ல) பொருளாதாரக் காரணியை மட்டுமே நிர்ணயகரமானது என்று வழமையாகக் கூறிவந்தனர். கிராம்சி இதற்கு மாற்றமாக சாத்தியமான பல்வேறு சமூக, அரசியல் நிறுவனங்கள், கருத்தியல்கள், உணர்வுகளின் வெளிப்பாடுகளைக் கொண்ட ஒரு கூட்டுநிலைத் திட்டத்தைப் பற்றிக் கலந்துரையாடினார். இது அவரால் 'மொத்த ஒத்திசை உறவு' என்ற எண்ணக்கருவாக முன்வைக்கப்பட்டது. இவ்வெண்ணக் கரு பொருளியலை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை அரசியல், கலாசாரம், சமூக உறவுகள், கருத்தியல்கள் போன்ற அம்சங்களையும் ஒன்றிணைத்தது. மார்க்சிய மெய்யியல் ஒருமைப்பாடும் நடைமுறையியலும் விஞ்ஞானரீதியான கோட்பாடுகள் என்ற மரபுவதிகளின் கருத்துக்களால் செயலிழந்துவிட்டதாக மார்க்சிய மரபுவாதச் சிந்தனையாளர்களை அவர் குறை கூறினார். பொருள்முதல்வாத அடிப்படை, பொருளியல் நியதிவாதம் (நிர்ணயவாதம்) போன்ற‌ வழமையான மரபுக் கோட்பாடுகளுக்கு அவர் உடன்படவில்லை. மாறாக, மார்க்சின் உண்மையான கருத்துக்களுக்குத் திரும்ப வேண்டும் என்றார்”. என்று எம்.எஸ்.எம்.அனஸ், மெய்யியல் - கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை (2006) என்ற நூலில் கூறுகிறார்.

தற்போது சாதியச் சமூகம் குறித்த விவாதங்கள் பெருகி வரும் நிலையில் இத்தாலிய மார்க்சியர் கிராம்சியின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன ந.முத்துமோகன் குறிப்பிடுவார். “கிராம்சியைப் பொறுத்தமட்டில், குடிமைச் சமூகம் என்பது நேரடியாக அரசியல் பண்பும் அதேபோல நேரடியாகப் பொருளாதாரப் பண்பும் இல்லாத ஒரு வட்டாரம் எனலாம். மார்க்சிய சிந்தனையின் படி, பொருளாதாரத்தை அடித்தளம் (Basis) எனக் கொண்டால், அதன் மீது, கிராம்சியின் கருத்துப்படி, இருவகை மேற்கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. ஒன்று, நாம் ஏற்கனவே நன்கு அறிந்த அரசியல் மேற்கட்டுமானம், மற்றொன்று, கிராம்சி சொல்லும் குடிமைச் சமூக மேற்கட்டுமானம். அரசியல் கட்டுமானம் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம், அதிகாரம் போன்ற வன்முறை அல்லது பலாத்கார (Coercion) வடிவங்களை நேரடியாக எந்தவித ஒளிவுமறைவுமின்றி தொழில்படுத்துகிறது. மற்றொன்றான குடிமைச் சமூகக் கட்டுமானம் சமயம், குடும்பம், கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின் வழி ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான பொது மனோபாவம் ஒன்றை உருவாக்குகிறது. அரசுக்கு ஆதரவான பொதுச் சம்மதத்தை குடிமைச் சமூகம் உருவாக்கித் தருகிறது

வர்க்க சமூகங்களில் ஆளும் வர்க்கம் குடிமைச் சமூகத்தின் வழி தனது கருத்தியல் மற்றும் கலாச்சார மேலாண்மையைச் (Hegemony) சாதிக்கிறது என்று கிராம்சி குறிப்பிட்டார். குடிமைச் சமூக நிறுவனங்களின் வழி ஆளும் வர்க்கம் தனது நேரடியான, பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை மறைத்துக் கொண்டு தான் ஒரு பொது ஒழுங்கில், சமூக ஏற்பாட்டில் அல்லது சமூக அமைதியில் அக்கறை கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது. இம்முயற்சியில் அது வெற்றியும் பெறுகிறது. ஆளும் வர்க்கம் குடிமைச் சமூகத்தில் தனது மேலாண்மையைச் சாதித்துக் கொள்ளும் போது தனது வர்க்க நலன்களோடு தன்னுடன் வரும் இன்னும் சில வர்க்கங்களின் நலன்களையும் தொகுத்துக் கொள்ளுகிறது. அப்படித் தொகுத்துக் கொள்வதன் மூலமே அதனால் குடிமைச் சமூகத்தில் ஒரு பொது முகத்தைக் காட்டிக் கொள்ள முடிகிறது.

“குடிமைச் சமூகம், மேலாண்மை போன்ற கருத்தாக்கங்களின் வழி ஆளும் வர்க்கம் உருவாக்கும் பொதுச் சமூக மனோபாவத்தின் உள் இயங்கியலை கிராம்சி மிக அற்புதமாகக் கண்டறிந்து சொல்லியுள்ளார் என்று அவரைப் பலர் பாராட்டுகின்றனர். ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன் அல்லது அரசு எந்திரத்தின் அதிகாரம் எனும் ஒற்றைத் தளத்தைத் தாண்டி அதிகச் சிக்கலான, கூடுதல் பன்மைத்தன்மை கொண்ட ஒரு தளத்தை நோக்கி கிராம்சி பயணித்துள்ளார் என்று நாம் இதனை அடையாளப் படுத்த முடியும்“ என கிராம்சியின் கருத்துக்களை ஆராய்ந்து தனது கட்டுரை ஒன்றில் ந.முத்துமோகன் குறிப்பிடுவார்.

இங்கு கிராம்சி மேல்கட்டமைப்பின் கூறுகளையும் அதன் செயல்பாடுகளையும் விரிவாக ஆராய்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேல்கட்டுமானத்தின் 'ஒப்பீட்டு ரீதியிலான சுதந்திரத்தை' வலியுறுத்துவார். இது சமூக இயங்கியலுக்கு வலுசேர்க்கும் என்பது திண்ணம். ஆனால் பொருள்முதல்வாத அடிப்படையைத் தவறவிட்டராகவே கிராம்ஸி காட்சியளிக்கிறார். இவர் மட்டுமல்ல பண்பாட்டு மார்க்சியம் பேசும் மார்க்சியர்கள் இதே தவறை விரும்பி செய்கின்றனர். இவர்கள் மேல்கட்டுமானத்தின் ஒப்பீட்டு ரீதியிலான சுதந்திரம், தனிமுதலான சுதந்திரத்தை நோக்கி செல்வதற்கான வழியை எப்பொதும் திறந்தே வைத்திருக்க காணலாம். இவர் பொருள்முதல்வாத அடிப்படையிலிருந்து மேல்கட்டுமானத்தை விளக்கவில்லை. ஆகவே இது கருத்துமுதல் வாதத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையே தவிர வேறு ஒன்றுமல்ல.

‘அவர்கள் இயக்க மறுப்பியல் பொருள்முதல்வாதத்தை அதன் தலையாய யாந்திரிகவாதத்தையும் எதிர்த்துப் போராடினார்கள். அப்படி செய்கின்ற பொழுது அவர்கள் குழந்தையை நீராட்டிய அழுக்குத் தண்ணீரோடு குழந்தையையும் வெளியே கொட்டி விட்டார்கள். மூலகங்கள் மற்றும் பருப்பொருளின் குணாம்சங்களின் மாற்றும் தன்மையை நிராகரிக்கத் தொடங்கி முடிவில் பருப்பொருளை அதாவது பெளதிக உலகத்தின் புறநிலையான யதார்த்தத்தை மறுத்தார்கள். மிக முக்கியமான ஆதாரமான விதிகளின் தனிமுதலான தன்மையை மறுக்கத் தொடங்கி முடிவில் இயற்கையின் அனைத்துப் புறநிலை விதிகளையும் மறுத்தார்கள்’ என 'பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமரிசனமும்' என்ற நூலில் லெனின் கூறுவது மிக்கப் பொருத்தமுடையதாகும்.

ஆனாலும், பண்பாட்டு மார்க்சியர்கள் மேல்கட்டுமானத்தைப் பொருளாதார அடித்தளத்திலிருந்து விளக்கவில்லை என்பற்காக, பண்பாட்டு மார்க்சியம் விளக்கியிருக்கும் மேல்கட்டுமானத்தின் புதிய கூறுகளைப் புறக்கணிக்கலாமா? பொருளாதார அடித்தளத்திலிருந்து இக்கூறுகளுக்கு விளக்கம் அளிக்கலாமே! பண்பாட்டு மார்க்சியத்திற்கான‌ பொருளாதார அடித்தளம் என்ன, இதற்கு வேறு அடிப்படைகள் இருக்கின்றன என்பனவற்றைப் பற்றிய ஆய்வு செய்யவேண்டும். பண்பாட்டு மார்க்சியர்கள் மேல்கட்டுமானத்தை பொருளாதார அடித்தளத்திலிருந்து விளக்காமல், அதை பொருளாதார அடித்தளத்திலிருந்து தனியாக பிரித்தெடுத்து விளக்குகின்றனர் என்று விமரிசனம் சரியானதாக இருந்தாலும், இவ்வாறு விமரிசிப்போரை மேல்கட்டுமானத்தை ஆராய்வதில் இருந்து எது தடுத்து நிறுத்தியது என்றால் அது பொருளாதார நிர்ணயவாதம் மட்டுமே ஆகும்.

பண்பாட்டு மார்க்சியர்கள், மேல்கட்டுமானத்தை பொருளாதார அடித்தளத்திலிருந்து விளக்காமல், அதை பொருளாதார அடித்தளத்திலிருந்து தனியாக பிரித்தெடுத்து விளக்குகின்றனர் என்ற விமரிசனம் சரியானதாக இருந்தாலும், இவ்வாறு விமரிசிப்போரை மேல்கட்டுமானத்தை ஆராய்வதில் இருந்து எது தடுத்து நிறுத்தியது என்றால் அது பொருளாதார நிர்ணயவாதம் மட்டுமே ஆகும்.

பண்பாட்டு மார்க்சியர்கள் மேல்கட்டுமானத்தைப் பொருளாதார அடித்தளத்திலிருந்து விளக்கவில்லை என்பற்காக, பண்பாட்டு மார்க்சியம் விளக்கியிருக்கும் மேல்கட்டுமானத்தின் புதிய கூறுகளைப் புறக்கணிக்கலாமா? பொருளாதார அடித்தளத்திலிருந்து இக்கூறுகளுக்கு விளக்கம் அளிக்கலாமே! பண்பாட்டு மார்க்சியத்திற்கான‌ பொருளாதார அடித்தளம் என்ன, இதற்கு வேறு அடிப்படைகள் இருக்கின்றன என்பனவற்றைப் பற்றிய ஆய்வு செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக