ஞாயிறு, 2 அக்டோபர், 2011

அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 7

வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்தி


'பொருளாதார நிலைமையின் வளர்ச்சி உற்பத்திமுறையினாலும் பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன' என்று ஒரு இடத்தில் கூறுவார். அதே போல 'உற்பத்திச் சக்திகளின் வள‌ர்ச்சியின் விளைவாக ச‌முதாய மாற்றம் நடைபெறுகின்றது என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறுகின்றது' என்று இன்னொரு இடத்தில் கூறுவார். வேரொரு இடத்தில் எங்கல்சு கூறும் போது 'வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகிறார்' என்று விளக்கவுரை செய்வார். இவற்றை மேலோட்டமாகப் பார்க்கும் போது சிறிது குழப்பம் வரலாம். ஒரு கோட்பாடு குறித்து விவாதிக்கும் போது மார்க்சும் சரி, எங்கல்சும் சரி வெவ்வேறு இட‌ங்க‌ளில் வெவ்வேறு த‌ள‌த்தில் நின்று த‌ர்க்க‌ம் செய்ய‌வேண்டியிருந்த‌து. தேவைக்கேற்ப விளக்கமும் விரிவும் செய்யவேண்டியிருந்தது. ஒரே இடத்தில் எல்லா அம்சங்களையும் விளக்கிவிடுவது தேவையற்றதும் எந்திரத்தனமானதுமாகும்.


பொருளாதாய நிலைமையும் மனித நடவடிக்கையும்

மார்க்சு அவர்களின் வரலாற்று பற்றிய பொருள்முதல்வாதத்தின் இரு முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ததாக குறிப்பிடுவார். “வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைக் கண்டுபிடித்தானது, பொருள்முதல்வாதத்தைச் சமுதாயப் புலப்பாடுகள் என்ற துறையிலும் தொடர்ந்து செலுத்தி விரிபடுத்தியதானது, முந்தைய வரலாற்றுத் தத்துவங்களிலே இரு இரண்டு முக்கியமான குறைபாடுகளை நீக்கி விட்டது. முதலாவதாக அந்த முந்தைய வரலாற்றுத் தத்துவங்கள் மனிதர்களின் வரலாற்று நடவடிக்கைகலின் சித்தாந்த நோக்கங்களை மட்டுமே ஆராய்ந்தனவே யன்றி இந்த நோக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தவற்றைப் பரிசீலிக்கவே இல்லை; சமுதாய உறவுகளின் அமைப்பு முறையின் வளர்ச்சியை ஆளும் புறநிலை விதிகளைப் புரிந்து கொள்ளவே இல்லை; பொருளாயத உற்பத்தி அடைந்துள்ள வளர்ச்சி நிலையில் இந்தச் சமுதாய உறவுகளின் மூலவேர்கள் இருப்பதைக் கண்டறிந்து கொள்ளவே இல்லை. இரண்டாவதாக, முந்தையத் தத்துவங்கள் மக்கள் திரளின் நடவடிக்கைகளைப் பரிசீலிக்கவயில்லை” என (கார்ல் மார்க்சு என்ற நூலில் - 1914) லெனின் குறிப்பிடுவார்.

மார்க்சும் எங்கல்சும் தங்களது ஆய்வை வெறும் சூனியத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை. மாறாக மெய்யான மனித நடவடிக்கையிலருந்து ஆரம்பிப்பர். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, மனித நடவடிக்கையை மேம்படுத்தவும் செய்கின்றது. மனித நடவடிக்கை குறித்த மையக்கருத்தை மார்க்ஸ் தனது நூல்களில் பல்வேறு இடங்களில் விளக்குவார். பாயர்பாக் குறித்த ஆய்வுரைகள், செர்மன் கருத்தியல் போன்ற நூல்களில் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.

மனிதசாரம் என்பது இயற்கையில் பிரிக்கயியலாத பகுதியாகும். உயிரியல் வளர்ச்சிப்போக்கில் விளைந்த ஒன்றாகும். அது அடிப்படையில் பொருளிய உலகத்தைச் சார்ந்தே இயக்குகின்றது என்பதை மார்க்ஸ் செர்மன் கருத்தியல் என்ற நூலில் விளக்க்கும் போது மனிதனை இதர உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தியும் காட்டுவார். அதாவது மனிதன் மட்டுமே இயற்கையோடு எதிர் செயல்புரிகின்றான் என்று மனிதனின் பண்புரீதியான தனித்துவத்தைக் காட்டுவார். ‘மனிதன் தனக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்ளும் பொருட்டு வாழ்க்கை ஆதாரங்களை தானே உற்பத்திச் செய்து கொள்ளுகின்றான். வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்து கொள்ளவதன்மூலம் தனக்கான உண்மையான வாழ்க்கைச் சூழலை மறைமுகமாக உற்பத்திச் செய்துகொள்கின்றான்’ என செர்மன் கருத்தியல் நூலில் மார்க்ஸ் கூறுவதையும் காணவேண்டும்

சூழ்நிலைமைகள், வளர்ப்பு ஆகியவற்றால் உருவாக்கப்படுபவர்கள் மனிதர்கள். எனவே, [பல்வேறு வகையாக] மாறுபடும் மனிதர்கள் வேறுபட்ட சூழ்நிலைமைகளாலும் மாறுபட்ட வளர்ப்பு முறையாலும் உருவாக்கப்பட்டவர்களாவர் என்னும் பொருள்முதல்வாதப் போதனை, மனிதர்கள்தாம் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும், கற்பிக்கிறவனுக்கே கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மறக்கிறது. (பாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள் - கார்ல் மார்க்ஸ்)

எல்லா சூழ்நிலைமைகளும் மனிதனைப் பாதிக்கின்றது. அதே போல பொருளாதாய செல்வம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை மனிதன் உற்பத்தி செய்கிறான். மனிதனது இத்தகைய உற்பத்தி நடவடிக்கையின் மீதும் செயல்கள் மீதும் சூழ்நிலையானது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தனது தாக்கத்தைச் செலுத்துகின்றது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் எல்லா மனித உறவுகளும், நடவடிக்கைகளும் பொருளாதாய உற்பத்தியின் மீது செல்வாக்கு செலுத்தவும் ஏறக்குறைய தீர்மானகரமான சக்தியை செலுத்தவும் செய்கிறது என உபரிமதிப்பு தத்துவங்கள் (1961- 63) எனற நூலில் மார்க்சு கூறுவதிலிருந்து மனித நடவடிக்கையின் பங்களிப்பு அறிந்து கொள்ளலாம்.

ஆக பொருளின் இயக்கவிதிகளை அறிந்து கொள்ளும் தருணத்தில் அதாவது புறநிலைகளோடு அகநிலை ஒன்றிபோய்விடுகின்றது. புறநிலையை மாற்றும் அறிவார்ந்த விருப்பத்தை அகநிலை மேற்கொள்கின்றது. பொருளாதாய சூழ்நிலைமைகளின் மாற்றமும் மனிதச் செயல்பாடும் சேர்ந்தே நிகழ்வதை (coincidence), நடைமுறையைப் புரட்சிகரமயமாக்கல் என்பதாக மட்டுமே கருதிக் கொள்ள முடியும், பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும். என்ற‌ (பாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள் - கார்ல் மார்க்ஸ்) கூற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.


மனிதன் வரலாற்றின் விளைபொருளா? வரலாற்றை உருவாக்குகிறானா?

'மனிதர்கள், சமூகம் ஆகியவை வரலாற்றின் விளைபொருள்கள்' என்று கூறிவிட்டு 'மனிதர்கள் தங்கள் வரலாற்றை தாங்களே உருவாக்குகிறார்கள்' என்றும், பின்னர் ‘’மனிதச் சிந்தனையின் மிகச் சாரம்சமான, மிக நெருங்கிய அடிப்படையாக இருப்பது தன்னளவில் இயற்கை மட்டுமே என்பதல்ல, மனிதர்கள் இயற்கையை மாற்றுவது என்பதே ஆகும்’ என்றும், ‘’எந்த அள‌வுக்கு இயற்கையை மாற்ற மனிதன் கற்றுக் கொண்டானே அந்த அளவுக்கே அவனுடைய மதிநுட்பமும் வளந்தது...மனிதன் கூட இயற்கையின் மீது எதிர்ச்செயல் கொள்கிறான்’ என்றும், அதை மாற்றித் தனக்குப் புதிய வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் படைத்துக் கொள்ளுகிறான்..." என்றும் கூறியிருப்பது முரண்பாட்டின் எதிர்வுகளின் இரண்டு அம்சங்களையும் விளக்க முற்பட்டதாகும்.

உலகம் தயாராயுள்ள சூழ்நிலைமையா? நிகழ்வுப் போக்குகளின் தொகுதியா?

கார்ல் மார்க்ஸ் என்னும் நூலிலிருந்து லெனின் கூறுகையில் “உலகத்தை முன்னவே தயாரிக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தொகுதியாக அல்ல. ஆனால் நிகழ்வுப் போக்குகளின் தொகுதியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற மாபெரும் ஆதாரக் கருத்து, அங்கே நிலையாகத் தோன்றும் பொருட்கள் நம் மூளைகளில் அவை ஏற்படுத்தும் மன பிம்பங்கள், கருத்துக்களைப் போலவே உருவாக்க மடையதல். அழிதல் என்ற இடைவிடாத மாற்றத்துக்கு உட்பட்டு, அதில் தற்செயலானது எனத் தோன்றும் அனைத்தையும் மற்றும் தற்காலிகமான பின்னைடைவுகள் அனைத்தையும் மீறி முடிவில் முன்னேற்றமான வளர்ச்சி தன்னை வலியுறுத்தும் என்ற மாபெரும் அடிப்படையான கருத்து குறிப்பாக ஹெகலின் காலத்திலிருந்து பொது உணர்வின் முற்ற முழுமையாகக் கலந்திருப்பதால் இந்த பொதுமையான வடிவத்தில் இப்பொழுது அது ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை. ஆனால் இந்த அடிப்படையான கருத்தைச் சொல்லளவில் ஏற்றுக் கொள்வதும் எதார்த்தத்தில் அதை ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறைக்கும் கையாள்வதும் இரண்டு வெவெவேறான விசயங்களாகும். இயக்கவியல் தத்துவ ஞானத்துக்கு முற்றானது, தனிமுதலானது, புனிதமானது ஒன்றுமில்லை. அது ஒவ்வொன்றினுடைய மற்றும் ஒவ்வொன்றிலுமுள்ள மாறும் தன்மையை வெளிப்படுத்துகின்றது. இருத்தல் மற்றும் அழிதல் என்ற இடைவிடாத நிகழ்வுப் போக்கு, கீழ் நிலையிலுருந்து உயர்ந்த நிலைக்கு முடிவில்லாத முன்னேற்றம் ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே அதற்கு முன்னால் நிலைப்பதில்லை” என்று கூறுவார்.

மேலும், 'தாங்களே தேர்ந்த்தெடுக்கும் சூழ்நிலைமைக‌ளுக்கு ஏற்றபடி இல்லாமல், கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு, தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்' என்று கூறும் மார்க்சு, உலகத்தை முன்னவே தயாரிக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தொகுதியாக அல்ல. ஆனால் நிகழ்வுப் போக்குகளின் தொகுதியாகப் புரிந்து கொள்ளவேண்டும்' என்றும் 'ஒவ்வொரு வரலாற்று கட்டமும் அதற்கே உரித்தான தனித்தன்மைகளுடன் விளங்கும்' என்றும் கூறுவது இயங்கியல் வகைப்பட்டதே அன்றி வேறன்று.

வரலாற்று ரீதியானதும் இயங்கியல் ரீதியானதுமான வளர்ச்சி

இறுதியாக, மார்க்சு நமக்கு அளித்துள்ள அணுகுமுறைக் குறித்து தெளிவு பெறுவது உகந்ததாகும். மார்க்சியம் என்பது மாதிரிகளை வார்த்தெடுத்தெடுப்தற்கான அச்சும் அல்ல; நிலையாக வார்த்தெடுக்கப்பட்ட இலக்கண சுத்தியான சூத்திரமும் அல்ல. மாறாக நெளிவு சுளிவாக வளைந்து கொடுக்கத்தக்கதான ஒரு கண்ணோட்டம் ஆகும். இது வரலாற்று ரீதியிலும் தர்க்கரிதியிலும் மட்டுமே வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகும். இது போன்றதொரு சூழ்நிலைமையில், “தான் வெறுமனே ஆராயுமிடத்து மார்க்சு இலக்கணம் கூற ஆசைப்படுகிறார் என்ற பொதுவாக மார்க்சின் படைப்புகளில் நிலையான, அளவெடுத்து வார்க்கப்பட்ட நிரந்தரமாகப் பிரயோகிக்கத் தக்க இலக்கணங்களை எதிர்பார்க்கலாம் என்ற தவறான அனுமானத்தை அவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. விசயங்களும் அவற்றின் பரஸ்பர உறவுகளும் நிலையானவையாக அன்றி மாறுவனவாகவே புரிந்துகொள்ளப்படுமிடத்து அவற்றின் மனத்தோற்றங்களான கருத்துக்களும் அதேபோல மாறுதலுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டவையே என்பது தானே தெளிவாகும். அவை வளைந்து கொடுக்காத இலக்கணங்களில் அடைத்து வைக்கப்படுவதில்லை. அவற்றின் வரலாற்று ரீதியான அல்லது தர்க்க ரீதியான உருவாக்கச் செயல் முறையில் வளைக்கப்படவே செய்கின்றன. தனது முதல் புத்தகத்தின் துவக்கத்தில் மார்க்சு எளிய பண்ட உற்பத்தியை வரலாற்று ஆதாரமாகக் கொண்டு துவங்குவதும் இந்த அடிப்படையிலிருந்து இறுதியாக மூலதன‌த்துக்குப் போய்ச் சேருவது ஏன் என்பதை, தர்க்கரீதியிலும் வரலாற்று ரீதியிலும் இரண்டாம் நிலையான ஒரு வடிவத்துக்குப் பதிலாக எளிய பண்டத்திலிருந்து - ஏற்கனவே முதலாளித்துவ ரீதியில் மருவிய பண்ட்த்திலிருந்து - அவர் துவங்குவது ஏன் என்பதை இது தெளிவுபடுத்தத்தான் செய்கிறது” என எங்கல்சு மூலதனம் முதல் பாகம் முதல் புத்தகத்தில் ( நியூ சென்சுரி புக்ஸ் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு, 1998) குறிப்பிட்டுள்ளார். மார்க்சியம் உருவாக்கி நமக்களித்த தர்க்க ரீதியிலும் வரலாற்று ரீதியிலுமான‌ அணுகுமுறையில் அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற சமூக முரணை ஆராந்தறிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக