வெள்ளி, 21 அக்டோபர், 2011

வாழ்நிலையும் சிந்தனையும்

சமூக வாழ்நிலையைப் பற்றியும் சமூக சிந்தனையைப் பற்றியும் ஆராய்வது பொருளாதார அடித்தளத்தின் இருப்பு, இயக்கம் பற்றியும் மற்றும் மேல்கட்டுமானத்தின் நிலைப் பற்றியும் ஆழமாக உணர ஏதுவாகும் என்பது திண்ணம். சிந்தனையின் சர்வசுதந்திரமானதும் சுதந்திரமற்றதுமான வரம்பு, சார்புதன்மை போன்ற அனைத்தையும் புரிந்து கொண்டால் மட்டுமே மேல்கட்டுமானத்தின் முழுப்பொருளையும் உணர்ந்து கொள்ளமுடியும்.


உலகம், மனிதனின் சிந்தனைக்கு அப்பால் புறநிலையாக இருக்கிறது

மனிதன் சிந்திப்பதற்கு முன்னமே ‍ பொருளாதாய உலகம் இருந்து வந்தது என்றும், மேலும் மனிதன் சிந்திக்க ஆரம்பித்தப் பின்னர், இந்தப் பொருளாதாய உலகம் மனிதனின் சிந்தனைக்கு அப்பால் புறநிலையாக இருந்து வந்து கொண்டிருக்கின்றது என்றும் பொருள்முதல்வாதம் கூறுகின்றது. இதைத்தான் பொருளின் புறநிலையான குணாம்சம் என்று அழைக்கின்றோம். மார்க்ஸ், சமூக இயக்கத்தை மனிதச் சித்தம் உணர்வு அறிவு ஆகியவற்றின் விதிகளால் இயக்கப்படாதது மட்டுமல்ல. ஆனால் அதற்கு மாறாக அவனுடைய சித்தம் உணர்வு, அறிவு ஆகியவற்றை நிர்ணயிக்கின்ற இயற்கை வரலாற்று நிகழ்வுப் போக்காக ஆராய்கின்றார்....('மூலதனத்தின்' முதல் தொகுதியின் இரண்டாவது செர்மன் பதிப்பின் பின்னுரையிலிருந்து, பக்கம் 13 - இயக்கவியல் பொருள்முதல்வாதம்)


மேற்கண்ட‌ இரண்டு கட்டங்களிலும் பொருளாதாய நிலைமைகளில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான அடிப்படையான‌ முரண்கள் வேறுபடுகின்றன. முந்தைய கட்டத்தில் புறப்பொருளின் வளர்ச்சி என்பதும், மாற்றம் என்பதும் பொருளுக்குள் உள்ள உள்முரண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் அடுத்த‌ கட்டத்தில் புறப்பொருளின் உள்ளார்ந்து இயங்கும் முரண்பாடுகளோடு சிந்தனையின் அகநிலை அம்சமும் சேர்ந்து செயல்படுவதால் பொருளின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான‌ மேலும் சிக்கலாகவும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லவும் செய்கின்றது. இது பொருளின் வளர்ச்சி, மாற்றத்தை விரைவுபடுத்துகின்றது.

வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவு

இயற்கையும் இயங்குகிறது. சமூகமும் இயங்குகிறது. சமூக வாழ்நிலை என்பது பொருளாதார வாழ்வும், கருத்தியல் வாழ்வும் இரண்டும் சேர்ந்ததாகும். சிந்தனையும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இடைவிடாத இயக்கத்தில் வாழ்நிலையிலிருந்து சிந்தனை எழுகின்றது. மறுவிளைவாக சிந்தனை வாழ்நிலையின்மீது செல்வாக்குச் செலுத்திகிறது. வாழ்நிலைக்கும் இடையிலான முரண் இருந்து கொண்டே இருக்கின்றது. பொருளாதார நிலைமை சிந்தனையைத் தீர்மானிக்கச் செய்கின்றது. அதே சமயம் சிந்தனை பொருளாதாய நிலைமைகளை பாதிக்கவும் மாற்றவும் செய்கின்றது. அது மட்டுமின்றி, ஏற்கனவே நிலவிவரும் முந்தைய கருத்தியல் நிலைமைகளும் சிந்தனையின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன

புறப்பொருலிருந்து எழும் மனித சிந்தனை அப்பொருளின் மீது எதிர்வினைப் புரிந்த வண்ணம் இருக்கின்றது. இந்த இயக்கப்போக்கில் பொருளின் இயக்க‌விதிகளை அறிந்து கொள்ளும் போது பொருள் மாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கான ஆற்றலை சிந்தனைப் பெறுகின்றது. இங்கே பொருளின் இயக்க விதிகளோடு மனித சிந்தனை ஒன்றிவிடுகின்றது.

வாழ்நிலையிலிருந்துதான் உணர்வு தோன்றுகிறது,

“வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதே யன்றி உணர்விலிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை என்று பொருள்முதல்வாதம் பொதுவாக விளக்குகிறது. ஆகையால் மனிதகுலத்தின் சமுதாய வாழ்வு விசயத்திலும் சமுதாய உணர்வு சமுதாய வாழ்நிலையிலிருந்தே தோன்றுகின்றது என்று பொருள்முதல்வாதம் விளக்கித் தீர வேண்டியிருக்கின்றது'. மார்க்சு எழுதுகிறார், 'தொழில்நுட்பவியல் இயற்கையுடன் மனித கொண்டுள்ள தொடர்புகளுக்கான வழிமுறையை, மனிதன் உயிர் வாழ்வதற்குரிய நேரடியான உற்பத்தி முறையை வெளிபடுத்துவதுடன் அதன் மூலம் அவனது சமுதாய உறவுகளின் அமைப்பு முறையையும் அந்த உறவுகளிலிருந்து தோன்றும் எனக் கருத்தோட்டங்களையும் புலப்படுத்துகின்றது.' (‘கார்ல் மார்க்ஸ்’, லெனின்)

சிந்தனையைத் தீர்மானிப்பது வாழ்நிலையா, வாழ்நிலையைத் தீர்மானிப்பது சிந்தனையா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது மார்க்ஸ் ‘வாழ்நிலையை சிந்தனை தீர்மானிப்பதில்லை, மாறாக‌ வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது’ என்று கூறினார். வாழ்நிலைதான் சிந்தனைக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. வாழ்நிலை என்பது புறநிலையானவை. ஆனால் சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் உள்ள உறவைப் பற்றி விளக்கும் போது அது இயங்கியல் அணுகுமுறையைக் கையாளவேண்டியிருக்கிறது. சிந்தனை வாழ்நிலையை சில நேர்வுகளில் பாதிக்கவும் செல்வாக்கு செலுத்தவும் ஏன் தீர்மானிக்கவும்கூட‌ செய்கின்றது. இருப்பியல் என்பது சிந்தனையா அல்லது வாழ்நிலையா என்பதைப் பிரச்சினையாக முன்வைக்கும். இயங்கியல் என்பது சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் உள்ள உறவைப் பற்றி விளக்கும். அதாவது சிந்தனையை வாழ்நிலை தீர்மானிக்கும் அதே போல வாழ்நிலையை சிந்தனை சில நேரங்களில் தீர்மானிக்கரமான பங்கை ஆற்றுகிறது. இருப்பியல் பிரச்சனையை, இயக்கவியல் பிரச்சனையோடு சேர்த்து குழப்பும் நிலை உருவாகிவிடுகின்றது.

சிந்தனைக்கு சர்வசுதந்திரம் உள்ளதா?

புறப்பொருளைப் பிரதிபலிக்கும் மனித சிந்தனைக்கு சுதந்திரம் உள்ளதா? அதன் அளவு என்ன? என்று பார்க்கும் போது பொதுவான இயக்கப்போக்கில் பார்க்கும் போது சிந்தனை சர்வசுதந்திரம் கொண்டதாகவும், குறிப்பான நிலைமைகளில் சுதந்திரம் அற்றதாகவும் இருக்கிறது என்பதை உணரமுடியும். இது குறித்து டூரிங்குக்கு மறுப்பு என்னும் நூலில் எங்கல்சு விரிவாக ஆராய்ந்து கூறுவார். சிந்தனை எவ்வாறு சர்வ சுதந்திரம் பெற்று விளங்குகிறது என்பதையும் எச்சூழ்நிலையில் வரம்புக்குட்பட்டு விளங்குகிறது என்பதைக் குறித்தும் அவர் கூறுவதைக் கீழே காணலாம்.

"சிந்தனையின் சர்வசுதந்திரம் மிக மிக சர்வசுதந்திரமற்ற முறையில் சிந்திக்கும் மனித ஜீவிகளின் தொடர்வரிசையால் கைவரப் பெறுகிறது; உண்மையினை நிபந்தனை இன்றி உரிமை கொண்டாடத்தக்க அறிவு ஒப்பியலான தவறுகளின் தொடர்வரிசையால் கைவரப் பெறுகிறது. இவற்றில் ஒன்றோ அல்லது மற்றதோ (அதாவது, நிபந்தனையற்ற உண்மையான அறிவோ அல்லது சர்வ சுதந்திரமான சிந்தனையோ) மனித வாழ்வின் முடிவில்லாத காலப்போக்கில் மட்டுமே முழுமையாகக் கைவரப் பெறமுடியும்.

"இங்கு மீண்டும் ஒரு முறை மேலே கண்டது போலவே முற்றமுழுமை என்று அவசியமாகவும் கருத்தில் உருவாக்கப்பட்டதான மனித சிந்தனையின் தன்மைக்கும் ஒரு வரையறைக்குள் மட்டுமே சிந்திக்கும் தனிப்பட்ட மனித ஜீவிகளிலான அதன் எதார்த்தத்திற்கும் இடையிலான அதே முரண்பாட்டை நாம் காண்கிறோம். இது வரம்பற்ற முன்னேற்றத்தின் பாதையில் மட்டுமே - எம்மைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் செய்முறையில் மனித குலத்தின் தலைமுறைகளின் முடிவில்லா வரிசைகளால் மட்டுமே - தீர்வு காணக் கூடிய முரண்பாடாகும்.

“இந்த அர்த்தத்தில் மனித சிந்தனை எந்தளவுக்கு சர்வ சுதந்திரமுடையதோ அந்தளவு சர்வசுதந்திரமானது அல்ல; அறிவுக்கான அதன் ஆற்றலும் எந்தளவுக்கு வரையற்றதோ அந்தளவுக்கு வரைக்குட்பட்டது. அது தனது தன்மையில் தனது வாழ்க்கைத் தொழிலில் அதன் சாத்தியக்க்கூறுகளில், அதன் வரலாற்று இறுதி லட்சியத்தில் சர்வ சுதந்திரமுடையதாகவும் வரையற்றதாகவும் விளங்குகிறது. அதன் தனிப்பட்ட நிறைவேற்றத்திலும், உண்மையில் எந்தவொரு குறிப்பிட்ட தருணத்திலும் அது சர்வ சுதந்திரமாக இல்லை. வரம்பிற்குட்பட்டதாக இருக்கிறது (டூரிங்குக்கு மறுப்பு) என எங்கல்சு கூறுவார். சிந்தனை, மனித இனம் தோன்றுவதற்கு முன்னால் இருந்து வந்த பொருளுலகத்தைப் பற்றியும், இதுவரை பொருள் உணராத மாறப்போகும் பொருளின் இயங்கியல் விதிகளைப் பற்றியும் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரை அது சர்வ சுதந்திரம் வாய்ந்ததாக விளங்குகிற‌து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக