பொருளின் தத்துவப் பண்புகளான புறநிலைத்தன்மை, தனிமுதலான பண்பு, வரம்பற்றதும், வரம்புக்குட்பட்டதுமான எல்லை, அவசியம் போன்ற அடிப்படைகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே சமூகத்தின் வாழ்நிலை மற்றும் பொருளாதார அடித்தளம் போன்ற பொருள்முதல்வாதக் கருத்துக்கோப்புகளை முழுமையாகவும் ஆழமாகவும் புரிந்துக் கொள்ள இயலும்.
பருப்பொருளின் குணாம்சங்கள்
பருப்பொருளின் மூன்று குணாம்சங்களாவன: ஒன்று, புறநிலை விதி; இரண்டு, காரணகாரியத் தன்மை; மூன்றாவது அவசியம் ஆகியனவாகும். பொருளின் அடிப்படைப் பண்பை விளக்கும்போது ‘பருப்பொருளின் ஒற்றை குணம்சம், புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல் என்ற குணாம்சமாகும்’ என்று லெனின் கூறுவார். அது பொருள் காரணகாரிய அடிப்படையில் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உள்ளாகிறது; மேலும் அது தற்செயலானதாக அன்றி அவசியத்தையை அடிப்படையாகக் கொள்கின்றது.
பொருளா? கருத்தா?
பொருள், கருத்து ஆகியவற்றில் எது பிரதானம்? என்ற கேள்வி தத்துவஞானம் தோன்றியதிலிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றது. பொருளை முதன்மைப்படுத்தி கருத்தை இரண்டாம் பட்சமாகக் கருதுவோர் பொருள்முதல்வாதிகள். கருத்தை முதன்மைப்படுத்தி பொருளை இரண்டாம் பட்சமாகக் கருதுவோர் கருத்துமுதல்வாதிகள். இது பற்றி ஆராயும் இயல் இருப்பியல் என்பதாகும்.
பொருளுக்கும் கருத்துக்குமான பரஸ்பர உறவு ஒன்றை பாதிக்கச் செய்து, செல்வாக்கு செலுத்தி, மாற்றம் ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றது. சிந்தனை பொருளின் மீது ஏற்படுத்தும் செயல்பட்டின் மூலம் பொருளை அறிய முற்படுகின்றது. பொருளாகிய புற உலகை அறிய இயலுமா அல்லது இயலாதா என்ற விசயம் தத்துவஞானத் துறையில் அடுத்ததாக இடம் பிடித்தது.
பொருளுக்கும் கருத்துக்குமான உறவு
மார்க்சியம் தோன்றுவதற்கு முன்பு தத்துவ உலகில் மிகவும் செல்வாக்கு செலுத்திவந்த அணுகுமுறை இயந்திரதனமான அணுகுமுறையாகும். பொருளின் இயக்கம் குறித்தும் நிலவிவந்த இயந்திரதனமான அணுகுமுறையை மாற்றி இயங்கியல் அணுகுமுறையை நிறுவியதில்தான் மார்க்சியம் வெற்றிபெற்றது. பொருள், கருத்து ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள உறவை எந்திரத்தனமானமான உறவாக பார்க்ககூடிய போக்குதான் கம்யூனிஸ்டுகள் மத்தியில் மிகவும் செல்வாக்கை செலுத்தும் போக்காகும். பொருளிலிருந்துதான் கருத்து தோற்றம் பெறுகின்றது என்ற பொருள்முதல்வாத அடிப்படையிலிருந்துதான் இது முன்வைக்கப்படுகின்றது. இது பொருளுக்கும் கருத்துக்கும் இடையே உள்ள உறவை மறுப்பதில்லை. ஆனால் இரண்டிற்கு மிடையேயான உறவு எந்திரத்தனமான உறவாகப் பார்ப்பதால், பொருளின் இயக்கத்தைப் பற்றியோ அல்லது பரஸ்பர உறவு பற்றியோ அல்லது மாற்றம் பற்றியோ சிந்திப்பதில்லை. பொருட்களுக்கிடையே, நிகழ்வுகளுக்கிடையே உள்ள உறவு பற்றியோ அல்லது உட்தொடர்பு பற்றியோ ஆராய்வதில்லை.
எல்லாவற்றையும் பொருளாக குறைக்க முடியுமா?
பொருளுக்கும் கருத்திற்கும் இடையே ஒரு இயந்திரத்தனமான உறவை ஏற்றுகொள்ளும் அணுகுமுறை இயக்கமறுப்பியல் தன்மை வாய்ந்ததாகக் கூறலாம். இந்த அணுகுமுறையில் ஒரு வரையறுக்கப்பட்ட இயக்கம் இருக்கின்றது. அதாவது எல்லா கருத்துக்களையும் நிகழ்வுகளையும் பொருளாகக் குறைப்பது; அதாவது இயக்கத்தை ஒற்றைவழிப்பாதையாக பார்ப்பது. ஆனால் இயங்கியல் வகைப்பட்ட அணுகுமுறையானது இரண்டையுமே மறுக்கின்றது. சிந்தனைத் தளத்தில் தோன்றும் எல்லா கருத்துக்களையும் பொருளாக சுருக்குவது ஒருவகையில் குறைத்தல்வாதமே ஆகும். இத்தகைய அணுகுமுறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது, இயங்கியல் அணுகுமுறை. பொருளிலிருந்து தோன்றிய கருத்து, பொருளை மாற்றக்கூடியதாக இருக்கிறது என்பதில் இயங்கியல் அணுகுமுறை இருக்கிறது.
சிந்தனை தளத்திலுள்ள எல்லா கருத்துக்களையும் பொருளாகக் குறைத்து பார்ப்பது என்பது அதர்க்க வகைப்பட்டதாகும். இது ஒன்றுக்கு ஒன்று என்ற சமன்பாட்டை வேண்டி நிற்பதாகும். அவ்வாறு சமன்படுத்துவது இயக்கத்தை முற்றுபெற வைக்கின்றது. இயக்கம் அத்தோடு முடிவுக்கு வந்துவிடுகின்றது. ஆனால் பொருள் கருத்து ஆகியவற்றிற்கான உறவு அவ்வாறு இல்லை.அந்த உறவு இயங்கியல் வகைப்பட்டது. முடிவின்றி தொடர்ந்து இயங்கக் கூடியது. இயக்கத்தில் வைத்திருப்பது. இத்தகைய அணுகுமுறை மட்டுமே கருத்தை அதன் பொருளீய வாழ்நிலையில் எப்போதும் வைக்கின்றது. இத்தகைய பார்வை மட்டுமே, கருத்து, பொருளின்மீது தீர்மானகரமான செல்வாக்கையும் தாக்கத்தையும் செலுத்த வழிகாட்டுகின்றது.
பொருளின் தனிமுதல் உண்மை
புறப்பொருள், நம் மனத்திற்கு அப்பால் உள்ளது, அதுமட்டுமின்றி நம் மனத்திலிருந்து சுதந்திரமான முறையில் இருக்கிறது. இதுதான் பொருள்முதல்வாத்தின் அடிப்படையான கூற்றாகும். புறப்பொருள் மனத்திலிருந்து சுதந்திரமாக இருக்கிறது என்றால் அது எந்த ஒன்றையும் சார்ந்திராமல் இருக்கிறது. அதுமட்டுமல்ல, மனித குலம் தோன்றுவதற்கு முன்னரே பொருள் இருந்து வருகிறது. ஆகவே பொருள் என்பது தனிமுதலாக இருப்பதை அங்கீகரித்தே ஆகவேண்டும். அப்போதுதான் பொருள்முதல்வாத்தின் அர்த்தம் முழுமைபெற்றதாக இருக்கும். பொருளின் தனிமுதலான உண்மையை அங்கீகரிக்கும்போது மட்டுமே சிந்தனையின் சர்வசுதந்திர தன்மையை உணர முடியும்.
“பொருள்முதல்வாத்தின் அடிப்படை முற்கூற்று என்பது புற உலகம் நம் மனதுக்கு அப்பால் உள்ளதையும் அதிலிருந்து சுதந்திரமான முறையில் இருப்பதையும் அங்கீகரிக்கவேண்டும். கருத்துமுதல்வாதத்தில் அகப்பொருள் இல்லாமல் புறப்பொருள் இல்லை. ஆனால் பொருள்முதல்வாதத்தில் அகப்பொருளலிருந்து சுதந்திரமான முறையில் புறப்பொருள் இருக்கிறது. பூமி மனிதனுக்கு முன்பே இருந்தது என்ற இயற்கை விஞ்ஞானக் கருத்து, புறநிலையான உண்மையாகும். பிரதிபலிக்கப்படுகின்ற பொருளின் இருத்தல் பிரதிபலிக்கின்ற பொருளிலிருந்து சுதந்திரமானது என்பது பொருள்முதல்வாதத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.’ “பொருள்முதல்வாதியாக இருப்பதென்றால் நம்முடைய புலனுறுப்புக்களால் நமக்குத் தெரிவிக்கப்படுகின்ற புறநிலையான உண்மையை அங்கீகரிக்கவேண்டும். புறநிலையான உண்மையை அதாவது மனிதன் மற்றும் மனிதகுலத்தைச் சார்ந்திராத உண்மையை அங்கீகரிப்பது தனிமுதலான உண்மையை ஏதாவெதொரு வழியில் அங்கீகரிப்பதாகும்.’ “எங்கல்ஸ் மற்றும் டித்ஸ்கென் எழுதியிருக்கின்ற எல்லாக் கருத்துரைகளிலிருந்தும் 'இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்குச் சார்புநிலை மற்றும் தனிமுதலான உண்மைக்கு இடையே கடக்க முடியாத வேலி இல்லை' என்பதைத் தெளிவாகக் காணலாம்’ (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமரிசனமும்) என லெனின் கூறுவார்.
மனித அறிவின் சார்புநிலைத் தன்மையை அங்கீகரிக்கும் அதே நேரத்தில் புறநிலையின் தனிமுதலான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில்தான் அறிவுக்கும் உண்மைக்கும் இடையிலான இயக்கவியல் தன்மை புலப்படும். மாறாக, மனித அறிவின் சார்புநிலைத் தன்மையை மட்டும் அங்கீகரித்து, தனிமுதலான உண்மையை மறுப்பது சார்புநிலைவாதம் ஆகும்.
மார்க்சியம் சார்புநிலைவாதமா?
இனி, சார்புநிலைவாதத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள உறவைப் பற்றி பார்ப்போம். “மனித சிந்தனை அதன் தன்மையிலேயே சார்புநிலையான உண்மைகளின் கூட்டு மொத்தமான தனிமுதலான உண்மையைக் கொடுக்கின்ற தகுதி உடையது. அவ்வாறு கொடுக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியின் ஒவ்வொரு காலடியும் தனிமுதலான உண்மை என்ற கூட்டு மொத்தத்தில் புதிய கூறுகளைச் சேர்க்கிறது. ஆனால் ஒவ்வொரு விஞ்ஞானக் கருதுகோளின் மெய்ம்மையின் எல்லைகள் சார்புநிலையானவை; அறிவின் வளர்ச்சியில் ஒரு சமயத்தில் விரிவடைகின்றன. மறு சமயத்தில் சுருங்குகின்றன" என லெனின் கூறுகிறார்.
“மார்க்சு எங்கல்சினுடைய பொருள்முதல்வாத இயக்கவியல் நிச்சயமாக சார்புநிலைவாதத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் அதைச் சார்புநிலைவாதமாகக் குறுக்கிவிட முடியாது. அதாவது அது நம்முடைய அனைத்து அறிவின் சார்புநிலைத் தன்மையை அங்கீகரிக்கிறது புறநிலையான உண்மையை மறுக்கின்ற அர்த்தத்தில் அல்ல, இந்த உண்மையை நம்முடைய அறிவு எட்டுகின்ற எல்லைகள் வரலாற்று ரீதியில் வரையறுக்கப் பட்டவை என்ற அர்த்தத்தில்தான்” என லெனின் சார்புநிலைவாதத்திற்கும் மார்க்சியத்திற்குமுள்ள உறவை தெளிவுபடுத்துவார்.
வரையறைக்கு உட்பட்டதா? வரையறைக்கு அப்பாற்பட்டதா?
நவீன பொருள்முதல்வாதத்தின் அதாவது மார்க்சியத்தின் நிலையிலிருந்து புறநிலையான தனிமுதலான உண்மையை நம் அறிவு நெருங்கிய அளவீட்டின் எல்லைகள் வரலாற்று ரீதியில் வரையறைக்கு உட்பட்டவை; ஆனால் அத்தகைய உண்மை இருப்பது வரையறை இல்லாதது, நாம் அதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற மெய்விவரமும் வரையறை இல்லாதது. ஒரு சித்திரத்தின் உருவரைகள் வரலாற்று ரீதியில் வரையறைக்க்கு உட்பட்டவை, ஆனால் இந்தச் சித்திரம் புறநிலையில் இருக்கின்ற உருமாதிரியைப் படம்பிடித்துக் காட்டுகிறது என்ற மெய்விவரம் வரையறை இல்லாதது.”
“ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தனிமுதலான புறநிலையான அறிவுக்கு ஒரு முன்னேற்றம் என்பது வரையறை இல்லாதது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒவ்வொரு சித்தாந்தமும் வரலாற்று ரீதியில் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் ஒவ்வொரு விஞ்ஞான சித்தாந்தத்துக்கும் பொருந்துகின்ற புறநிலையான உண்மை தனிமுதலான இயற்கை உண்டு என்பது வரையறை இல்லாத உண்மையாகும்.” என லெனின் கூறுவார்.
ஆகவே, புறநிலையான தனிமுதலான உண்மை இருப்பது என்பது வரையறையற்றதாகும்; ஆனால் அந்த உண்மையை நெருங்கும் எல்லைகள், வரலாற்று ரீதியில் வரையறைக்கு உட்பட்டவை; அதாவது, ஒவ்வொரு சித்தாந்தமும் வரலாற்று ரீதியில் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் புறநிலையான, தனிமுதலான இயற்கை உண்டு என்பது வரையறை இல்லாத உண்மையாகும். ஆகவே வரையறைக்கு உட்பட்ட உண்மைக்கும் வரையறைக்கு உட்படாத உண்மைக்கும் இடையே உள்ள இயங்கியல் உறவை லெனின் விளக்குவார்.
வரலாற்று ரீதியிலானது மட்டுமல்ல, தர்க்க ரீதியிலான வளர்ச்சியும் கூட
பொருள்தான் முதன்மையானது.; கருத்து இரண்டாம்பட்சம். இதுதான் பொருள்முதல்வாதம். அதாவது பொருளிலிருந்து கருத்து தோன்றுகிறது. கருத்து பொருளின்மீது வினைபுரிகிறது. இதன்வழி பொருளை அறியும் வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் பொருளை அறியும் இயக்கப்போக்கு சிக்கலானது. தத்துவத்துறை, உண்மையை அறிய இரண்டு வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. ஒன்று அனுபவம்; மற்றது அறிவு. அதாவது அனுபவத்தின் மூலம் உண்மையை அறியலாம். அதேபோல அறிவின் மூலமும் உண்மையை அறியலாம். பொருளை அறியும் நடைமுறை இயக்கப்போக்கில் அனுபவம், அறிவு ஆகிய இரண்டிற்கும் சம பங்கு இருக்கின்றது. சில நேரங்களில் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கலாம. இரண்டிற்குமான உறவு இயங்கியல் அடிப்படையிலானது. அடுத்து பொருளை மாற்றத்திற்கான இயக்கப் போக்கில் கருத்தின் பங்கு கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த இயக்கப்போக்கின் இறுதி நிகழ்வாக பொருளே முதன்மை பெறுகின்றது.
பொருளுலகத்தில் எளியவகை பொருள் கூறிலிருந்து சிக்கலான பொருள் கூறை நோக்கி வளர்ந்து செல்வதைப்போல கருத்துலகத்திலும் எளிய கருத்துருவிலிருந்து சிக்கலான கருத்துருவை நோக்கி செல்கின்றது. எளிய கருத்துருவானது எளிய பொருள்கூறின் பிரதிபலிப்பாகக் கொள்ளலாம். ஆனால் சிக்கலான கருத்துருவைப் பொருத்தவரை சிக்கலான பொருள் கூறின் பிரதிபலிப்பாக மட்டும் பார்க்க இயலாது, எளிய கருத்துருவின் வரலாற்று ரீதியாக - தர்க்க ரீதியான வளர்ச்சியாகவும் பார்க்கவேண்டும். இங்கு குறிப்பிடப்படும் வரலாற்று ரீதியிலான, தர்க்க ரீதியிலான வளர்ச்சியானது பொருளிலிருந்து ஒப்பீட்டு ரீதியில் சுதந்திரமாக இருப்பதை தவிர்க்க யியலாத ஒன்றாக ஆக்குகிறது.
பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி இருக்கும் சிக்கலான பொருளில் வரலாற்று ரீதியான பொருள் வளர்ச்சி மட்டுமின்றி, அந்த வளர்ச்சிப்போக்கில் இடைச்செயல் புரிந்த கருத்துக்களின் செல்வாக்கையும் உட்கிரகித்து கொண்டதாக இருக்கும். அதேபோல இன்று நாம் காணும் சிக்கலான கருத்துரு ஒப்பீட்டு ரீதியில் சுதந்திரமான தன்மையைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பொருளின் வரிசைகிரமமான வளர்ச்சிப்போக்கின் பிரதிபலிப்பாகும்
பொருள் வரலாற்று வழியாகவும் இயக்கவியல் அடிப்படையிலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதே போல கருத்தும் சிந்தனைமூலம் பொருளைப் பிரதிபலிக்க செய்யும் அதே சமயம், வரலாற்று வழிபட்டதாகவும் இயக்கவியல் வழிபட்டதாகவும் இருக்கிறது. கருத்து உருவாவதற்கு அடிப்படையாக இருப்பது பொருட்கள் என்று கூறும் அதே நேரத்தில் அவை நேற்றைய கருத்தின் வளர்ச்சியாகவும் பார்த்தாக வேண்டும்.
நாம் கருத்துமுதல்வாத்தை எதிர்த்துப் போராடுவதைப் போல இயக்க மறுப்பியலுக்கு எதிராகவும் போராட வேண்டும். பொருள்முதல்வாத்தைப் பாதுகாக்க இயங்கியலுக்காக போராடவேண்டும். எல்லா வகையான இயக்க மறுப்பியல் அம்சங்களையும் எதிர்க்கவேண்டும். இரண்டுக்குமுள்ள உறவு பற்றி பேசும்போது அங்கு இயங்கியல் அணுகுமுறையைக் கையாளவேண்டும். அதாவது பொருள் கருத்தோடு எவ்வாறு உறவு கொள்கின்றது; கருத்து எவ்வாறு பொருளோடு உறவு கொள்கின்றது; இரண்டும் பரஸ்பரம் உறவு கொள்கின்றது; இரண்டும் ஒன்றை ஒன்று பாதிக்கவும், மாற்றவும் செய்கின்றது என்று இயங்கியல் கூறுகின்றது.
கருத்தின் பெளதீக சக்தி
கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது பெளதீகச் சக்திபெற்றுவிடும். ஆகவே கருத்து பெளதீகத் தன்மை பெற அது மக்களின் சிந்தனையைப் பற்றி கொள்ளவேண்டும். கருத்து மக்களின் சிந்தனை வழியாக செயலூக்கம் பெறுகின்றது. கருத்தானது, சமூக நடைமுறையில் உற்பத்தி நடவடிக்கையிலிருந்து பிரிக்கயியலாத இன்றியமையாத பாத்திரத்தை வகிக்கின்றது. கருத்தானது, உற்பத்தி சக்திகளின் சிந்தனைவழி சமூக நடைமுறையில் வினையாற்றி பொருளீயச் சக்தியாக மாற்றம் பெற்று அடித்தளத்தின் பண்பை முற்றிலுமாக மாற்றும். அதிலிருந்து ஒரு புதிய கருத்துலகம் எழுகின்றது. அவ்வாறு எழும் புதிய கருத்துலகம் முந்தைய கருத்துலகத்தைவிட பண்புரீதியில் வேறுபட்டதாகும்.
இதுவரை உலகை வியாக்கியானம் செய்வதுதான் தத்துவங்களின் பணியாக இருந்து வந்தது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் உலகத்தை மாற்றுவது என்பதுதான் என்றும் மார்க்ஸ் கூறுகின்றார். இது சிந்தனையின் முக்கியத்துவத்தை குறிப்பாக கருத்தியல் மற்றும் தத்துவத்தின் சிறப்பம்சங்களையும் தனித்துவத்தையும் குறிப்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக