சனி, 19 நவம்பர், 2011

கட்டுரை விமரிசனம்‍

 சுகுந்தனின் 'திருத்தல்வாதமும் திருத்தவாதிகளும்'

முதலில், இரட்டை தன்மை வாய்ந்த தலைப்பே படிப்பதற்கான என் ஆவலை தூண்டியது. தலைப்பில் உள்ள‌ 'திருத்தல்வாதம்' என்ற பகுதி கருத்தியல் சார்ந்ததாகவும், 'திருத்தல்வாதிகள்' என்ற பகுதி குறிப்பான நடைமுறையில் திருத்தல்வாதிகளின் போக்குகள் குறித்து நிற்பதாகவும் நான் உணர்கின்றேன். அதற்கேற்ப தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் குறித்து தத்துவார்த்த ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் விளக்க முயற்சித்திருக்கின்றார் தோழர் சுகுந்தன் என்று நான் நினைக்கின்றேன். இந்த அணுகுமுறையை நான் வரவேற்கின்றேன். மேலும், தான் எடுத்துக் கொண்ட கருப்பொருள் குறித்த கருத்துக்களை ஆழமாகவும் வரலாற்று ரீதியாகவும் தொகுத்தளித்துள்ளார். இக்கட்டுரையின் சுருக்கக் குறிப்புகளை முதலில் காண்போம்.



திருத்தல்வாதம்’ குறித்த வரையறைகள்

விவரங்களின் அடிப்படையில் உண்மைகளை கண்டறியும் சிந்தனைமுறையை மார்க்சியம் முன்வைக்கின்றது. இதற்கு எதிராக, திருத்தல்வாதம் என்பது சாராம்சத்தில் அகநிலைவாத சிந்தனையை முன்வைக்கின்றது என்பது தோழரின் வாதமாகும்.

'திருத்தல்வாதம் என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை அடையாளம் காணும் குணக்கேடு; பாரம்பரிய அடிமை உணர்வுகளின் காவல்நாய்: நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடும் மனநோய்' என்று தன் முடிவுரையில் கூறுகின்றார். இந்த வரையறை அகநிலையைச் சார்ந்தது. குறிப்பாக உளவியல் சார்ந்ததாக கருதுகின்றார்.

மார்க்சிய அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து விலகிச் செல்வது திருத்தல்வாதம் ஆகும் என்ற இன்னெரு வரையறையையும் தருகிறார். இந்த வரையறை முந்தையதைக் காட்டிலும் தன்மையில் வேறுபட்டதாகும்.

இந்த இரண்டு வரையறைகளையும் நாம் விவாதத்திற்கு உட்படுத்தலாம் என எண்ணுகின்றேன். முதல் வரையறையானது அறிவியல் ஆய்வுமுறையைப் பற்றியது; இரண்டாவது வரையறை மார்க்சிய அடிப்படைகளின் மீதான‌ அணுகுமுறைப் பற்றியது. விவாதிக்கின்றது. இதன்மூலம் அறிவியல் ஆய்வுமுறையைப் பற்றிய, மார்க்சிய அடிப்படையான விசயங்களை பற்றிய விவாதத்தின் தேவையை நான் உணர்கின்றேன். திருத்தல்வாதம் மூன்று துறைகளில் செயல்படுவதாகக் கூறுகின்றார்.

1. சிந்தாந்தத்தில் திருத்தல்வாதம்:

வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகின்றதே அன்றி உணர்விலிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை என்று மார்க்சியம் கூறுகின்றது; இந்த மார்க்சிய அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் திருத்தல்வாதம், சமூக உணர்வுகளான தேசிய உணர்வையும் சாதிய உணர்வையும் வரையறுக்கும். அதாவது சமூக வாழ்நிலையான உற்பத்திமுறையை கவனத்தில் கொள்ளாமல் பிறப்பே சமூக உணர்வுகளைத் தீர்மானிக்கிறது என்று திரித்துகிறது என்று கூறுகிறார். திருத்தல்வாதம் கம்யூனிஸ்டு கட்சியின் ஒற்றுமை குலைத்து செயல்திறனை நீர்த்துபோக வைப்பதாகும் என்று கூறுகின்றார்.

2.அரசியல் பொருளாதாரத்தில் திருத்தல்வாதம்:

பெருவீத உற்பத்திமுறை உறுதிபட்டு சிறுவீத உற்பத்திமுறை அப்புறப்படுத்தும்; அது முதலாளித்துவ அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பது மார்க்சிய அடிப்படையாகும். ஆனால் திருத்தல்வாதம் நிலபுரபுத்துவ சிறுவீதஉற்பத்திமுறை முதலாளித்துவ பெருவீத உற்பத்தி முறையாக மாறாது என்ற தவறான புரிதலை திருத்தல்வாதம் முன்வைக்கின்றது. வர்க்க பகைமையின் அடிப்படைகளைத் திருத்தல்வாதம் புறக்கணிக்கின்றது என்பது இவரது வாதம்.

அரசு குறித்த திருத்தல்வாதிகளின் புரிதல் எச்சரிக்கையாக அணுகப்படவேண்டும் என்று கூறுகின்றார். 'அரசு என்பது பாட்டாளிவர்க்க அரசாக இருந்தாலும் அடக்குமுறை கருவிதான். சோசலிச கட்டம் முழுவதும் முதலாளித்துவ சிந்தனை மீதான அடக்குமுறைதான் கருவியாக செயல்படும்' எனபதை திருத்தல்வாதம் மறுக்கிறது.

மேலும் பாராளுமன்றத்தை புறக்கணிப்பது மற்றும் எப்படியாவது அதைக் கைப்பற்றுவது போன்ற திரிபுவாத போக்குகளை தோலுரித்துக் காட்டுகிறார்.

3.சோசலிசம் குறித்த திருத்தல்வாதம்

வர்க்கப் போராட்டத்தை மறுப்பது; அரசு குறித்த புரிதலை குலைப்பது; சோசலிச சமுதாயம் குறித்த புரிதலில்தான் திருத்தல்வாதத்தின் அடிப்ப‌டையான‌ வேர்க‌ள் புதைந்துக் கிட‌க்கின்ற‌ன. முதலாளித்துவ உற்பத்தி விநியோக முறையின் தவிர்க்கப்பட முடியாத விளைவுதான் சோசலிசம் என்றும், உலகின் பெரும்பான்மை சோசலிச உற்பத்தி முறைக்கு மாறும் வரை அந்த குறிப்பிட்ட நாடு சோசலிச உற்பத்தி விநியோக முறைக்கு மாறிச் செல்லும் போராட்டம் நடத்தவேண்டும் என்றும் கூறுகிறார். இது குறித்து க‌ம்யூனிஸ்டு க‌ட்சி அறிக்கையில் மார்க்சும் எங்க‌ல்சும் திருத்த‌ல்வாத‌த்தை எவ்வாறு எதிர்கொண்டு முறிய‌டித்தார்க‌ள் என்ப‌தை விள‌க்குகின்றார்.

என்னிடம் தோன்றிய கேள்விகள் சிலவற்றை முன்வைக்கின்றேன்.

1. மார்க்சிய அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து விலகி செல்வதையும் திருத்தல்வாதம் என்று வரையறுக்கப் பட்டிருக்கின்றது. மார்க்சிய அடிப்படைகள் என்பவை எதைக் குறிக்கின்றது? ரசியாவின் பருண்மையான் நிலைமைகளும், சீனாவின் பிரத்யோகமான நிலைமைகளும் மார்க்சிய அடிப்படைகளிலிருந்து விலக நிர்ப்ந்திக்கவில்லையா?

2.ஐரோப்பிய முதலாளித்துவமும், ரஷ்ய முதலாளித்துவமும், சீன முதலாளித்துவமும் இந்திய முதலாளித்துவமும் கடந்துவந்த பாதைகள் எல்லாம் ஒன்றா?

3. எல்லா நாடுகளிலும் பழைய நிலபுரபுத்துவ அரசு வடிவங்களை சிதைத்து அழித்துதான் முதலாளித்துவ சனநாயகமும் முதலாளித்துவ உற்பத்தி விநியோக முறையின் அரசு வடிவங்கள் தோன்றினவா?

4. சீனாவில் பன்னாட்டு மூலதனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது சோசலிச உற்பத்திமுறையின் வெளிப்படா?

'5. தேசிய எல்லைகள் சிதைந்து சாராம்ச்த்தில் சர்வ தேசியமாக மாறியிருக்கும் உற்பத்தி விநியோக முறையை மறுத்து மீண்டும் தேசிய எல்லைக்குள் இயங்கும் பழைய முதலாளித்துவ உற்பத்தி விநியோக முறையை மீட்டெடுக்கப் போராடுகிறார்கள்' என்ற கருத்தில் தர்க்க நியாயம் ஏதாவது இருக்கின்றதா?

7. ரஷ்யாவில் பாட்டாளிவர்க்க அரசை நிறுவியதோடு மாபெரும் மூலதனம் ஒன்றை கம்யூனிஸ்டு கட்சியின் கீழ் கொண்டுவந்தது என்ற கருத்து எவ்வளவு கொச்சையானது?

'8. முதலாளித்துவ தனியுடைமையின் சீரழிவிலிருந்து மூலதனத்தை விடுதலை செய்து, மூலதனத்தின் மீது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும்' என்ற கருத்து சமூகப் பார்வையின் ஒற்றைத் தன்மையையும் பொருளாதார குறைத்தல்வாதத்தையும் பிரதிபலிக்கவில்லையா?

எனது கருத்துக்கள்

கட்டுரையின் பெரும்பகுதி மார்க்சும் லெனினும் எதிர்கொண்ட திருத்தல்வாதப் போக்குகளையும், அவற்றை அவர்கள் எவ்வாறு முறியடித்து மார்க்சிய அடிப்படைகளை நிறுவினார்கள் என்பதையும் தொகுக்கப் பட்டுள்ளது. ஒரு சிறு பகுதியில் மட்டுமே நம் சமுதாய‌ நிலைமைகளில் திருத்தல்வாதம் எவ்வாறு இருக்கின்றது என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதாவ‌து இன, சாதிய விசயங்களில் திருத்தல்வாதம் எவ்வாறு கம்யூனிச இயக்கத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றது என்று போகிறப் போக்கில் கூறப்பட்டுள்ளது.

வர்க்க போராட்டம்தான் மனித குலத்தின் வரலாறு என்ற மார்க்சியத்தின் அடிப்படையிலிருந்து தொடங்கி, முதலாளித்துவத்தின் தனியுடைமை, மூலதனத் திரட்சி பற்றி விவாதித்து, முதலாளித்துவ உற்பத்தி, விநியோக முறையின் தவிர்க்கப்பட முடியாத விளைவுதான் சோசலிசம் என்ற முடிவுக்கு வருகின்றது கட்டுரையில் முதல் பகுதி.

ரஷ்யாவில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி சோசலிசக் கட்டமைப்பை நிறுவும் அனுபவங்களை கோடிட்டுக் காட்டுகிறது அடுத்த பகுதி. இறுதியாக சீனாவின் இறையாண்மையையும் பன்னாட்டு மூலதனத்தை தனது கட்டுக்குள் கொண்டுவந்த பாட்டாளி வர்க்க அரசு பற்றி புகழ்ந்து அகமகிழ்கிறது இறுதிப்பகுதி.

இதன் இறுதிப் பகுதியின் நீட்சியாக 'தேசிய எல்லைகள் சிதைந்து சாராம்ச்த்தில் சர்வ தேசியமாக மாறியிருக்கும் உற்பத்தி விநியோக முறையை மறுத்து மீண்டும் தேசிய எல்லைக்குள் இயங்கும் பழைய முதலாளித்துவ உற்பத்தி விநியோக முறையை மீட்டெடுக்கப் போராடுகிறார்கள்' என்று முத்தாய்ப்பாய் முடிகின்றது இக்கட்டுரை.

இக்கட்டுரையில் ஒரு வரலாற்றுத்திட்டம் இழையோடியிருப்பதைக் காணலாம். அந்த திட்டத்தில் இயங்கியலற்ற இறுகிய போக்கு தென்படுகிறது. அதாவது ஐரோப்பிய உற்பத்திமுறைக்கும், ரஷ்ய, சீன, இந்திய நிலைமைகளுக்கும் இடையே ஒரு நேர்கோட்டு பாதையை வரைந்துள்ளார். அதே போல மார்க்சிய அடிப்படை நிலைபாடுகளுக்கும், லெனின், மாவோவின் சிந்தனைகளுக்கும் வேறுபாடற்ற ஒற்றைத் தன்மையை கோடிட்டுக் காட்டுகின்றார்.

இக்கட்டுரையை படிக்கும்போது நெடுந்தூரம் பயணித்த களைப்பு தெரிகின்றது. களிப்பு இல்லை. காரணம் அந்தப் பாதையில் இயங்கியல் தன்மை இல்லை. ஒருவேளை கட்டுரையின் கருப்பொருளை விட்டு விலகிச் செல்வதாக‌ இருக்கலாம். என்ன செய்வது! சமுதாயத்தின் பருண்மையான நிலைமைகள் இதை விவாதிக்கப்பட வேண்டிய‌ அவசியத்தைக் கோருகின்றன.

கட்டுரையை படித்து முடித்ததும் என் நினைவுக்கு வந்தது, 'ஒரு அழகான படத்தின் பகுதிகள் அனைத்தும் அழகாக இருக்கும்' என்ற கருத்தாகும். உலகம் ஓர் அச்சாணியில் சுழல்வதுபோல சர்வதேச சமூகமானது ஒரே மாதிரியான‌ ஒற்றையான‌ உற்பத்திமுறையின் கீழ் இயங்குகிறது என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றது. எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான உற்பத்தி முறையை கடந்து வந்திருக்கின்றது என்ற கருத்து ஆழமாக வேரூன்றி இருக்கின்றது. உற்பத்திமுறைதான் சமூகத்தின் அடிப்படை என்று ஆரம்பித்து மூலதனத்தை கைப்பற்றுவதே பாட்டாளிவர்க்க அரசின் தலையாய கடமை என்ற முடிவில் பொருளாதார அடிப்படைவாதம் அப்பட்டமாகத் தெரிகின்றது.

விவரங்களிலிருந்து உண்மையை அறிவது குறித்து

முதலில் தோழரது முதல் வரையறையான அறிவியல் ஆய்வுமுறை பற்றிய விவாதத்தை முன்வைக்கின்றேன். விஞ்ஞான அணுகுறை என்றால் என்ன, என்ற கேள்வியை முதலில் கேட்கவேண்டியிருக்கின்றது. பொதுவாக இயற்கையை - பிரபஞ்சத்தை புறநிலையாக ஆய்வு செய்வது என்பது மட்டுமே விஞ்ஞான அணுகுமுறை என்று பொருள்கொள்ள முடியுமா என்ற கேள்வி பலமுறை எழுந்தது. அறிவியல் முறைகளை மார்க்சிய அடிப்படையில் வைத்து ஆராயும் போது புறநிலையை மட்டும் ஆய்வு செய்வது விஞ்ஞான ஆய்வு முறையாகாது என்பது புலப்படும். புறநிலையை மட்டும் ஆய்வு செய்வது விஞ்ஞான ஆய்வு முறையானது, 19 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான அணுகுமுறையாக இருந்தது. அது இயற்கையை எந்திரத்தனமாக அணுகும் நியூட்டானிய அணுகுமுறையாகும். இயற்கையிலுள்ள பொருட்கள் அனைத்தும் புறத்தில் இருப்பதாகப் பார்க்கப்பட்டது. பொருள்ட்களின் உண்மையை அறிய தோன்றி தத்துவங்கள் எல்லாம் புறவய அணுகுமுறையையே தோற்றுவித்தன. இதுதான் விஞ்ஞான அணுகுமுறையாகவும் பார்க்கப்பட்டது. புறவயமாக ஆய்வு நடத்துவதுதான விஞ்ஞான பூர்வமானது என்றழைக்கப்பட்டது.

தரவுகளைத் திரட்டி, அவற்றை வகைப்படுத்தி, பகுப்பாய்வு செய்து புறப்பொருளின் உண்மையைக் கண்டறிவது இதன் வழிமுறையாக இருந்தது. அறிவுத்தோற்றவியல் தத்துவங்களான அறிவுவாதமும் அனுபவவாதமும் உண்மையை புறவயமாக மட்டுமே கண்டது. ஆக அப்போதைய விஞ்ஞான உலகமும், தத்துவ உலகமும் புறவய அணுகுமுறைக்கு மட்டுமே ஆளாகியிருந்தன. சமூகவிஞ்ஞானத்தில் இந்தப் பழைய விஞ்ஞான அணுகுமுறையே நீடிக்கின்றது.

இதற்கு மாறாக ஹெகல் அகம் புறம் ஆகிய முரண்பாட்டினூடே உண்மையை ஆராய்ந்தார். அதாவது உண்மையை அகவயமாகவும் புறவயமாகவும் புரிந்து கொள்ளவேண்டும் என்று ஹெகல் கூறினார். இந்த கூட்டு அணுகுமுறையை மார்க்சு உட்கிரகித்துக் கொண்டார். அது மட்டுமின்றி கருத்தளவிலான இந்த அணுகுறையினை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

இன்னொருபுறம், 20 ஆம் நூற்றாண்டில் அகநிலையும் இணைத்த‌ ஒரு விஞ்ஞான அணுகுமுறையை வளர்த்துள்ளது. அகநிலையைத் தவிர்த்த அறிவியல் அணுகுமுறையை சிந்தித்தும் பார்க்கமுடியாது என்ற அளவிற்கு பழைய‌ அணுகுமுறை மாறியுள்ளது. இந்த அணுகுமுறையைத்தான் விஞ்ஞான அணுகுறை என்று போற்றப்படுகின்றது. ஆனாலும் நாம் பழைய எந்திரத்தனமான‌ அணுகுமுறையிலிருந்து விடுபடவில்லை என்றே தோன்றுகின்றது.

ஆகவே தோழர் முன்வைக்கும் 'விவரங்களின் அடிப்படையில் உண்மைகளை கண்டறியும் சிந்தனைமுறை'யை அகநிலையைத் தவிர்த்த புறநிலையான ஆய்வுமுறையைத்தான் மார்க்சியம் முன்மொழிவதாகக் கூறுவதைத் தீவிரமாக ஆராய‌ வேண்டியிருக்கின்றது.

மார்க்சிய அடிப்படைகளிலிருந்து விலகிச்செல்வது

இனி, மார்க்சிய அடிப்படைகளைப் பற்றிய விவாத‌த்தைத் துவங்குவோம். மார்க்சிய அடிப்படை என்ற நிலைப்பாடு நடைமுறையில் இறுகிப்போனதாக மாறியிருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு சமூகம், வர்க்கம் போன்ற வரையறைகளில் விளக்கங்களில் இவ்வாறான இறுக்கம் தென்படுகின்றது. உற்பத்தி முறையும் சமூகக் கட்டமைப்பும் பற்றி -‍‍ குறிப்பாக இந்திய சூழலில் உற்பத்தி முறையும் சமூக கட்டமைப்பும் எவ்வாறு உள்ளது என்பதும் வர்க்கமும் இன்னபிற முரண்களும் எவ்வாறு உறவு கொண்டுள்ளது என்பதும் பார்க்க இருக்கின்றோம்.

உற்பத்தி முறையும் சமூகக் கட்டமைப்பும்

வர்க்கம் என்பது சமூகத்தின் சிக்கல்வாய்ந்த தோற்றப்படாகும். அதைவிடவும் சமூகம் என்பது மிகவும் சிக்கலான அமைப்பாகும். இந்த விச‌யத்தை மார்க்ஸ் உணர்ந்திருந்தார். மார்க்சு சமூகத்தைப் பற்றி விளக்கும் போதும் வர்க்கத்தைப் பற்றி விவரிக்கும் போதும் இவற்றின் சிக்கலான தன்மைகளை இயங்கியல் பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார். இறுக்கமான சமூகம் என்ற‌ வரையறையையோ, வர்க்கங்கள் இருதுருவ நிலைப்பட்டவை மட்டுமே என்ற விளக்கத்தையோ அவர் ஏற்கவில்லை. ‘வர்க்க போராட்டம்தான் மனித குலத்தின் வரலாறு’ என்று கூறிய மார்க்சுதான், "வரலாற்றில் முந்திய சகாப்தங்களில் அனேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புக்களாலாகிய சிக்கலான சமூகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மப் படிநிலை அமைவு இருக்கக் காண்கிறோம்’’ என்றும் தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டனர்.

உற்பத்தி செய்யப்படும் பொருள், வினியோகிக்கப்படும் முறை, செல்வ‌ப் பகிர்வு என்பனவே ஒரு சமுதாயம் எப்படி வர்க்கங்களாக அல்லது சமுதாயப் படிமுறை அமைப்பாகப் பிரிக்கப்படுகிறது. பீ. வி. அனன்கோவ்வுக்கு எழுதிய கடிதத்தில் (1846) மார்க்ஸ் பின்வருமாறு கூறுகிறார்:- : ‘உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்திலிருக்கும் போது வணிகமும் நுகர்வும் குறிப்பிட்டதொரு அமைப்பிலிருக்கும் உற்பத்தி, வாணிபம், நுகர்வு என்பவற்றில் குறிப்பிட்டதொரு வளர்ச்சி ஏற்பட்டிருப்பின் அதற்கு உகந்த சமூக அமைப்பும் ஏனைய நிறுவனங்களும் அல்லது வர்க்கங்களும் இருக்கும். ஒரு வார்த்தையில் கூறினால் அதற்குக் தகுந்தாற் போன்ற சிவில் சமூகமும் இருக்கும்.”

சமூகம் என்பதை மார்க்சு பரந்த அர்த்தத்தில் விளக்குகிறார். சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளின் செய்ல்பாடுகளோடு ஒரு சமூக கட்டமைப்பும் சேர்ந்தே இயங்குவதையும் பார்க்கமுடியும். அந்தச் சமூகக் கட்டமைப்பில் வேறுவகையான முரண்கள் நிலவச் செய்கின்றன. இரண்டு வகையான முரண்பாடுகளும் ஒன்றுக்கொன்று வினையாற்றவும் செய்கின்றன.

உற்பத்திமுறையும் சாதியமும்

சமூகத்தில் உற்பத்திமுறைதான் அடிப்படையாக திகழ்கின்றது. தமிழ்ச் சமூகச் சூழ்நிலையை எடுத்துக்கொண்டால், உற்பத்திமுறைக்கு பொருந்துகிற மாதிரி ஒரு சாதிய கட்டுமானம் அக்கம்பக்கமாக இயங்குகின்றது. இவற்றிலிருந்து எழுந்த ஒரு பண்பாட்டுச்சூழல் நிலவுகின்றது. சாதியக் கட்டுமானம் ஒருபக்கத்தில் உற்பத்தி தளத்துடனும், இன்னொரு பக்கத்தில் மேல்கட்டுமான பண்பாட்டு சூழலுடனும் உறவுகளைக் கொண்டுள்ளது. ஆகவே சாதியமானது, உற்பத்தி முறையைத் தீர்மானிப்பதில் ஒரு கணிசமான பாத்திரத்தை ஏற்கின்றது. உற்பத்திமுறையிலிருந்து பிரித்துப்பார்க்க இயலாவண்ணம், பரஸ்பரம் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றது. உற்பத்திமுறையும் சாதியக் கட்டுமானமும் சேர்ந்துதான் சமுதாயத்தை இயக்குகின்றது.

அதே போல சாதியைத் தவிர்த்து வர்க்கத்தை அறுதியிடமுடியாது. சாதி, வர்க்கத்துடனும், வர்க்கம், சாதியுடனும் இடம் மாற்றிக் கொள்கின்றன. வர்க்கத்திற்கு கொடுக்கும் அதே அழுத்தத்தைச் சாதியத்திற்கும் கொடுக்க வேண்டியிருக்கின்றது. அந்தளவுக்கு சாதியமானது உற்பத்தியில் தனது பங்கை செலுத்துகினறது. உற்பத்தி முறையுடன் சாதியக் கட்டுமானமும், வர்க்கத்தோடு சாதியமும் பின்னிப்பிணைந்து பரஸ்பரம் வினையாற்றி வரும் பிரத்யோக சூழ்நிலையில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

லெனினும் மாவோவும் செய்தனர். ரஷ்யாவின் பருண்மையான சூழல்களை முன்னிறுத்தினார். முதலாளித்துவம் முதிர்ந்து அதன் உள்ளார்ந்த நெருக்கடியை அவர் எதிர்பார்க்கவில்லை. மாறாக ஏகாதிபத்திய முரண்களின் பலவீனமான கண்ணிகளைக் கொண்டு புரட்சியை நடத்தினார். சீனாவின் பெரும்பான்மையான விவசாயிகளை நம்பியே புரட்சியை நடத்தினார். அவரது சமுதாயத்தில் நிலவிய‌‌‌ ஏராளமான முரண்களோடு செயல்பட்டார். ஆகவே இந்திய நிலைமைகளில் பிரத்யோகமான விசயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

சோவியத் ரசியாவை விடமும் செஞ்சீனாவை விடவும், மிகவும் சிக்கல்வாய்ந்த சூழலில் - தனிசிறப்பு வாய்ந்த சூழ்நிலைமைகளில் வாழந்து கொண்டிருக்கின்றோம். அந்த பருண்மைவாய்ந்த சூழ்நிலையிருந்து கோட்பாடுகளுக்குச் செல்ல வேண்டும். அதுதானே மார்க்சிய பொருள முதல்வாத அணுகுமுறை. நாம் பெரும்பாலும் கோட்பாடுகளிலிருந்து நடைமுறையை அணுகுவதற்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கின்றோம். நமது சர்வதேச மரபில் அப்படிப்பட்ட அணுகுமுறை இல்லவே இல்லை. நம்மிடம் இருக்கும் நடைமுறை காலங்கடந்தது; காலாவதியானது.

அவ‌ற்றிலிருந்து முற்றிலும் வேறான கண்ணோட்டமும், அணுகுமுறையையும் தேவையாகிறது. தோழரின் வாதப்படி தேசியஇனம், சாதி போன்றவற்றை முன்னெடுப்பது திருத்தல்வாதம். அதாவது அகநிலைவாதம். வரலாற்று ரீதியாக தேசியஇன சிக்கலும், சாதிய உறவுகளும் சமூகத்தின் புறநிலையானவை; பருண்மையானவை. அம்பேத்காரோ பெரியாரோ அவர்களது விருப்பத்திலிருந்து இவை தோன்றவில்லை.

வர்க்க முரணும் இதர சமூக முரண்களும்

நமது சமூகத்தில் வர்க்க முரணோடு இதர முரண்பாடுகளும் செயலாற்றி கொண்டு வருகின்றன. வர்க்கமுரண், சாதியமுரண், இனமுரண், பாலினமுரண் போன்றவை நம் சமுதாயத்தில் வினைபுரிந்து வருகின்றன. இத்தகைய முரண்பாடுகளுக்கிடையில் ஏராளமாக இயங்கியல் கூறுகள் தொழில்பட்டு வருகின்றன.

முரண்பாடுகள் பற்றிய பொதுக் கருத்தாக்கத்தை விடவும் அதன் பருண்மையான‌ வடிவங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனெனில் முழுமை என்ற‌ பொதுப்ப‌ண்பு அருவ‌மான‌து. அத‌ன் குறிப்பான‌ அம்ச‌ங்க‌ள் ப‌ருண்மையான‌து. பொதுப்பண்பைவிட பிரத்தியேகப்பண்பு, அதிக அடிப்படையானது என்று மாவோ வலியுறுத்தி வந்ததை நினைவு கூறவேண்டும். மிகச் சிக்கலான சமூக முரண்பாடுகள் ஒன்றின்மீது ஒன்றாக படிந்திருக்கும் இந்திய சமுதாயத்தில் வர்க்க முரண்பாடு என்ற பொதுவான கருத்தாக்கத்தை மட்டும் முன்னிறுத்தினால் போதாது. இன, மொழி, சாதிய முரண்பாடுகளைப் பருண்மையாக ஆராய்ந்து வர்க்க அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும்.

ரஷ்யப் புரட்சியின் போதும், சீனப்புரட்சியின் போதும், முதலாளி வர்க்கம் x தொழிலாளி வர்க்கம் என்ற முரண்பாட்டோடு, விவசாயிகளின் பிரச்சினைகள், தேசிய இனப்பிரச்சினை, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான முரண்கள், ஆணாதிக்கம், கலாச்சாரச் சிதைவு போன்ற பல முரண்பாடுகள் ஒன்றுபட்டுத் தொழில்பட்ட தொழில்பட்டதை உணர்ந்து அவற்றை இயங்கியல் ரீதியாக கையாண்டதாலேயே அப்புரட்சிகள் சாத்தியமாயிற்று.

நம் சமுதாயத்தில் வர்க்கமுரண் என்ற ஒற்றையான‌ முரண்பாடு மட்டும் செயலாற்ற வில்லை. மாறாக‌ பலவகையான முரண்பாடுகள் வினையாற்றி வருகின்றன. அவையாவும் பருண்மையானவை. பலவாக இருப்பது மட்டுமல்லாமல், அவற்றுக்குள் அவற்றின் சேர்க்கை, தொகுப்பு, இணைவாக்கம், பரஸ்பர ஊடுருவல், ஒன்று மற்றொன்றாக மாறுவது, முழுமை போன்ற தன்மைகள் தீவிரமாக தொழில்படுவதைக் காணலாம்.

மார்க்சியக் கோட்பாடு என்பது சமூகத்தின் சகலவிதமான முரண்பாடுகளையும் சிக்கல்களையும் பருண்மையாக‌ எடுத்துரைக்க வேண்டும். அவ்வாறு சமூக முரண்களை பருண்மையாக எடுத்துரைக்க முடியவில்லை என்றால் அதனால் பயனேதுமில்லை. பல்வேறு சமூக அரசியல் சக்திகளை ‘வர்க்கம்’ என்ற சிமிழுக்குள் உள்ளடக்கலாமா? சிக்க‌லான‌, ப‌ல்வ‌கை முர‌ண்ப‌ட்ட‌ த‌ன்மைக‌ளை ப‌ருண்மையாக‌ புரிந்து கொள்ள‌ வேண்டுமே அன்றி ஒற்றை முர‌ண்பாடாக‌வோ அல்ல‌து ஒற்றை முர‌ண்பாட்டிற்கு இத‌ர‌வ‌ற்றை அட‌க்க‌வோ முய‌ற்சிப்ப‌து குறைத்த‌ல்வாத‌ம் ஆகும். அனைத்தையும் ஒருங்கிணைத்து தொகுத்துக் கையாளும் முறையியலை உருவாக்கவேண்டுவது இன்றைய நமது தலையாய கடமையாகும். அவற்றை பருண்மையாக எடுத்துரைக்கும் செழுமைப் பெற்றதாக அம்முறையியல் இருக்க‌ வேண்டும்.

சோசலிசத்திற்கான பாதைகள் ஒன்றல்ல.

அடுத்ததாக சோசலிசக் கட்டுமானம் குறித்தும் சோசலிசத்திற்கான பாதை குறித்தும் விவாதிக்கலாம். மார்க்சு விஞ்ஞான சோசலிசத்தைப் படைத்தார். ஆனால், உலகின் எல்லா நாடுகளுக்கும் எல்லாச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடிய ஒற்றையான முன்மாதிரியான சோசலிசக் கட்டுமானத்தையோ, சோசலிசத்திற்கான பாதையையோ மார்க்ஸ் எப்போதுமே முன்வைக்கவில்லை. குறிப்பிட்ட நாடுகளின் தனித்தன்மைகளை மார்க்ஸ் ஆழமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கிய போது, மேற்கு ஐரோப்பாவைச் சாராத தனித்த வளர்ச்சிப் பாதை இந்நாடுகளில் சாத்தியம் என மார்க்ஸ் புரிந்துகொண்டார். ஐரோப்பாவை மையமாகக் கொண்ட மார்க்சின் வரலாற்றுக் கோட்பாடு ஒருபுறமிருக்க, மேற்கல்லாத நாடுகளுக்கான மற்றொரு வரலாற்றுப் பாதை அவரில் உருவாகியது. மேற்கல்லாத நாடுகளின் வரலாற்றுப் பாதையில் காலனிய எதிர்ப்பு, தேசியம், இன உணர்வு சார்ந்த இயக்கங்களுக்கும், நிறவெறி எதிர்ப்பியக்கங்களுக்கும் முக்கிய பாத்திரம் இருக்குமென மார்க்ஸ் கருதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எல்லா நாடுகளும் சோசலிசத்தை என்ற ஒன்றை நோக்கியதாக‌ யிருந்தாலும், ஒரே பாதையில்தான் வந்தாக வேண்டும் என்பதை கட்டாயத்தை மார்க்சியம் சமுகத்தின் மீது திணிக்கவில்லை.

உலக வரலாற்றின் பல்வேறு சமூக முரண்பாடுகளெல்லாம் தொழிலாளி / முதலாளி என்ற ஒற்றை முரண்பாடு கூர்மையடைந்து சோசலிசம் நோக்கி நகரும் என்று மார்க்ஸ் கருதியிருந்தார். ஆனால் அந்த‌க் க‌ருத்தை பின்னால் மாற்றிக் கொண்டார். அந்த அடிப்படையிலிருந்து வேறுபட்ட‌ ஆசியப்பண்பு கொண்ட கம்யூன்களை இந்தியாவிற்கான சோசலிசத்திற்கான‌ பாதையாகப் புரிந்து கொண்டதாக நியூயார்க் டிரிபியூன் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் சோசலிசம் குறித்த கருத்தாக்கங்களும் நடைமுறைகளும் மாறிகொண்டே வந்துள்ளன. முதலாளித்துவ முரண்களும் நெருக்கடிகளும் சோசலிசத்திற்கு இட்டுசெல்லும் என்று மார்க்சு கூறினார். ஆனால் ரசியாவின் அனுபவமும் சீனவின் அனுபவமும் வேறுவேறாக இருந்தன. ரசியாவில் சோசலிசத்தின் அடிப்படை அலகாக‌ ‘சோவியத’ விளங்கியது. சீனாவில் சோசலிசத்தின் அடிப்படையாக ‘கம்யூன்’ திகழ்ந்தது. அவை அந்தந்த நாடுகளின் வரலாற்று நிலைமைகளிலிருந்து சுவீகரிக்கப்பட்டவை. அதேபோல நமது வரலாற்று நிலைமை களிலிருந்துதான் சோசலிசத்திற்கான தன்மைகளையும் அடிப்படை அலகையும் உருவாக்கப்படவேண்டும். மார்க்ஸ் ஆசிய வடிவிலான கம்யூன்களை சோசலிசத் தடயங்களாகப் பார்க்கத் தொடங்கினார்‌.

மார்க்சின் படைப்புக்கள் முழுவதையும் ஆய்ந்து பார்க்கும் போது, வரலாற்றுப் போக்கு என்பது ஒற்றை வடிவம் கொண்டதாக இல்லாமல் ஒரு பன்மீய வளர்ச்சிப் போக்குகள் கொண்டதாக இருப்பதை உணரமுடியும்.. எனவே உலகின் எல்லா நாடுகளும் ஒரே விதமாக முதலாளியமாக மாற்றம் பெற்று, அதன் பின்னரே சோசலிசத்தை நோக்கி நகர முடியும் என்ற ஒற்றைப்பாதையை மார்க்ஸ் முன்மொழியவில்லை.

கட்டுரையின் விவாதிக்கப்பட்ட கருத்துகளை எல்லாம் சேர்த்து பார்க்கும்போது தோழரின் சிந்தனை ஓட்டமும், அணுகுமுறையும் வெளிப்படுகின்றது. திருத்தல்வாதப் போக்குகளை வரலாற்று ரீதியாக அணுகியிருந்தாலும், அக்கருத்துகளில் தர்க்கரீதியான அணுகுமுறை இல்லை. நெகிழ்வு தன்மையற்ற இறுக்கம் தென்படுகின்றது. தத்துவ ரீதியில் பார்க்கப் போனால் 'ஒற்றைத் தன்மையும்', 'முழுமைக் கண்ணோட்டமுமே' இவரது கட்டுரையின் அடிநாதமாகும். நம் சமூகத்தின் பிரத்யோகமான விசயங்களான‌ பன்மைத் தன்மைகளைப் பற்றியோ, பருண்மையான பகுதிகளின் சிறப்பம்சங்களைப் பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவ‌தாக தெரியவில்லை. ஆனால் மாவோவின் வழிகாட்டுதல் இதற்கு மாறாக அல்லவா இருக்கின்றது. திருத்தல்வாதத்தை எதிர்க்கப் புறப்பட்டவர் வறட்டுவாதத்தில் சிக்கியிருக்கிறார் என்பது மட்டும் புரிகின்றது.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக