வியாழன், 24 நவம்பர், 2011

புரட்சிகர குடும்பங்’களின் சந்திப்புத் திருவிழா

‘புரட்சிகர மக்கள் பாசறை’ என்ற அமைப்பின் ‘புரட்சிகர குடும்பங்’களின் சந்திப்புத் திருவிழா ( செப். – 2011) – துண்டறிக்கை மீதான கருத்து


"புரட்சிகர பெண்கள் இல்லாமல் புரட்சிகர குடும்பம் இல்லை.
புரட்சிகர குடும்பம் இல்லாமல் புரட்சியே இல்லை." இதுதான் விஞ்ஞான பூர்வமான‌ தொழிலாளி வர்க்கத்தின் புரிதல் என்று கூறுகின்றது.


மனித குல வளர்ச்சிக்கு அடிப்படையானது அன்பு. இதைப் புரிந்து அன்புடைவன் மட்டுமே புரட்சிகர மனிதன். இதைப் புரிந்து கொண்ட குடும்பம் மட்டுமே புரட்சிகர குடும்பம். இதைப் புரிந்து கொண்ட கட்சியே புரட்சிகரக் கட்சி என்று வரையறுக்கப்படுகிறது.



போலிகளையும் திசைவிலகல்களையும் தோலுரித்து விஞ்ஞான பூர்வமாக அனைத்திற்கும் பதிலடி கொடுத்து சராசரி மக்களை புரட்சிகர மக்களாக்கிடும் தெளிவான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் சி.பி.ஐ.எம்.எல். கட்சி என்பது சரியா? சி.பி.ஐ.எம்.எல். கட்சியின் கொள்கைக‌ளும் புர‌ட்சிக‌ர‌ ம‌க்க‌ள் பாச‌றையின் கொள்கைக‌ளும் ஒன்றா?
புர‌ட்சிகர மக்கள் பாசறை என்பது ஒரு புரட்சிகர‌ப் ப‌ண்பாட்டு இய‌க்கம் என்று கூறுகின்றது.


அடுத்த‌தாக‌ புறநிலைமீது ப‌ழிபோடக் கூடாது; அக‌நிலைக்கு முக்கிய‌த்துவ‌ம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. புறநிலைக்கும் அகநிலைக்கும் உள்ள உறவு பற்றி கூறுகின்றது.


உரிமை இழந்து நிற்கும் தொழிலாளி வர்க்கம்; சீரழிந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள்; விலைவாசியின் கோரப்பிடியில் கோடிக்கணக்கான குடும்பங்கள்; அரசு பயங்கரவாதம் போன்றவற்றிற்கான காரணங்களைச் சுட்டிக்காட்ட முனைகின்றது இந்தத் துண்டறிக்கை.


இவற்றிற்கெல்லாம் காரணம் ஏகாதிபத்தியா அல்லது தொழிலாளிவர்க்கத்தின் ஊக்கமின்மை, ஒற்றுமையின்மை, அக்கறையின்மையா அல்லது புரட்சிகர பொறுப்பற்ற தன்மை, புரட்சிகர தலைமை யின்மையா என்ற கேள்வியை முன்வைக்கின்றது.


ஐந்து சிறப்புகள்...


1. சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு
2. பாரதியாரின் நினைவுதினம்
3.பாலனின் தியாகியான தினம்
4.இரட்டைக் கோபுரம் தகர்ப்பு தினம்
5. புரட்சிகர குடும்பங்களின் சந்திப்பு


புரட்சிகர குடும்பங்களின் சூளுரைகள்…


1. தொழிலாளிவர்க்க உரிமையை மீட்டெடுப்பது.
2. விலைவாசி, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது
3.ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒற்றுமைக்கு போராடுவது
4.அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஏகாதிபத்திற்கு எதிராகவும் போராடுவது
5. புதிய சனநாயகப் புரட்சி.


சிறப்புகள்:


1. ப‌ண்பாட்டு இய‌க்கமாக புர‌ட்சிகர மக்கள் பாசறையை முன்னெடுப்பதும் அதன்வழி புர‌ட்சிகர குடும்ப‌ங்க‌ளை உருவாக்க முயற்சிப்பது.
2. புறநிலையை மாற்றியமைக்க அக‌நிலைக்கு முக்கிய‌த்துவ‌ம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.


எனது கருத்துக்கள் விவாதத்திற்காக...


1. "புரட்சிகர பெண்கள் இல்லாமல் புரட்சிகர குடும்பம் இல்லை.
புரட்சிகர குடும்பம் இல்லாமல் புரட்சியே இல்லை."……


இன்றைய குடும்பங்களின் உண்மையான‌ நிலைமை என்ன? பெண்கள், குழந்தைகளின் நிலைமை என்ன? என்பது பற்றிய உண்மையான‌ ஆய்வு இல்லை. இன்றைய நிலைமையில் சனநாயக உள்ளடக்கம் கொண்ட குடும்பங்கள் மட்டுமே சாத்தியமானது. புரட்சிகர குடும்பங்கள் சாத்தியமில்லை. அது கற்பனையில் மட்டுமே சாத்தியம். குடும்பத்திற்குள்ளும் வெளியிலும் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை எதிர்த்து போராடுவது பெண்களின் முன்னுள்ள கடமையாகும். குடும்பத்தில் பெண்களின் உழைப்பிற்கு உரிய சிறப்பு வழங்கப்படவேண்டும். அடுத்தபடியாக குடும்பத்திற்காக உழைப்பதிலிருந்து விடுதலைப் பெறவேண்டும்.


மறுவுற்பத்தி தளம் என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு பகுதி மட்டுமே. உற்பத்தித் தளத்திற்கு உறுதுணையாக இருந்து ஒத்திசைந்து அதற்கே உரித்தவகையில் தனித்துவத்துடன் மறுவுற்பத்தி தளம் இயங்குகின்றது. குடும்பம் தனியாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். அதற்கே உரித்தான பிரச்சனைகள் தனியாக ஆராயவேண்டும். அதற்கு உரிய தீர்வுக் காணப்பட வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த சமூகத்திற்கான தீர்வை குடும்பத்தின் மீது சுமத்தமுடியாது. அவ்வாறு பகுதியின் பிரச்சனைக்கு முழுமையின் தீர்வை சுமத்துவதில் எந்த தர்க்கமில்லை. அல்லது முழுமையின் ஒட்டுமொத்த தீர்வில் பகுதிப் பிரச்சனைத் தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறையும் விஞ்ஞான பூர்வமானதல்ல.


பொதுவாக ஆராயுமிடத்து, குடுப்பத்தின் குறிப்பான பிரச்சனையைத் தனியாக ஆய்வு செய்யாதது; சமூகத்திற்கான தீர்வை குடும்பத்தின் மீது சுமத்துவது. ஆகிய போக்குகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய அணுகுமுறை, குடும்பங்களை ஒற்றுமைப்படுத்த‌ முடியாது; புரட்சிகர பெண்களை உருவாக்கும், புரட்சிகர குடும்பங்களை உருவாக்குவதும் கற்பனையில் முடியும். குடும்பங்களின் ஒற்றுமைக்கு எதிராகப் போய் முடியும்.


2. “உரிமை இழந்து நிற்கும் தொழிலாளி வர்க்கம்; சீரழிந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள்; விலைவாசியின் கோரப்பிடியில் கோடிக்கணக்கான குடும்பங்கள்; அரசு பயங்கரவாதம் போன்றவற்றிற்கான காரணங்களைச் சுட்டிக்காட்ட முனைகின்றது.


இவற்றிற்கெல்லாம் காரணம் ஏகாதிபத்தியா அல்லது தொழிலாளிவர்க்கத்தின் ஊக்கமின்மை, ஒற்றுமையின்மை, அக்கறையின்மையா அல்லது புரட்சிகர பொறுப்பற்ற தன்மை, புரட்சிகர தலைமை யின்மையா என்ற கேள்வியை முன்வைக்கின்றது.” இந்தத் துண்டறிக்கை.


அனைத்து பிரச்சனைக்கும் அடிப்படையான முதன்மையான முரண்பாடாக ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்குமான முரண்பாட்டை மட்டுமே காண்கிறது இந்த துண்டறிக்கை. இது உலகம் முழுதும் ஒற்றை முரண்பாட்டில் இயங்குவதாக அர்த்தப்படுத்துகின்றது. குறிப்பான நாடுகளின் குறிப்பான முரண்பாடுகளை பருண்மையாகப் பார்க்க மறுக்கின்றது. ஆனால் புதிய சனநாயகப் புரட்சித் திட்டத்தையும் ஏற்பதாகச் சொல்கின்றது. புதிய சனநாயகப்புரட்சித் திட்டமானது காலனிய உற்பத்தி முறை, நிலபிரபுத்துவ உற்பத்திமுறை, முதலாளித்துவ உற்பத்திமுறை ஆகிய‌ ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்திமுறைகளை அங்கீகரிக்கின்றது; அவற்றை இணைத்துப் பார்க்கின்றது. ஆனால் தங்களின் திட்டம் காலனிய உற்பத்தி முறையையும் உற்பத்தி உறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. தங்கள் திட்டம் புதிய சனநாயக திட்டத்துடன் முரண்படுவதுடன் புதிய சனநாயகத் திட்டத்தை காலனிய திட்டமாக சுருக்கிப் பார்க்கின்றது.


3. “புர‌ட்சிகர மக்கள் பாசறை என்பது ஒரு புரட்சிகர‌ப் ப‌ண்பாட்டு இய‌க்கம்”…..


ஒருபுறம் புரட்சிகர மக்கள் பாசறை ஒரு பண்பாட்டு அமைப்பாக வரையறுக்கின்றது. மறுபுறம் புதிய சனநாயக திட்டத்தை அதற்கான‌ திட்டமாக முன்வைக்கின்றது. புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சிக்கு மட்டுமே இத்தகைய திட்டம் இருக்க முடியும். மாறாக வர்க்க அமைப்புகள், இதர பிரிவு அமைப்புகள் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையிலும், புரட்சிகர கட்சியின் திட்டத்தை நிறைவேற்றும் வகையிலும் அவ்வமைப்புக்களுக்கான திட்டங்கள் வரையப் பட‌வேண்டும். பகுதிக்கும் முழுமைக்கும் ஒரே திட்டத்தை முன்வைப்பது பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் வழிவகுக்கும்.


4 ."மனித குல வளர்ச்சிக்கு அடிப்படையானது அன்பு. இதைப் புரிந்து அன்புடைவன் மட்டுமே புரட்சிகர மனிதன். இதைப் புரிந்து கொண்ட குடும்பம் மட்டுமே புரட்சிகர குடும்பம். இதைப் புரிந்து கொண்ட கட்சியே புரட்சிகரக் கட்சி என்று வரையறுக்கப்படுகிறது"......


அன்பு, நேர்மை, உண்மை என்ற நெறிகள் யாவும் காலத்திற்கும், இடத்திற்கும், சூழ்நிலைக்கும் கட்டுப்பட்டவை. எல்லா காலத்திற்குமான‌ எல்லா இடத்திற்குமான‌ ஒரே பண்பு என இருக்கமுடியாது. அதே போல இத்தகைய மனித நெறிகள் யாவும் உற்பத்தியின் முறையின் அடிப்படையில் வர்க்கச் சார்பு உடையவை. மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட யாரும் வர்க்க சார்பை தவிர்த்துவிட்டு மனித நெறிகளை ஆராய முடியாது. மேற்கண்ட விளக்கம் மிகப் பொதுவானது. வர்க்கப் பார்வையற்றது; பொருளீய தன்மையற்றது; அருவமானது.


5. "புறநிலைமீது ப‌ழிபோடக் கூடாது; அக‌நிலைக்கு முக்கிய‌த்துவ‌ம் அளிக்கவேண்டும்"


இது புறநிலைக்கும் அகநிலைக்கும் உள்ள உறவு பற்றி கூறுகின்றது. 'அகநிலை புறநிலை என்ற எதிர்வு' மார்க்சிய தத்துவத்தில் மிக‌ முக்கியத்துவ‌ம் வாய்ந்ததாகும். சமூகத்தை மாற்றியமைப்பதில் அகநிலையின் பங்கையும் பாத்திரத்தையும் லெனினும் குறிப்பிட்டு உணர்த்தியதோடும் நடத்தியும் காட்டியுள்ளார். ஆகவே இந்தப் பிரச்சனை நமது கம்யூனிச இயக்கத்திற்கும் ஒரு அடிப்படையான‌ ஒன்றாக‌த் திகழ்கின்றது என்பதை உணர வேண்டும். ஆனால் இதை எங்கே விவாதிக்கவேண்டும் என்று ஒரு முறை இருக்கின்றது. எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் விவாதிப்பது விமரிச்சிப்பது இயங்கியலற்றப் போக்கு.


7. ‘ஐந்து முத்திரைச் சிறப்புக்கள்‘


ஐந்து முத்திரைச் சிறப்புக்கள் என்று துண்டறிக்கை கூறுவன: 1. சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு, 2. பாரதியாரின் நினைவுதினம், 3.பாலனின் தியாகியான தினம், 4.இரட்டைக் கோபுரம் தகர்ப்பு தினம், 5. புரட்சிகர குடும்பங்களின் சந்திப்பு, ஆகியனவாகும். முத‌ல் நான்கும் வெவ்வெறு கால‌க்க‌ட்ட‌ங்க‌ளில் ந‌டைபெற்ற‌ நிக‌ழ்வுக‌ள். வெவ்வேறு த‌ன்மையான‌ நிக‌ழ்வுக‌ள். வெவ்வேறு பின்ன‌ணியைக் கொண்ட‌வை. இவ‌ற்றை த‌ற்செய‌லாக‌ செப்ட‌ம்ப‌ர் மாத‌த்தில் வ‌ருகின்ற‌து என்ற ஒரு ஒற்றுமையைத் த‌விர‌ வேறு எந்த‌ ஒற்றுமையோ அல்ல‌து ஒரு தொட‌ர்போ அல்ல‌து உறவோ இல்லை. இவற்றில் வரலாற்று ரீதியான தொடர்போ அல்லது தர்க்க ரீதியான இணைப்போ கிஞ்சிற்றும் இல்லை. அதை தாண்டி விருப்ப‌த்தின் அடிப்ப‌டையில் உருவானதாக மட்டுமே காண இயலும்.


8. "புரட்சிகர பெண்கள் இல்லாமல் புரட்சிகர குடும்பம் இல்லை.
புரட்சிகர குடும்பம் இல்லாமல் புரட்சியே இல்லை."


இந்த வரிகள் சமூகப் புரட்சிக்கு முன்நிபந்தனையாக புரட்சிகர குடும்பத்தையும், புரட்சிகர குடும்பம் உருவாவதற்கு முன்நிபந்தனையாக‌ புரட்சிகர பெண்களை உருவாக்குவது என்பதை உணர்த்துகின்றது. இது ஒரு வகையான பெண்ணிய நிலையிலிருந்து சமூகப் புரட்சி என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கின்றது. இந்தவகை பெண்ணியம் பாலின முரண்பாட்டையோ வர்க்க முரண்பாட்டையோ, குறிப்பாக பெண்ணடிமைத் தனத்தையோ ஆணாதிக்கத்தையோ முன்னெடுப்பதில்லை. பெண்களின் எல்லா பிரச்சனைகளும் மூடிமறைத்து விடுகின்றது. ஆனால் நேரடியாக புரட்சியை மட்டுமே முன்னெடுக்கும்.


9. குடும்பங்களின் சூளுரைகள்:‍

 
1. தொழிலாளிவர்க்க உரிமையை மீட்டெடுப்பது.
2. விலைவாசி, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது
3.ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒற்றுமைக்கு போராடுவது
4.அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஏகாதிபத்திற்கு எதிராகவும் போராடுவது


5. புதிய சனநாயகப் புரட்சி


குடும்பம் என்பது ஒரு வர்க்க நிறுவனம் என்று மார்க்சியம் கூறுகின்றது. அதற்கென்று குறிப்பான பிரச்சனைகளும் தனிசிறப்பான அம்சங்களும் இருக்கின்றன. குறிப்பாக தந்தை, கணவன், சகோதரன், மகன் ஆகியோரின் ஆணாதிக்கப் போக்குகள், குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களின் மீதான‌ உழைப்புச் சுரண்டல், பெண்களுக்கு குடும்பத்தில் சனநாயக உரிமையின்மை, பெண்ணடிமைத்தனம் போன்ற பிரச்சனைகள்தான் இன்றைய குடும்பங்களின் நிலைமையாக இருக்கின்றது. இப்பிரச்சனைகளை யெல்லாம் மூடிமறைத்துவிட்டு புரட்சிகர பெண்களையும் குடும்பத்தையும் உருவாக்கி சமூகப் புரட்சியை முன்னெடுக்கிறது புரட்சிகர மக்கள் பாசறை. மேற்கண்ட சூளுரைகள் யாவும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மட்டுமே இடம் பெறவேண்டியவை. அதற்கு மட்டுமே புரட்சிக்கான திட்டம் இருக்கின்றது.






பின்னிணைப்பாக….


முழுமைக்கும் பகுதிக்கும் உள்ள உறவு


பகுதிகள் ஒன்று சேர்ந்து முழுமையாகின்றது. முழுமை பல பகுதிகளால் ஆனது. பகுதிகள் ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டிருக்கிற அதே நேரத்தில் ஒவ்வொரு பகுதியும் முழுமையுடனும், முழுமை ஒவ்வொரு பகுதியுடனும் உறவு கொண்டுள்ளது.


ஒவ்வொரு பகுதியும், பல பகுதிகளைக் கொண்ட முழுமையாகவும், ஒவ்வொரு முழுமையும் வேறு முழுமையின் பகுதியாகவும் இருக்கின்றது. அதாவது, பகுதி எனபது ஒரே சமயத்தில் பகுதியாகவும் அது முழுமையாகவும் இருக்கின்றது. அதே போன்று, முழுமை, முழுமையாக இருக்கும் போதே வேறொரு முழுமையின் பகுதியாகவும் இருக்கின்றது. இதற்கு ஒரு முடிவே இல்லை. அவ்வாறு முடிவுகட்டுவது இயக்கமறுப்பியல் ஆகும். இவ்வாறு முடிவில்லாமல் போய்கொண்டே இருப்பதுதான் இயங்கியல் ஆகும்.


பகுதி பருண்மையானது; முழுமை அருவமானது என்று பொதுவாக போதிக்கப்படுகின்றன. இவ்வாறு வரையறுப்பது, இயக்கமறுப்பியல் அன்றி வேறல்ல. அதாவது, பகுதி என்பது பகுதியாக இருக்கின்ற அதே நேரத்தில் முழுமையாகவும் இருக்கின்றது என்று எடுத்துக்கொண்டால் அது பருண்மையாகவும் அருவமாகவும் இருக்கின்றது என்று பொருள். அதே போன்று முழுமை என்பது


ஒன்று முழுமையாக இருக்கும் அதே நேரத்தில் வேறொரு முழுமையின் பகுதியாகவும் இருக்கின்றது. ஆகவே இங்கு முழுமை என்பது அருவமாகவும் பருண்மையாகவும் இருக்கின்றது.


இந்த விவாதம் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கின்றது. பருண்மையானதிற்குள் அருவமும், அருவமானதிற்குள் பருண்மையும் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று ஊடுருவிக் கொண்டுள்ளன. பல ப‌ருண்மையானவை சேரும்போது அது அருவமாகின்றது. பல அருவமானவைகள் சேரும் போது பருண்மையாகின்றது. இது வேடிக்கையாக இருந்தாலும் இதுதான் அருவமான‌திற்கும் பருண்மையானதிற்கும் உள்ள இயங்கியல் ஆகும்.


பகுதியில் தனித்தன்மையும் பொதுதன்மையும் இருக்கும். அதே போல முழுமை என்பதில் பொதுதன்மையும் இருக்கும் அதே போல தனித்தன்மையும் இருக்கும். அதாவது முழுமை என்பதை முழுமையாக பார்க்கும்போது பொதுத்தன்மை இருக்கும். அதே போல முழுமை என்பது வேறு ஒரு முழுமையின் பகுதியாக இருக்கும் போது தனித்தன்மையை வெளிபடுத்தும். குறிப்பானதிற்கும் பொதுவானதிற்கும் உள்ள‌ இயங்கியல்தான் இது. பகுதியாக‌ இருக்கும் போது குறிப்பான தன்மையையும் அதுவே முழுமையாக கொள்ளப்படும்போது பொதுவான தன்மையையும் பிரதிபலிக்கும்.


எதிர்மறைகளின் ஐக்கியம்தான் இயங்கியல் என்பதை இந்த சான்றுகள் நமக்கு முழுமையாக‌ உணர்த்துகின்றது. ஆனால் இந்த அணுகுமுறை கருத்துமுதல்வாதமே அன்றி பொருள்முதல்வாத அணுகுமுறை அல்ல என்று சிலர் கேட்கக்கூடும்.


பொருள்முதல்வாதம் என்றால் என்ன என்பதை சிறிது ஆராயவோம். இதுவரை பொருளை நாம் எவ்வாறு புரிந்துவைத்துள்ளோம் என்பதை முதலில் பார்ப்போம். பகுதி என்றால் பொருள்தன்மை வாய்ந்தது என்றும், முழுமை என்றால் பொருள்தன்மை யற்றது என்றும் ஒரு தவறான‌ புரிதல்தான் நம்மிடம் உண்டு. பருண்மையான‌து என்றால் பொருள்தன்மை வாய்ந்தது என்றும், அருவமானது என்றால் பொருள்தன்மை அற்றது என்றும்கூட புரிந்து வைத்துள்ளோம். எவ்வளவு கொச்சையான புரிதல்?


மேற்கண்ட விளக்கத்திலிருந்து நாம் என்ன முடிவுக்கு வர இயலும். எதிர்வுகளின் மொத்தமும் சேர்ந்ததுதான் பொருள். அதாவது முழுமையும் பகுதியும் சேர்ந்ததுதான் பொருள். அருவமும் பருண்மையும் சேர்ந்ததுதான் பொருள். உருவமும் உள்ளடக்கமும் சேர்ந்ததுதான் பொருள். ஆக இதுபோன்ற எண்ணிறந்த எதிர்வுகளின் கூட்டுமொத்தமே பொருள் என்று கொள்ளலாம்.


அகம் புறம் விசயத்திலும் நாம் வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்டிருக்கிறோம். அகமும் புறமும் இடைவிடாது உறவு கொண்டிருக்கும் அதே நேரத்தில், இரண்டும் ஒன்றை ஒன்று ஊடுறு பாய்ந்து கொண்டிருக்கின்றது. அகத்தால் பிரதிபலிக்கப்படும் ‍ உட்கிரகிக்கப்படும் புறநிலை, புறநிலையை உள்வாங்கிக் கொள்ளும் அகமும் இருப்பதைக் காணலாம். அகநிலையில் புறநிலையின் சாயல் படிந்துகிடப்பதையும் பார்க்கிறோம்.


பன்மைத்தன்மையை ஒற்றைத் தன்மைக்குள் அடக்கிவிடுகிறது. வர்க்கப் போராட்டத்தை ஒற்றை முரணுக்குள் சுருக்கிவிடுகிறது. அனைத்து முரண்பாடுகளையும் ஒரு முரண்பாட்டிற்குள் நிறுத்திவிடுகிறார். தத்துவத் தளத்தில் அது உண்மைக்கும், மாயைக்கும் உள்ள முரணாகவும், நடைமுறையில் வெளிப்படைக்கும், இரகசியத்திற்கும் உள்ள முரணாகவும், அறிவுத்தோற்றவியலில் உண்மை அறிவுக்கும், போலி அறிவுக்கும் உள்ள முரணாகவும், ஒழுக்கவியலில் நேர்மைக்கும், நேர்மையற்றதற்கும் உள்ள முரணாகவும், அரசியல் பொருளாதாரத் தளத்தில் ஏகாதிபத்தியத்துக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் உள்ள முரணாகவும் குறைத்துவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக