ஞாயிறு, 4 டிசம்பர், 2011

புதிய போராளியின் பொதுத் திட்டம்

இயங்கியலில் ஆரம்பித்து இயக்க மறுப்பியலில் முடிந்த அறிக்கை

முழுமையைப் பற்றிய ஆய்வு இருக்கின்றதா?

'இந்திய துணைகண்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தும் உள்ளது. தமிழக வரலாற்றின் முக்கிய கூறுகளின் சாராம்சத்தை புரிந்துக் கொள்ள இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை தெரிந்துக் கொள்வது முக்கிய அறிவுடைமையாகும்'... .

ஆனால் பன்னாட்டு நிதி மூலதனத்திற்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் தமிழகத்திற்கும் உள்ள பிரிக்க இயலாத உறவைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இறுதிப் பகுதியில் 'உலகமயமாக்கலின் பகுதியாக தனியார்மயமாக்கல், தாராள மயமாக்கலின் மூலம் இம்முரண்பாடுகள் கூர்மையடைந்துக் கொண்டிருக்கின்றன' என்று போகிற போக்கில் கூறி செல்கின்றது. இது குறித்து ஆழமான ஆய்வும் விளக்கமும் இவர்களுக்கு தேவையில்லை என்றே தோன்றுகின்றது. ‘முழுமையைப் புரிந்துக் கொள்வதற்கான வழிமுறை இதுதான்’ என்ற மாவோவின் மேற்கோளை கோடிட்டுக் காண்பித்துவிட்டு பகுதியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது சரியா?.


 நவீன வெள்ளாளியம் -முதன்மையாக தாக்குதல் தொடுக்கவேண்டிய கருத்தியல்

‘இந்திய ஆளும் வர்க்கத்தின் கருத்தியலான நவீன பிராமணியம் மற்றும் சீர்திருத்தவாதம், தமிழக ஆதிக்கச் சக்திகளின் கருத்தியலான நவீன வெள்ளாளியமும் நாம் முதன்மையாக தாக்குதல் தொடுக்கவேண்டிய கருத்தியலாகும்'. இது மேலோட்டமான கருத்து. இதில் ஆழ‌மான‌ ஆய்வும் இல்லை என்றே தோன்றுகின்ற‌து. அதேபோல், 'புரட்சிகர முகாமில் திருத்தல்வாதமும், சீர்திருத்தவாதமும் தீவிர தாக்கத்தை கொண்டுள்ளன' என்று ஒற்றை வரி விமரிசனம் பொதுஉடைமை இயக்கம் குறித்த கருத்தியல்கள் மீது எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளது இவ்வறிக்கை என்று தெரிகின்றது. இதற்கான காரணத்தை மதிப்பீடு செய்யும் போது 'அறிவுமறுப்பியமும், வரட்டுகோட்பாட்டுவாதம்தான் என்று முடிவுக்கு வருகின்றது. இவைதான் பெரும்பாலான தவறுகளுக்கு காரணம் என்று அறிவிக்கின்றது. இது இவர்களின் தத்துவ வறட்சியை தவிர வேறெதையும் தெரிவிக்கவில்லை.

படிநிலைச் சாதிய அமைப்பு வரலாற்று ரீதியாக எந்தவகையான தர்க்கவிதியைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த விசயத்தில் மாவோவின் முரண்பாட்டுத் தத்துவத்தின் துணை தேவைப்படுகின்றது. ஆனால் சாதிய முரண்பாட்டின் மிகவும் சிக்கல்வாய்ந்த தன்மையை ஆராய்ந்தறிவதற்கான புதிய‌ அணுகுமுறையையும் முறைமையையும் கண்டறியவேண்டும்.

அனுபவவாத‌ போக்கு மட்டும்தான் முதன்மையாக ஆதிக்கம் செலுத்துகின்றதா?

'இந்திய பொதுஉடைமை இயக்க‌த்தில் அனுபவவாத‌ போக்கே முதன்மையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது' என்றும் ‘எந்திரகதியாக பொருத்துவது (அ) பெயர்த்தெடுப்பது என்பதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது' என்றும் முடிவுக்கு வருகின்றது. ஒரு வகையில் இது சரியான முடிவாக இருந்தாலும், அறிக்கையை முழுமையாகப் படிக்கும்போது இந்த அமைப்பும் இதற்குமேல் செல்லவில்லை என்று உணரமுடிகிறது. இங்கு அறிவுபூர்வமான இந்திய, தமிழக சமூக பொருளாதார அரசியல் கலாச்சார, சிந்தனை வரலாற்றையும், இந்திய பொது உடைமை இயக்கத்தின் அனுபவங்களையும் ஆராய்ந்துதான் அறிக்கை தயாரிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியே! முக்கியமாக சர்வதேசிய, இந்திய பொது உடைமை இயக்கங்கள் எதிர்கொண்டிருக்கும் தத்துவப் பிரச்சனைக்கு முகம் கொடுக்காமல், தத்துவார்த்த கேள்விகளுக்குள் சிந்தனையை செலுத்தாமல் பக்குவமாக தப்பித்துக் கொள்வது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

நடைமுறையில் அனுபவவாதமும் சிந்தனையில் வறட்டுவாதமும் ஒருங்கே பெற்ற மா.லெ. இயக்கத்தின் தத்துவார்த்த, கருத்தியல், அணுகுமுறை, முறைமை அடிப்படையிலான‌ பலவீன‌ங்களை இன்னமும் ஆழமாக ஆராயவேண்டும். அதே சமயம் அதன் வரலாற்றுப் பாத்திரத்தை எந்தவகையிலும் புறக்கணிக்க முடியாது..

இந்திய வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கு

'முதலாவது முரண்பாட்டின் முதன்மைக் கூறான இந்தியப் பிராந்திய பெருமுதலாளி வர்க்கமே தாக்குதல் தொடுக்கப்பட வேண்டிய முதன்மை இலக்காக உள்ளது' என்பதன் மூலம் முதலாளித்துவ வளர்ச்சியையும் முதலாளித்துவ முரண்பாட்டின் முதன்மையையும் உணர்த்துகின்றது. இது முந்தைய மா.லெ. இயக்கத்தின் திட்டங்களிலிருந்து வேறுபடுகின்றது.

'மேற்கண்டவைகள் அனைத்தும் பிற்போக்கு சாதிநிலவுடைமை சமூகத்தை தூக்கியெறிந்து, அதன் கருவிலே வளர்ந்த முதலாளித்துவ பட்டறை உற்பத்தியிலிருந்து பண்புரீதியான பாய்ச்சலை அடையவேண்டிய இயல்பான வரலாறு தலைகீழாக புரட்டப்பட்டது. அது கிழக்கிந்திய கம்பெனியால் நடத்தப்பட்டது'.

இதன் மூலம் இவர்களின் சிந்தனையிலும் வறட்டுதனமான அணுகுமுறை நீடிக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. சாதி நிலவுடைமை சமூகத்தை தூக்கியெறிந்து, அதன் கருவிலே வளர்ந்த முதலாளித்துவ பட்டறை உற்பத்தியிலிருந்து பண்புரீதியான பாய்ச்சலை அடையவேண்டிய இயல்பான வரலாறு' என்று கூறும் போது இந்தியாவும் ஒருபடித்தான வரலாற்று வளர்ச்சிப் போக்கை கொண்டிருப்பதை விரும்புகின்றனர். இந்திய வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கை ஆராய இந்த அணுகுமுறை இவர்களுக்கு தடையாக இருக்கின்றது.

காலனிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சிக் குறித்த தனித்த சுதந்திரமான படிப்பும் ஆய்வும் தேவையும் இருப்பதை உணரவேண்டும். குறிப்பாக வரலாற்றின்வழி இந்தியா முதலாளித்துவத்தின் ‍ முதலாளித்துவ வளர்ச்சியின் தனித்தன்மையை கண்டறிந்தால்தான் நாம் இந்தியாவின் எதார்த்தத்தை நெருங்க முடியும். முதலாளித்துவம் என்றால் ஒரு ஒற்றையான ஏற்கனவே வரையறுக்கப்பட்ட விதிகளின்படி ஆராய முற்பட்டுவிடுகின்றோம். ஒரு சுதந்தரமான ஆய்வு மனப்பான்மையே நமக்கு இல்லை என்பது தெளிவாகப் புரிகின்றது. உலகின் எல்லா நாடுகளும் ஒரே விதமாக முதலாளியமாக மாற்றம் பெற்று, அதன் பின்னரே சோசலிசத்தை நோக்கி நகர முடியும் என்ற ஒற்றைப்பாதையை மார்க்ஸ் முன்மொழியவில்லை.

சமூகமே ஒரு பன்மீயத்தன்மை வாய்ந்தது

“ஒரு சமூகத்தின் குறித்த தன்மையை தீர்மானிப்பதில் தீர்மானகரமான பங்கு அச்சமூகத்தின் உற்பத்தி முறைதான. இந்திய நாட்டின் அரசெல்லைக்குள் உள்ள சமூகத்தை பொருத்தவரை அது ஒரே சமூகமானது இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளைக் கொண்டிருக்கிறது” என‌ உற்பத்திமுறையின் பன்மைத்தன்மை அங்கீகரிக்கும் இத்திட்டம், நமது சமூகமே ஒரு பன்மீயத்தன்மை வாய்ந்தது என்பதை உள்வாங்கத் தவறுகின்றது. மேலும் அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற முரணில் அடித்தளத்திற்கு முக்கியத்தும் அளிக்கின்றது. வரலாற்று ரீதியாக, மேற்கட்டுமான கூறுகளின் தனித்தன்மை வாய்ந்த செல்வாக்கையும் தீர்மானகரமான பாத்திரத்தையும், மேற்கட்டுமான அம்சங்களுக்கும் அடித்தளக் கூறுகளுக்கும் இடையே உள்ள இயங்கியல் உறவையும் இன்னும் உள்வாங்க வேண்டும்.

சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளின் செயல்பாடுகளோடு ஒரு சமூக கட்டமைப்பும் சேர்ந்தே இயங்குவதையும் பார்க்கமுடியும். அந்தச் சமூகக் கட்டமைப்பில் வேறுவகையான முரண்கள் நிலவச் செய்கின்றன. இரண்டு வகையான முரண்பாடுகளும் ஒன்றுக்கொன்று வினையாற்றவும் செய்கின்றன. சாதியமானது, உற்பத்தி முறையைத் தீர்மானிப்பதில் ஒரு கணிசமான பாத்திரத்தை ஏற்கின்றது. உற்பத்திமுறையிலிருந்து பிரித்துப்பார்க்க இயலாவண்ணம், பரஸ்பரம் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றது. உற்பத்திமுறையும் சாதியக் கட்டுமானமும் சேர்ந்துதான் சமுதாயத்தை இயக்குகின்றது.

சமூக மாற்றத்தில் புத்த நெறியின் பங்கு

“புத்தரின் நெறிகள் தொடக்கத்தில், சமூகத்தில் வளர்ந்துக் கொண்டிருந்த தனி உடைமைக் கெதிராகவும், மீண்டும் தொல்குடி பொதுவுடைமையை நிலைநாட்டும் பின்னோக்கிய நோக்கமே இருந்தது. பின்னர், அதே தனிஉடைமையை நிலை நிறுத்தும் பணியை சிறப்பாக செய்த வரலாற்று சுயமுரணைக் கொண்டதாக மாறியது. அதாவது, இயல்பாகவே உற்பத்திச் சக்திகளின் அழிவைக் காப்பாற்ற அவர் பிராமணர்களுக்கு எதிராகத் தொடுத்த தாக்குதலும், இனக்குழுச் சண்டைகளை நிறுத்தி, அவர்களை பேரரசில் கலக்க வைத்து, சமூக உற்பத்தியில் ஈடுபாடு வைத்ததன் மூலம் ஒரு பண்புரீதியான சமூக மாற்றத்திற்காக அதாவது, நிலவுடைமைச் சமூக மாற்றத்திற்கான செயலைச் செயததன் மூலம் ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை ஆற்றியுள்ளார்” என்ற ஒரு கருத்தை முன்வைக்கின்றது இவ்வறிக்கை.

சமூக மாற்றத்தில் கருத்தியலின் செல்வாக்கை உணர்ந்து உள்வாங்கியுள்ளது இவ்வறிக்கை. பண்டைய இந்திய ச‌மூக மாற்றத்தில் புத்தரின் கருத்தியலின் பாத்திரத்தை சுட்டிக்காட்டியுள்ளது இந்த அறிக்கை. இது வரவேற்கத் தக்க அம்சமாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் பார்ப்பனீயக் கருத்தியல் தடையாக இருந்ததையும், புத்தக் கருத்தியல் சமூக மாற்றத்தை துரிதப்படுத்தியதை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்ததையும் சுட்டிக்காட்டுகின்றது அறிக்கை. பண்டைய சமூக அரசியல் பொருளாதார‌ வரலாற்றினூடே பார்ப்பனீயம் எதிர் புத்தம் என்ற எதிர்வு செயல்பட்டதைக் காட்டுகின்றது. இம்முரண்பாட்டை அம்பேத்கார் உள்வாங்கிக் கொண்டு தனது சாதி ஒழிப்புத் திட்டத்தின் அடிப்படையாக அமைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிச்சிறப்பு வாய்ந்த சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்த‌ மார்க்சு, ஆசியப் பொது உடைமைச் சமூகக் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டார். அதற்கான‌ பொருளீய அடிப்படைகளை விரிவாக ஆராய்ந்தார். ஆனால் "புத்தரின் நெறிகள் காரணமாகவே, முழுவதுமாக தனியுடைமையாகாமல், அரசு நிலவுடைமை, அரசு ஏகபோகம், நலன்புரியும் அரசு போன்ற ‘உலகின் முன்மாதிரிகள்’ உருவாயிருக்கலாம்" என்ற கூற்றில் கருத்துமுதல்வாதத்தின் சாயல் மட்டுமே தெரிகின்றது.

சமூக வளர்ச்சியைப் பின்னுக்கு இழுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்

“…….மேற்கண்டவைகள் அனைத்தும் பிற்போக்கு சாதி நிலவுடைமை சமூகத்தை தூக்கியெறிந்து, அதன் கருவிலே வளர்ந்த முதலாளித்துவ பட்டறை உற்பத்தியிலிருந்து பண்புரீதியான பாய்ச்சலை அடையவேண்டிய இயல்பான வரலாறு தலைகீழாகப் புரட்டப்பட்டது. அது கிழக்கிந்திய கம்பெனியால் நடத்தப்பட்டது”……….

“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய துணைக்கண்ட பகுதியில் இயல்பாக உருவான பட்டறை முதலுடைமையை (Capitalism) அழித்துவிட்டு, தனது நலனுக்கான தனது மூலதன உற்பத்தியை இங்கு நட்டது. அதே சமயத்தில் இங்கு ஏற்கனவே நிலவிக் கொண்டிருந்த சாதி-நிலவுடைமை, தொல்குடி சமூகங்களின் மீதும் தாக்குதலை தொடுத்தது மட்டுமல்லாமல், அவைகளை அரைத்தன்மையில் நீடிக்க வைத்தது. இது மட்டுமல்லாமல் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்டு பிராந்திய பெரு மூலதனத்தையும் அனுமதித்தது. இச்செயல் போக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளைக் கொண்ட சமூகங்களின் இருத்தலை உருவாக்கியது…..” எனக் கூறுகின்றது இவ்வறிக்கை

பிரிட்டிஷின் தலையீட்டைத் தற்செயலாகப் பார்க்கப்படுகின்றது. இந்திய சமூகத்தின் இயல்பான வளர்ச்சிப்போக்கில் குறுக்கீடு செய்த்தாக கூறுகின்றது அறிக்கை. அன்றைய இந்தியப் பகுதிகள் வளர்ச்சிக்கான தடையாக சாதிய உறவுகளும் நிலம் பொது உடைமையாக இருந்த காரணத்தினாலும் இன்னபிற அகநிலை காரணங்கள் இருந்தன. ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால் உற்பத்தியும் சமூக வளர்ச்சியும் தேக்கத்திலிருந்தன. இந்த தேக்கத்தை உடைப்பதற்கு ஒரு வெளிப்புறக் காரணி ஒன்று அவசியமாயிருந்தது. அந்தப் பாத்திரத்தை பிரிட்டிஷ் ஏற்றது. இது ஒரு தற்செயல் நிகழ்ச்சியல்ல. பிரிட்டிஷ் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை காலனியாக்கி‌ சுரண்டல் நடத்தியது தற்செயலான நிகழ்வுகள் அல்ல. மாறாக அவையாவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திற்கான அவசிய நடவடிக்கைகளாகும்.

நம்மைப் பொருத்தவாரை பிரிட்டிஷின் ஆதிக்கம் புறநிலை அவசியம். ஏனெனில் இந்தியப் பகுதிகளில் அன்று நிலவியல் தேக்கத்தை உடைக்கவேண்டிய நிலையில் ஒரு புறநிலைக் காரணியாக திகழ்ந்தது. ஆனால் பிரிட்டிஷைப் பொருத்தவரை பிற நாடுகளை காலனியாக்கியது அகநிலை அவசியம். அதாவது பிரிட்டிஷின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைக் காலனிகளாக்குவது முன்நிபந்தனையான ஒன்றாகவே இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் ஒரு பொருளின் அகநிலையான மாற்றத்திற்கான அவசியம் மற்றப் பொருட்களின் புறநிலையாக நின்று அவற்றின் மாற்றத்திற்கான புறஅவசியத்தை உணர்த்துகின்றது. ஆகவே தற்செயலுக்கும் அவசியத்திற்கும் உள்ள உறவைப் புரிந்துக்கொள்ளவேண்டும்.

அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட உட்சாரம்

ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கிலுள்ள அடிப்படை முரண்பாடும் இந்த அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட உட்சாரமும் இவ்வளர்ச்சிப் போக்கு முற்றுப்பெறும் வரை மறையாது; ஆனால் ஒரு நீண்ட வளர்ச்சிப் பாதையில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் அதனதன் நிலைமைகள் வேறுபடும், ஏனெனில், ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் அடிப்படை முரண்பாட்டின் தன்மையும், இந்த அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட உட்சாரமும், இந்த போக்கு முற்றுப்பெறும் வரை மறையாது….. இது அறிக்கையின் கூற்று.

இது அனைத்திற்குமான‌ பொதுஉண்மை. சமூக மாற்றத்தின் குறிப்பான நிலைமைகளில் அப்படியே பொருத்தி பார்க்க முடியுமா? இந்தப் பொது உண்மையானது சமூகத்தில் நிலவிய‌ புராதன பொது உடைமை, அடிமை முறை, நில உடைமை, முதலாளியம் ஆகிய நான்கு வரலாற்றுக் கட்டங்களும் ஒன்றை அடுத்து இன்னொன்றாக முற்றிலுமாக‌ மாறிச்செல்வதை உணர்த்துகின்றது. இது ஐரோப்பிய நாடுகளின் சிலவற்றைப் பொருத்தவரை உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை அவ்வாறு ஒரு சமூகக் கட்டம் முடிவடைந்து இன்னொரு சமூகக் கட்டம் தோன்றும் என்பதாக அமையாமல் ஒன்றின் மீது இன்னொன்றாக திணிந்து ஆசிய உற்பத்தி முறை என்ற தனிசிறப்பான சமூக வளர்ச்சிப் போக்கு உருவாகியுள்ளது என்று மார்க்சு கருதினார். இவ்வறிக்கையில் கண்டுள்ளவாறு, இந்தியாவின் குறிப்பான நிலைமைகளில் இந்தப் பொதுஉண்மையை அவ்வாறே பொருத்திப் பார்ப்பது எந்திரத் தனமானது. இதனால்தான் இங்கு பலவகையான உற்பத்திமுறைகளும், சமூகக் கட்டமைப்புகளும் உருவாகியுள்ளன என்பதை உணரவெண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், இயங்கியலில் ஆரம்பித்து இயக்க மறுப்பியலில் முடிந்தது அறிக்கை.

இறுதியாக,

முந்தைய மா.லெ. இயக்கங்களின் திட்டத்திற்கான‌ அடிப்படைகளிலிருந்து வேறுபட்ட அறிக்கையை புதிய போராளி அமைப்பு முன்வைத்துள்ளது; சமூக வரலாற்றை இயங்கியல் ரீதியான‌ அணுகுமுறையில் ஆய்வு செய்ய முயன்றுள்ளது. குறிப்பாக சாதிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டம் தயாரித்துள்ளது வரவேற்கத்தக்கது. சுதந்திரமான ஆய்வுக்கான விருப்பத்தை இவ்வறிக்கை உணர்த்துகின்றது. விஞ்ஞான பூர்வமான‌ திட்டத்தை முழுமையாக‌ உருவாக்குவதை நோக்கி செல்ல‌ இன்னும் வெகுதூரம் இருக்கின்றது என்பதை உணராமல் அவசரம் காட்டியுள்ளது. இந்திய மற்றும் தமிழ் சமூகம் சம்பந்தமான‌ பரந்த அளவிலான ஆழமான‌ ஆய்வில் ஈடுபடவும், திட்டம் சார்ந்த‌ தத்துவார்த்த கருத்தியல் விவாதங்கள் இடைவிடாமல் தொடர்ந்து நடத்தவும் இடதுசாரிகள் அனைவரையும் ஈடுபடுத்தி இருக்க வேண்டும்.

இந்திய, தமிழ் சமூகத்தை இயங்கியல் வழிமுறையில் அணுகியிருப்பதற்கான அறிகுறிகள் இவ்வறிக்கையில் தென்படுகின்றன‌. இந்த அணுகுமுறையை முறைப்படுத்தி ஆழப்படுத்தவேண்டும் என்பது கருத்து. இந்தத் திட்டம் முந்தைய திட்டங்களின் கூறுகளில் சிலவற்றை முறித்துக் கொண்டும், ப‌ல அம்சங்களை கடந்தும் வந்துள்ளது. அனைத்தையும் ஒருங்கிணைத்து தொகுத்துக் கையாளும் முறையியலை உருவாக்கவது இன்றைய நமது தலையாய கடமையாகும். அது இன்றைய எதார்த்தத்தை பருண்மையாக எடுத்துரைக்கும் செழுமைப் பெற்றதாக இருக்க‌ வேண்டும்.

குறிப்பு:‍

தங்களின் ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும், ஆய்விலிருந்து வந்தடைந்த முடிவுகளை நிரூபிக்கும் வகையிலும் விரிவான கட்டுரைகள், நூல்கள் வெளியிட வேண்டும். அப்போதுதான் அறிக்கையின் மீதான விவாதத்தைச் செழுமையாகவும், பருண்மையாகவும் செய்யமுடியும்.





























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக