திங்கள், 13 பிப்ரவரி, 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள் -1

ஆய்வும் அணுகுமுறையும்


பொதுவாக  ஒரு கருத்துரையை மறுத்து மாற்றுக் கருத்துரையை முன்வைத்து நிறுவுவது நமது தத்துவவிவாத மரபு. எந்தக் கருத்தை எதிர்கொள்கின்றோமோ அக்கருத்திலுள்ள அம்சங்களை எடுத்து வைத்து அதை மறுதலிக்கும் விதமாக மாற்றுக் கருத்துக்களை முவைத்து புதிதாக ஒரு கருத்துரையை நிறுவுவதுதான் இம்மரபின் சாரம்.
ஆனால், சமூக‌ சிந்தனையாளர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் சமூக பிரச்சனைகளை ஆராயப்புகுவதற்கு முன்பாக அந்தச் சமூகப் பிரச்சனைக் குறித்து இதுவரை எந்த வகையான கருத்துரைகளை வழங்கப்பட்டுள்ளன, எந்த வகையான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன, என்ன முடிவுகள் எட்டப்பட்டன, அம்முடிவுகளை எட்டுவதற்கு எந்த வகையான அணுகுமுறைகள் கையாளப்பட்டன, எந்த வகையான முறைமைகள் கையாளப்பட்டன என்பன குறித்தெல்லாம் தொகுத்துப் பகுத்தாராய்வதில்லை. இத்தகைய ஒரு அறிவுப்பண்பாடு இங்கு நிலவுவதாக தெரிவதில்லை. அந்தச் சமூகப் பிரச்சனைக் குறித்து எழுதும்போது ஏதோ புதிதாக இவர்கள்தாம் எழுதுவது என்ற அணுகுமுறை வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. ஆகையால்தான் கருத்துக்கள் வளர்ச்சி பெறாமல், சிந்தனையில் ஒரு தேக்கத்தைப் பார்க்கமுடிகின்றது.
முன்பு ஒருமுறை மூத்த தோழர் ஒருவர் எனது கட்டுரைகளைப் படித்துப் பார்த்துவிட்டு சொன்ன ஒரு விசயம் நினைவுக்கு வருகின்றது. அதாவது, ஒரு பொருள் குறித்து எழுதத் தொடங்குமுன் அப்பொருள் குறித்து அதுவரை வெளிவந்த கருத்துக்களையும், விவாதங்களையும் ஒருங்கிணைந்த வகையில் உள்வாங்கிக்கொண்டு, விமரிசன பூர்வமாக‌ ஆராய்ந்து முடிவெடுங்கள் என்று சொன்னார்.
ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது இன்றுவரை புதிதாக தோன்றிக் கொண்டிருக்கும் அமைப்புகளை எடுத்துக் கொண்டாலும் சரி, சமூக வரலாற்று பொருளாதாரம் போன்றவற்றின் ஆய்விலிருந்து திட்டங்களை தயாரித்து தங்களது நடைமுறையை துவங்குவதில்லை என்பதுதான் உண்மை. ஆய்வு மனப்பான்மையுடன் உணர்வு பூர்வமாக உள்வாங்கிக் கொண்டு சமூக ஆய்விலிருந்து திட்டங்களை தயாரித்து தங்கள் அமைப்பைக் கட்டுவது குறித்து யோசிக்கிறார்களா என்பது சந்தேகமே. தமிழகத்தில் புதிதாக தோன்றிய அமைப்புகளை கொஞ்சம் ஆய்வு செய்து பார்த்தாலே இது புரியும். அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள். தமிழகத்தின் பொருளாதார, சமூக, அரசியல், தத்துவ, பண்பாட்டு நிலைமைகள் குறித்து என்ன ஆய்வு செய்தீர்கள் அல்லது என்ன ஆய்வுகளை வைத்துள்ளீர்கள் என்றால் அவர்களிடம் பதில் இருக்காது.  இதுவரை தமிழக சமூக வரலாறு, பொருளாதார, சிந்தனை வரலாற்று அம்சங்களையாவது தொகுத்து பகுத்துப் பார்த்து திட்டங்களை வரையப்பட்டதா என்பதும் ஐயத்திற்குட்பட்டதாகும்.
ஆய்வு இன்றி பேச உரிமையில்லை  என்று மாவோ கூறியுள்ளார். விவாதிப்பதற்கே ஆய்வுடன் வரவேண்டும் என்று கூறும்போது  சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு அமைப்பை கட்டுவது என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லத் தேவையில்லை. இது அனைவருக்கும் தெரியும்.ஆனால் ஏன் இதை செய்ய முன் வருவதில்லை.பொதுவாக நமக்கு விஞ்ஞான மனோபாவம்,விஞ்ஞான பூர்வ சிந்தனை, ஆராய்ச்சி அணுகுமுறை அவ்வளவாக இருக்கவில்லை என்றுதான் நான் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
மிகவும் மேலோட்டமான அரைகுறையான புரிதலுடன் உடனடியாக தலையிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பிரச்சனையின் பின்னாலும், அதை கையில் எடுக்கும் மக்களின் இயக்கத்திற்கும் பின்னாலும் செல்லும் நிலைதான் இன்றும் நீடிக்கின்றது. இவ்வாறுதான் சமூகப் பிரச்சனையில் நமது தலையீடு  இருக்கின்றது. ஆய்விலிருந்து தங்கள் நடைமுறையை துவங்குவதில்லை. அதாவது தாங்கள் எடுத்துக் கொண்ட பிரச்சனையின் வரலாற்று பூர்வமான அதோடு தொடர்புடைய‌ அனைத்து விவரங்களையும் தொகுத்துக் கொண்டு அதிலிருந்து பெறப்பட்ட முடிவுகளை நடைமுறையில் அமுல்படுத்த முயற்சிப்பதில்லை.
அதுமட்டுமின்றி அமைப்பின் கடந்தகால இயக்கத்தின் - போராட்டங்களின் அனுபவங்களை தொகுத்து ஆய்ந்தறிந்து இயக்க வரலாற்றைத் தொகுப்பது என்ற உணர்வு எந்த  அமைப்புக்கோ அல்லது இயக்கத்திற்கோ எப்போதுமே இருப்பதில்லை; அதன் படிப்பினைகளை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதில்லை. புதிதாகத் தோன்றும் ஒவ்வொரு அமைப்பும் இத்தகைய அனுபவங்களைப் புறந்தள்ளிவிட்டு புதிதாக நடைமுறைப் பணியில் ஈடுபடுகின்றனர். சிலர்  அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை அல்லது அவர்களின் உள்ளுணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு திட்டம் தயாரித்து அமைப்பைக் கட்டுகின்றனர். இத்தகைய அணுகுமுறையானது, சமூகப் பணிகளில் முன்னேறிய விஞ்ஞான மனோபாவத்தைக் கைவிட்டு பிற்போக்கான‌ மெய்ஞ்ஞான மனோபாவத்தைக் காட்டுகின்றது.
விஞ்ஞான அணுகுமுறைக்கும் மெய்ஞ்ஞானம் அணுகுமுறைக்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கின்றது. பொதுவாக மேற்கத்திய தத்துவவாதிகள் விஞ்ஞான அணுகுமுறையின் வழிவந்தவர்கள். கிழக்கத்திய மரபினர் மெய்ஞ்ஞான அணுகுமுறையை கொண்டவர்கள். விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் அறிவதற்கு முயற்சித்தவைதான். இரண்டும் எதிரெதெர் திசைகளில் வேறுவேறு பாதைகளின் பயணம் செய்கின்றன. விஞ்ஞான கையாளும் அனைத்து தத்துவக் கூறுகளையும் பயன்படுத்துகின்றன. விஞ்ஞானம் பொருள்முதல்வாத்தைப் பலப்படுத்து கின்றது. மெய்ஞ்ஞானம் கருத்துமுதல்வாதத்தை உறுதிபடுத்துகின்றது.
சரி! அணுகுமுறைக்கு வருவோம். விஞ்ஞானம் தனது நோக்கத்தை நிறைவேற்ற என்ன மாதிரியான அணுகுமுறையை, முறைமையைக் கையாளுகின்றது என்று பார்க்க வேண்டியிருக்கின்றது. முதன் முதலில் ஆய்வுக்கான‌ பிரச்சனையை வரையறுக்கின்றது. அடுத்து, பிரச்சனை சம்பந்தமான அனைத்து தரவுகளையும் விவரங்களையும் சேகரிக்கின்றது. சேகரித்த விவரங்களைக் கொண்டு விதிகள் உருவாக்கப்படுகின்றன. அவவிதிகள் பிரச்சனைக்கான‌ தீர்வினையோ அல்லது தீர்வற்றதையோ அளிக்கின்றன. தீர்வு காணப்பட்ட‌ இவ்விதிகள் விளக்கப்படுகின்றன. அமுல்படுத்தப்படுகின்றன. அதாவது நடைமுறைப் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இப்போது மெய்ஞ்ஞானத்திற்கான‌ அணுகுமுறையைக் கொஞ்சம் பார்க்கலாம். மெய்ஞ்ஞானிகளும் பிரச்சனையை வைத்துதான் தீர்வைத் தேடுகின்றார்கள். அதற்கு அவர்கள் கைக்கொள்ளும் முறைமையானது உள்ளுணர்வு சார்ந்ததாகவும், தனிமனித அனுபவம் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும். இதைதான் நாம் கிழக்கத்திய மெஞ்ஞானிகள் கையாண்டு வந்துள்ளனர். இந்த உள்ளுணர்வை வைத்தும் தனிமனித அனுபவத்தினை வைத்துதான் மெய்ஞ்ஞானக் கோட்பாடுகளை வகுக்கின்றனர். இவர்களுக்கு என்று தர்க்கமுறை உண்டு. அறிவு தோன்றுவது குறித்த கோட்பாடுகள் உண்டு. அணுகுமுறை உண்டு. ஆனால் அவையாவும் கருத்தியல் தளத்தில் மேற்கொள்ளப்ப‌டும் சிந்தனைக் கருவிகள் மட்டுமே.  நடைமுறை ஆதாரமோ அல்லது தரவுகளோ, அல்லது ஆய்வோ அவற்றிற்கு இல்லை.
இப்போது நமது பொது உடைமை இயக்கத் தலைவர்களிடம் வருவோம். அவர்கள் அமைப்பு ஆரம்பிப்பதற்குமுன் எத்தகைய அணுகுமுறையை கையாண்டார்கள் அல்லது கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள்  என்று விளக்க தேவையில்லை. ஏதோ பெயரளவில், கிடைத்த விபரங்களை வைத்துக்கொண்டு அவசரகதியில் முடிவெடுத்து திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் அனைவரும் விஞ்ஞான அணுகுமுறை என்பதும் அறிவியல் முறைமை என்பது கிஞ்சிற்றும் கிடையாது. அவர்கள் கையாண்ட அணுகுமுறை என்பது நமது மெய்ஞ்ஞானியர்கள் கையாண்ட உள்ளுணர்வு மற்றும் தனிமனித அனுபவத்தை மட்டுமே என்பது தெளிவு.
உண்மையை நெருங்க வேண்டுமென்றால், அனைத்து விவரங்களையும் தொகுக்கவேண்டும்; விவரங்களை ஆய்வு செய்வதற்கு ஆய்வு முறையியலை கண்டறியவேண்டும்; முன்னேறிய‌ அணுகுமுறையைப் பிரயோகிக்கவேன்டும். அதாவது,  ஒரு பொருள் குறித்து அல்லது ஒரு பிரச்சனைக் குறித்து ஆராய வேண்டுமானால் முதலில் அது குறித்த விவரங்களை அனைத்தையும் தொகுக்கவேண்டும். அவ்வாறு தொகுக்கப்பட்ட விவரங்களைப் பகுத்தாராய வேண்டும். அவ்விவரங்கள் மீது கையாண்ட வழிமுறைகளால் அல்லது அணுகுமுறைகளால் வந்தடைந்த‌ முடிவுகளைக் கண்டறிய வேண்டும். அணுகுமுறைக‌ள் அல்ல‌து வ‌ழிமுறைக‌ளில் வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌வ‌ற்றை எடுத்துக் கொண்டு, பின்த‌ங்கிய‌வ‌ற்றை த‌ள்ளிவிட்டு மீண்டும் எல்லா விவ‌ர‌ங்க‌ளையும் பொருள்முத‌ல்வாத‌ அடிப்ப‌டையில் இய‌ங்கிய‌ல் அணுகுமுறையின் கீழ் ம‌றுஆய்வு செய்ய‌வேண்டும்.
இயக்கவியல் சிந்தனை மூலம் சோதனைகளை ஆதாரமாகக் கொண்ட விஞ்ஞானங்கள் மற்றும் பொதுமைப்படுத்தப்பட்ட அவற்றின் முடிவுகளின் வழியில் அடையத்தக்க சார்புநிலை உண்மைகளைத் தேடிச் செல்வோம். (engels)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக