புதன், 22 பிப்ரவரி, 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்-2


ஒரு அமைப்பின் நடைமுறை என்பது ஒரு நோக்கத்தின் அடிப்படையில், எண்ணிக்கையில் சில பல தோழர்களை உறுப்பினர்களைக் கொண்டு இயங்குவதாகும். அதன் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அந்த அமைப்பை வழிநடத்தும் பொறுப்பாளர்கள். தனிதனி நபர்களின் கூட்டுமொத்தம்தான் அமைப்பு. அவர்களின் உணர்வுகளின் கூட்டுத்தொகைதான் அமைப்பின் உணர்வு. தனிநபரின் உணர்வு பருண்மையாக வெளிப்படும். அதுவே குழுவின் அமைப்பின் உணர்வாக வெளிப்படும்போது பருண்மையாக வெளிப்படாது. அருவமாக வெளிப்படும். கூட்டாக சேரும் போது கூட்டாக செயல்படும்போது குழுவின் உணர்வு வெளிப்படுகின்றது. பிரச்சாரம், கிளர்ச்சி, போராட்டம் போன்ற எந்த வடிவஙகளிலும் அமைப்பு அளவிலான‌ உணர்வு வெளிப்படுகின்றது. இங்கு ஒருவரின் உணர்வுக்கும் மற்றொரு தனிநபரின் உண‌ர்வுக்கும் முரண்பாடு இருக்கும். இந்த முரண்பட்ட‌ உணர்வு மற்றவர்களின் உணர்வுகளோடும் முரண்படவும் உடன்படவும் செய்கின்றது. இவ்வாறு எல்லா நபர்களின் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் உடன்பட்டும் ஒருவித கூட்டுணர்வை வெளிப்படுகின்றன. அதுவே குழுவின் உணர்வாகும்.

தனிநபர் பகுதியாக எடுத்துக் கொண்டால், குழுவை முழுமையாக கொள்ளலாம். தனிநபர்களை பருண்மையாக எடுத்துக்கொண்டால் குழுவை அருவமாக எடுத்துக்கொள்ளலாம். இங்கு பகுதியாக விளங்கும் தனிநபர், பருண்மையாக இருக்கும் தனிநபர்தான் குழுவின் அடிப்படையாகும். தனிநபர்களுக்கிடையே உள்ள பரஸ்பர உறவும் முரணும் சேர்ந்துதான் முழுமையாகின்றது. அந்த முழுமை அருவமானது.

தனிநபர் தனியாக இயங்கமுடியாது. தனிநபர்கள் சேர்ந்து கூட்டாகதான் செயல்பட முடியும். குழுவாக இயங்கும் போதும் சமூகமாக இயங்கும் போதும் தனிநபர்களுக்கிடையே ஒருவிதமான உறவு உருவாகின்றது. அக்குழுவின் தனிநபர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த உறவு இருந்தே தீரும். இந்த உறவானது எந்த தனிநபரின் அக‌உணர்வுக்கும் கட்டுப்பட்டதன்று. புறவயப்பட்டதாகும். இங்கு தனிதனி நபர்களின் உணர்வும் செயல்பாடும் தனித்த தன்மைப் பெற்றிருந்த போதிலும் அது குழுவின் உணர்விற்குக் கட்டுப்பட்டதாகும். அந்த குழுவின் உறவிற்கு உட்பட்டதாகும்.


ஒவ்வொரு மனிதனும் தான் உணர்வுபூர்வமாக விரும்பும் தன் சொந்தக் குறிக்கோளையே பின்பற்றுகின்றான். வெவ்வேறான திசைகளில் செயல்படுகின்ற இந்தப் பல விருப்பங்களின் கூட்டு விளைவும், அவ்விருப்பங்கள் புற உலகின் மீது ஏற்படுத்தும் பன்முகப் பாதிப்புகளின் கூட்டு விளைவுமே வரலாறாக உருவாகிறது. (engels)


தலைவரானவர் குழுவின் நடைமுறையில் உள்ள எந்த ஒரு செயல்பாட்டிலும் தனித்தனி நபர்களின் உணர்வை ஆராய்ந்து கூட்டுணர்வாக உட்கிரகித்துக் கொள்கின்றார். தனித்தனிநபர்களின் தனித்தனி உணர்வுகளை பொதுமைப்படுத்துகின்றார். இங்குதான் தனித்தனி உண்மைகளை உள்வாங்கிக் கொண்டு பொதுமைப்படுத்துகின்றார். இதுதான் தத்துவமாக்கல் ஆகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நடைமுறைச் செயல்பாட்டிலும், தத்துவமாக்கலின் பங்கு இருக்கவே செய்கின்ற‌து.


தத்துவமயமாக்கல் என்பது இருவகைகளில் செயல்படுகின்றது. நடைமுறையில் உள்ள தரவுகளிலிருந்தும் நடைமுறை அனுபவங்களிலிருந்தும் தொகுத்து உண்மையை வந்தடைவது ஒன்று. இவ்வாறு நடைமுறையிலிருந்து வந்தடைந்த உண்மைகளைத் தொகுத்து பொதுஉண்மையை பெறுவது இரண்டாவது. இரண்டையும் சேர்த்துதான் தத்துவப்பணி என்கின்றோம். பெரும்பாலும் முதல்வகைப் பணியைதான் தத்துவப்பணி என்று வலியுறுத்தப்படுகின்றது. இரண்டாவது பணியை நடைமுறைக்குச் சம்பந்தமில்லா பணி என்று புறக்கணிக்கப்படுகின்றது.


பொதுஉண்மையை நடைமுறையில் அமுல்படுத்தும் போதும் தத்துவப்பணி ஆற்ற வேண்டியிருக்கின்றது. அதாவது பொது உண்மையைக் குறிப்பான நடைமுறையில் பொருத்தும்போது பகுத்தாராயும் பணியும் சேர்ந்தே நடைபெறுகின்றது. இந்தப் பகுத்தாராய்வு பணியையும் தத்துவப்பணி என்கின்றோம்.. தத்துவமும் நடைமுறையும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதபடி இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த பணியை பெரும்பாலும் உணர்வதில்லை. பொதுவாக நடைமுறைப் பணி என்று குறுக்கி விடுகின்ற போக்கு இருக்கின்றது. ஆனாலும் பகுத்தாராயும் தத்துவப்பணியை நடைமுறையில் ஈடுபடும் எல்லோருமே உணர்வதில்லை. தத்துவப் பணியாற்றுபவர்தான் உணர்வு பூர்வமாக உணரமுடியும்.

ஆனால் இங்கு நடப்பதென்ன? தத்துவத்தையையும் நடைமுறையையும் செயற்கையாக பிரித்து நிறுத்தி ஒன்று சேரமுடியாத வகையில் சுவர் ஒன்றை எழுப்பி விடுகின்ற‌னர். நடைமுறையில் ஈடுபடுபவர்கள் தங்களை அறியாமலேயே உண்மையை கண்டறியும் தத்துவப் பணியை செய்கின்றனர். ஆகவே அவர்கள் தங்கள் நடைமுறையில் உள்ள தத்துவப் பணியினைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. அதை ஒரு நடைமுறைச் சார்ந்ததாகவே எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வுபூர்வமாக செயல்பட்டும்போது தத்துவவாதியாகப் பரிணமிக்கின்றனர்.


மார்க்சியமானது இயற்கையிலிருந்தும், சமூக நடைமுறையி லிருந்தும் சிந்தனையிலிருந்தும் பெறப்பட்ட உண்மைகளை தொகுத்துப் பெற்ற‌ ஆகப் பொதுவான உண்மைகளைக் உள்ளடக்கிய ஒரு தத்துவக் கோப்பாகும். பொது உண்மைகள் கண்டறியப்பட்டு விட்டன. இனி பொது உண்மைகளைக் கண்டறியும் இந்தப் பணி இனித் தேவையில்லை. பொது உண்மைகளை நடைமுறைப் படுத்துவதே நமது கடமை என்று சொல்வதன் மூலம் தத்துவப் பணிக்கு மட்டுமல்ல நடைமுறைப் பணியும் முன்னேறாது என்ப‌து க‌ண்கூடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக