வெள்ளி, 2 மார்ச், 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள் - 3

இன்றைய யதார்த்தமே தத்துவப் போராட்டத்தைக் கோருகின்றது
இன்றைய பருண்மையான நிலைமையை சற்று கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், பொதுவுடைமை இயக்கத்திற்கு உள்ளும் புறமும் பல்வேறு கருத்தியல் போக்குகளும் தத்துவப் போக்குகளும் நிலவிவருகின்றன என்பது தெளிவாகும். ஒரு கட்சியோ அல்லது அமைப்போ பிளவுண்டு பல கட்சிகளாகவும் அமைப்புகளாகவும் மாறுவது கடந்த கால காலத்தில் மட்டுமல்ல, தற்கால‌ நிகழ்வாகவும் இருக்கின்றன. புதிதாக உருவாகும் கட்சிகளும் அமைப்புகளும் புதிய கருத்தியல்களையும் தத்துவார்த்தப் போக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றன.
ஒவ்வொரு குழுவும் கட்சியும் தமக்கே உரித்தான அனுபவங்களை கொண்டிருக்கின்றன. அவை யாவும் பகுதி உண்மையை பிரதிபலிக்கின்றன. முழு உண்மையை அல்ல. நிலவுகின்ற போக்குகளில் எந்த‌ ஒன்றையும் முழுவதும் எதிர்மறைத்தன்மை வாய்ந்தது என்று அவற்றை ஒதுக்கவோ அல்லது அது முழுவதும் நேர்மறைத்தன்மை வாய்ந்தது என்று அதை முழுவது சார்ந்திருக்கவோ இயலாது. ஒவ்வொன்றிலும் நேர்மறையும் எதிர்மறையும் இருக்கவே செய்கின்றது. நேர்மறையோடு சேர்ந்து கொண்டு எதிர்மறையோடு போராட வேண்டியிருக்கின்றது. ஆகவே முழுமையான‌ உண்மையை அறிந்து கொள்ள அக்குழுக்களிடையே கட்சிகளிடையே தத்துவார்த்த, கருத்தியல் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
மரபுரீதியான தத்துவங்களும், வரலாற்று ரீதியாக அவற்றை அடியொற்றி வளர்ந்த தத்துவங்களும் இன்றைய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. அந்த தத்துவார்த்த போக்குகளோடு வெளியிலிருந்து வந்த தத்துவங்களும், கருத்தியல்களும் சேர்ந்து, பல்வேறு தத்துவார்த்த,கருத்தியல் போக்குகளை உருவாக்கி உள்ளன. நவீனக் கருத்துகள் முதற்கொண்டு மார்க்சியக் கருத்துரைகள் வரை ஏற்கனவே இங்கு நீடித்துவரும் மரபு ரீதியான தத்துவார்த்தப் போக்குகளோடு மோதுகின்றன. இரண்டும் கலந்த கலவையான சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலகமயமும், தாராளமயமும் இன்று சிந்தனைத் தளத்தில் பல்வேறு கருத்தியல்களையும் தத்துவார்த்தப் போக்குகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நடைமுறையில் நாம் இவற்றை எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கின்றது. இத்தகைய கருத்தியல்களை எதிர்கொள்ளாமல், தத்துவப் போக்குகளை நேருக்கு நேர் சந்திக்காமல் நடைமுறையில் முன்னேற‌ முடியாத சூழல் உருவாகியுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டே ஆகவேண்டும்.
பொதுவாக மார்க்சிய தத்துவ, கருத்தியல்கள் அனைத்தையும் மொத்தமாக எடுத்துக் கொள்வோமானால், அது வெவ்வேறுபட்ட சிந்தனை போக்குகளும், நடைமுறை அரசியல் கருத்தோட்டங்களுக்குப் வாய்ப்பு அளித்துள்ளது. அனைத்துப் போக்குகளும் மார்க்சியத்தையே மூலமாகக் கொள்வதாக உரிமைக் கோருகின்றன.
மார்க்சியத்தின் அடிப்படையான கருத்துருக்கள் வெவ்வேறு விதமாக வெவ்வேறு பொருளில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. மார்க்சிய கருத்துருக்களையும் கோட்பாடுகளையும் முழுமையாக ஒருங்கிணைந்த வகையில் புரிந்து கொள்ளாமல் அதன் கருத்துக்கோப்புகளைத் தனித்தனியாகவும் பகுதி பகுதியாகவும் பிரிந்தெடுத்து புரிந்துகொள்வது சரியான தத்துவப் புரிதல் அல்ல. இவற்றை சரியாக புரிந்து கொள்ளவேண்டுமானால் இம்முரண்பட்டக் கருத்துப் புரிதல்களின் ஊடாக ஒரு கருத்தியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டம் நடத்துவதை இன்றைய எதார்த்தம் கோருகின்றது. கருத்து முரண்பாடுகளை கருத்தியல் தளத்திலும் தத்துவார்த்தத் தளத்திலும் தீர்க்க முனையாமல் வெறுமனே நடைமுறையில் மட்டும் அனைத்து முரண்களையும் களைந்துவிட முடியும் என்பது சாத்தியமில்லை.
ஒன்று மார்க்சியத்தின் அடிப்படையான அம்சங்களைப் புரிந்துகொள்வது கூட கருத்து விவாதங்களினாலும் தத்துவப் போராட்டத்தின் வழியிலும் மட்டுமே புரிந்துக் கொள்ளமுடியும். இரண்டாவது நிலவுகின்ற பல்வேறு தத்துவப் போக்குகளைக் கணக்கு தீர்க்கவேண்டுமே ஒழிய கண்டும் காணாமல் ஒதுங்கிப் போகமுடியாது. மூன்றாவதாக மரபு தத்துவங்களை ஆராய்ந்து அதன் வளர்ச்சிக் கூறுகளை வளர்த்தெடுக்க வேண்டும். தர்க்கம் என்பது இயங்கியலில் எளிமையான வடிவம். இயங்கியல் என்ற எளியவகை தர்க்க நிலையிலிருந்து சிக்கலான நிலையை அடைகின்றது. மேலும் சிக்கலான நிலைக்கு உயர்ந்து கொண்டே போகின்றது. கருத்து வேற்றுமைகளுக்கு ஒரு நிரந்தரமான ஊற்றுக்கண்ணாக இருப்பது சமுதாய இயக்கத்தின் இயக்கவியல் வகைப்பட்ட தன்மையே, அது முரண்பாடுகளிலும் முரண்பாடுகளின் மூலமாகவும் முன்செல்கிறது .
கோட்பாடு நடைமுறையிலிருந்து உருவாகின்றது என்பது மிகப் பொதுவான உண்மை. ஒருகோட்பாடு உருவாகும்போது, அது உருவாவதற்கு காரணமான‌ நடைமுறையோடு அந்தக் கோட்பாட்டிற்கும் மிக‌ நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட நடைமுறையிலிருந்து உருவான அந்தக் கோட்பாடு, வளர்ச்சியடைந்ததாக இருக்கும் பட்சத்தில், வேறுபட்ட ஒரு நடைமுறையில் குறிப்பாக ஒரு பின்தங்கிய நடைமுறையின் மீது செல்வாக்கு செலுத்த‌ முனைவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகின்றது. முந்தைய நடைமுறையிலிருந்து இந்த கோட்பாடு ஏற்கனவே உருவாகியுள்ளதையும் நாம் உணர்ந்தே ஆக‌தவேண்டும். இது மேம்பட்ட கோட்பாடாக இருந்தாலும் நேரடியாக இந்த புதிய‌ நடைமுறையில் பொருத்தமுடியாது. இங்கு ஒரு நடைமுறையில் இரண்டு கோட்பாடுகள் வினையாற்றும்போது முதலில் இரண்டு கோட்பாடுகளின் முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொந்தளிப்பு நிறைந்ததாக காணப்ப‌ட்டது. இந்திய சமூகத்திற்கே உரித்தான தனிச்சிறப்பான சமூக பொருளாதார அரசியல் கலாச்சார தத்துவப் போக்குகளையும், முரண்பாடுகளையும் கொண்டு விளங்கியது. அப்போதைய இந்திய சமூக பொருளாதார நடைமுறையானது அதாவது அதற்கேற்ற அரசியல் கலாச்சார, தத்துவப் போக்குகளை உருவாக்கி இருந்த‌து. அந்த சமூக பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய அளவில் பெரியார், அம்பேத்கார், பூலே போன்றவர்களில் கோட்பாடுகளும், இந்திய அளவில் வேதாந்த கோட்பாடுகளும் எதிர்கொண்டன. இவைதான் அப்போதைய பருண்மையான நிலைமையாக இருந்தது. இந்த இயக்கப்போக்கில், இந்திய நிலைமைகளின் மீது மார்க்சியம் தலையீடு செய்தது. மார்க்சியம் உயர்ந்த கோட்பாடாகவும் வளர்ச்சி யடைந்த கோட்பாடாகவும் இருந்தது. இருந்தபோதிலும் இந்திய சமூக பொருளாதார நடைமுறையில் தோன்றியிருந்த ம்ரபுக் கோட்பாடுகளை மார்க்சியர்கள் எதிர்கொள்ளவில்லை. முன்னேறிய தத்துவமான மார்க்சியம் முதலில் இந்தியத் தத்துவங்களோடு ஊடாடி தர்க்கித்து கணக்கு தீர்த்திருக்க வேண்டும். பின்னர் சமூக பொருளாதார நடைமுறையில் பொருத்தி யிருக்கவேண்டும். அந்த முதன்மையான பணியை இன்றுவரை உணரவோ நிறைவேற்றவோ இல்லை என்பதுதான் உண்மை.
தமிழகத்தில் உள்ள தத்துவ, கருத்தியல் போக்குகளை வரையறுக்க வேண்டும். அவற்றின் சமூக பொருளாதார அரசியல் பின்புலத்தை ஆராயவேண்டும். அதே சமயத்தில் இன்று பல்வேறு தத்துவப் போக்குகளும் கருத்தியல் போக்குகளும் நிலவுகின்ற இன்றைய‌ சூழலில் தத்துவப் போராட்டம் முதன்மையானதாக இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக