வெள்ளி, 9 மார்ச், 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்...4

அகவய நடைமுறையா? புறவயமான சமூக நடைமுறையா?
சமூக நடைமுறை என்பது வர்க்கப் போராட்டம், தத்துவப் போராட்டம், கருத்தியல் போராட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நடைமுறையை முழுமையான அர்த்தத்திலிருந்து பார்க்காமல் பகுதியளவாக மட்டுமே பார்க்கின்றனர். நடைமுறை என்றால் என்ன என்பதில் மேலோட்டமான புரிதலையே வைத்துள்ளனர். அதாவது வர்க்கப் போராட்டத்தை மட்டும் முன்னெடுப்பது என்று குறுக்கிவிடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சமூக நடைமுறை என்ற பரந்த தளத்தைவிட்டு ஒதுங்கி தங்களின் இயக்கத்தின் போராட்ட‌ நடைமுறையையே சமூக நடைமுறை என்று கூறிக்கொள்கின்றனர்.

வர்க்கப்போராட்டம் என்பது சமூக‌ அகநிலையும் புறநிலையும் வினைபுரியும் சமூக‌ அறிவியல் நிகழ்வு. இதில் பொது உடைமைக் கட்சிகளின் பணியானது சமூகத்தின் புறநிலை இயக்கங்களின் இயக்க‌ விதிகளை ஆராய்ந்து அறிந்து அதன் இயக்கப்போக்கைக் கைப்பற்றுவதாகும். தத்துவப் போராட்டம் என்பது சமூக மாற்றத்திற்கான‌ அகநிலைத் தயாரிப்பாகும். தத்துவப் போராட்டமானது, ஒவ்வொரு குழுவிலும் கட்சியிலும் இயக்கத்திலும் நடத்தப்பெற வேண்டும். இன்று கட்சிகள் விவாதத்தை மறுத்து கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உயிரோட்டமான நடைமுறையை இறுக்கமான கோட்பாட்டிகுள் அடக்கப் பார்க்கின்றனர்.

மக்களை அணிதிரட்டுவதுதான் இன்றைய நமது பணியாக‌ இருக்கின்றது. உழைக்கும் வர்க்கத்தை மார்க்சிய அரசியல் படுத்துவது; கருத்தியல் ஆயுதத்தைத் தரிக்கச் செய்வது; முன்னணிப் படைக்குத் தத்துவச் செறிவூட்டுவது நமது பணியாக இருக்கவேண்டும். மேற்கட்டுமானக் கூறுகளான தத்துவம், அரசியல், கலாச்சார விசயங்களில் வர்க்கப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. அவற்றை அந்தந்த‌ தளங்களில் நடத்தவேண்டும்.

நடைமுறை என்பது அகமும் புறமும் இணையும் புரட்சிகரமானது என்று மார்க்சு கூறினார். ஆனால் பொது உடைமைவாதிகளின் நடைமுறை என்பது எவ்வாறாக இருக்கின்றது. அவர்களது அகவயப்பட்டதாக மட்டுமே இருக்கின்றது. புறநிலையைச் சார்ந்ததாகவோ அல்லது புறநிலை விவரங்களின் அடிப்படையிலோ அல்லது புறநிலை ஆய்வின் அடிப்படையிலோ இருக்கவில்லை. அவர்கள் புறவயமான நடைமுறை என்று சொல்லிக் கொள்வதெல்லாம் சமூக நடைமுறைக்கு சம்பந்தமே இல்லாத அகவய நடைமுறையே ஆகும்.

 தன்னெழுச்சி யாகவும் உணர்வு ரீதியாகவும் மக்கள் அணிதிரண்டு போராடி வருகின்றனர்; பொதுவுடைமை இயக்கத்தினர், சமூக இயக்கத்திற்கு வால்பிடிக்கின்றனர் அல்லது அவர்கள் சமூக இயக்கத்திலிருந்து ஒதுங்கி நின்று பார்வையாளர்களாகவும் விமர்சகர்களாகவும் மட்டும் இருந்துவிடுகின்றனர்.


அது மட்டுமின்றிசமூக நடைமுறையிலிருந்து பெற்று கொள்ள ஏராளமான விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவர்களுக்கு அவை புலப்படுவதில்லை. எளிய கருத்தாக்கங்களும் நேர்க்கோட்டுப் பார்வையும், வறட்டுத்தனமான கோட்பாடுகளும் அவர்களை சமூக நடைமுறையின் சிக்கலான விசயங்களிலிருந்து வெளியே நிறுத்துகின்றன. சிக்கல்வாய்ந்த சமூக நடைமுறை விசயங்களுக்குள் போக அவர்கள் விரும்புவதில்லை. ஆகவே அவர்கள் சமூக நடைமுறையில் இல்லாமலே ஒதுங்கிவிடுகின்றனர். . ஏனெனில் அவர்களுக்கு எளிய சூத்திரங்களையும் வறட்டுத்தனமான கோட்பாடுகளையுமே கற்பிக்கப்பட்டுள்ளன. இது அவர்களுக்கு வசதியாகவும் போய்விட்டது. இந்தப் போக்கு இப்போதும் தொடர்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாம் அன்றாட சமூக நடைமுறையில் இருப்பதாகக் கூறிக் கொள்கின்றோம். நமது நடைமுறை என்று எதைக் குறிப்பிடுகிறோம், நம்மை எது வழிகாட்டுகின்றது என்று சிறிது ஆராய்ந்தால், சில உண்மைகளை நாமே புரிந்துகொள்வோம். ஒருவர் வர்க்கப் போராட்டம்தான் நடைமுறை என்பார். ஒருவர் சாதியப் போராட்டம்தான் அவருக்கு நடைமுறையாகத் தெரிகின்றது. ஒருவருக்கு தேசிய இனப் போராட்டம்தான் அவரது நடைமுறையாகக் கொள்கின்றார். சமூகம் ஏதாவதொரு ஒற்றை முரணில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று இவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இதர முரண்களை சிலர் அங்கீகரித்தாலும் அவை ஒற்றை முரணில் கரைந்துப் போய்விடுவதாக எண்ணுகின்றனர்.

இவர்களின் விருப்பத்திற்கு மாறாக சமூகம் கலவையான மிகவும் சிக்கலான முரண்களால் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றது. தெளிவாக வரையறுக்கப்பட்ட வரைபடத்தில் சமூகம் வாழவில்லை. எப்போதுமே அதன் எல்லைகளை மீறியும் கடந்தும் இயங்கிவருகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பருண்மையான நிலைமைகள் மீது உணர்வு பூர்வமான கவனம் வேண்டும். இது பகுதிதன்மை வாய்ந்தவை. வரையறுக்கப்பட்டவை. நமது சிந்தனையில் பகுதிகளின் மீதான உள்ளுணர்வும் அனுபவமும்தான் இருக்கின்றன. அனைத்து பருண்மையான ப‌குதிகளும் ஒருங்கிணைந்த வகையில் முழுமையாகப் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக