செவ்வாய், 13 மார்ச், 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்... 5

சிந்திப்பதும் நடைமுறைதான்

மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்கவேண்டும் என்றும் நடைமுறையில் ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்கவேண்டும். அதன்மூலம் இடதுசாரிகளிடையே ஒற்றுமை உருவாக்க யியலும். அனைத்து எதிர்கருத்தியல்களும் உடைபட்டுப் போகும் என்று தோழர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் நடைமுறையின் பிரச்சனையை மேலோட்டமாகவே கவனிக்கின்றனர். இன்றைய நடைமுறையில் வெகுமக்களிடையே பல்வேறு அரசியல், கருத்தியல், தத்துவார்த்த பிரச்சனைகள் இருக்கின்றனர். அவர்களின் சிந்தனைப் போக்கில் ஒரு ஒருங்கிணைவும் ஒத்த புரிதலும் இல்லை. மாறாக சிந்தனையில் வேறுபாடான‌ பாரதூரமான புரிதல்கள் நீடிக்கின்றன.

இவர்களின் சிந்தனை என்பது அறியாமை மூழ்கியிருப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. மாறாக தவறான புரிதல்களால் சூழப்பட்டுள்ளன. அறியாமையில் மூழ்கியிருபவர்களை எளிதாக வெளியே கொண்டுவரமுடியும். ஆனால் கருத்தியல் குழப்பத்திலும் கருத்து குழப்பத்தில் இருப்பவர்களை சரிசெய்வது அவ்வளவு எளிதல்ல. அவர்களிடையே பரந்த அளவிலான வெளிப்படையான ஒரு மாபெரும் கருத்தியல் போரை நடத்தவேண்டியிருக்கின்றது. இத்தகையக் கருத்தியல் போராட்டத்தை நடாத்தும் அதேசமயம் அவர்களை அமைப்பாக்கும் பணியும் உட்னடியாக தொடரவேண்டும்.

இதற்காக சிந்திக்கவேண்டும். ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். நடைமுறைக்காக சிந்திக்கவேண்டும். நடைமுறையின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிந்திக்கவேண்டும். சிந்தனையும், நடைமுறையின் ஒரு பிரிக்க முடியாத பகுதிதான் என்ற புரிதல் வேண்டும்; சிந்தனையின் தனி முக்கியத்துவத்தையும் உணர்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றோம்.

புறப்பொருட்களைக் கையாள்வதற்கும் மனிதர்களை கையாளவதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. புறப்பொருட்களைக் கையாளவதில் அறிவியல் அறிவும், தொழில்நுட்ப அறிவும் போதிய அனுபவமும் இருந்தால் போதும். சமூக நடவடிக்கைகளில் நாம் உணர்வுள்ள மனிதர்களைக் கையாளுகின்றோம். அவர்களிடம் உணர்வு இருக்கின்றது என்ற அடிப்படையில் உற்பத்தியின் அடிப்படையில் அணிதிரட்டப்படுகின்றனர். உழைக்கின்றவர்களாக இருந்தாலும், அவர்களிடம் சாதிய‌ உணர்வு, மதரீதியான கருத்தியல்கள், இன உணர்வு, பாலின உணர்வுகள், பிற்போக்கு எண்ணங்கள், பின் தங்கிய கருத்துக்கள், போன்றவை வெளிப்படையாகவே அவர்களின் நடவடிக்கையை கணிசமான அளவில் தீர்மானிப்பதாக இருக்கின்றன. அவர்கள் அமைப்பாகத் திரள்வதற்கு அவை தடையாக இருக்கின்றன. இத்த‌கைய‌ க‌ருத்திய‌ல் பிர‌ச்ச‌னைக‌ளை தீர்ப்ப‌து இன்றிய‌மைதாகின்ற‌து. இதில் சிந்தனை என்ற உணர்வுபூர்வமான‌ நடவடிக்கையின் ப‌ங்கு முத‌ன்மையாகின்ற‌து.

இன்றைய நிலைமையில் கட்சிகள், அமைப்புகள், குழுக்கள் கூட அவர்களிடம் நிலவும் கருத்தியல் பிரச்சனைகளையும் தத்துவார்த்தப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். கருத்தியல் போராட்டமும் தத்துவார்த்தப் போராட்டமும் சமூக மாற்றத்திற்கான அகநிலையின் தயாரிப்பாகும். இல்லையெனில், இனிவரும் மக்கள் போராட்டங்களுக்கு தலைமைத்தாங்கும் தகுதியும் ஆற்றலும் இன்றி, எப்போதும் போல மக்கள் இயக்கங்களை வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் இவை நீடிக்கும். ‌

இதுவரை நடைபெற்று வந்த‌‌ கருத்தியல்,அரசியல், தத்துவார்த்த‌ப் போராட்டங்களின் தொடர்ச்சியாகவும், இன்றளவிலும் நடைபெற்று வரும் இத்தகைய போராட்டங்களிலிருந்து தனித்துப் போய்விடாமல் ஒருங்கிணைந்த வகையிலும் தத்துவப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். இந்தக் கடினமான பணியை நமது இன்றியமையா கடமையாக ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் எந்த வகையிலும் புதிதாக எதையும் படைக்கப் போவதில்லை. சிதறலாக உதிரியாக நடைபெற்ற அனைத்து சிந்தனைப்போக்குகளையும் ஒருங்கிணைப்பதே நமது தலையாயப் பணியாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு நமது சிந்தனைப் போக்குகளை ஒழுங்குபடுத்துவது என்பது சமூக நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான முன்னிபந்தனையாக இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். ‌

பழையக் கருத்துக்களை நம்மனதில் உறையவைத்துக் கொண்டு, புதிய கருத்துக்களை அவற்றின் மேல் படியவைத்தால் அவை ஆழமாக பதிவதில்லை. மேலோட்டமாகவே மிதந்துக் கொண்டு இருக்கும். ஆனால் பழையக் கருத்துக்களே நம்மை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் அல்லது நம்மை அறியாமலே அதற்கு அடிமையாக வாழ்ந்துக் கொண்டிருப்போம். ஆகவே பழைமையான கருத்துக்களை நாம் முதலில் கணக்குத் தீர்க்கவேண்டும். என்னத்தான் முற்போக்குக் கருத்துக்களை அறிந்துக் கொண்டாலும், உங்கள் மனத்த்தில் பதிந்திருக்கும் கருத்துக்களே உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும். சிந்தனையின் அடித்தளத்தில் இருக்கும் எல்லாக் கருத்துக்களையும் வெளிப்ப‌டையான விவாதத்திற்கு உட்படுத்தும் போதுதான் பழைமையான கருத்துக்கள் ஒழிந்துப் போகும். ஆகவேதான் இந்திய, தமிழக‌ மரபுகளை ஆழமாகக் கற்று கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துக்கின்றோம்.

ஆய்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். நமது கண்ணோட்டத்தை, அணுகுமுறையை கூர்மைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். சமூகத்தில் எல்லாப் பக்கங்களையும் படித்தாராய்ந்து கொண்டிருக்க வேண்டும். விவரங்களை சேகரித்துக் கொண்டு இருக்கவேண்டும். கட்சியின் நடைமுறை வரலாறு, கட்சியின் திட்டங்கள், மார்க்சிய‌ விவாதங்கள், சமூகம் பற்றிய ஆய்வு, ஆகிய எல்லாவற்றையும் மேற்கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் விவாதிக்கவேண்டும். விமரிசனத்திற்கு உட்படுத்தவேண்டும். சரியானவற்றையும் கூட விமரிசனத்திற்கு உட்படுத்தவேண்டும். சமூகத்தின் வரலாற்று வழியில் நெடிய பயணம் செல்லவேண்டும். கடந்தகால இயக்க அனுபவங்களை சேகரிக்கவேண்டும்; அவற்றிலிருந்து சரியான‌ பாடங்களைக் க‌ற்று கொள்ளவேண்டும். கார்ல் மார்சின் எழுத்துக்களையும் படைப்புகளையும் படித்துவிட்டு பிரமித்துப் போகின்றோம். லெனினின் மாவோவின் எழுத்துக்களைப் படித்துவிட்டு ஆச்சரியப்படுகின்றோம். இன்று காரல் மார்சின் காலத்தை விடவும், லெனினின் காலத்தை விடவும், மாவோவின் காலத்தை விடவும் மிகவும் சிக்கலான சமூக நிலைமைகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்; அதேசமயம் அவர்களுக்கு கிடைக்கப் பெறாத வாய்ப்புகள் நமக்கு வாய்த்துள்ளன. பல்வேறு புதிய சிந்தனைகளும், புதிய விசயங்களும் முன்னுக்கு வந்துள்ளன. அறிவியலின் வளர்ச்சியும் சமூகத்தின் வளர்ச்சியும் சிந்தனையின் வளர்ச்சியும் முன்னெப்போதும் இல்லாதவகையில் தீவிரமாக‌ வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வாய்ப்புகள் புறநிலையில் ஏராளமாகக் காணக்கிடக்கின்றன. எல்லாமே எளிமையாக தோன்றுகின்றன. இன்னமும் நமக்கு என்ன வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக