செவ்வாய், 10 ஏப்ரல், 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்... 6

காரல் மார்க்சு கையாண்ட தர்க்க முறைமை


ஹெகலிய தர்க்கமுறையானது ஹெகலியத்தின் முரண்பாடுகளை வெளிகொணர்ந்தது. ஹெகலியக் கருத்தோட்டத்திற்குள் இருந்த‌ முரண்பாடுகளைக் களைவதற்கு அடிப்படையாக அமைந்தது. ஹெகலியத்தை மார்க்சியத்திற்கு வளர்த்து சென்றதும் அந்தத் தர்க்கமுறையே யாகும். ஹெகலிய தர்க்கமுறையின் வளர்ச்சியின் விளைவாகவே கருத்துமுதல்வாத‌த்தை அகற்ற முடிந்தது. மார்க்சு இந்த தர்க்கமுறைமையைக் கையாண்டுதான் ஹெகலியத்தின் அடிப்படையிலிருந்து மீண்டு வந்தனர். ஹெகலிய கருத்துமுதல்வாதத்தை நீக்கிவிட்டு மார்க்சிய பொருள்முதல்வாத‌த்தை நிறுவினர். இதற்கு பாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் அடிப்படையாக ஏற்றுக் கொண்டார். ஹெகல் உருவாக்கி அளித்த தர்க்க விதிகள் அனைத்தையும் பொருள்முதல்வாத அடிப்படையில் மீண்டும் உருவாக்கினார்.

"மார்க்சு சமுதாய சிந்தனையின் முன்நின்ற போக்குகளில் உள்ள பகுத்தறிவு அம்சங்கள் அனைத்தையும் நுட்பமாக‍, விமரிசன பூர்வமாக ஆராய்ந்து, தொகுத்து, மொத்தப்படுத்தி அவற்றை தொழிலாளி வர்க்கப் போராட்டங்களின் அனுபவங்களின் வெளிச்சத்தில் பரிசோதனை செய்து பாட்டாளிவர்க்கக் கண்ணோட்ட நிலையில் ஆக்கபூர்வமாக திரும்பவும் வகுத்தார்” (கார்ல்மார்க்ஸ் வரலாறு, பக்.21).  இதுதான் காரல்மார்க்சு கையாண்ட தர்க்கமுறைமை ஆகும்.

முன்னேறிய பகுத்தறிவுத் தன்மைவாய்ந்த அம்சங்களை நுட்பமாகவும் விமரிசன பூர்வமாகவும் பகுத்தாராயவேண்டும். பின்னர் அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து தொகுத்து விதிமுறைகளை உருவாக்கவேண்டும். அந்த விதிகளை தொழிலாளிவர்க்க இயக்கத்தில், சமுதாய இயக்கத்தில் பரிசோதிக்க வேண்டும். இறுதியாக புதிய விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டத்தில் ஆக்கபூர்வமாக திரும்பவும் வகுத்தளிக்க வேண்டும் என்பதைதான் மார்க்சு கூறுகின்றார்.

இங்கு சிந்தனைக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாட்டின் இயங்கியல் விதிகள் விவாதிக்கப்படுகின்றது. சிந்தனைக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடுதான் அடிப்படியானதாக இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் இன்றளவில் சிந்தனைக்குள் இருக்கும் முரண்பாடு இன்றளவில் முதன்மையான தன்மையைக் கொண்டிருப்பதால் அதை முதலில்  தீர்க்கப்படவேண்டும். இது முதன்மையான தேவையாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.  அதாவது சிந்தனைத் தளத்தில் தத்துவத் துறையில் உள்ள முரண்பாடுகள் முதலில் தீர்க்கப்படவேண்டும் என்பது நமது உணர்தலும் புரிதலும் ஆகும். இதை நோக்கி நமது மொத்த சக்தியையும் திரட்டவேண்டும்; இதன்மீது நம் முழுகவனத்தையும் முழுமையாகவும் ஆக்கபூர்வமாகவும் செலுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தின் மொத்த சிந்தனைப் போக்கின் சித்திரத்தை வரைந்துப் பார்த்தால், சமுகத்தில் மட்டுமல்ல, சமூகச் சிந்தனையின் மிகவும் முன்னேறிய முன்னணிப் பிரிவினர்களிடையே ஏராளமாக தத்துவார்த்தக் குழப்பங்களும், சிக்கல்களும், கருத்தியல் போக்குகளும், பிரிவுகளும், பரந்த அளவில் நீக்கமற நிறைந்துள்ளன. அவ்வெல்லா பிரிவுகளும் போக்குகளும் அதையொட்டிய அவற்றிற்கு உகந்த‌ நடைமுறைகளோடு பின்னிப் பிணைந்துள்ளனர். இந்நிலையில் நடைமுறையில் சிந்தனையின் சிக்கல்களைத் தீர்க்கமுடியாது. சிந்தனையின் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு தர்க்கவியல் வழிமுறையைத்தான் கையாளமுடியும். சிந்தனையில் குழப்பத்தையும் சிக்கல்களையும் வைத்துக் கொண்டு நடைமுறையில் தீர்க்க இயலாது. அறிவுத்தளத்தில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளச் சிந்தனையில் வைத்து தீர்க்கப்படவேண்டும்.

இப்போக்குகளில் ஒன்று சரியாக இருக்கலாம் அல்லது இறுதி இலக்கு சரியாக வரையறுக்கப் பட்டிருக்கலாம். ஆனால் அது வந்த வழிமுறை சரியானதல்ல. சரியானதாகக் கருதப்படும் அந்தப் போக்கு இதர தவறானப் போக்குகளோடு போராடிப் பெற்றதாக இருக்க வேண்டும். மேலும் சரியான வழிமுறையில் வந்தடைந்திருக்கவேண்டும். இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புகழ்பெற்ற இந்தியத் தத்துவமான நியாயம் இறுதிமுடிவைவிடமும் அது வந்தடைகின்ற வழிமுறைக்கே அதிக முக்கியத்தும் அளிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எந்த ஒரு கருத்தும், எந்த ஒரு தீர்மானமும், எந்த ஒரு முடிவும், தர்க்க வழிமுறையைக் கையாண்டுப் பெற்றிருந்தால் அன்றி, அது சரியானக் கருத்தாக இருந்தாலும், சரியான தீர்மானமாக இருந்தாலும், சரியான முடிவாகவே இருந்தாலும் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ள இயலாது. நடைமுறையில் அந்தக் கருத்தினை அல்லது தீர்மானத்தினை, முடிவினை நடைமுறையில் சாதிக்க இயலாது. ஏனெனில் நடைமுறையில் ஒரு தர்க்கம் இருக்கின்றது. அந்தத் தர்க்கம் இயக்கப் போக்கின் வழியாக தீர்மானிக்கப் படுகின்றது. ஆக சரியான தீர்மானத்தைப் பெற்றிருந்தாலும் சரியான வழிமுறையைப் பின்பற்றாவிட்டால் நமது முயற்சிகள் அனைத்தும் எந்தப் பலனையும் அளிக்காமல் போய்விடும்.

மார்க்சு முத‌லாளித்துவ‌ உற்ப‌த்தி முறையை ஆராய்வதற்கு பொருள்முதல்வாத தர்க்கவியல் கூறுகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தார். அதன் மூலம் ஓர் ஆராய்ச்சி வழிமுறையையும் உருவாக்கியளித்தார். அதாவது தர்க்கவியலை புலனறிதலின் தர்க்கவாதம் மற்றும் தத்துவம் என்னும் வகையில் ஆராயும் வழிமுறையையும் செய்து கொண்டிருந்தார்.  புலனறிவதலுக்கான விவரங்களின் மீது மார்க்சு ஆதாரப் பட்டிருந்தார். இதை ஹெகலிடமிருந்து பாரம்பரியாமாக பெற்றிருந்தார். ஹெகல்  உருவாக்கி வளர்த்திருந்த தர்க்கவியலின் எல்லா விதிமுறைகளையும் கருத்தமைவு வகைகளையும் பொருள்முதல்வாத அடிப்படையில் திரும்பவும் பாடுபட்டு உருவாக்கினார். இதன் மூலம் ஆராய்ச்சி வழிமுறையின் சர்வாம்சத் தன்மையைக் கண்டுபிடித்தார். இதை விஞ்ஞான ரீதியாக மெய்ப்பித்தார்.   மிகவும் சிக்கல் நிறைந்த உண்மை நிலையைப் பகுத்தாய்வதற்கு தர்க்கவியல் முறை ஒன்றுதான் சரியான வழிமுறையாகும்.

இத்தகைய வழிமுறையைக் கொண்டுதான் மார்க்சு முத‌லாளித்துவ‌ உற்ப‌த்தி முறையைப் ப‌குத்து ஆராய்ந்தார். தர்க்கவியலின் வ‌ள‌ர்ச்சித் த‌த்துவ‌த்தின் விதிமுறைக‌ள் ம‌ற்றும் க‌ருத்த‌மைவு வ‌கைக‌ளின் முழுவ‌ரிசைக‌ளையும் பிர‌யோகித்தார்.

I. வ‌ள‌ர்ச்சித் த‌த்துவ‌த்தின் விதிமுறைக‌ளாவ‌ன‌:

1.அள‌வு மாற்றத்திலிருந்து குண‌மாற்றாத்திற்குச் செல்லும் விதிமுறைக‌ள்,
2. எதிர் எதிர் ச‌க்திக‌ளின் ஒற்றுமையும் போராட்ட‌மும்,
3. நிலைம‌றுத்த‌லின் நிலைம‌றுத்த‌ல்,

II. க‌ருத்த‌மைவு வ‌கைக‌ளாவ‌ன‌:

4. குண‌ம், அள‌வு ம‌ற்றும் அள‌வீடு,
5. சார‌ப்பொருள், தோற்ற‌ம் ம‌ற்றும் சாய‌ல்,
6.  உள்ள‌ட‌க்க‌ம் ம‌ற்றும் உருவ‌ம்,
7. உள்ளார்ந்த‌வை ம‌ற்றும் வெளியார்ந்த‌வை,
8. கார‌ண‌ம் ம‌ற்றும் விளைவு,
 9. அவ‌சிய‌மும் த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சியும்,
10. சாத்திய‌ப்பாடும் ம‌ற்றும் உணமை நிலை,
11. த‌னித்த‌ன்மையான‌து, குறிப்பிட்ட‌து ம‌ற்றும் ச‌ர்வாம்ச‌மும் த‌ழுவிய‌து,
12. அருவ‌மான‌து ம‌ற்றும் திண்மையான‌து,
13. வ‌ர‌லாறு பூர்வ‌மான‌து ம‌ற்றும் த‌ர்க்க‌வாத‌ முறையான‌து. (கார்ல்மார்க்ஸ் வரலாறு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக