ஞாயிறு, 6 மே, 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்- 7


சமூகத்தின்  பன்முக முரண்கள்

இயங்கியல் என்பது எதிர்வுகளின் முரண்பாடு ஆகும்.இந்த‌ எதிர்நிலைகளில் ஐக்கியமும் போராட்டமும் உள்ளடக்கியிருக்கும். இந்த இரண்டு எதிர்நிலைகளில் ஒன்று மற்றொன்று கட்டுபட்டதாகவோ நிபந்தனைக்குட் பட்டதாகவோ இருக்கவியலாது. இரண்டும் சமமான தகுதியையும், சமமான‌ அழுத்தத்தையும் பெற்றிருக்கும். அவ்வாறில்லாமல் ஒரு எதிர்வானது மற்றொரு எதிர்வை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது இயங்கியலுக்கு எதிரானதாகும்.  ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை சார்ந்து இயங்குகிறது என்றால், ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை பலப்படுத்துகிறது என்றால், ஒரு எதிர்வின் போக்கை மற்றொரு எதிர்வு தீர்மானிக்கிறது என்றால், அவை இயங்கியல் ஆகாது. அது வெறும் எந்திரத்தனமான முரணாக மட்டுமே இருக்க வியலும்.
சில முரண்பாடுகளை எடுத்துக் கொண்டு விளக்கலாம். கணிதத்தில் கூட்டல் எதிர் கழித்தல், பெருக்கல் எதிர் வகுத்தல் போன்றவற்றில் ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வுக்கு கட்டுப்பட்டு இருப்பதில்லை. அறிவியலில் நேர் மின்சாரம் எதிர் எதிர் மின்சாரம் போன்றவற்றில் ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை தீர்மானிப்பதில்லை.
சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள். சான்றாக, முதலாளி வர்க்கம் எதிர் தொழிலாளி வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் எதிர் ஆளும் வர்க்கம், நிலபிரபுத்துவ வர்க்கம் எதிர் பண்ணையடிமைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். இந்த முரண்பாடுகளில் ஒரு எதிர்வு இன்னொரு எதிர்வை சார்ந்துதான் இயங்கும் என்று கூறமுடியுமா? இதைப் போலத்தான் அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற இயங்கியல் முரணை அணுகவேண்டும்.
ஒரு முரண்பாட்டில் ஒரு எதிர்வு எந்த‌வித‌மான தன்மை பெற்றிருக்கிற‌தோ அதே போல‌ ம‌ற்றொரு எதிர்வும் அதே விதமான‌ த‌ன்மை பெற்றிருக்கிற‌து.  ஒரு சமயத்தில் ஒரு எதிர்வானது முத‌ன்மை தன்மை பெற்றிருந்தால் இன்னொரு சமயத்தில் இன்னொரு எதிர்வு முதன்மை தன்மை பெற்றிருக்கும். ஒன்று ம‌ற்றொன்றுக்கு க‌ட்டுப்ப‌ட்ட‌தாக‌ இருந்தால் இய‌க்கம் அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்லாது.
சமூக முரண்கள் தமக்குள் பரஸ்பர‌ உள்ளுறவையும், பன்முகத் தன்மையையும் கொண்டிருக்கின்றன. சமூக முரண்களின் துருவங்கள் ஒவ்வொன்றும் பரஸ்பர உறவையும் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளன. இதன்மூலம் இரண்டு துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடுகின்றன. உறவும் கொள்கின்றன. இந்தத் துருவங்கள் தனியாக இருப்பதில்லை. அவை ஒவ்வொன்றும் ஒருவகையான‌ சமூக சூழலைப் பெற்றிருக்கின்றன. இந்த எதிர்வுகளுக்குள் நடக்கும் போராட்டமும் உறவும் அவை சார்ந்த சூழல்களோடும்தான் நடக்கின்றன.

வேறுபட்ட சூழல்கள் அவர்களுக்கு வேறுபட்ட கருத்தியல்களும் கருத்துக்களும் உருவாக்குகின்றன. வேறுபட்ட சூழல்களில் வாழ்ந்து வந்தாலும் ஒரு பொதுவான திட்டத்தில் அவர்கள் வாழ வேண்டிய தேவை இருக்கின்றது. அவர்களுள் ஏற்படும் முரண்பாடுகள் வெறும் கருத்தியல்களின் மோதலாகப் பார்க்கவியலாது. அவர்கள் வாழ்ந்துவரும் சூழல்களின் முரண்பாடாக‌த்தான் பார்க்கவேண்டும். இந்த முரண்பாடுகளைத் தாண்டி ஒரு பொது திட்டத்தில் அனைவரும் செயல்படவேண்டும். அவர்களின் சூழல்கள் என்பவை எப்போதும் நிலையாக மாறாத தன்மையைக் கொண்டிருப்பதில்லை. தினம் தினம் மாறிக்கொண்டே இருக்கும். அல்லது ஒருவர் இருந்த சூழலை விட்டு வேறுஒரு சூழலை நோக்கி செல்லக் கூடிய நிலைமையும் ஏற்படும். இங்கு பார்க்கவேண்டிய கருத்து யாதெனில் கருத்துக்களின் முரண்பாடுகள் என்பதைத்தாண்டி கருத்து உருவாகின்ற சூழல்களின் முரண்பாடுகள் என்ற நிலைக்கு உயர்த்தப்படுகின்றன என்பதாகும்.

 வரலாற்றை ஒற்றை தன்மையாகப் பார்ப்பது; சமூகத்தை ஒற்றை முரணால் விளங்கிக் கொள்வது, விளக்குவது, எதார்த்த உலகத்தை ஒற்றை தன்மையாகப் பார்ப்பது, சிந்தனை யியக்கத்தை ஒற்றை தன்மையாகப் பார்ப்பது போன்ற முறையியல் நம்மிடையே தீராத வியாதியாக நம்மை பற்றிக் கொண்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.

ஆனால் வரலாறுப் போக்குகள் அவ்வாறு இல்லையே! சமூக நடைமுறை அவ்வாறு இல்லையே! யதார்த்த நிலைமை அவ்வாறு இல்லையே!. இவையெல்லாம் ஒற்றை பரிமாணத்தில் இல்லை. மார்க்சியமும் அவ்வாறு சொல்லவில்லை. வரலாற்றில்,  சமூக நடைமுறையில், யாதார்த்த நிலைமையில் சிக்கலான பல விசயங்கள் ஊடாடி உறவு கொண்டுள்ளன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பல்வேறு முரண்கள் நிலவும் சமூகத்தில் ஏதாவது ஒன்றுக்கும் மட்டும் அழுத்தம் கொடுத்து, அம்முரணை சாரப்படுத்துவதும்,  பருமனாக்குவதும், கெட்டிப்படுத்துவதும் தடித்ததாக்குவதும் அல்லது அம்முரணின் உள்ள எதிர்வுகளை குவிமையப்படுத்துவதும், துருவப்படுத்துவதும், மற்றவகை முரண்பாடுகளை அதற்கு கீழ்ப்படுத்துவதும், உள்ளடக்குவதும், குறைத்தல் செய்வதும் ஆன பொதுவான அணுகுமுறை பண்பே மேலிடுகின்றது.

 மாறாக சமூக இயக்கம் பல்வகை முரண்கள் பல முரண்பாடுகள் ஒருங்கிணைந்து  தொழில்படுவதும், முழுமை சேர்க்கையாவதும், ஒன்றுக்கு ஒன்று பரஸ்பரம் ஊடுருவி வினைபுரிவதும், இணைவாக்கம் புரிவதும், ஒன்று மற்றொன்றாக மாறுவதுமான‌ தன்மைகள் தீவிரமாக தொழில்படுகின்றன. இதுதான் நிதர்சணமான உண்மையாகும். அத்துணைப் போக்குகளும் ஏதாவதொரு வகையில் உறவு கொண்டிருப்பதால், அவற்றின் உள்தொடர்புகளையும் பரஸ்பர உறவுகளையும் கண்டறிந்து, அனைத்தையும் ஒருங்கிணத்து ஆராய‌ வேண்டியிருக்கின்றது.

பல்வகை முரண்பாடுகள் வினையாற்றிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த சூழலின் சாரம்சமான முரண்பாடுகளைக் கண்டறிய வேண்டும். இவைதான் சமூகத்தை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச்செல்லும் திறன்படைத்தவை. சாரமான முரண்பாடுகளும் இதர முரண்களும் கொண்டிருக்கும் உறவு பற்றியும் ஆழமாக ஆய்ந்தறியவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக