செவ்வாய், 5 ஜூன், 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்... 8

விஞ்ஞான அணுகுமுறை

மார்க்சியம் என்பது ஒரு விஞ்ஞானம், அது விஞ்ஞான பூர்வமான  அணுகுமுறையைக் கொண்டது, என்றெல்லாம் நமது தோழர்கள் பேசுவது வாடிக்கையான ஒன்று. சரி! விஞ்ஞான அணுகுமுறை என்பது என்ன என்று கேட்டு பாருங்கள்! அவர்கள் விஞ்ஞானம் என்று, விஞ்ஞான அணுகுறை என்று எதை அறிந்துக் கொண்டிருப்பார்கள்? எவ்வாறு புரிந்து வைத்திருப்பார்கள்?

விஞ்ஞானத்திற்கும் நமது சிந்தனைமுறைக்கும் நீண்ட‌ இடைவெளி இருக்கிறது. பண்டைய காலத்தில் இந்தியர்களிடம் விஞ்ஞானத்தில் பெரும்புலமை இருந்ததாகவும் ஆற்றல் இருந்ததாகவும் தேவி சட்டாபத்தியாய போன்ற மார்க்சிய‌ அறிஞர்கள் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு விளக்கியுள்ளனர். அதை அடுத்தக்  கட்டத்திற்கு வளர்த்தெடுப்பதற்கான சமூக சூழல் இல்லாமல் போனது. நவீன காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி என்பதும் விஞ்ஞான அறிவின் வளர்ச்சியும் குறைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. மேற்கத்திய அறிவியல் வளர்ச்சியை ஒப்பிடும் போது மிகக் குறைவான வளர்ச்சியையே பெற்றிருந்தது.  

நமக்கே உரித்தான உற்பத்தி முறையைப் பெற்றிருந்தாலும் அவ்வப்போது மேற்கத்திய அறிவியலின் பயனை நாம் பெற்று வந்துள்ளோம். ஆனால் நவீன அறிவியல் வளர்த்த செழுமையான‌ தத்துவமும் அணுகுமுறையும் நமக்கு நேரடி அனுபவமாக‌ கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும். நமக்கு கிடைத்த அறிவியல் தெளிவெல்லாம் ஏட்டறிவு மட்டுமே என்று சொல்லலாம். இயற்கை விஞ்ஞான அறிவைவிட அமுல்படுத்தும் விஞ்ஞான அறிவை மட்டும் பெற்றிருக்கின்றோம்.

ஐரோப்பிய சிந்தனையின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இயற்கை விஞ்ஞானம் செழித்து ஓங்கி வளர்ந்தது. இயற்கையிலுள்ள பொருட்கள் அனைத்தும் புறத்தில் இருப்பதாகப் பார்க்கப்பட்டது.  பொருள்ட்களின் உண்மையை அறிய தோன்றி தத்துவங்கள் எல்லாம் புறவய அணுகுமுறையையே தோற்றுவித்தன. இதுதான் விஞ்ஞான அணுகுமுறையாகவும் பார்க்கப்பட்டது. புறவயமாக ஆய்வு நடத்துவதுதான விஞ்ஞான பூர்வமானது என்றழைக்கப்பட்டது. தரவுகளைத் திரட்டி, அவற்றை வகைப்படுத்தி, பகுப்பாய்வு செய்து புறப்பொருளின் உண்மையைக் கண்டறிவது இதன் வழிமுறையாக இருந்தது.  அறிவுத்தோற்றவியல், பொருளின் உண்மையை அறிவதாகக் கூறியது. அறிவுத்தோற்றவியல் தத்துவங்களான அறிவுவாதமும் அனுபவவாதமும் உண்மையை புறவயமாக மட்டுமே கண்டது. ஆக அப்போதைய விஞ்ஞான உலகமும், தத்துவ உலகமும் புறவய அணுகுமுறைக்கு மட்டுமே ஆளாகியிருந்தன.

இதற்கு மாறாக ஹெகல் அகம் புறம் ஆகிய முரண்பாட்டினூடே உண்மையை ஆராய்ந்தார். அதாவது உண்மையை அகவயமாகவும் புறவயமாகவும் புரிந்து கொள்ளவேண்டும் என்று ஹெகல் கூறினார். இந்த கூட்டு அணுகுமுறையை மார்க்சு உட்கிரகித்துக் கொண்டார். அது மட்டுமின்றி கருத்தளவிலான இந்த அணுகுறையினை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இவ்வாறு மார்க்சியத்திற்கான‌ முதல் அடிப்படையை மார்க்சு உருவாக்கினார்.

பாயர்பாக்கின் தத்துவம் உட்பட இதுவரையிலான பொருளியத் தத்துவங்களின் முதன்மையான குறைபாடு என்னவென்றால் பொருட்கள், எதார்த்தம், உணர்வு ஆகியவை புறப்பொருளின் வடிவில் அல்லது பயில்பொருள் வடிவில்தான் புரிந்துக் கொள்ளப்பட்டனவே தவிர மனித உணர்ச்சிபூர்வமான செயல்பாடாக நடைமுறையாக அகவயமாக புரிந்துக் கொள்ளப்படவில்லை என்று மார்க்சு பாயர்பாக்கின் ஆய்வுரைகளில் கூறுகிறார்.

பொதுவாக இயற்கையை - பிரபஞ்சத்தை புறநிலையாக ஆய்வு செய்வது என்பது மட்டுமே விஞ்ஞான அணுகுமுறை என்று பொருள்கொள்ள முடியுமா? இது 19 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான அணுகுமுறையாகும். ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் அகநிலையும் இணைத்த‌ ஒரு விஞ்ஞான அணுகுமுறையை வளர்த்துள்ளது. அகநிலையைத் தவிர்த்த அறிவியல் அணுகுமுறையை சிந்தித்தும் பார்க்கமுடியாது என்ற அளவிற்கு பழைய‌ அணுகுமுறை மாறியுள்ளது. இந்த அணுகுமுறையைத்தான் இன்று விஞ்ஞான அணுகுறை என்று இன்று புரிந்து கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

நாம் சில அடிப்படையான கேள்விகளை தொடுக்கவேண்டியுள்ளது. அதாவது,  இன்றைய மெய்யான எதார்த்தத்தை அறிந்துள்ளோமா?  நம்முன் உள்ள அடிப்படை பிரச்சனை என்ன வரையறுத்துவிட்டோமா? மெய்யான எதார்த்தம் இருப்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொண்டுள்ளோம்? நமக்கென்ன அணுகுமுறை உண்டு? வரலாற்றியல் அணுகுமுறையிலா? அல்லது தர்க்கவியல் அடிப்படையிலா? அல்லது நிகழ்ச்சியின் வளர்ச்சிப் போக்கு என்ற அடிப்படையிலா? இங்கே நமக்கு தர்க்கவியல், வரலாற்றியல் தேவைப்படவில்லையா?
எதார்த்தம் அல்லது உண்மைநிலை குறித்த அறிவை நாம் எவ்வாறு பெறுகிறோம்? பகுத்துப் பார்த்தா அல்லது தொகுத்து பார்த்தா? சமூகத்தை ஆய்வு செய்யும் போது பகுத்துப் பார்ப்பதும் அனுபவங்களையும் தொகுத்தும் பார்த்திருக்கிறோமா? இங்கே நமக்கு அறிவாய்வியல் பற்றிய அறிவு தேவைப்படவில்லையா? இவையெல்லாம் சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையான கேள்விகளாகும்.
கடந்த நூற்றாண்டின் இறுதி வரைக்கும் இயற்கை விஞ்ஞானம் என்பது பெருமளவுக்கு ஒரு திரட்டித் தொகுக்கும் விஞ்ஞானமாக, முற்றுப்பெற்ற பொருள்களைப் பற்றிய விஞ்ஞானமாக இருந்தது. நம் நூற்றாண்டிலோ அது சாராம்சத்தில் ஒரு முறைப்படுத்தும் விஞ்ஞானமாக, நிகழ்வுப்போக்குகளின் விஞ்ஞானமாக,, பொருள்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விஞ்ஞானமக, இயற்கையின் நிகழ்வுப்போக்குகள் அனைத்தையும் ஒரே மாபெரும் முழுமையாகப் பிணைத்து வைக்கின்ற பரஸ்பரத் தொடர்பு பற்றிய விஞ்ஞானமாக இருக்கிறது. (Engels)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக