புதன், 4 ஜூலை, 2012

தத்துவப் பணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்...9

அறிவியல் என்பது பிரச்சனையை ஆராய்வதற்கான ஒரு  ஆய்வுமுறையை உருவாக்கி யுள்ளது. ஒரு முன்முடிவை வைத்துதான்  விஞ்ஞான ஆராய்ச்சி ஆரம்பிக்கின்றது. ஆய்வின் முடிவில் இந்த முன்முடிவு மாறலாம். முன்முடிவில்லாமல் எந்த ஆராய்ச்சியையும் செய்யமுடியாது. இந்த முன்முடிவு எடுப்பதற்கு ஒரு அணுகுமுறையைக் கையாள வேண்டும். அந்த முன்முடிவானது ஒரு கொள்கையின் அடிப்படையும் அல்லது கோட்பாட்டின் அடிப்படையும் இருக்கிறது. இந்த முன்முடிவு முற்றிலும் அனுமானமே என்றாலும் அது கற்பனையானதன்று. அது ஏற்கனவே கண்டறிந்த உண்மைகளிலிருந்தும் அல்லது அதன் நீட்சியான கருத்திலிருந்தும் அல்லது வேறுபட்ட கருத்தி லிருந்தும் எடுக்கலாம்.

சமூக ஆராய்ச்சிக்கும் இந்த வழிமுறைப் பொருந்தும். இதை மறுப்பது அனுபவவாதமாகும். எந்த முன்முடிவும் இல்லாமல் எந்த ஒரு வரையறையும் இல்லாமல் எந்த ஒரு கோட்பாட்டின் அடிப்படையில்லாமல் எந்த சமூக ஆய்வையும் எடுக்க முடியாது. இது அறிவியல் ஆராய்ச்சிக்கு பொருந்தாத ஒன்று. இது அகநிலைவாத ஆராய்ச்சி யாகும்.


விவரங்களிலிருந்து உண்மையைத் தேடுவது என்றால் என்ன?காணக்கிடைகின்ற விவரங்களைப் பகுப்பதும் தொகுப்பதுமான முறைமைகளைக் கையாண்டு உண்மைகளைக் காண முனைவதாகும். இது போன்ற தர்க்கவியல் விதிமுறைகளைப் பயன்படுத்தி பிரச்சனைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கின்றோம். இதற்கு ஒரு அணுகுமுறை தேவைப் படுகின்றது. இவையாவும் கொள்கைச் சார்ந்த முறைமையியல் சார்ந்த விசயங்களாகும்.  விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு எந்த உண்மையும் கண்டறிய முடியாது.


சமூகப் பிரச்சனைகளை அணுகும் எவருமே ஏதாவதொரு அணுகுமுறையையும் முறைமையையும் தங்களை அறியாமலேயே கையாள்கின்றனர். சிலர் மட்டுமே உணர்வு பூர்வமாக அறிந்து கையாள்கின்றனர். அணுகுமுறையைப் பொருத்தும் முறைமையைப் பொருத்தும் பிரச்சனையின் தீர்வுக்கான வழிமுறை மாறலாம். ஆகவேதான் பிரச்சனையை ஆய்வு செய்வதற்கான அணுகுமுறையையும் முறைமை யையும் பற்றிய ஆய்வில் நமது கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. தத்துவப் போராட்டத்தின் இன்றியமையாதப் பணியாக இதை மேற்கொள்ள வேண்டி யிருக்கின்றது.

வறட்டுவாதம் என்பது மிகவும் மோசமானது. வறட்டுவாதத்தில் மூழ்கியிருப்பவர்கள் பிரச்சனையை ஆராய்வதற்கான வழிமுறை பற்றியோ அல்லது முறைமையைப் பற்றியோ கவலைப் படுவதில்லை. இவர்கள் பிரச்சனையை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன்னமே தீர்வை முன்வைத்து விடுவார்கள். இவர்களிடம் எல்லாவிதமான‌ பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் தயாராக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக