வியாழன், 30 ஆகஸ்ட், 2012

விவாதங்கள்

உறவு பாலசுப்பிரமணியன் -  அ.மார்க்சின் 'உடைபடும் புனிதங்கள்’, ‘தேசியம் ஒரு கற்பிதம்' எனும் நூலுக்கான விமரிசனத்தின் மீதான விவாதங்கள்
அ.மார்க்சை விமரிசிக்கும்போது பாலசுப்பிரமணியன் கீழ்கண்ட முரண்பாடுகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கின்றார். வர்க்கத்திற்கும்‍ சாதிக்கும் இடையிலான‌ முரண்பாடு, பெருங்க‌தையாடலுக்கும் சிறுங்க‌தையாடலுக்கும் உள்ள‌‌ முர‌ண்பாடு, இன, வர்க்க, சாதி, மத, பாலியல் ஆகிய‌ முர‌ண்க‌ள், தொட‌ர்ச்சிக்கும் தொட‌ர்ச்சி யின்மைக்கும் உள்ள‌ முர‌ண்பாடு, முதன்மை முரண்பாடுக்கும் இதர முரண்பாடுகளுக்கும் உள்ள உறவு, அவ‌சிய‌த்திற்கும் த‌ற்செய‌லுக்கும் உள்ள‌ முர‌ண்பாடு, அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற முரண்பாடு, சிந்த‌னைக்கும் நடைமுறைக்கும் உள்ள‌ முர‌ண்பாடு.

கட்டுரையின் ஆரம்பத்தில், ஒரு சில இடங்களில் 'வர்க்கம்' என்பதற்கான அர்த்தத்தை நெகிழ்வுடன் பயன்படுத்துகின்றார். அதாவது தமிழகச் சூழலில் வர்க்கம் -‍ சாதி முரண்பாடுகளைக் கொண்டது என்கிறார். வ‌ர்க்க‌ப் போராட்ட‌த்தை முன்னிலைப் ப‌டுத்தினாலும், சாதிய‌, இன‌, பாலின‌ வேறுபாடுக‌ளையும் க‌வ‌னிக்க‌த் த‌வ‌ற‌வில்லை. இந்திய, தமிழ் சமூகத்தின் தனிச் சிறப்பம்சங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறார்.  மேலோட்டமாகப் பார்த்தால், அவரது கருத்துகள் யாவும் இயங்கியல் வகைப்பட்டதாகத் தோன்றும். ஆனால் நுட்பமாக‌ ஆராய்ந்து பார்த்தால், இத்தகைய முரண்பாடு களிலுள்ள உறவுகளுக்கும், உட்தொடர்புகளுக்கும் உள்ள முக்கியத்துவத்தை உணரவில்லை என்றே தோன்றுகின்றது. 

ஒற்றை முரண்

முன்னுரை பகுதியில் "பொது உடைமை இயக்கத்தினர் மா.லெ. குழுக்கள், எதார்த்த சமூகத்தில் நிலவும் இன, வர்க்க, சாதி, மத, பாலியல் வேறுபாடுகளில் ஏதோ ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாக ஒருவருக்கொருவர் தீராத முரண்களில் சிக்குண்டுள்ளனர்.'  என்று கூறுகின்றார். பொது உடைமைவாதிகள் தேசம், நாடு என்ற கட்டமைப்பில் சிக்குவது அதை வழிபடுவது கட்டிக்காப்பது முதலாளித்துவ வர்க்கச் சித்தாந்தத்திற்கு பலியாவது ஆகும்என்று பால சுப்பிரமணியன் கூறுகின்றார்.

ஆனால் இவர் எதை எதிர் எதிர்த்து போராடினாரோ அதாகவே பின்னர் மாறிவிட்டார். இவரே தேசியஇன ஒற்றை முரணில் சிக்கித் தவிக்கிறார். முழுமையான உலகத்தை வலியுறுத்தி வந்த இவர் தேசிய இனத்தை உயர்த்திப் பிடிக்கவும் தயாராகிவிட்டார்.  இந்த தர்க்கத்தை இவர் ஹெகலிடமிருந்து அப்படியே பெற்றுக் கொண்டார் என்பதில் சந்தேகமில்லை.  இவரைப் பொறுத்தவரை முழுமையும் எதார்த்தம்தான் பகுதியும் எதார்த்தம்தான். அன்று முழுமையின் எதார்த்தம் இவருக்கு அறிவுபூர்வமாக இருந்தது; இன்று பகுதியை தனது அறிவுபூர்வமாக ஆக்கிக்கொண்டார். உலகப் புரட்சியிலிருந்து தமிழ்த்தேசிய புரட்சிக்கு வந்து சேர்ந்துள்ளார். அன்று, ‘பாட்டாளிவர்க்க விடுதலை என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தேசம், தேசியம் என்றவாறு மக்களை திரட்ட முனைந்தனர் என்று விமரிசித்தார்; இன்று அதே பணியை தன் தலையாயக் கடமையாக எடுத்துக் கொண்டார்.

மார்க்சியவாதிகள் எல்லா முரண்களிலும் 'வர்க்க முரணுக்கு' மட்டுமே முதன்மை கொடுக்கிறார்கள். எல்லா முரண்களிலும் முதன்மையாக இருப்பது வர்க்க முரண்தான்; ஆனால் அ.மார்க்சு ஏக காலத்தில் இன, வர்க்க, சாதி, ஆணாதிக்க முரண்களெயெல்லாம் ஒரே நேரத்தில் ஏக காலத்தில் தீர்க்க முனைகிறார் என்று எள்ளி நகையாடுகிறார்.

 நம் சமுதாயத்தில் இனம், வர்க்கம், சாதியம், ஆணாதிக்கம் போன்றவை இருப்பதில் இவருக்கு கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. ஆனால் இந்த முரண்பாடுகள் அனைத்தும் ஒருவிதமான பரஸ்பரமான, நெருக்கமான உறவைப் பாதுகாத்து வந்துள்ளன. அதில் இணக்கமும் பிணக்கமும் இருக்கின்றது. அவை ஒரு சமயம் ஒருங்கிணைந்தும் மற்றொரு சமயம் பிரிந்தும் வினைபுரிந்து வருகின்றன. இந்த இயங்கியல் அம்சங்களை இவர் உள்வாங்கியிருக்கிறாரா என்பது சந்தேகமே!

காரணம், இவற்றிற்குள் உள்ள தொடர்பை கண்டறிநது தமக்குள் பரஸ்பர வினையாற்றுவதை உள்வாங்கியதற்கான‌ அறிகுறிகள் எங்குமே இவரது கட்டுரையில் தென்பட‌வில்லை. அவ்வாறு செய்திருந்தால், இவற்றுக்குள்ளே இயங்கும் தர்க்க விதிகளை இவர் கண்டறிந்திருப்பார். அனைத்தையும் கவனத்தில் கொண்டு சமூக மாற்றத்தில் ஒவ்வொன்றிற்கும் உரிய இடத்தை அளித்திருப்பார். 'வர்க்கவாத'த்திலிருந்து இனவாதத்திற்கு ஒரே தாவாக‌ தாவியிருக்கமாட்டார். இப்போது இவர் கூறும் காரணம் உலகமயமாதலின் விளைவாக உலகத்திலுள்ள தேசிய இனங்கள் யாவும் நசுக்கப்படுகின்றன. ஆகவே தேசிய இன முரண்பாடுதான் முன்னுக்கு வந்துள்ளது என்று தர்க்கம் புரிகிறார்.

ஒற்றைத் துருவம் 

பொதுவாக இவர் ஒரு முரண்பாட்டைக் கையாளும்போது, முரண்பாட்டின் ஒரு துருவத்தில் உறைந்துபோய் விடுகின்றார். சிலவற்றை தவிர ஏறத்தாழ எல்லா முரண்பாடுகளிலும் இதே அணுகுமுறையைக் கையாளுகின்றார். முரண்பாட்டின் ஒரு துருவத்தை அ.மார்க்சு ஆக்கிரமித்துக் கொண்டார் என்றால், பாலசுப்பிரமணியனோ இன்னொரு துருவத்தில்போய் உட்கார்ந்து கொள்கின்றார். சான்றாக அ.மார்க்சு தொடர்ச்சியின்மையைப் பற்றிப் பேசினால், பாலா தொடர்ச்சியைப் பற்றி மட்டும் பேசுகின்றார். உண்மையான சமூக இயக்கம் என்பது தொடர்ச்சியும் தொடர்ச்சியின்மையையும் கொண்டது.  அ.மார்க்சிடன் முரண்பாட்டின் எதிர்வுகளிடையே உள்ள இயங்கியல் உறவை எதிர்பார்க்க இயலாது. ஆனால் இவரை விமரிசிக்கப் புகுந்த‌ பாலாவிடன் (பாலசுப்பிரமணியன்) நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

அ.மார்க்சு சிறுங்கதையாடல் பற்றியே கவலைப்படுகின்றார். இதன்மூலம் எல்லாவகையான‌ பெருங்கதையாடலை எதிர்க்கின்றார் என்பது பாலாவின் விமரிசனமாகும். பெருங்க‌தையாடலுக்கும் சிறுங்க‌தையாடலுக்கு உள்ள‌‌ முர‌ண்பாடு, முழுமைக்கும் ப‌குதிக்கும் உள்ள முரண்பாட்டைக் குறித்து நிற்கின்ற‌ன‌. ஆனால் பாலா முழுமை, பகுதி என்ற முரண்பாட்டில், முழுமையை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றார். பகுதிக் கூறுகளைப் புறக்கணிக்கின்றார். இது முழுமைக்கும் ப‌குதிக்கும் உள்ள‌ இயங்கியல் உற‌வை ப‌ற்றிப் புரிந்துக் கொள்வதில் உள்ள சிக்கலாகும்.

முரண்பாட்டின் கூறுகளின் ஒற்றுமையை காரல் மார்க்சு வலியுறுத்துவார். ஆனால் பால சுப்பிரமணியன் முரண்பாட்டின் கூறுகளை எதிர் எதிராக நிறுத்துவதோடு ஒரு கூறுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறார். இந்த வகையில் இயக்க மறுப்பு சிந்தனையைத் தன்னுள்ளே கொண்டுள்ளார்.

அமைப்பியல்

அமைப்பியல் என்பது வர்க்க, இன, சாதிய, பாலின போன்ற‌ சமூகக் கட்டமைப்புகளைப் பற்றி பேசுகின்றது. ஆனால் அவற்றிற்கிடையில் உள்ள உறவைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் பாலாவும் மேற்கண்ட சமூகக் கட்டமைப்புகளைப் பேசுகின்றார். ஒரு கட்டத்தில் வர்க்க உறவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார். ஆனால் இந்தக் கட்டமைப்புகள் கொண்டுள்ள உறவைப் பற்றி எங்குமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

புறநிலையான ஆய்வு என்பது பொருளின் முழுபரிமாண‌த்தை வெளிக்கொணர முடியாது. உதாரணத்திற்கு உழைப்பைப் பற்றிய ஆய்வு, சாதிய ஆய்வு என்பது புறநிலையாக மட்டுமே ஆய்வு செய்யக் கூடியவைகள் அல்ல. அவற்றை அகநிலையாகவும் நின்று ஆய்வு செய்யக் கூடியவை. ஏனெனில் அவை உளவியல் சார்ந்த அகநிலையான அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. சாதியத்தைப் புறநிலையாக வைத்து ஆய்வு செய்வதற்கும், அகநிலையாக வைத்து ஆய்வு செய்வதற்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருக்கின்றது.

அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம போன்றவை இறுகிப் போன‌ மார்க்சியவாதிகள் மீது வைத்த கேள்விகள் நியாயமானவை. ஆனால் மார்க்சியவாதிகள் அவற்றை எதிர்கொள்ளவில்லை. தர்க்கரீதியாகப் பதிலளிக்கப்படவில்லை.  மாறாக அவற்றை ஒதுக்கி வைப்பது அல்லது ஒதுங்கிக் கொள்வது என்ற அணுகுமுறைதான் கடைபிடித்தனர்.

அகநிலையைப் புறக்கணித்த 'விஞ்ஞான' புறவய‌அணுகுமுறையை இருத்தலியம் கேள்வி கேட்டது. ஒற்றை அணுகுமுறையை எதிர்த்து அமைப்பியலும் பின் அமைப்பியலும் குரல் கொடுத்தது. ஆனால் மார்க்சியத்தை செழுமைப்படுத்துவதாகக் கூறிகொண்டு இன்னொரு கடைக்கோடிக்குச் சென்றன. அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவத்தின் நிலைமைகளும் அப்படித்தான்.

எதார்த்த வழிபாடு

எதார்த்த‌ம் அறிவுபூர்வமானதா? எதார்த்தத்தை அங்கீக‌ரிக்க‌வேண்டுமா அல்லது விமரிசன கண்கொண்டு ஆராயவேண்டுமா? என்றால் இன்றைய‌ எதார்த்த‌ம் புரிந்து கொண்டு அதை அங்கீக‌ரிக்க‌வேண்டும்; அத‌னுட‌ன் இண‌க்க‌ம் காண‌வேண்டும் என்பது இவரது பதில். சான்றாக உல‌க‌ம‌ய‌ம், தாராள‌ம‌ய‌ம், போன்ற‌வற்றின் அவசியத்தை அங்கீக‌ரிக்கும் அதே நேர‌த்தில் அத‌னுட‌ன் இண‌க்க‌ம் காண‌வேண்டும் என்று பாலசுப்பிரமணியன் கூறுகின்றார்.

எதார்த்தம் என்பது அவசியம், தற்செயல் என்ற முரணில் வழியாகப் புரிந்துக் கொள்ளப்பட‌ வேண்டும். மாறாக இதை அவசியம் என்ற ஒற்றை முரணாக மட்டுமே வலியுறுத்துகிறார். இதில் இவரது இயக்க மறுப்பியல் கண்ணோட்டம் தெளிவாகத் தெரிகின்றது.
அவசியமானது என்று அழுத்தமுறச் சொல்லப்படும் ஒன்று, முற்றிலும் தற்செயலானவற்றால் ஆனது என்பதையும், தற்செயல் என்று சொல்லப்படும் ஒன்று, அவசியமானது தன்னைப் பின்புறம் மறைத்துக் கொண்டுள்ள வடிவமே என்பதையும் நாம் அறிவோம்.
எதார்த்தமானவை அனைத்தும் பகுத்தறிவுக்கு உகந்தவை; பகுத்தறிவுக்கு உகந்தது அனைத்தும் எதார்த்தமானவை.” (All that is real is rational; and all that is rational is real). மனித வரலாற்றில், எதர்த்தமானதாய் இருப்பதெல்லாம் காலப்போக்கில் பகுத்தறிவுக்குப் புறம்பானதாய் ஆகிப் போகிறது. எனவே எதார்த்தமானதாய் இருப்பது அதன் உள்ளடக்கத்திலேயே பகுத்தறிவுக்கு ஒவ்வாததாய் இருக்கிறது. மனிதர்களின் மனங்களில் பகுத்தறிவுக்கு உகந்ததாய் இருக்கும் ஒவ்வொன்றும், வெளித்தோற்ற எதார்த்தத்துக்கு முரண்படுகின்ற போதிலும், இறுதியில் அது எதார்த்தமாக மாறியே தீரும். ஹெகலியச் சிந்தனை வழிமுறையின் அனைத்து விதிகளின்படியும், எதார்த்தமானது ஒவ்வொன்றும் பகுத்தறிவுக்கு உகந்தது என்னும் கருதுகோள், நிலவுகின்ற அனைத்தும் அழியக் கூடியதே. (ஹெகலின் கோட்பாடுகள் பற்றிய விமர்சனம்)
ஆனால் பாலாவின் (பாலசுப்பிரமணியன்) மேற்கோளில் அறிவையும் எதார்த்தத்தையும் வேறுவேறாகப் பார்க்கவில்லை. அவரைப் பொருத்தவரை அறிவுதான் எதார்த்தம்; எதார்த்தம்தான் அறிவு. இதன் பொருள் என்னவென்றால் அறிவு எதார்த்தம் இரண்டுமே ஒன்றே தவிர வேறல்ல என்பதாகும். ஆனால், மார்க்சியம் அறிவுக்கும் எதார்த்தத்திற்கும் உள்ள‌ தொட‌ர்புகள் குறித்தும் ப‌ர‌ஸ்ப‌ர‌ உறவுகள் குறித்தும் விவாதிக்கின்றது. அதே சமயம் அறிவுக்கும் எதார்த்த‌த்திற்கும் அறிவுக்கும் உள்ள முரண்பாட்டையும் பற்றி பேசுகின்றது. இரண்டும் எதிரெதிரான முரண் நிலையை எடுப்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.

எல்லா சமூக அரசியல் நிக‌ழ்வுக‌ளையும் அவ‌சிய‌மான‌ எதார்த்த‌ம் என்கிறார். ஜார் ஆட்சி எதார்த்த‌ம், போல்விக் புர‌ட்சி எதார்த்த‌ம், குருச்சேவ் திரிபுவாத‌ ஆட்சி எதார்த்த‌ம், கோர்ப்ப‌சேவ் ஆட்சி எதார்த்த‌ம், எல்ட்சின் ஆட்சி எதார்த்த‌ம்...இவ்வாறு எல்லாமே அவ‌சிய‌மான எதார்த்த‌ங்க‌ளே!  இவ்வாறு எதார்த்தத்தை வழிபடுவதில் பாலசுப்பிரமணியன் வல்லவராகத் திகழ்கின்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக