சனி, 22 செப்டம்பர், 2012

விவாதங்கள்


உறவு பாலசுப்பிரமணியன் -  அ.மார்க்சின் 'உடைபடும் புனிதங்கள்’, ‘தேசியம் ஒரு கற்பிதம்' எனும் நூலுக்கான விமரிசனத்தின் மீதான விவாதங்கள்- 2.

ஹெகலியம் எதிர் மார்க்சியம்

மார்க்சு ஹெகலியத்தை எவ்வாறு கடந்து வந்தார்? ஹெகலியத்தின் கூறுகளில் எவற்றை முறித்துக் கொண்டார்? எவற்றை சுவீகரித்துக் கொண்டார்? என்ற கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். ஒன்றை மட்டும் இங்கு சொல்லிக் கொள்ளவேண்டும். மார்க்சு ஹெகலியத்தின் எல்லாக் கூறுகளையும் முறித்துக் கொள்ளவில்லை என்பதும் ஹெகலியத்தை முற்றிலும் சுவீகரித்துக் கொள்ளவில்லை என்பதும் முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும்.

தர்க்க ஞானத்தைப் பொருத்தவரை மார்க்சிடம் ஹெகலியத் தாக்கம் இருந்தது. தர்க்கத்தின் விஞ்ஞானத்தில் இருந்து தர்க்க அறிவை சுவீகரித்துக் கொண்டார். ஹெகலியக் கருத்துமுதல்வாததை முறித்துக் கொண்டார். பொருள்முதல்வாத்தை அடிப்படையாகக் கொண்டு ஹெகலியத்தைக் கடந்தார். இன்னும் சொல்லப்போனால் பொருள்முதல்வாத வழியில் ஹெகலின் எல்லா தர்க்க வகையினங்களையும் மறு உருவாக்கம் செய்தார். ஹெகலின்  அகம் புறம் என்ற ஒற்றையான‌ ஒத்த தன்மையை விமரிசித்து அகம்புறம் கூட்டிணைவுக் கருத்தை வளர்த்தார்.

உலக வளர்ச்சிப் போக்குகளை ஒரு சூத்திரத்தில் அடக்க முடியுமா?

உல‌க‌ம் த‌ழுவிய‌ புர‌ட்சியை இவர் உயர்த்திப் பிடிக்கின்றார். இந்தக் கண்ணோட்டமானது, உல‌கம் முழுவ‌தும் ஒத்த‌ ஒரே வ‌ள‌ர்ச்சியைக் கொண்டிருக்கின்றது என்ற புரிதலிருந்து வருவதாகும். இந்தியாவின் மாற்ற‌த்திற்கும் உல‌கத்தின் மாற்ற‌த்திற்கும் ஒரே அடிப்ப‌டைதான் உள்ள‌து. அது ஏகாதிப‌த்திய‌த்தை எதிர்ப்பது இந்தியாவை எதிர்ப்பதாகும்;  ஏகாதிப‌த்திய‌த்தை  எதிர்ப்பது இந்தியாவை எதிர்ப்பதைப் போலாகும்.  இது உல‌க‌ முழுமையும் ஒத்த‌ உற்ப‌த்திமுறையைக் கொண்ட‌தாகும் என்ற‌ க‌ருத்தை வ‌லியுறுத்துவ‌தாகும். அல்ல‌து உல‌க‌முழுமையும் ஒத்த‌ உற்ப‌த்திமுறையில் வ‌ழியாக‌ மாற்ற‌ங்க‌ள் ந‌டைபெறும் என்ற‌ க‌ருத்தைப் பிர‌திப‌லிப்ப‌தாகும்.
                
புதிய நிலைமைகளை அங்கீகரிக்கிறார். புதிய வளர்ச்சிப்போக்குகளை அங்கீகரிப்பது தேவைதான்.  அதனை விமரிசன கண்கொண்டு அணுகவேண்டும். முற்றிலும் இணக்கமான உறவைப் பேணமுடியாது. குறிப்பான விசயங்களில் மேலோட்டமான பார்வை மட்டுமே கொண்டிருக்கிறார். அதன் சமூக அரசியல் பொருளியல் கண்கொண்டு பார்ப்பதாக தெரியவில்லை. 

வளர்ச்சிப்போக்கை அங்கரித்தாலும், புறநிலையான வளர்ச்சிப் போக்கை கொண்டிருக்கிறார். அது மேல்தளத்தில் மட்டும் இருக்கிறது. அகநிலை வளர்ச்சிப் போக்கை அதனுடன் பார்க்க தவறுகிறார். முதலாளித்துவ வளர்ச்சியை சீராகவும் அனைத்தையும் தழுவிய ஒரே தன்மையை உடையதாகவும் பார்க்கிறார்.

உலக மயமாக்கம், தாராள மயமாக்கம் போன்ற கொள்கைகள் உலகமெங்கும் அரசுத்துறை, பொதுத்துறை அழிக்கின்றன. இதன் விளைவாக சமுதாயத்தில் குட்டி முதலாளித்துவ பிரபுகுலத்தை அழிப்பதாகவும், மெய்யாகவே உடைமையற்ற வர்க்கங்களை அதாவது பாட்டாளி வர்க்கத்தை படைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது...
பொதுஉடைமை இயக்கங்கள் அனைத்தும் இந்தத் தனியார்மயமாக்கல், உலக மயமாக்கலை எதிர்ப்பதாக உள்ளன...
அரசியல் பொருளாதாரத்தின் மூலம் சமூகத்தில் நடந்துவரும் மாற்றங்களை எதிர்ப்பதன் மூலம் தொழிலாளி வர்க்கம் தோன்றுவதை தடுத்து நிறுத்தவதாக அமைவதால் இவ்வியக்கங்கள், தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படை என்பது பொருளற்றதாகின்றது. இது பாட்டாளி வர்க்க புரட்சியை தடுத்து நிறுத்தவும் ஏதுவாகின்றது...
இதுதான் இவ‌ர‌து வாத‌ங்க‌ள் ஆகும்.

இந்த வாதத்தின் மூலம் அனைத்து நாடுகளின் சமூக மாற்றத்தை ஒரு சீரான வளர்ச்சிப் போக்கிற்கு இட்டு செல்ல விரும்புகின்றார். உலகமயத்தின் இலட்சியம் பாட்டாளி வர்க்கத்தை படைப்பது; பாட்டாளி வர்க்கமானது, நாடு, தேசம் என்ற குறுகிய மனப்பாங்கை உடைத்து உலகப் புரட்சியை முன்னெடுப்பது. உலகில் உள்ள ஏற்றத்தாழ்வான வளர்ச்சிப் போக்குகளை மாற்றி ஒத்த சீரான வளர்ச்சிப் போக்கை வளர்த்தெடுக்க விரும்புகின்றார்.

பாட்டாளி வர்க்க புரட்சிக்கு ஒரு முன்நிபந்தனையை விதிக்கிறார். அதாவது பாட்டாளி வர்க்கத்தைப் படைக்க வேண்டும். அதுவும் உலகமயம்தான் படைக்கப் போவதாக உறுதியாகவும் அறுதியாகவும் கூறுகின்றார். இறுதி இலக்கை அடைந்துவிட்டார். கற்பனையின் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக கர்ஜிக்கிறார். ஆனால் இவரால் இதற்கு மேல் அவரால் செல்ல முடியாது. ஏனெனில் அதற்குமேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க இடமில்லை. நான் எதிர்பார்த்தது போலவே தமிழ் இனவாதத்தில் வீழ்ந்து விட்டார்.  

பொதுவாக கம்யூனிஸ்டுகளிடம் ஒரு 'ஒழுங்கு மனப்பான்மை' ஆழமாக வேறூன்றி உள்ளது. அதாவது ஒன்று முடிந்தபிறகு இரண்டு, இரண்டு முடிந்த பிறகு மூன்று... என்ற வளர்ச்சிப் போக்கை சமுதாயத்தில் காண்கின்றனர். நிலபிரபுத்துவம் முற்றிலும் அழிந்தபிறகுதான் முதலாளித்துவம்; நிலபிரபுத்துவம் அழித்தொழிக்கப்படாததால் இது நிலபிரபுத்துவ சமுதாயம்தான் என்பன போன்ற வாதங்களை கேட்டுக் கேட்டு சலிக்கும் அளவிற்கு 'ஒழுங்கு மனப்பான்மை' நீடிக்கின்றது. இந்த மனப்பான்மையிலிருந்து இவரும் தப்பவில்லை. உலகமயம் பாட்டாளிவர்க்கத்தை படைக்கும்;  பிறகு பாட்டாளிவர்க்கப் புரட்சி நடைபெறும் என்ற ஒழுங்குவிதியை இவர் பேசுகின்றார்.

என்னைப் பொருத்தவரை நிலபிரபுத்துவம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்ட பிறகுதான் முதலாளித்துவ வளர்ச்சி முழுமைபெறும் என்பதோ அல்லது உலகமயம் பாட்டாளிவர்க்கத்தை படைத்துதான் புரட்சி நடைபெறும் என்பதோ சமூக விஞ்ஞானத்திற்கு புறம்பான கண்ணோட்டங்களாகும். இது உலக வளர்ச்சிப் போக்குகளை ஒரு சூத்திரத்தில் அடக்கும் முயற்சியாகும்.

முதலாளித்துவம் முடிவுக்கு வந்துவிட்டதா?

முதலாளித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார். இதன்மூலம் இறுதி நிலைக்கு வந்துவிட்ட முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டியதில்லை என்று கூறுகின்றார். அதற்காக பாட்டாளி மக்கள் அமைப்பாக திரளவேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்துகிறார்.

இவ்வாறு முதலாளித்துவம் இறுதி முடிவுக்கு வந்துவிட்டது என்று எவ்வாறு முடிவுக்கு வருகின்றார்?  அதன் தத்துவ பின்னணி என்ன என்று பார்ப்போம். மார்க்சிய தத்துவத்தையும், வரலாற்றுக் கோட்பாட்டையும் ஒரு தீர்மானகரமான ஒருவிதியாக சுருக்கிப் பார்ப்பதன் மூலம், இயற்கையும் சமூகமும் தவிர்க்கயியலாமல் மாறியே தீரும் என்றும் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடைந்தே தீரும் என்ற எளிமையான முடிவுக்கு வருகின்றார். இயற்கையின் இயக்கவியல் கோட்பாட்டை அப்படியே சமூகத்திற்கும் பொருத்துவதன் விளைவு என்பது சொல்லாமலே விளங்கும். இது எங்கே கொண்டு செல்கின்றது என்றால், வரலாற்று பொருள்முதல்வாதத்தின் கருத்தோட்டத்திற்கு விஞ்ஞானத் தன்மையைப் புகுத்தி, உண்மையில் வர்க்கப் போராட்டத்தையும் சோசலிச கட்டமைப்பதற்கான முனைப்பையும் வெகுதூரம் தள்ளி வைப்பதாகும்.

தவிர்க்க யியலாமல் புகுத்தப்படுகின்ற உலகமயமானது, பின்தங்கிய உற்பத்தி நிலைமையை உடைக்கிறது. இதில் உண்மை யில்லாமல் இல்லை.  ஆனால் அவர் அதை முழு உண்மையாகப் பார்க்கிறார்.  குறிப்பான மற்றும் தனிச்சிறப்பான‌ தன்மைகளை முற்றிலும் புறக்கணிக்கிறார். முழுமையின் பொது தன்மையானது அனைத்து பகுதிகளையும்  ஆக்கிரமிப்பு செய்து, குறிப்பான தன்மையினை முற்றிலும் மாற்றிவிடுவதாக வாதிடுகிறார். உலகமயமானது ஆதிக்கம் செலுத்தினாலும் முதலாளித்துவம் வளர்ச்சிபெறாத நாடுகளில் நிலவுகின்ற சமூக பொருளாதார நிலைமைகள் அதனோடு முரண்படுவதும் போராடுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுவானதிற்கும் குறிப்பானதிற்குமான முரண்பாடு நிலவுவதை அவர் போதிய அளவில் உணரவில்லை என்றே தோன்றுகின்றது. வளர்ச்சிபெறாத நாடுகளில் நிலவுகின்ற சமூக பொருளாதார நிலைமைகள்- உற்பத்திமுறையுடன் ஒன்றை ஒன்று ஊடாடி, வினைபுரிந்து, உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக