வெள்ளி, 30 நவம்பர், 2012

உற்பத்திச் சக்திகள் பற்றிய விவாதங்கள்


சுமார் 475 நாட்களாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கூடங்குளம் பகுதியில் வாழும் மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம் ஆர்ப்பாட்டம் என தொடங்கி தமிழகம் தழுவிய ஆதரவைப் பெற்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். பல முற்போக்குச்சக்திகளும் சனநாயக சக்திகளும் இந்த போராட்டத்திற்கு நேரடியான பங்களிப்பும் தார்மீக ஆதரவும் அளித்து வருகின்றன.
கூடங்குளம் அணு உலையும், அணு உலை எதிர்ப்புப் போராட்டமும் பல்வேறு விவாதங்களை வெளி கொணர்ந்துள்ளன. குறிப்பாக, 1. வர்க்கப் போராட்டமும் சுற்றுச் சூழல் பிரச்சனையும், 2. அரசுசாரா அமைப்புகளை எதிர்கொள்வதற்கான பிரச்சனை, 3. மக்களின் போராட்ட உணர்வும், போராட்டத்திற்கான‌ தலைமையும், 4.அறிவியல் தொழில்நுட்பமும் சமூக வளர்ச்சியும், 5. அடையாள அரசியலுக்கும் வர்க்க அரசியலுக்குமான உறவு, 6. இந்திய அரசின் சுயசார்புத் தன்மையும் புதிய காலனியமயமாக்க நிகழ்முறையும், 7. ஒற்றை துருவ ஏகாதிபத்தியமும் பன்மை ஏகாதிபத்தியமும், 8. தனியார்மயமும், அரசுடைமைக் கோரிக்கையும் 9. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, 10. உற்பத்திச் சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான உறவு, 11. உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதில் சமூக மேற்கட்டுமானத்தின் பாத்திரம் போன்ற பல்வேறு கேள்விகளையும், பிரச்சனைகளையும் எழுப்பியுள்ளன.
இந்திய அரசும் தமிழக அரசும் இப்போராட்டத்தை ஒடுக்கவு அணு உலையை திறக்கவும் பலவழிகளில் முயற்சித்து வருகின்றனர். இதை இடது வலது கம்யூனிஸ்டுகள் முழுமையாக ஆதரிக்கின்றனர். ஆனால் சில முற்போக்கு அமைப்புகளும் அணு உலைக்கு எதிராகவும் போராட்டத் தலைமைக்கு எதிராகவும், போராட்டத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன. குறிப்பாக, ம.ஜ.இ.க. போன்ற சில அமைப்புகள் இத்தகைய நிலைபாட்டை எடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றன.
ம‌.ஜ.இ.க.வின் அணுசக்தி காலாவதியாகிவிட்டது" என்று கூறிஅணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம் ! அனல், புனல், காற்று,சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட  தேசிய மின் திட்டத்திற்காகப் போராடுவோம்”   என்ற‌ கட்டுரையில் பாதுகாப்பான அணு உலையை திறக்கவேண்டும் என்ற தமது கோரிக்கையை முன்வைத்து, அரசுசாரா நிறுவங்களின் சமூக மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு குறித்தும் விளக்குகின்றது.
அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை ஒரு அமெரிக்கக் கைக்கூலி என்றும், கூடங்குள அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் இருக்கின்றன என்றும்இந்திய நாட்டின் அணு சக்தி உள்ளிட்ட ஆற்றல் துறைகள் அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்தக் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்றும் கூறுகின்றது.   அணு சக்தி அரசியலில் இந்திய ஆளும் வர்க்கங்களும், அதிகார வர்க்கங்களும், ஏகாதிபத்தியங்களும் இதர ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஈடுபட்டுள்ளன. ஆனால் அதன் இறுதி பயனாளியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் குறிப்பிடுகின்றது. ம.ஜ.இ.க.வின் பிரசுரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மட்டும் பிரதான இலக்காக முன்வைக்கின்றது. புதிய காலனிய எச்சரிக்கையும் விடுகின்றது. அணு சக்தி அரசியலின் பன்முகத் தன்மை வாய்ந்த தன்மைகளை ஒற்றையாக்கி விடுகின்றது.  இதன் மூலம், வர்க்கப் போராட்டத்தையே அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றை துருவமாக்கி இருக்கின்றது.
அரசு சாரா அமைப்பின் தலைமையில் போராட்டம் நடக்கின்றது காரணத்தைக் காட்டி போராட்டத்தை நசுக்க அரசு எடுக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் ம.ஜ.இ.க. ஆதரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் அணு உலையைத் தகர்க்க இவர்கள் சதி செய்கின்றார்கள் என்ற பீதியை கிளப்புவதோடு மட்டுமல்லாமல் அவர்களை  "உதயகுமார் கும்பல் அணு உலைக்குச் சேதாரம் விளைவித்தால் அதை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்துவார்களா? அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்களா? அல்லது அணு உலையை இடிக்க விட்டுவிட்டு வழக்குப் போட்டுவிட்டோம் என்று நாடகமாடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது" என்று கூறுகின்றது. இதன்மூலம் இவர்களது வர்க்கக் கண்ணோட்டத்த்தின் பலவீனத்தைப் புரிந்துக் கொள்ள முடிகின்றது.
சமீபத்தில் இனியொரு இணைய இதழில் நடைபெற்ற அணு உலை குறித்த விவாதம் குறிப்பிடத்தக்கது. இவ்விவாதத்தில் தோழர்கள் தேவன், முருகன் போன்ற பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் முன்வைத்த பல கருத்துக்களில் உற்பத்திச் சக்திகள், உறவுகள் குறித்த கருத்துக்கள் தத்துவார்த்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றேன்.  இவர்களில் முருகன், உற்பத்திச்சக்திகள் வளர்ச்சி, உற்பத்தி உறவுகளின் மாற்றம், சமூக மாற்றத்தில் இவை இரண்டின் பாத்திரம் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். இதை இப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். காரணம், உற்பத்திச்சக்திகள் வளர்ச்சி, உற்பத்தி உறவுகளின் மாற்றம், உற்பத்திச் சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான உறவு போன்றவை குறித்த இவரது கருத்துக்கள், சில அடிப்படையான கேள்விகளையும் பிரச்சனைகளையும் எழுப்புகின்றன.
"உற்பத்தி உறவுகள் குறிப்பாக முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அதாவது முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகள் மாற்றியமைப்பதற்கான சாத்தியக் கூறே அந்த சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான்." என்பதுதான் முருகன் அவர்களின் வாதமாகும். சுருக்கமாகக் கூறினால், உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கான அடிப்படை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கின்றது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்பதுதான் இதன் சாரமாகும். இதை உற்பத்திச் சக்திகள் கோட்பாடு (Theory of Productive Forces) என்று அழைக்கப்படுகின்றது. அதாவது 'அந்த உற்பத்தி சக்திகள் வளர்ந்தால்தான் உற்பத்தி உறவுகளை தூக்கியெறிய அந்த சமூகம் இடம் கொடுக்கும்' என்பதுதான் அந்தக் கருத்து. உற்பத்தி உறவுகளை தூக்கியெறிய முன்னிபந்தனை உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பதுதான் என்ற ஒரு கருத்தை இங்கு ஆணித்தரமாக வைக்கப்படுகின்றது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது உற்பத்தி உறவுகளை தீர்மானிக்கின்றது என்பதுதான் அதன் பொருள்.
உற்பத்தி சக்திகளின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்கு இட்டுச்செல்ல வேண்டும். அப்போதுதான் சமூகம் இடைவின்றி முன்னேறிக் கொண்டிருக்கும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு ஒத்த அளவில்தான் உற்பத்தி உறவுகள் அமைந்திருக்கும். உற்பத்தி உறவானது, ஒரு கட்டத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்போது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதைவிட உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போராடுவதுதான் முதன்மையானதாக அமைந்துவிடுகின்றது என்பது எனது கருத்தாகும்.
உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்ச்சியடைந்தால் -உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளோடு பொருந்திவரா. மேற்கட்டுமானம் உற்பத்திஉறவுகளுடன் பொருந்தி வராது. இந்தச் சந்தர்ப்பத்தில் உற்பத்தி சக்திகளுடன் பொருந்திவரும் வகையில் மேல் கட்டுமானமும் உற்பத்தி உறவுகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்என்றும், “முதலில் உற்பத்தி உறவுகள் மாற்றப்படவேண்டும். அதன் பிறகு மட்டுமே உற்பத்தி சக்திகள் பரந்த அளவில் வளர்ச்சியடைய முடியும். இது ஒரு உலகுதழுவிய விதிஎன்ற மாவோவின் மேற்கோளை அவரே சுட்டிக் காட்டியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு உற்பத்தி உறவுகள் தடையாக இருக்கும்பட்சத்தில், உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கவேண்டும் என்பதாகும். இதுவே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமையாகும்.
ஆக நமது திட்டம் உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதாகவும் அதற்கு துணைபுரிவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது கம்யூனிஸ்டுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாதுஎன்றும் உற்பத்தி சக்திகளை வளர்ப்பதே நமது முக்கிய கடமையாகும்என்றும் இவர் கூறுகின்றார். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை மட்டுமே முதன்மைபடுத்தும் இவர் உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போராடுவதைப் பற்றி கவலைப் படுவதாய் இல்லை.
ஆனால், "தொழில் வளர்ச்சிக்கும் விவசாய வளர்ச்சிக்கும்  மின்சாரம்தான் அடிப்படையாகும். ஒரு புறம் நிலக்கறி பற்றாக்குறை, தரமின்மை, எண்ணெய் மிகவும் விலை உயர்ந்த பொருளாக மாறிவிட்டது, இன்னொரு பக்கம் காற்று வருடத்தில் மூன்று அல்லது நான்கு மாதம் மட்டுமே சீசன், அடுத்து மிகக் குறைந்தளவான குப்பை போன்ற மாற்று மின்சரம் தயாரிப்பது இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான மின்சாரத்திட்டம் அணு சக்தியுடன் திட்டமிடும்போதுதான் நம் போன்ற பெரிய நாடுகளுக்கு மின்சக்திப் பிரச்சினை தீரும். அந்த வகையிலேயே அணு உலையைத் திறக்கக் கோரவேண்டும். அதில் மக்களின் தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும், வாழ்வாதத்திற்கும் உத்தரவாதத்திற்காகப் போராடவேண்டும்." என்பதுதான் முருகன் வைக்கும் திட்டம். ஆக ஓர் ஒருங்கிணைந்த மின்சக்தித் திட்டத்தை உருவாக்குவதும் அதற்காக போராடுவதும்தான் தமது திட்டம் என்கின்றார்.
"இங்கு உற்பத்தி உறவுகளே அந்த உற்பத்தி சக்திக்கு தடையாகி போனதால், அந்த உற்பத்தி உறவுகளை தகர்ந்தெரிந்து அந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்திற்கு அதை ஒழுங்குபடுத்தவும் ஒரு புதிய உற்பத்தி உறவுகளை கொண்டுவர வேண்டியிருக்கிறது. இந்தியாவில் அது புதிய ஜனநாயகப் புரட்சியைத் தவிர, மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தைத் தவிர வேறு மாற்றமில்லை" என்று  கூறினாலும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை மட்டும் முதன்மை படுத்துகின்றார். உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திற்கு அவர் பின்னுக்குத் தள்ளுகின்றார்.
"இப்படி வளரும் உற்பத்தி சக்தியால்தான் உற்பத்தி உறவை தூக்கியெறியவேண்டிய நிலையை இன்னும் கூர்மையாக்கும். இதுதான் ஒரு பாட்டாளிவர்க்கத் தலைமையை உண்மையிலேயே கொண்டுவரும்' என்பது முருகனின் கருத்தாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும் என்ற வாதத்தை இன்னும் விரிவுபடுத்தியிருக்கின்றார். அதாவது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில்தான் ஒரு பாட்டாளிவர்க்கத் தலைமையை கொண்டுவரும் என்று கூறுகின்றார். உண்மையில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில்தான் ஒரு பாட்டாளிவர்க்கத் தலைமையை கொண்டுவரும் என்று முருகன் கூறுகின்றார்.
ஆனால், ரசிய சீன புரட்சிகளின் அனுபவங்கள் நமக்கு என்ன உணர்த்துகின்றன என்பதை கவனிக்க தவறுகின்றார். ஜார் ரசியாவில் முதலாளித்துவம் அவ்வளவாக வளர்ச்சிப் பெற்றிருக்கவில்லை. முன்னேறிய உற்பத்திச்சக்திகள் வளர்ந்திருக்கவில்லை. விவசாய உற்பத்தியும் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்தது. ஆனால்  லெனின் ஏகாதிபத்தியத்திற்கும் ரசிய ஆளும்வர்க்கத்திற்கும் இருந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு மிகச்சிறிய அளவில் இருந்தாலும் பாட்டாளிவர்க்கத்தையும் வறிய சிறு விவசாயிகளையும் அணிதிரட்டி புரட்சிக்கு தயார்படுத்தினார். இவரது முழுகவனமும் புரட்சிகரத் தத்துவத்தை உருவாக்குவதிலும் புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சியை கட்டமைப்பதிலும்தான் இருந்தது.  உற்பத்திச்சக்திகள் வளர்ச்சி பெறாத நிலையில், பின் தங்கிய சமூகமாக இருந்தாலும், வர்க்கப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நிகழ்த்தி வெற்றியும் பெற்றார். சீன புரட்சியின் அனுபவம் இன்னும் தெளிவானது. மிகவும் பின் தங்கிய சமூகத்தில் விவசாய வர்த்தினரையே பிரதானமாக சார்ந்திருந்து புரட்சி நடந்தேறியது. இங்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்தால் புரட்சி நடந்திருக்காது.
அணு உலையை ஆதரிப்பது என்பது உற்பத்தி சக்திகளை வளர்க்கவா அல்லது உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கவா என்றால் சந்தேகமேயில்லாமல் அது உற்பத்திச் சக்திகளை வளர்ப்பதற்கு மட்டுமே. இது உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க உதவி செய்யாது.  அணு உலையை ஆதரிப்பதால் உற்பத்திச் சக்திகளை வளர்க்கச் செய்யும் என்பதால் நாம் அதை ஆதரிக்கவேண்டும்என்று கூறுகின்றார். ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை பிற்போக்கான‌ உற்பத்தி உறவுகள் தடைசெய்து கொண்டிருக்கின்றது. ஆகவே அணு உலையை ஆதரிப்பதால் உற்பத்திச் சக்திகள் வளர்க்க முடியும் என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.
'அணு உலையை திறக்க வேண்டும் என்பது நாட்டின் உற்பத்தி சக்திகான வளர்ச்சிப் பிரச்சினை. அதை சுதேசியமாக சரியாக மாற்றியமைக்கப் போராடுவது என்பது உற்பத்தி உறவுகளுக்கிடையிலான பிரச்சினை. உற்பத்தி உறவுகளை மாற்றியமைத்து ஒரு சுதந்திர ஜனநாயக குடியரசை அமைப்பதின் மூலமாக மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம், மக்கள் உரிமையை உத்திரவாதப் படுத்த முடியும்' என்றும், 'உற்பத்தி சக்தியின் வளர்ச்சியினை சுதேசியமாக மாற்றுவது என்பதே மக்க‌ளுக்கானதாக மாற்றுவது என்பதே தீர்வு' என்றும் முருகன் கூறுவதைப் பாருங்கள். உற்பத்திச் சக்திகளை வளர்ப்பது உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும், உற்பத்தி உறவுகளை மாற்றியமைத்து சுதந்திர சனநாயக குடியரசை அமைக்கப்படும் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். சமூக வளர்ச்சிப் போக்கின் பொருள்முதல்வாதப் பார்வையாக இது தோன்றினாலும், இந்தப் படிநிலை வரிசை எந்திரத்தனமான சிந்தனைமுறையின் விளைவாகும். 
இனி, உற்பத்தி உறவை மாற்றியமைக்கப் போராடுவது குறித்து ஆராய்வோம். அணு உலையை எதிர்ப்பது என்றால் அது உற்பத்தி சக்திகளை வளர்ப்பதற்கு எதிராகும்என்று முருகன் கூறுகின்றார். அணு உலையை எதிர்த்து போராடுவதன் மூலம் உற்பத்தி உறவை அது பாதிக்கச் செய்யும். உற்பத்தி உறவுகளை மாற்றிமைக்க உதவும். குறைந்த பட்சம் உற்பத்தி உறவுகளின் பூசல்களையாவது உண்டுபண்ணும் என்பது உறுதி. ஆகவே உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை காணவேண்டும்.
 உற்பத்திச் சக்திகளை வளர்க்க இன்று நிலவும் உற்பத்தி உறவுகளே தடையாக இருக்கின்றது என்பதை முருகன் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அவ்வாறிருக்கும்போது அணு உலை எவ்வாறு உற்பத்திச் சக்திகளை வளர்க்கும் என்று தெரியவில்லை.  அணுசக்தி மட்டும் அல்ல அனைத்து உற்பத்திகளையும் வளரவிடாமல் பிற்போக்கான உற்பத்தி உறவுகள் தடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது இன்றைய யதார்த்த உண்மையல்லவா! இந்த பிற்போக்கான உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது நமது முக்கிய பணியாகின்றது. ஆகவே அணு உலையை எதிர்ப்பது என்ற கோரிக்கையானது நிலவும் உற்பத்தி உறவுகளில் சிக்கல்களை உருவாக்கும் என்பதை மறுக்க முடியாது.
பொருளாதார அடித்தளமானது  உற்பத்தி சக்திகளுக்கும், உறவுகளுக்குமான முரண்பாட்டைத் தன்னகத்தேக் கொண்டிருக்கின்றது. உற்பத்தி சக்திகள் வளர்வதும் உற்பத்தி உறவுகள் மாற்றம் அடைவதும் புறநிலையானவை. தன்னிச்சையானவை. உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்களின் வழியாக சமூகம் மாற்றம் அடைகின்றது என்பது உண்மை. ஆனால்   பொருளாதார அடித்தளமும் மேற்கட்டுமானமும் இணைந்து செயலாற்றும்போது மட்டுமே சமூகமாகின்றது. இந்த இரண்டு முரண்பாடுகளில் ஒன்றை மட்டுமே பிரித்து தனித்துச் செயல்படுவதாக புரிந்துக் கொள்ளக் கூடாது.
உடைமை வர்க்கத்திற்கும் உடைமையற்ற வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தின் வழி சமூகம் அடுத்தக் கட்டத்தை அடைகின்றது. ஆனால் இங்கு அரசியல், கருத்தியல், தத்துவம் போன்றவைகள் அடங்கிய‌ மேற்கட்டுமானத்தின்  பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணரவேண்டும். உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க மேற்கட்டுமானத்தின் கூறுகள் முதன்மையான செல்வாக்கை கொண்டிருக்கின்றன என்பதையும், தீர்மானகரமான பங்களிப்பை ஆற்றுகின்றன‌ என்பதையும் வசதியாக மறந்துவிடக் கூடாது. 
"அணை கட்டுவது, நதிநீர்களை இணைப்பது, பல்வேறு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் எதிர்ப்பது அல்லது ஒழிப்பது என்ற நிலை எடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் இந்த அணு உலையே கூடாது என்பது...." என்ற குற்றச்சாட்டை முருகன் வைக்கின்றார். இவை சமூகத்தின் உற்பத்திச் சக்திகள் இவற்றை எதிர்க்கக் கூடாது என்ற அர்த்தத்தில்தான் இவ்வாறு கூறுகின்றார் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் இன்றைய‌ சமூகத்தில் கம்யூனிஸ்டுகளின் பிரதான கடமை என்ன? உற்பத்திச்சக்திகளை ஊக்குவிப்பதா அல்லது உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதா அல்லது வர்க்க உணர்வூட்டி மக்களை ஆளும்வர்க்கத்திற்கு எதிராக அணிதிரட்டி போராடுவதாமுதலாளித்துவமானது, இவற்றையெல்லாம் உற்பத்திச் சக்திகள் என்ற பெயரால் சமூகத்தில் திணிக்கின்றது. முதலாளித்துவத்தின் நலன்களுக்காக மட்டுமே இவற்றை செயல்படுத்துகின்றது.  இத்தகைய 'சமூக நலம்பயக்கும் நடவடிக்கைகளில்' முதலாளித்துவ நலனும் சுரண்டலும் ஏகாதிபத்திய சுரண்டலும் மட்டுமே பிரதானமாக இருக்கும்.  இதனால் உற்பத்திச் சக்திகள் தங்குதடையின்றி வளர்க்க முடியுமா அல்லது இவற்றின் விளைவாக உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க இயலுமா என்பது கேள்விக்குறியே. இன்றைய நிலைமைகளில் உற்பத்திச் சக்திகளை வளர்ப்பதற்கு முன்நிபந்தனை உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கவேண்டும். உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க வேண்டுமென்றால், உழைக்கும் வர்க்கங்களை அணிதிரட்டி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடவேண்டும் என்பது மட்டுமே நமது திட்டமாக இருக்கவேண்டும்.
ஆக உழைக்கின்ற மக்களை அணிதிரட்டவும் அரசதிகாரத்திற்கு எதிராகவும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் போராட தயாராக வேண்டும் என்பதையும், இதன் மூலம் மட்டுமே நிலவிவரும் பிற்போக்கான உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க முடியும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.‌

II
தோழர் தமிழ்வாணன் அவர்களின் விவசாய சங்க  அறிக்கையில் இதே போன்ற தொரு விவாதத்தை தொடங்கியுள்ளார். பிரான்சிலும் ஜெர்மனியிலும் முறையான சமூக படிநிலை வளர்ச்சியில் சுதந்திர தேசிய முதலாளித்துவம் உருவானது; தொழில்துறையின் வளர்ச்சியால் நவீன இயந்திரங்களின் வளர்ச்சியால் பெரும் விவசாயப் பண்ணைகளை உருவாக்கும் இயக்கப் போக்கில் சிறு நடுத்தர விவசாயம் அழிக்கப்பட்டது; ஆனால் இந்தியாவில் அத்தகைய சுதந்திரமான தேசிய முதலாளித்துவம் உருவாகவில்லை; சிறுநடுத்தர விவசாயம் அழிக்கப்படவுமில்லை என்ற வாதத்தை முன்வைக்கின்றார். ஆனாலும் இந்தியாவில் சிறுவிவசாயமும், சிறு விவசாயிகளும் அழிந்துக் கொண்டிருக்கின்றனர் என்றும்  விவசாயப் பண்ணைகளை உருவாக்குவதன் மூலம்  இத்தகைய அழிவிலிருந்து காப்பற்ற முடியும் என்ற தீர்வையும் வைக்கின்றார். இவர் முன்வைப்பது சமூக பொருளாதார வரலாற்றில் மேற்கத்திய சமூகத்திற்கும் கிழக்கத்திய சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டை வெளிக்கொணரும் ஒரு அடிப்படையான பிரச்சனையாகும்.
சுதந்திரமான முறையில் உற்பத்திச்சக்திகள் தோன்றும்போது மட்டுமே வர்க்கப் போராட்ட வளர்ச்சிக்கான அடித்தளம் உருவாகும் என்றும் அரசியல் மாற்றத்திற்கான புரட்சிகர இயக்கம் தோன்ற முடியும் என்றும் கூறுகின்றார். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை சுதந்திரமான முறையான உற்பத்திச்சக்திகள் தோன்றவோ வளரவோ வாய்ப்பில்லாமல் போனது. ஆகவே வர்க்கப் போராட்டமும் புரட்சிகர இயக்கமும் தோன்றவில்லை என்று கூறுகின்றார். புதிய உற்பத்தி சக்திகள் தோன்றி வளர வாய்ப்பில்லாத ஒரு சமூகத்தில் புரட்சிகர வர்க்கங்களோ புரட்சிகர இயக்கங்களோ அவற்றை ஆதரிக்கும் புரட்சிகர கலை இலக்கிய பண்பாடுகளோ தோன்றி வளர வாய்ப்பின்றி போகின்றது என்பது இவரது ஆய்வாகும்.
மார்க்சு முன்னேறிய உற்பத்திச்சக்திகள் இருக்கும் நாடுகளில் சமூக புரட்சி நடக்கும் என்று ஊகித்தார். ஆனால் உற்பத்திச்சக்திகள் போதிய வளர்ச்சி பெறாத பின் தங்கிய நாடுகளிலும் புரட்சி நடக்கும் என்பதற்கான சான்றுகள்தான் சோவியத் ரஷ்யாவும், செஞ்சீனாவும் ஆகும். இத்தகைய‌ புரட்சிகர அனுபவங்களின் அடிப்படையைப் புரிந்துக்கொள்ளாமல் உற்பத்திச் சக்திகளை வளர்ச்சிபெற்ற நாடுகளில் மட்டும் சமூக மாற்றத்திற்கான புரட்சி நடக்கும் என்பது எந்திரதனமான பார்வை மட்டுமல்ல வறட்டுதனமானதுமாகும். புரட்சிகர தத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்ட‌ புரட்சிகர கட்சியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மக்களிடம் புரட்சிகர உணர்வை ஊட்டி  சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பது வரலாறு. இது ஒருபுறம் இருக்கமிகவும் முன்னேறிய உற்பத்திச்சக்திகள் இருந்த ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகர சமூக மாற்றம் ஏற்படவில்லை. ஏற்படுத்தவும் இயலவில்லை என்பதும் தெளிவான‌ உண்மை. இவ்வாறு இருக்கும்போது புரட்சிகரமான சமூக மாற்றத்திற்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை முன்நிபந்தனையாக வைப்பது என்பது எவ்வாறு சரியாக இருக்கும்.
ம‌.ஜ.இ.க. போன்ற அமைப்புகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கு முன்நிபந்தனையாக  வைக்கின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிதான் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்றன என்று பழைமை பேசுகின்றன. ஆனால் ரசிய சீன அனுபவங்களும் இதர மூன்றாம் உலகப் புரட்சிகர அனுபவங்களும் இத்தீர்மானகரமான கொள்கையை மாற்றியமைத்துள்ளன. உற்பத்தி உறவுகளின் தீர்மானகரமானப் பாத்திரத்தைக் குறித்தும் மேற்கட்டுமானத்தின் தீர்மானகரமான பங்கைக் குறித்தும் மாவோவின் தத்துவார்த்த பங்களிப்பு சிறப்பு வாய்ந்ததாகும். இதையெல்லாம் உள்வாங்காமல் மீண்டும் பொருளாதார அடித்தளவாத‌த்தையும், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியே தீர்மானிக்கும் என்ற அடிப்படைவாதத்தையும் தூக்கிப் பிடிப்பது சமூக மாற்றத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
இன்னெருபுறம் உற்பத்திச் சக்திகளை உருவாக்கவேண்டும் என்று கூறுகின்றார். இவர் மிகவும் தத்துவார்த்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் என்று தெரிகின்றது. உற்பத்திச் சக்திகள் நமது விருப்பத்துக்கு அப்பாற்பட்டு, புறநிலையான வளர்ச்சிப் போக்காகும். இவற்றை மனித விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ளமுடியாது. இதுதான் இவற்றின் மீதான பொருள்முதல்வாத கண்ணோட்டமாகும். ஆனால் உற்பத்திச் சக்திகளை உருவாக்கமுடியும் என்பதும் உருவாக்கவேண்டும் என்பதும் சமூக இயக்கத்தை அகநிலை விருப்பத்திற்கு ஆட்படுத்துவதாகும். சமூக இயக்கத்திலும் மாற்றத்திலும் மனிதனின் பங்கு குறித்தும் சமூக மேற்கட்டுமானத்தின் பாத்திரமும் சில குறிப்பிட்ட நேரங்களில் தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்றுவதாக இருந்தாலும், நம் விருப்பதிற்கு ஏற்ப உற்பத்தி சக்திகளையும் சமூக அடித்தளத்தையும் மாற்றியமைக்க முடியும் என்பது கற்பனாவாதம் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக