வியாழன், 1 நவம்பர், 2012

விஞ்ஞான தத்துவமும் விஞ்ஞான முறைமையும் - 2



புதிய கண்ணோட்டம்

இதுவரை பிரபஞ்சத்தினை விவரிக்கும் போது அது தனித் தனிப் பொருட்களால் ஆன் தொகுப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது தோன்றியுள்ள புதிய கருத்தோட்டத்தினைப் பல்வேறு வழிகளில் விவரிக்கலாம். இதனை பேரண்டத்தினை பிளவுண்ட தனித்தனி அங்களின் தொகுப்பாக அல்லாமல் ஒருங்கிணைக்கப் பட்டதொரு முழுமையாகக் காணுகின்ற உன்னதமான கண்ணோட்டம் எனலாம்.

நவீன இயற்பியல் என்பது அனைத்து விஞ்ஞானத்துறைகளிலும் சமுதாயத்திலும் தற்பொழுது தோன்றியுள்ள புதிய உலகக் கண்ணோட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகத் திகழ்கின்றது. புதிய உலகக் கண்ணோட்டம் என்பது இயற்கை சூழமைவியல் கண்ணோட்டம் ஆகும்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையின் மூலம் விஞ்ஞான சிந்தனையில் புரட்சியைத் தோற்றுவித்தவர். நீல்ஸ்போர் மற்றும் ஹெய்சென்பெர்க். இவர்கள் குவாண்டம் இயந்திரவியல் பற்றிய தமது வியாக்கியானங்கள் மூலமாக ஐன்ஸ்டீன் ஏற்றுக் கொள்ளத் தயங்கிய அடிப்படை மாற்றங்களைப் புகுத்தினர்.

ஹெய்சென் பெக் என்பவர் இயற்பியலும் தத்துவமும் என்ற நூலை எழுதினார். இது குவாண்டம் இயற்பியலின் வரலாறு மற்றும் தத்துவம் பற்றிய தலைசிறந்த தொகுப்பு ஆகும்.

ஜியோஃப்ரே சூ என்பவர் ஹெய்சென்பெக்கிற்கு அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் இயற்பியலில் மூன்றாவது புரட்சிக் கட்டத்தை துவக்கியுள்ளார். துகள்கள் பற்றிய அவருடைய பூட்ஸ்ட்ரேப் கொள்கை குவாண்டம் இயந்திரவியலையும் சார்பியல் கொள்கையையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய கொள்கையாக உருவெடுத்துள்ளது.

விஞ்ஞானத்தின் புதிய கருத்தோட்டங்கள்:

1. முதலாவது சிந்தனை, முழுமைக்கும் அதன் அங்கத்திற்கும் உள்ள உற‌வினைப் பற்றியது. மரபு விஞ்ஞானத்தின்படி   ஒரு சிக்கலான அமைப்பினையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதனை பகுதிகளாகப் பிரித்தெடுக்க வேண்டும்; அவ்வாறு பிரித்தெடுத்தப்  பின்னரும் அப்பகுதிகள் விளக்கக் கூடியவையாக இருக்காது. ஆகவே அவற்றை மேலும் சிறு துண்டங்களாகப் பிளக்கவேண்டும்; தொடர்ந்து இந்த முறையைப் பின்பற்றிப் போய் கொண்டே இருப்பதன் மூலம் ஒரு கட்டத்தில் அடிப்படைக் கட்டுமானக் கற்கள் என்கிற நிலையை வந்து அடைவோம். இறுதியாக‌ மூலகங்கள், தனிமங்கள், துகள் போன்ற நிலையை எட்டுவோம்.

மரபுவழி இயந்திரவியல் விஞ்ஞானக் கருத்தோட்டத்தின்படி, முழுமையைப் பற்றிய‌ இயக்கவியல் அமைப்பினைப் புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், அத‌ன் பகுதிகளின் பண்புகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பகுதிகளைப் பற்றிய‌ அடிப்படைப் பண்புகள், அவை செயல்படக்கூடிய யுக்திகள் பற்றி தெரிந்து கொண்டால் முழுமையின் இயக்கவியலை வகுத்துவிடலாம் என்பது அதன் கருத்தாகும்.

புதிய கருத்தோட்டத்தின்படி முழுமையின் இயக்கவியல் மூலமாகத்தான் பகுதிகளின் பண்புகளை முழுமையையாகப் புரிந்து கொள்ள இயலும். முழுமையினுடைய இயக்கவியலைப் புரிந்து கொண்டுவிட்டால் பின்னர் அதன் பகுதிகளின் பண்புகளையும் செயல்பாட்டு படிவங்களையும் வகுக்க இயலும். முழுமைக்கும் அங்கங்களுக்கும் இடையே விஞ்ஞன ரீதியான இந்த உறவுமுறையில் ஏற்பட்ட‌ மாற்றமானது இயற்பியலில் குவாண்டம் கொள்கை உருவானபோது ஏற்பட்டதாகும்.

பருண்மையான பேரண்டம் எனப்படுவது இயக்கப் பூர்வமான சிலந்திவலை ரீதியாக உள்ளார்ந்து தொடர்பு கொண்ட நிகழ்வுகளைக் கொண்டது. இந்தச் சிலந்தி வலையின் எந்தவொரு பகுதியின் பண்புகளும் அடிப்படையானது எனச் சொல்ல வியலாது. ஓர் அங்கத்தின் பண்புகளெல்லாம் பிற அங்கங்களுடையன வற்றிலிருந்து பெறப்படுகின்றன; அவற்றினுடைய உள்ளார்ந்த உறவுகளுடைய ஒட்டுமொத்தச் செறிவு சிலந்தி வலை முழுமைக்குமான வடிவமைப்பினைத் தீர்மானிக்கிறது.

2. மரபு இயற்பியலின்படி பேரண்டமானது ஓர் இயந்திரமாக உருவகம் செய்து வந்ததுள்ளதைப் பார்த்தோம். இத்தகைய இயந்திரக் கண்ணோட்டமானது, பேரண்டத்தினை பகுதிகளாகப் பிரிக்கின்றது. பகுதிகளை தனிப்பட்ட முறையில் வரையறுக்கின்றது. அதன் இயக்கத்தை தனிமைப்படுத்திவிடுகின்றது. பேரண்ட‌ முழுமையின் உள்ளார்ந்து இணைக்கப் பட்டுள்ள உறவுகளைத் துண்டிக்கின்றது. இத்தகைய பகுதிகளைத்தான் பருப்பொருட்கள் என்று கருதிக் கொள்கிறோம்.

ஆனால் புதிய இயற்பியலானது இந்தக் கண்ணோட்டத்தை மாற்றி யமைத்தது. இதன்படி பிரபஞ்சம் என்பது உள்ளார்ந்து இணைக்கப்பட்டதோர் இயக்கபூர்வமான முழுமை என்கிற உருவகமாகக் காணப்படுகிறது. அதனுடைய அங்கங்கள் எல்லாம் உள்ளார்ந்த  சார்புதன்மை கொண்டவையாகும் என புதிய இயற்பியல் கொள்கைக் கூறுகின்றது.

3. பழைய கருத்தோட்டத்தின்படி அடிப்படையான வடிவமைப்புகள் இருப்பதை கருதி அவை தமக்குள் செயல்படுவதற்கான விசைகளும் யுக்திகளும் வகுத்து அதன் வழி செயல்முறை என்கிற கருத்தாக்கம் எழுந்தது. புதிய கருத்தோட்டத்தின்படி செயல்முறை தலையாயது என்றும் ஒவ்வொரு வடிவமைப்பும் உள்ளார்ந்த தொரு செயல்முறையின் வெளிப்பாடே என்றும் எண்ணுகிறோம்.

செயல்முறை ரீதியான சிந்தனையானது, இயற்பியலில் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை மூலம் தோன்றியது. பருப்பொருளின் நிறை எனப்படுவது ஆற்றலின் ஒரு வடிவமே என்பதை ஏற்றுக் கொண்டவுடன் பருப்பொருள் என்ற கருத்தும் அதன் வடிவமைப்பு அடைப்படையானது என்கிற கருத்தும் விஞ்ஞானத்திலிருந்து அகன்றுவிட்டன என்று தோன்றுகின்றது. நுண்ணணுவியல் துகள்கள் என்பவை பருண்மையான துகளால் ஆக்கப்பட்டவை அல்ல; அவை ஆற்றலின் வடிவங்கள் என்று உணர்ந்தறியப்பட்டது.

 ஆற்றல் என்பது செயல்பாடுகளோடும் செயல்முறைகளோடும் தொடர்புடையது எனலாம். இது நுண்ணணுவியல் துகள்கள் தன்னியல்பாகவே இயக்கப் பூர்வமானவை என்பதை உணர்த்துகின்றது. அவற்றை உற்று நோக்கும்போது யாதொரு பருப்பொருளையோ வடிவமைப்பையோ நாம் காண இயலவில்லை. நமக்கு தென்படுவதெல்லாம் ஒன்று மற்றொன்றாக இடையறா மாற்றத்திற்கு உள்ளாகின்ற இயக்கப் பூர்வமான படிவங்கள் மட்டுமே என்ற புதிய சிந்தனைப் போக்கு வளர்ந்தது.

 விஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை

விஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை; பலமுறை மாறியுள்ளது; தலையாய விஞ்ஞானப் புரட்சிகள் நிகழ்ந்த போதெல்லாம் விஞ்ஞானத்தின் அடித்தளம் சரிந்து வந்துள்ளது. முறைகள் பற்றிய உரைகள் என்கிற  தனது நூலில் தெகார்த்தே தனது கால விஞ்ஞானம் பற்றிக் குறிப்பிடுகையில் 'சரிந்து கொண்டிருக்கிற அடித்தளத்தின்மீது வலுவாக எதனையும் கட்டிவைக்க இயலாது' என்பார். எனவே வலிமையானதொரு அடித்தளத்தின் மீது புதிய விஞ்ஞானத்தைப் படைக்கத் துவங்கினார்.

ஆனால் முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்,  ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியலின் முன்னேற்றம் பற்றித் தனது சுயசரிதையில் பின்வரும் விமரிசனத்தைக் குறிப்பிடுகிறார்:‍ 'கட்டிடம் எழுப்பத்தக்கதோர் அடித்தளம் எங்குமே இல்லாத வகையில் யாரோ சரித்து விட்டதைப் போலத் தோன்றுகின்றது.'

விஞ்ஞான வரலாறு முழுமையுமே மீண்டும் மீண்டும் அறிவினுடைய அடித்தளம் மாறிக்கொண்டே வந்துள்ளது. சில சமயங்களில் முற்றாக நொறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தின் தற்போதைய புதிய கருத்தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அத்தகையதொரு உணர்வையே ஏற்படுத்துகின்றது.

பூட்ச்ட்ரேப் தத்துவம் பருப்பொருளுக்கான அடிப்படை கட்டுமானக் கற்கள் என்கிற கருத்தினை மட்டுமல்லாமல் அடிப்படை அமைப்புகள் என்கிற வகையில் எதையுமே ஏற்றுக் கொள்ளவில்லை; அடிப்படை விதிகள், அடிப்படையான நிலை எண்கள் அல்லது அடிப்படையான சமன்பாடுகள் அன்று எதனையுமே ஏற்று கொள்வதில்லை.

இயற்கையானது மனிதனையும் ஒருங்கிணைந்ததோர் உட்கூறாக உள்ளடக்கிய உள்ளார்ந்த இனைப்புக் கொண்ட உறவுகளின் இயக்கப் பூர்வமான வலைப் பின்னல் என்று கருதப்படுகிறது. இந்த வலைப்பின்னலின் ஒவ்வொரு அங்கமும் ஏனைய அங்கங்களைப் போலவே உறுதியான வடிவங்கள்; இக்கருத்தின்படி இயற்கை நிகழ்வுகள் எந்த ஓர் அங்கத்திற்கும் ஏனைய அங்கங்களைக் காட்டிலும் அடிப்படையானது என்கிற கருத்திற்கு இடமளிக்காத வகையில் கருத்தாக்கங்களின் வலைப்பின்னல் என்கிற அடிப்படையில் விவரிக்கப்படுகின்ற‌ன.

விஞ்ஞானத்தின் முற்றமுடிந்த உண்மை என்று ஒன்று உண்டா?

கார்டீசியன் கருத்தோட்டம் என்பது விஞ்ஞான அறிவு திட்டவட்டமானது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது. இதனை தெகார்த்தே தெளிவுபடுத்தியுள்ளார். புதிய கருத்தோட்டத்தின்படி விஞ்ஞானக் கருத்தாக்கங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்துமே குறைபாடு கொண்டவை யாகவும்  தோரயமானவையாகவும் இருக்கின்றன. விஞ்ஞானத்தில் என்றுமே திட்ட வட்டமான, தீர்மானகரமான புரிதலைக் கொடுத்துவிட முடியாது என்று நம்பப்பட்டது. விஞ்ஞானியர் முற்றமுடிந்த உண்மையை விளக்கவில்லை; உண்மையைப் பற்றிய எல்லைக்குட்பட்ட தோராயமான விள‌க்கத்தினைத் தருகிறார்கள்.

விஞ்ஞானத்தில் முற்றும் முடிந்த உண்மை என்று எதுவும் இல்லை. விஞ்ஞான விதிகள் எல்லாம் குறைபாடு உடையனவாகவும், தோராயமானதாகவும் இருக்கின்றன. இத்தகைய தோராயமான விளக்கங்கள் அடுத்தடுத்த முயற்சிகளில் காணப்படும் அடுத்தடுத்த முன்னேற்றங்களால் செழுமைப்படுத்தப் படுகின்றன. இருப்பினும் அந்த மாதிரி முன்னேற்றங்கள் பாரதூரமான மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை.

 ஒவ்வொரு புதிய கொள்கையும் முந்தைய கொள்கையோடு நன்கு வரையறுக்கப்பட்ட விதத்தில்தான் தொடர்புறுத்தப் படுகின்றது. புதிய கொள்கை பழையக் கொள்கையை முற்றிலும் மறுத்தலிப்பதில்லை. அதில் நிலவும் தோராயத்தன்மைச் சற்றே செழுமைப் படுத்தப்படுகின்றது. அவ்வளவுதான். எடுத்துக்காட்டாக குவாண்டம் இயந்திரவியல் நியூட்டனின் இயந்திரவியலை முழுமையாகத் தவறென்று நிரூபித்துவிடவில்லை. நியூட்டன் கால இயற்பியலோர் எல்லைக்குட்பட்டது என்று மட்டுமே நிறுவியுள்ளது.

ஒரு கொள்கையை புதிய துறைகளுக்கு விரிவாக்கம் செய்யும் பொழுதும், அதன் தோராயத் தன்மை புதிய கொள்கையால்  செழுமைப் படுத்தப்படும் பொழுதும் அந்தப் பழைய கொள்கையின் கருத்தாக்கங்கள் அனைத்துமே கைவிடப்படுவதில்லை என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டி யுள்ளது.

நியூட்டனின் கண்டுபிடிப்பு பேரண்டத்தின் சீரான ஒழுங்கமைப்பைப் பற்றி கூறுகின்றது. இந்த அடிப்படையைக் குவாண்டம் இயந்திரவியலிலோ சார்பியல் கொள்கையிலோ மறுத்தலித்து விடவில்லை. மாறாக உறுதிப்படுத்தப் பட்டு புதிய கொள்கைகளாக வளர்த்தெடுக்கப்படுகின்றன.

பேரண்டத்தின் அடிப்படையான ஒற்றை நிலை மற்றும் உள்ளார்ந்த சார்புத் தன்மை, அதனுடைய இயற்கை நிகழ்வுகளின் உள்ளார்ந்த இயக்கப் பூர்வமானதன்மை ஆகிய நவீன இயற்பியலின் இவ்விரு மாபெரும் மையக் கருத்துக்கள் எதிர்கால ஆய்வுகளால் என்றுமே மறுத்தலிக்கப்பட மாட்டா.

திடப்பொருள் குறித்த மரபுரீதியான கருத்தாக்கம் உடைந்ததா?

குவாண்டம் கொள்கையானது திடப்பொருள் குறித்த மரபுரீதியான கருத்தாக்கங்களை உடைத்தெறிந்தது. மரபுவழியான இயற்பியல் 'திடமான பருப்பொருள்' என்ற தீர்மானகரமான கொள்கையை வரையறுத்தது. ஆனால் நவீன இயற்பியல் 'சாத்தியக் கூறுகளுள்ள அலை' போன்ற கொள்கையை உருவாக்கியுள்ளது.  உலகம் என்பது தனித்துவமான 'அடிப்படைக் கட்டுமானக் கற்'களால் ஆனது என்பதை இது மறுக்கின்றது. இவ்வுலகை சுதந்திரமாக நிலைத்து நிற்கக்கூடிய மீச்சிறு அலகுகளாக சிதைக்க இயலாது என்பதை  குவாண்டம் கொள்கை நமக்கு உணர்த்துகின்றது. இது முழுமையின் பல்வேறு பாகங்களுக்கிடையே உள்ள சிக்கலான சிலந்தி வலை போன்ற வலைப்பின்னலைத்தான் காட்டுகின்றது.

அணுகருவிற்குள் செய்யப்பட்ட பரிசோதனைகளின் விளைவாக ஏராளமான நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது அணுவின் அடிப்படைத்துகள் என்ற கொள்கையை நீர்த்துப் போகவைத்தது. இதை தொடர்ந்து அணுக்கரு நிகழ்வுகளை ஆராய குவாண்டம் கொள்கை போதுமானதாக இல்லை என்று உணர்ந்த விஞ்ஞானிகள், சார்பியல் கொள்கையை துணைக்கழைத்தனர். ஏனெனில் அணுகருவிற்குள் இருக்கும் துகள்கள் பெரும்பாலும் ஒளியின் வேகத்தில் இயங்குவதாக கண்டறியப்பட்டன. ஆகவே ஒளியின் வேகத்திற்கு இணையாக இத்துகள்களின் இயக்கத்தை ஆராய்வதற்கு சார்பியல் கொள்கை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று உணரப்பட்டது.

அது குவாண்டம் கொள்கையையும் சார்பியல் கொள்கையையும் உள்ளடக்கியிருந்தது. குவாண்டம் கொள்கையானது அணுக்கருவின் வடிவமைப்பைப் பற்றியும்  அணுக்கருவிலுள்ள துகள்களுக்கிடையேயான உள்வினைகள் குறித்து ஆராயப் பயன்பட்டது. அதே போல அணுக்கரு விசையின் தன்மையைப் பற்றியும் அதன் சிக்கல் மிகுந்த  வடிவத்தைப் பற்றியும் ஆராய சார்பியல் கொள்கை பயன்பட்டது. இவ்வாறாக குவாண்டம் கொள்கையும் சார்பியல் கொள்கையும் சேர்ந்து துகள்கள் குறித்து ஒரு முழுமையான கொள்கையாக உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த சில பத்தாண்டுகளில் துகள்களின் உலகம் இயக்கப்பண்பு மிக்கது என்பதையும் இடையறா மாற்றத்திற்குட்படக் கூடியது என்பதையும் மிகவும் தெள்ளிய முறையில் காட்டியுள்ளது. இத்தகைய சோதனைகளில் பருப்பொருள் என்பது முழுமையான மாற்றத்திற்கு உட்படக் கூடியதாகவே தோன்றியுள்ளது. எல்லாத் துகள்களையுமே வெவ்வேறு துகள்களாக மாற்றிவிடலாம்; ஆற்றலிலிருந்து அவற்றைத் தோற்றுவிக்கலாம்; ஆற்றலாகவே மறைந்து போகும்படியும் செய்யலாம்.

இத்தகையதோர் உலகில் மரபுவழிக் கருத்தாக்கங்களான அடிப்படைத் துகள், பருப்பொருள், தனித்துவமான பொருள் என்பன வெல்லாம் பொருளிழந்து போயின. பிரபஞ்சம் முழுமையுமே பிரிக்க வோண்ணா ஆற்றல் படிவங்களாலான இயக்க பூர்வமானதொரு வலைபோல காட்சியளிக்கிறது. அவை அனைத்தும் பருப்பொருளின் அடிப்படையான ஒற்றை நிலையையும் உள்ளார்ந்த இயக்கவியல் பண்பையும் பிரபலிக்கின்றன. எனவே துகள்களை தனித்துவமான தொரு அமைப்பாக காணமுடியாது. முழுமையோடு ஒருங்கிணக்கப் பட்டதொரு பகுதியாகவே புரிந்து கொள்ளக் கூடும்.

இயற்கையை புறநிலையாக மட்டும் விளக்குவது இனி சாத்தியமா?
இந்தக் கேள்வி இதுவரை விஞ்ஞானம் கொண்டிருந்த அடிப்படையைத் தகர்ப்பனவாக இருக்கின்றது. நமது புலன்களின் வழியே இவ்வுலகின் நிகழ்வுகள், பொருட்களின் தன்மைகளை உணர்கின்றோம். இதை உணரும் தன்மை (perception) என்றுக் கூறலாம். புறநிலையில் நிகழும் ஒரு நிகழ்வை அல்லது இருக்கும் பொருளை நோக்கும் வேறுபட்ட தனிநபர்கள் வெவ்வேறாகப் பார்க்கின்றோம், உணர்கின்றோம். ஏன்? இந்தக் கேள்வி, இந்த விவாதத்திற்கான‌ ஒரு புதிய வெளியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறலாம்.
         புறநிலை என்பது ஒன்றுதான். புறநிகழ்வு என்பது ஒன்றுதான். ஆனால் அதை உற்று நோக்கும் எல்லோரும் ஒரே மாதிரியாக அந்த ஒன்றாக அப்படியே உணர்வதில்லை. உள்வாங்கிக் கொள்வதில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் அவர்களின் நோக்கம், விருப்பம், கவனம், திறன் ஆகிய அகநிலை அம்சங்கள் வேறுபட்டிருப்பதுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆக வேறுபட்ட அகநிலை அம்சங்கள் உடைய மனிதர்கள் புறநிலையை ஒரே மாதிரியாக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது.

அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் சில நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். ஒருவரது உணர்ந்தறியும் தன்மையானது அப்பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நாம் அனைவரும் வெவ்வேறு வகையில் நம்பிக்கைகள் கொண்டிருப்பதால் நமக்கு இவையாவும் வெவ்வேறாக உணர்ந்தறியப் படுகின்றன. சான்றாக, கற்கால மனிதன் ஒரு மரத்தைப் பார்ப்பதாக கற்பனைச் செய்துகொள்வோம்; அவரோடு உங்களது உணர்வை ஒப்பிட்டுப் பாருங்கள்; மேலும் ஒரு பயிற்சி பெற்ற தாவரவியல் அல்லது உயிரியல் விஞ்ஞானி உணர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும்.

 நிச்சயமாக, இம்மூன்று நபர்களும் மூன்று விதமாக விவரிப்பதை எளிதில் அறியமுடியும்.  இத்தகைய வேறுபாடுகள் ஒருவேளை உணர்தலில் உள்ள வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றன;  ஒருவரின் உணர்வுகள் அவர் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையின் பாற்பட்டதாகும். அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பின்னணியில் அவரது உணர்வுகள் வடிவமைக்கப்படுகின்றன என்றால் அது மிகையாகாது.  ஆக, அனைவரது உணர்வுகள் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளினால்  பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கருத்துரையானது, புறநிலையாக நின்று ஆராயும் அறிவியல் அணுகுமுறையை முற்றிலும் புறந்தள்ளிவிடுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளில், பாரம்பரியமான‌ அறிவியல் கோட்டை குலுக்கத் தொடங்கியது. அதாவது, ஐன்ஸ்டீன், ஐசன்பேர்க், சுரோடிங்கர், மாக்ஸ் போர்ன் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகள் புறநிலைத்தன்மை மற்றும் காரணகாரியம் போன்ற அறிவியலின் நிலைநிறுத்தப்பட்ட தூண்கள் கீழே விழத் தொடங்கியது. அப்போதுதான் நானூறு ஆண்டுகளாக கோலோச்சி வந்த பாரம்பரிய அறிவியல் ஒரு முடிவுக்கு வந்தது.

குவாண்டம் கொள்கையில் ஹெய்சென்பெர்க் நல்கியுள்ள பங்களிப்பு, விஞ்ஞானவியல் புறத்தன்மை என்கிற கருத்தியலை இனியும் பேணிக் காத்துக் கொன்டிருக்க இயலாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இயற்கையில் காணுகின்ற காட்சிகளுக்கும், படிவங்களூக்கும், விஞ்ஞானிகள்தம் மனங்களில் உள்ள படிவங்களோடும் அவர்களுடைய கருத்தோட்டங்களோடும் சிந்தனையோடும், மதிப்பீடுகளோடும் நெருங்கிய தொடர்புடையவை. ஆகவே அவர்கள் வந்த‌டையக்கூடிய விஞ்ஞான முடிவுகளில் அவர்களின் மனப்பாங்கு மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை மறுக்கவியலாது.

ஆராய்ச்சி செய்யப்படுகிற சோதனையில் ஆராய்ச்சியாளரும் முக்கிய பங்கு வகிக்கிறார் என்கிற கருத்தினை குவாண்டம் இயற்பியலில் ஹெய்சென்பர்க் புகுத்தினார். ஹெய்சென்பெர்க்கின் கூற்றுப்படி, நம்மைப் பற்றிப் பேசாமல் நம்மால் இயற்கையைப் பற்றிப் பேச இயலாது. இக்கருத்து அனைத்து நவீன விஞ்ஞானத் துறைகளுக்கும் பொருந்தும். இது புறஞ்சார்ந்த  விஞ்ஞானம் என்பதிலிருந்து அகம் சார்ந்த விஞ்ஞானத்திற்கான மாற்றம் என கூறப்படுகின்றது.

பழைய கருத்தோட்டத்தின்படி, விஞ்ஞான விளக்கங்கள் யாவும் புறஞ்சார்ந்தவை என நம்பப்பட்டது. அதாவது, ஆய்வாளனுடனோ அறிவின் செயல்முறையிடனுடனோ எத்தொடர்புமில்லை என்று நம்பப்பட்டது. புதிய கருத்தோட்டத்தின்படி அறிவாய்வியல் என்பது அறிவின் செயல்முறை பற்றிய புரிதலையும், இயற்கை நிகழ்வுகளைப் பற்றி விளக்குவதில் உள்ள‌ மனப்பாங்கையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நம்பப்படுகிறது.

குவாண்டம் இயற்பியலின்படி பார்ப்போனையும் பார்க்கப்படும் பொருளையும் பிரிக்கமுடியாது; இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.  ஆக குவாண்டம் இயற்பியலானது அகநிலையும் புறநிலையும் இணைத்து விடுகின்றது. இவ்வாறாக‌ ஆய்வாளன் என்பவன் ஆராய்ச்சிச் செயல்முறைகள் என்கிற சங்கிலித் தொடரிலிருந்து பிரித்தெடுக்க இயலாவண்ணம் இறுதிப் பிணைப்பாக இணைந்துவிடுகின்றான். குவாண்டம் பொறியமைவியல் என்பது ஆற்றல் இயங்கும் விதம் குறித்த ஒரு வகை மன உருவகம்தான். அதைப் புறவயமாக நிரூபிக்கும் அவதானிப்புகள் ஏதும் அதன் பின்புலமாக இல்லை.

இயற்கையை புறநிலையில் மட்டும்  நின்று விவரிப்பதும் விளக்குவதும் இனி இயலாத காரியமாகிவிட்டது. இதுவரை  ஆராய்ச்சியாளனுக்கும் ஆராயப்படுகிற உலகினுக்கும் இடையே ஒரு இணைக்கமுடியாத பிரிவினையைக் கடைபிடிக்கப்பட்டது. இதைக் கார்டீசியன் பிரிவினை என்றழைக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை குவாண்டம் அணுவியல் ஆய்வுகளில் இனி கையாளவியலாது என்று கூறப்படுகின்றது. இவ்வாறாக விஞ்ஞான ஆராய்ச்சியில் அகநிலையும் புறநிலையும் இணைந்து நிற்கின்றது. இந்த அணுகுமுறையை தத்துவத் துறையும் உள்வாங்கி செரித்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக