ஞாயிறு, 30 ஜூன், 2013

மார்க்சு-எங்கல்சின் பெரும்தொகுப்பு நூல்கள் (MEGA- Marx-Engels-Gesamtausgabe)


மார்க்சும் எங்கல்சும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்தனர். குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம், இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்தனர். 1840 களிலிருந்தே அவர்களின் நோக்கம், திட்டம் எல்லாம் சர்வதேச அளவிலானதாக இருந்தது. அவர்களின் ஆய்வுப்பணி பல துறைகளில் விரிந்து இருந்தது. சட்டம், தத்துவம், வரலாறு, அரசியல் பொருளாதாரம், தொழில்நுட்பம், விவசாயம், இரசாயனம், மண்ணியல், இயற்பியல், கணிதம், இனவியல் போன்ற பல துறைகளிலும் தமது ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி பல்வேறு நாடுகளைப் பற்றியும்  குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு, பிரிட்டன்,  அயர்லாந்து, ஸ்கான்டிநேவியா, போலந்து, ரஷ்யா, பாலகன் குடியரசு, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைப் பற்றி மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்தனர். அவர்களது அரசியல் நடவடிக்கைகளும் அவ்வாறே பலவேறு நாடுகளில் தொடர்ந்தது.

அரசியல் பொருளாதாரம் குறித்த விமரிசனத்திற்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார்.  தனது ஆராய்ச்சியின் விளைவாக இத்துறையில் மூன்று கையெழுத்துப் பிரதிகளை முடித்தார்.  முதலாவது 1857-58 வருடத்திய கிரன்ட்ரைஸ், இரண்டாவதாக,  1861-63 ஆண்டு கையெழுத்துப் பிரதி (உபரிமதிப்பின் தத்துவங்கள்) மற்றும் மூன்றாவதாக 1863-65 ஆண்டைய கையெழுத்துப் பிரதி (இது மூலதனத்தின் மூன்றாவது பாகத்திற்கானது)  இவை 'மூன்று கையெழுத்துப் பிரதிகள்' (three manuscripts) என்று அழைக்கப்படுகின்றன. (ஒரு சிலர் நான்கு கையெழுத்துப் பிரதிகள் என்றும் கூறுகின்றனர்.)

காரல் மார்க்சின் திட்டம்

காரல் மார்க்சு சேகரித்து வைத்திருந்த ஏராளமான‌ குறிப்புக்களையும் சுருக்கக் குறிப்புகளையும் வைத்துப் பார்க்கும் போது, அவர் பெரிய அளவிலான, சிறப்பான திட்டங்களை வைத்திருந்தார் என்று முடிவுக்கு வரலாம். ஆனால் அவர் மனதில் திட்டமிட்டிருந்தவற்றில் சிறிய அளவில் மட்டுமே நிறைவேற்ற முடிந்தது.

மார்க்சு தனது அரசியல் பொருளாதாரத்திற்கான விமரிசனத்திற்கான பங்களிப்பு என்ற நூலில் தனது ஆய்வு திட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். மூலதனம், நிலச்சொத்து, கூலி உழைப்பு, அரசு, அயல்நாட்டு வணிகம், உலக சந்தை போன்ற ஆறு தலைப்புகளில் தனது ஆராய்ச்சித் திட்டத்தை வைத்திருந்தார் என்று அறியலாம்.

மேலும் 1957 க்கும் 1863 க்கும் இடையில் அரசியல் பொருளாதாரத்திற்கான விமரிசனம் குறித்த ஆறு நூல்களையும், 1863 க்குப் பிறகு நான்கு நூல்களையும் எழுத திட்டமிட்டிருந்தார். நான்கு நூல்களில் மூன்று பாகங்கள் தத்துவத்திற்கும், ஒன்று தத்துவத்தின் வரலாற்றிற்கும் ஒதுக்கி இருந்தார் என்பது புலனாகிறது.

இதை மனதில் வைத்துக் கொண்டு ஏராளமான குறிப்புகளையும் சுருக்க குறிப்புகளையும் எழுதியுள்ளார். மார்க்சால் படியெடுத்து, குறிப்பெடுத்து, தொகுத்து எழுதியவை மட்டும் பத்து பாகங்களைக் கொண்டிருக்கும். மார்க்சின் குறிப்பேடுகளில் ஆங்காங்கே தனது கருத்துக்களையும் எழுதி வைத்திருப்பார். அவற்றை தனது ஆராய்ச்சித் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் குறிப்பேடுகள் ஆகும். அவர் எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளும் சுருக்கஉரைகளும் இடையில் தமது கருத்துக்களையும் விமரிசனங்களையும் எழுதி வைத்திருப்பார்.

இவை அனைத்தையும் வெளியிடுவது என்பது அவரது  ஆய்வுத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். மார்க்சு எங்கல்சின் படைப்புகள், எழுத்துக்கள் முழுவதையும் வெளியிடும் திட்டத்திற்கு மெகா வெளியீட்டுத்திட்டம் (MEGA- Marx- Engels- Gesamtausgabe) என்று அழைக்கப்படுகின்றது.

மார்க்ஸின் அனைத்து எழுத்துக்களையும் வெளியிட வேண்டும் என்ற கருத்து 1910 இல் ஆஸ்ட்ரோ மார்க்சியர்களிடம் இருந்தது. இதற்காக நடத்தப்பட்ட‌ கூட்டத்தில் டேவிட் போரிசொவிச் ரியசானோவ் என்பவர் கலந்துக் கொண்டார். நிதி நெருக்கடி காரணமாக இம்முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் முதல் உலகப் போர் ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையில் மார்க்சு மற்றும் எங்கல்ஸின் நூல்களை காரல் காவுஸ்கி போன்றோர் வெளியிட்டனர். மார்க்சு 1861-63 ஆண்டு எழுதிய கையெழுத்துப்பிரதியின் ஒரு பகுதியை வெளியிட்டனர். இது உபரி மதிப்புக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது. இறுதியாக ரியஸானோவ் இரண்டு பாகங்களை வெளியிட்டார். அவை மார்க்சும் எங்கல்சும் 1850 இல்  நியூயார்க் டிரிபியூன், பியூப்பள்ஸ் பேப்பர் போன்ற பத்திரிகைகளுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியதாகும். இவர் பின்னர் ஆகஸ்ட் பேபெல் மற்றும் காரல் காவுஸ்கி போன்றோருடன் தொடர்பு கொண்டு மார்க்சு எங்கல்சின் கையெழுத்துப் பிரதிகளை பார்வையிட வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவை ஜெர்மன் சமூக சனநாயக கட்சியிடம் இருந்தது. மேலும் லாரா லாஃபர்க் என்பரும் இவற்றை பாதுகாத்து வைத்திருந்தார். 1917 ரசிய புரட்சிக்கு பின்னர் மார்க்சு எங்கல்சின் அனைத்து எழுத்துக்களையும் வெளியிடும் வாய்ப்பைப் பெற்றார்.  லெனினின் உதவியுடன் இப்பணியை செய்தார். அதற்காக‌ ஐரோப்பா முழுவதும் தொடர்பு கொண்டு மார்க்சு எங்கல்சின் எழுத்துக்களைப் பெற்றார்.

1883 இல் மார்க்சு இறந்ததும் தனது அனைத்து எழுத்துக்களும், பிரதிகளும் எங்கல்சிடம் விட்டுச்சென்றார். பின்னர் 1895இல் எங்கல்சு இறந்தார். எங்கல்சின் உயில்படி, அனைத்து எழுத்துக்களும் மார்க்சின் எழுத்துக்கள் அனைத்தும் மார்க்சின் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிலவருடங்கள் கழித்து இந்தத் தாட்கள் அனைத்தும் லண்டனிலிருந்து பெர்லினுக்கு கொண்டுவரப்பட்டு ஜெர்மன் சமூக சனநாயக கட்சியின் ஆவணக்காப்பகத்தில் வைக்கப்பட்டது.  அப்போது ஜெர்மன் சமூக சனநாயகக் கட்சியின் டிரஸ்டிகளாக இருந்த ஆகஸ்ட் பேபெல் மற்றும் எட்வர்ட் பெர்ன்ஸ்டைனிடம்  ஒப்படைக்கப்பட்டன. 

முதல் மெகா வெளியீட்டுத் திட்டம்

முதல் மெகா வெளியீட்டுத் திட்டம் 1920 இல் உருவாக்கப்பட்டது. இது மார்க்சு, எங்கல்சின் பெரும்தொகுப்பு நூல்களை வெளியிடும் திட்டமாகும்.  இந்த வெளியீட்டுக் குழுவிற்கு தலைவராக இருந்தவர்  ரியசானோவ் ஆவார். முதல் மெகா திட்டம் 42 பாகங்களை வெளியிடுவதாக திட்டமிடப்பட்டது. அவை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் பகுதி 17 பாகங்களைக் கொண்டதாக இருக்கும். இதில் மார்க்சு எங்கல்சு எழுதிய எழுத்துக்கள் (மூலதனம் நீங்கலாக). இரண்டாவது பகுதி 13 பாகங்களை கொண்டதாக இருக்கும். இவற்றில் மூலதனம் குறித்து எழுதிய எழுத்துக்கள் அடங்கும். மூன்றாவது பகுதி  மார்க்சு எங்கல்சு ஆகியோர் தங்களுக்குள்ளும், பிறருக்கும் எழுதிய கடிதங்கள் இடம் பெறும்.  நான்காவது பகுதி இரண்டு பாகங்களைக் கொண்டது. இவற்றில் பொருளடக்கம் இடம் பெறும்.

இந்த திட்டத்தின்படி 1927 க்கும் 1935 க்கும் இடையில்  11 பாகங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. இவற்றில் பொருளாதார தத்துவார்த்த குறிப்பேடுகள் மற்றும் ஜெர்மன் கருத்தியல் போன்ற நூல்களும் அடங்கும்.

1930 வாக்கில் பதிப்புக் குழுவின் முயற்சி தடைப்பட்டது. 1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பிறகு,  ஜெர்மன் சமூக சனநாயகக் கட்சியின்  ஆவணக் காப்பகத்தில் வைக்கப்படிருந்த மார்க்சு, எங்கல்சு எழுத்துக்கள் உட்பட் பெரும்பாலான ஆவணங்களை வெளிநாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. சில வருடங்களுக்கு பின்னர் அவை டச்சு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு விற்கப்பட்டன. பின்னர் அவை  ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் சமூக வரலாற்று சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நீண்ட காலம் இப்பணி தள்ளி வைக்கப்பட்டது. 1950 களுக்குப் பின்னர் இப்பணிக் குறித்து மாஸ்கோவிலும் பெர்லினிலும் மீண்டும் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் இப்பணியைத் தொடர இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று வெளியீட்டுத் திட்டத்திற்கு ஆகும் பெரும்செலவு; மற்றும் ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்கொள்ளும் கருத்தியல் பிரச்சனைகள்.

இரண்டாவது மெகா வெளியீட்டுத் திட்டம்

எதிர்ப்புகளுக்கு இடையில் 1960 களில் மாஸ்கோவிலும் பெர்லினிலும் இருக்கும் மார்க்சிய லெனினிய நிறுவனத்தால் இரண்டாவது மெகா வெளியீட்டுத் திட்டம் துவங்கியது. இது முதல் மெகா திட்டத்தைவிட விரிவானதாகும். இது ஒரு வரலாற்று திறனாய்வு பதிப்புத் (Historical- Critical edition) திட்டமாகும். இதில் மார்க்சு எங்கல்சின்  நூல்கள் எழுத்துக்கள் முழுவதும் அடங்கியதாக இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த இரண்டாவது வெளியீட்டுத் திட்டம் துவக்கத்தில் 100 பாகங்களை கொண்டதாக இருக்கும் எனவும் திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் இத்திட்டம்  165 பாக‌ங்களாக வெளியிடும் மிகப்பெரிய திட்டமாக விரிவடைந்தது. இதுவும் நான்கு பிரிவுகள் அடங்கியதாக இருந்தது. முதலாவது மூலதனம் நீங்கலாக அனைத்து பிரதிகள் அடங்கியது; இரண்டாவது மூலதனம் குறித்த பிரதிகள் மற்றும் அதற்கான தயாரிப்புக் குறிப்புகள் அடங்கியது; மூன்றாவது மார்க்சு எங்கல்சிற்கு இடையே இருந்த கடிதங்கள்; நான்காவது சுருக்கக் குறிப்புகள், மேற்கோள்கள், ஓரக்குறிப்புகள் அடங்கியது.

அப்போது மார்க்சு எங்கல்சின் நூல்கள், அசல் கையெழுத்துப் பிரதிகள் பெரும்பாலானவை சமூக வரலாற்று சர்வதேச நிறுவனம் (International Institute of Social History) என்ற நிறுவன‌த்திடம் இருந்தது. இன்றுவரை இருந்து வருகின்றது. இந்த நிறுவனம் ஏராளமானவற்றைப் பாதுகாத்து வருகின்றது. சான்றாக, ஆவணங்கள்,  எங்கல்சு, புருனோ பௌவர், நிகோலாய் டேனியல்சன், மோசஸ் ஹெஸ், லூத்விக் குகல்மான், ஃபெர்டினன்ட் லாசல், வில்ஹெய்ம் லிப்னேட், பியரி ஜோசப் புருதோன், அர்னால்ட் ரூக் மற்றும் பலருக்கு மார்க்சு எழுதியக் கடிதங்கள், தனது குடும்ப நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள்,  மார்க்சின் முனைவர் பட்டத்திற்கான கையெழுத்துப் பிரதிகள்,  ஹெகலின் உரிமையின் தத்துவம் மற்றும் ஜெர்மன் கருத்தியல் போன்ற நூல்களுக்காக எழுதிய கையெழுத்துப் பிரதிகள், 1857-58 பொருளாதாரக் கையேடுகள் மற்றும் மூலதனத்தின் பகுதிகள், இவற்றில் அச்சாக்கப்பட்ட பிரதிகளில் எழுதப்பட்ட குறிப்புகள், திருத்தங்கள்,  பொருளாதாரம், வரலாறு, தத்துவம் மற்றும் இதர அறிவியல் குறித்து பல்வேறு நூல்களிலிருந்தும், வெளியீடுகளிலிருந்தும் எடுக்கப்பட்ட சுருக்கக் குறிப்புகள் சுமார் 200 குறிப்பேடுகள் இருந்தன.

எங்கல்சின் தனி ஆவணங்கள், மார்க்சு, விக்டர் ஆட்லர், ஆகஸ்ட் பேபெல், எட்வர்ட் பெர்ன்ஸ்டைன், காரல் காவுஸ்கி ஆன்டோனியோ லாப்ரியோலா, பால் லாஃப்ர்க், பிளாக்னாவ் போன்றோருக்கு எழுதிய கடிதங்கள், இயற்கையின் இயக்கவியல் என்ற நூலுக்கு எழுதிய கையெழுத்துப்பிரதிகள், டூரிங்க்கு மறுப்பு என்ற நூல் எழுதுவதற்கான தயாரிப்புக் குறிப்புகள், நூல்களிலிருந்தும் வெளியீடுகளிலிருந்தும் எடுக்கப்பட்ட சுருக்கக் குறிப்புகள் போன்றவை ஆகும்.

புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்தால் சுமார்  30 பாகங்களில் அடங்கும்.  இவை யாவற்றையும் சேர்த்து பயிலும்போது  மார்க்சு எங்கல்சின் முழு சிந்தனையும் வெளிப்படும்.  கடிதங்களைப் பொருத்தவரை,  மார்க்சும் எங்கல்சும் சேர்ந்து சுமார் 2000 நபர்களிடம் தொடர்புகள் வைத்திருந்தனர். அவர்களுக்கு மார்க்சும் எங்கல்சும் சுமார் 4000 கடிதங்களை எழுதியுள்ளனர். சுமார் 10,000 கடிதங்கள் இருவருக்கும் பலரும் எழுதப்பட்டுள்ளன.  மார்க்சு மற்றும் எங்கல்சின் கடிதங்கள் ஏறத்தாழ அனைத்து கடிதங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்தையும் முழுமையாக வெளியிடப்படும்போது மட்டுமே இவர்களின் முழு சிந்தனையின் வீச்சும் வெளிப்படும்.

மார்க்சிய லெனினிய சர்வதேச நிறுவனம் பத்திரிகை

மார்க்சிய லெனினிய சர்வதேச நிறுவனம் (IMES) 1990 இல் ஆம்ஸ்டர்டாமில் துவங்கப்பட்டது.  இதற்கு இந்த பணியை மட்டும் எடுத்துக்கொண்டது. இந்த நிறுவனம் 1994 இலிருந்து ஓரு பத்திரிகையை நடத்திவருகின்றது. இதன் மூலம் மார்க்சு மற்றும் எங்கல்சு ஆகியோரின் வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றிய கட்டுரைகள், அதற்கான ஆதாரங்கள்,  அவற்றின் வரலாற்று சூழ்நிலைமைகள் குறித்தும் அவர்களின் படைப்புகள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும்  மெகா பதிப்புத் திட்ட பணிகள் குறித்த அறிக்கைகள், சமீபத்தில் வெளியிட்ட நூல்கள் பற்றிய திறனாய்வுகள்,  இந்நிறுவனத்தின் மாநாடு மற்றும் இதர நிகழ்வுகள் குறித்தும் வெளியிடப்பட்டு வருகின்றன.

மெகா வெளியீட்டுத்திட்டத்த்தில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள்:

1. பெர்லினில் செயல்படும் (BBAW team) குழு

2. ஜெர்மானிய பிரஞ்சு குழு

3. மாஸ்கோவில் செயல்படும் குழு

4. மாஸ்கோவில் செயல்படும் இன்னொரு குழு

5. ஜப்பானிய குழு

6. டேனிஷ் குழு

7. ஜெர்மானிய டச்சுக் குழு

8. அமெரிக்கா குழு

போன்ற குழுக்கள் தங்களுக்குள் வேலைப்பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர மெகா வெளியீட்டுத் திட்டத்தில் பெர்லின் ஹும்போல்ட் பல்கலைகழகத்தின் குழுக்கள் இரண்டு தாமாகவே முன்வந்து செயல்படுகின்றன.                                                                                              







  









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக