திங்கள், 16 செப்டம்பர், 2013

சீனா - 2013 சமீர் அமீன் அவர்களின் கட்டுரையை முன்வைத்து.....


மன்த்லீ ரிவீவ் என்ற இதழில் 'சீனா - 2013' என்ற கட்டுரையை சமீர் அமீன்  எழுதியுள்ளார். அவர் ஏற்கனவே சில நூல்களை எழுதியுள்ளார்.  (The Liberal Virus, The World We Wish to See and The Law of Worldwide)
இது சீனாவின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றியதாக அமைந்திருக்கின்றது.   சிலர் சீனா முதலாளித்துவப் பாதைக்குச் சென்றுவிட்டது என்று வாதிடுகின்றனர். வேறுசிலர் சோசலித்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறுகின்றனர், இன்னும் சிலர் இதை சீனமாதிரியிலான சோசலிசம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். இந்த விவாதங்களை முன்னெடுப்பதும் இதுகுறித்த ஆரோக்கியமான வாதங்களை முன்வைக்கவும் இக்கட்டுரை உதவும் என்று நினைக்கின்றேன்.
சமீர் அமீன் ஐந்து பிரச்சனைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு தனது விவாதத்தை முன்னெடுக்கின்றார். 1.விவசாயப் பிரச்சனை, 2. சிறுவீத உற்பத்தி குறித்து, 3.அரசு முதலாளித்துவமா அல்லது சோசலிசத்திற்கான மாற்றமா? 4.உலகமயமாக்கலில் சீனாவின் ஒருங்கிணைந்த நடவடிக்கை, 5. சீனா மாபெரும் வல்லமைபடைத்த நாடு  ஆகிய ஐந்து விசயங்களை விளக்குவதன் மூலமாக தனது கருத்தை முன்வைக்கின்றார்.
விவசாயப் பிரச்சனை:
சீனாவின் புரட்சிகரப் பாதையை வகுத்தவர் மாவோ. இவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபுரபுத்துவ எதிர்ப்பு என்ற அணுகுமுறையிலிருந்து சீனாவின் புரட்சியை நிறைவேற்றினார். ஆனால் ஏகாதிபத்தியத்தையும் நிலபிரபுத்துவத்தையும் வீழ்த்தியப் பிறகு  சீனாவில் சோசலிசம் நிறுவப்பட்டுவிட்டது என்று மாவோ என்றுமே நினைக்கவில்லை.  சோசலிசக் கட்டுமானத்தின் நீண்ட நெடிய இயக்கப் போக்கின் மிகவும் ஆரம்ப நிலையில் இருப்பதாக மட்டுமே எண்ணினார்.
சீனப் புரட்சி முடிவுக்கு வந்ததும் விவசாய நிலங்கள் தனியார்மயப் படுத்தவில்லை; இவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை; விவசாய நிலங்கள் யாவும் அரசுக்குச் சொந்தமாக இருந்தன; கிராம கம்யூன்களின் நிர்வாகத்தில் இருந்தன.   நிலங்களின் உடமை கிராமபுற மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  ஆனால் ரசியாவைப் பொருத்தவரை, நிலங்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களின் முழு உரிமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நிலம் சரக்காக மாற்றியமைக்கப்பட்டன. அவற்றை வாங்கவும் விற்கவும் விவசாயிகளுக்கு உடைமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னாளில் சீனாவில் விவசாய நிலங்கள் கூட்டுறவுமயமாக்கத்திற்கு விவசாய மக்களிடமிருந்து பெரிய எதிர்ப்பு எதுவும் எழவில்லை.  ஆனால் ரசியாவில் விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக, ஸ்டாலின் காலத்தில் கூட்டுறவு மயமாக்கத்தை திணிக்க வேண்டியிருந்தது.
முதலாளித்துவ புரட்சியின் விளைவாக நிலங்கள் தனியார்மயமாக்கப்பட்டன.  நிலங்கள் விவசாயிகளுக்கு முற்றுரிமையாக்கப்பட்டன.   இதுமட்டுமே லாபகரமானக் கருதப்பட்டன. நிலங்கள் பெரியளவிலான உற்பத்தியில் ஈடுபடும்போது மட்டுமே அதிக உற்பத்தி பெருகும் என்ற எண்ணம் பொதுவாக அப்போது நிலவிய நாடுகளிடம் இருந்தது. சிறிய அளவிலான விவசாய உற்பத்தியில் உற்பத்தியும் பெருகாது என்று எண்ணினர்.
இத்தகைய கோட்பாட்டை ரசியா ஏற்றுக் கொண்டு நிலங்களை தனியார்மயப்படுத்தியது. ஆனால் இந்தக் கோட்பாட்டை மாவோ ஏற்கவில்லை. சீனாவிற்கு இது ஏற்புடையதாக இருக்காது என்று முடிவெடுத்தார். ஆகவே சீனாவில்  நிலம் தனியார்மயப்படுத்தப் படவில்லை; இது ஒரு சரக்காக கையாளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன விவசாயிகளின் வரலாற்று ரீதியிலான மனநிலையும் இதற்கு ஒத்துழைத்தது.
பெரும்பான்மையான நிலமற்ற விவசாயிகள், ஏழை விவசாயிகள் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து கொண்டனர்மத்தியதர விவசாயிகள் நட்புச் சக்திகளாக இருந்தனர்; ஆனால்  பணக்கார விவசாயிகளைப் பொருத்தவரை எப்போதுமே தனிமைப்படுத்தப்பட்டனர். பணக்கார விவசாயிகளை முழுமையாக எதிர்த்துக் கொள்ளவில்லை. மாவோவின் இந்த அணுகுமுறைதான் விவசாய புரட்சியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.
இதனால் பெரும்பான்மையான கிராமவாசிகள் நிலங்களை தங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற பிரச்சனை எழவில்லை. இந்த அணுகுமுறை வெற்றி பெற்றதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கவே செய்தது. 19 ஆம் நூற்றாண்டில் சீனாவில் நடந்த‌ தைபிங் புரட்சியைச் சுட்டிக்காட்டலாம்.  போல்ஷ்விக் கட்சி தோல்வியடைந்த இந்த பிரச்சனையில் மாவோ வெற்றிபெற்றார் என்று சமீர் அமீன் கூறுகின்றார்.
இதுவே சீனா முதலாளித்துவ அடிப்படை இல்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணியாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஏனெனில் முதலாளித்துவப் பாதை என்பது  நிலம் சரக்காக மாறுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. சீன விவசாயத்தில் தனியார்மயமாக்கமோ அல்லது தனியுடைமையோ நடந்தேறவில்லை என்பது இவரது வாதம். ஆனால் இவர் முதலாளித்துவத்தின் அடிப்படையாக இவர் நிலம் சரக்காக மாறுவது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இவரது வாதத்தை முன்வைப்பது சரியல்ல.
சிறுவீத உற்பத்தி குறித்து..
முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களில் சிறுவீத உற்பத்தி முறை அதிகமாக இருந்துவந்துள்ளதாக அறிகின்றோம். விவசாயத்திலும்சரி, கைவினை தொழில்களிலும் சரி சிறுவீத உற்பத்தி பெருமளவு இருந்து வந்துள்ளது. இது முதலாளித்துவத்திலும் ஒரு கணிசமான செல்வாக்கைச் செலுத்தி வருகின்றது. 
இங்கு குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால்  முதலாளித்துவ சமுதாயத்தில் சிறுவீத உற்பத்தியானது  சிறு உடைமையுடன் இணைந்ததாக நிலவுகின்றது. விவசாயத்திலும் தொழிற்துறையிலும் சிறுவீத உற்பத்தி என்பது சிறு உடைமையுடன் இணைந்தே இருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் நிகழ்வுப் போக்கில் சிறுவீத உற்பத்தியும் காணமல் போகின்றது. அனைத்து துறைகளிலும் ஏகபோக உற்பத்தி என்பது தீர்மானிப்பதாக மாறிவிடுகின்றது.
சிறுவீத உற்பத்தியானது சோசலிச உற்பத்திமுறையின் உற்பத்தி பரவலாக்கத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்றது. எனவே சோசலிச உற்பத்திமுறையின் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக சிறுவீத உற்பத்தி திகழும் என்பதை அறியலாம்.  சோசலிச உற்பத்திமுறையில் காணப்படும் சிறுவீத உற்பத்தி என்பது முதலாளித்துவத்தில் காணப்பட்ட சிறுவீத உற்பத்தியை விட பண்புரீதியில் வேறுபட்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சோசலிசத்தில் காணப்படும் சிறுவீத உற்பத்தியானது சிறு உடைமையுடன் இணைக்கப்பட்டதாக இருக்க வியலாது. அந்த அளவில் சமூகத் தன்மை பெற்றிருக்கும் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சிறுவீத உற்பத்தி என்பது தேசிய உற்பத்தியில் கணிசமானதாக இருக்கும்.
இந்த விசயத்தைப் பொருத்தவரை, சீன நிலைமையை ஆராய்ந்து பார்த்தால்விவசாயத்துறையிலும் தொழிற்துறையிலும் சிறுவீத உற்பத்தி பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் அந்த சிறுவீத உற்பத்தியானது சிறு உடைமையோடு இணைந்ததாக இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
சீனாவில் கம்யூனிஸ்டு கட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து   சிறுவீத குடும்ப உற்பத்தியை நடைமுறையில் கொண்டு வரப்பட்டது. இது சிறிய அளவிலான கூட்டுறவு வடிவங்களில் நடத்தப்பட்டது. இச்சிறு உற்பத்தியானது தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டது.
1970 களில் கூட்டுறவு முறையிலான உற்பத்திக் கட்டமைக்கப்பட்டது. இந்தக் கூட்டுறவு முறையை கம்யூன்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இது சிறுவீத உற்பத்தி, பெருவீத உற்பத்தியை நோக்கியதாக இருந்தது.  இதில் பலவிதமான சிக்கல்களை எதிர்கொண்டது.
அதிகாரம் கீழ்மட்டம் வரை பரவலாக்கப்படுவதற்கும் கம்யூனிஸ்டு கட்சியின் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கும் எப்போதுமே ஒரு முரண்பாடு இருந்துவந்துள்ளது.
1980 இல் கம்யூன்கள் கலைக்கப்பட்டன. இது டெங்சியோபிங் ஆட்சியில் நடத்தப்பட்டது. கம்யூன்கள் மேற்கொண்டிருந்த சிறுவீத உற்பத்தி கலைந்து போனது. குடும்பங்கள், கம்யூன்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டன.  குடும்ப சிறு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.  கடந்த முப்பது ஆண்டுகளில் சிறுவீத உற்பத்தையைப் பொருத்தவரை இதுதான் நிலைமை. இந்த மாற்றங்களின் விளைவாக, சிறுசிறு நிலங்களை வைத்திருந்தவர்களின் அளிக்கப்பட்டிருந்த  உரிமைகளில் சிறிது மாற்றத்தை கொண்டுவரப்பட்டது.
அதாவது கம்யூன்கள் மேற்பார்வையில் குடும்ப அமைப்புகளுக்கு விடப்பட்டிருந்த நிலத்தை வேறுஒரு சிறு உற்பத்தி யில் ஈடுபடும் அமைப்புக்கோ அல்லது சிறு பண்ணைகளுக்கோ விற்கவோ அல்லது வேறு நிலத்தை வாங்கவோ முடியாது என்பது முந்தைய நிலையாக இருந்தது. ஆனால் பிறகு தங்களின் அனுபவத்தில் உள்ள நிலத்தை வேறு ஒரு உற்பத்தி அமைப்புக்கு வாடகைக்கு விடு உரிமை வழங்கப்பட்டது. இத்தகைய மாற்றத்தின் மூலம் நிலத்தோடு ஒருவகையில் பிணைக்கப்பட்டிருந்த கிராம மக்கள் நகரத்தை நோக்கி செல்ல ஏதுவானது.
அரசு முதலாளித்துவமா அல்லது சோசலிசத்திற்கான மாற்றமா?   
அரசு முதலாளித்துவத்தின் தன்மையை அடைந்துவிட்டதாக ஒரு முக்கிய விமரிசனம் சீனாவின் மீது இருக்கின்றது.   இதற்கான விமரிசத்தின் மீது சமீர் அமீன் குறிப்பிடும்போது இது ஒரு பொதுவான அருவமான விமரிசனமாகப் பார்க்கின்றார்.முதலாளித்துவம் என்பது இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றார். ஒன்று ஒடுக்கப்பட்ட அல்லது அந்நியமயமாக்கப்பட்ட உழைப்பு, இரண்டாவது உபரி உழைப்பை உறிஞ்சுவது என்று பட்டியலிடுகின்றார்.
நவீன காலத்தில் எல்லா நாடுகளிலும் அரசு முதலாளித்துவம் என்பது தவிர்க்கமுடியாதது. இது வரலாற்று முதலாளித்துவத்தைக் கடப்பதற்கும்  சோசலிசம் என்ற நீண்ட நெடியக் காலக் கட்டத்தின் ஆரம்ப நிலையை எட்டுவதற்கும் முன்நிபந்தனையாகும் எனக் குறிப்பிடுகிறார்.           
சீன அரசு முதலாளித்திற்கு மூன்று முக்கிய நோக்கங்கள் வரையறுக்கப்பட்டன. ஒன்றுஒரு ஒருங்கிணைந்த சுயாதிபத்தியம் கொண்ட நவீன தொழிற்துறை அமைப்பை உருவாக்குவது; இரண்டாவதுஇத்தகைய நவீன தொழிற்துறையுடன் கிராமபுற  சிறுதொழில் உற்பத்தியுடன் உறவை மேம்படுத்துவது; மூன்றாவது,   ஏகாதிபத்திய ஏகபோகத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுவரும் சர்வதேச அமைப்புடன் சீனாவின் ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்துவது  போன்றனவாகும்.
இம்மூன்று நோக்கங்களும் சீனாவை எந்தப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பது கவனிக்கப்படவேண்டிய விசயமாகும். சோசலித்தின் ஆரம்பக் கட்டத்தை நிலைநிறுத்திக் கொண்டு முன்னேறுமா அல்லது முதலாளித்துவ பாதைக்கு திரும்புமா என்பவைதான் சீன மக்களின் கவலையாகும்.  
சீன அரசு முதலாளித்துவத்தின் முதல்கட்டம் 1954 இல் துவங்கி 1980 இல் முடிவடைந்தது.  இந்தக் கட்டத்தில் விவசாய நிலங்கள் உட்பட‌ அனைத்து நிறுவனங்களையும் தேசியமயமாக்கம் செய்யப்பட்டது. அடுத்தக் கட்டத்தில் அவற்றை தனியார்நிறுவனத்திற்கும், வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் தாராள கிராமபுற நகர்புற சிறுவீத உற்பத்திக்கும் திறந்துவிடப்பட்டன. இத்தகையப் போக்குகள் யாவும் முதலாளித்துவ மீட்சியை அடையாளப்படுத்தவில்லையா? ஆனாலும் மாவோ காலத்தில் நிறுவப்பட்ட பெரியளவிலான அடிப்படைத் தொழிற்சாலைகளும்  நிதி நிறுவங்களையும் (Credit System)  தனியார் மயமாக்கலுக்கு திறந்துவிடப்பட‌வில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்பது இவரது வாதம். 
1950 களிலிருந்து 2012 வரையிலும் சீன அரசு முதலாளித்துவம் ஏராளமானவற்றை சாதித்துள்ளது என சமீர் அமீன் கருதுகின்றார். ஒருங்கிணைந்த ஒரு சுயாதிபத்தியம் கொண்ட நவீன உற்பத்திமுறையை உருவாக்கியது, அதன் முதன்மையான சாதனை என்று கொள்ளப்படுகின்றது. யாரையும் சார்ந்திராமல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை தாமே உருவாக்கிக் கொள்ளத்தக்க ஆற்றலைப் பெற்றுள்ளது.
இன்னமும் சீனா அதன் மாபெரும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய‌ சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.   முதலாவதும் முக்கியமானதுமான  குடியிருப்பு வசதிசெய்து தருவது. 400 மில்லியம் புதிய நகரவாசிகளுக்கு போதுமான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது. இரண்டாவதுமிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலைகள், இருப்புப்பாதைகள், அணைகள், மின்சக்தி நிலையங்களை நிறுவவேண்டி யது. மூன்றாவதாக  அனைத்து கிராமபுறங்களையும் திறந்துவிடுவது, நான்காவதாக வளர்ச்சியின் மையத்தை கடற்கரை சார்ந்த பகுதிகளிலிருந்து நிலம்சார்ந்த உள்நாட்டுப் பகுதிகளுக்கு மாற்றுவது போன்றவையாகும்.
உலகமயமாக்கலில் சீனாவின் ஒருங்கிணைந்த நடவடிக்கை:
சந்தை சோசலிசமானாலும் சரி, அரசு முதலாளித்துவமானாலும் சரி  இன்றைய முதலாளியத்துவ உலகமயமாக்கலில் சீனாவின் பங்கெடுப்பைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சமீன் அமீன் ஆராய்கின்றார்.
சோவியத்தைப் பொருத்தவரை, அது உலக முதலாளித்துவ அமைப்பிலிருந்து விலகியிருந்து கொண்டு, கிழக்கு ஐரோப்பாவுடன் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த சோசலிச அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டது.  அந்த முயற்சியில் சோவியத் உலக முதலாளித்திலிருந்து விலகி நின்று பெருமளவு வெற்றியை ஈட்டியதை மறுக்கமுடியாது என்றாலும் கிழக்கு ஐரோப்பாவினுடன் ஒருங்கிணைவை ஏற்படுத்துவதில் அந்தளவு வெற்றிபெற முடியவில்லை. ஆனால் சோவியத் சீனா ஒருங்கிணைப்பு என்பது எப்போதுமே இல்லாமல் போனது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
மாவோ தனக்குரிய வழியில் தனிவழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். உலகமயமாக்கலில் சீனா தன்னை இணைத்துக் கொண்டது. சீனா தனது உற்பத்தியை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்றிக் கொண்டது. இதனால் ரஷ்யாவிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து நிற்க வேண்டியதாயிற்று.
உலகமயமாக்கலில் சீனாவின் இணைந்திருப்பது கூட நிபந்தனைக்கு உட்பட்டது. அதுவும் நிதி உலகமயமாக்கலில் சீனா இணையாமல் வெளியே சீனா இருக்கின்றது.  சீனா தனக்கென உள்நாட்டு பணப்பட்டுவாடா அமைப்புமுறையை (credit system) உருவாக்கிக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா மாபெரும் வல்லமைபடைத்த நாடு!
சீனா ஒரு வல்லமைப் படைத்த நாடு. அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் மட்டுமே ஒப்பிடக்கூடிய சக்திப் படைத்த நாடாக வளர்ந்திருக்கின்றது. சீனாவின் இத்தகைய வளர்ச்சி மாவோவியத்தை கைவிட்டதனால் தான் உருவானது என்று  கூறப்படுகின்றது. உண்மையில் இத்தகைய வளர்ச்சிக்கு மாவோவின் அடிப்படைக் கட்டமைப்புதான் ஆதாரமாக விளங்குகிறது என்பதையும் மறுக்கமுடியாது.
தனியார்மயமாக்கத்திற்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கு சந்தையை திறந்து விட்டதனால்தான் இத்தகைய வளர்ச்சியை ஈட்டியது என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த வெற்றிக்கு முதன்மையான காரணம் சீனாவின் சுயாதிபத்திய திட்டங்கள்தாம்  என்பது மறுக்கமுடியாத உண்மை.
சந்தேகமில்லாமல் சீனா ஒரு வல்லமைப் படைத்த நாடுதான். ஆனால் அந்த அசுர‌ வளர்ச்சியானது முதலாளித்துவத்தின் பொதுவிதியைச் சார்ந்து இயங்கப்போகின்றதா அல்லது சீனாவின் தனித்தன்மையைச்  சார்ந்த சோசலிசப் பாதைக்கு இட்டுசெல்லுமா என்பதுதான் நமது கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக