புதன், 9 அக்டோபர், 2013

முரண்பாடு பற்றி மார்க்ஸ்


ஹெகலின் உரிமையின் தத்துவத்தின் மீதான விமரிசனம்என்ற நூலில் மூன்று வகையான எதிர்வுகளை (Oppositions) மார்க்ஸ் விளக்குகின்றார்.
முதலாவது, பொதுவான சாரத்தைக் கொண்டுள்ள எதிர்வுகள். சான்றாக, வடதுருவம், தென் துருவம்ஆண், பெண் போன்றவையாகும். வட துருவம் தென் துருவம் ஆகிய இரண்டும் துருவங்களாகும். இவற்றின் சாரம் ஒத்த தன்மையுடையதாகும். அதேபோல் ஆண் பெண் ஆகிய இரண்டின் சாரம் உயிரினம், மனிதசாரம், இந்த இரண்டும் ஒரே சாரத்தைக் கொண்டவை. இந்த இரண்டு உதாரண‌ங்களில் உள்ள இரண்டு கூறுகளும் ஒரே தன்மையுடைய சாரத்தைக் கொண்டவை. ஒரே சாரத்தின் வேறுபட்ட பண்புகளாகும். இரண்டிற்குள்ளும் பொதுவான அம்சங்கள் இருக்கின்றன.  இது  இருப்பின் வேறுபாடுகளாகும்.
இரண்டாவது, பரஸ்பரம் வேறுபட்ட சாரத்தைக் கொண்ட எதிர்வுகள். உதாரணமாக, துருவம், துருவமற்றது; மனித இனம், மனித இனம் சாராதது போன்றவற்றை குறிப்பிடலாம். இது சாரத்தின் அடிப்படையில் வேறுபாடு கொண்டவைகளாகும்.  இவற்றில் பொதுவான அம்சங்கள் என்று ஏதுமில்லை. ஆகவே இரண்டும் ஒன்றை ஒன்று விலக்கும் தன்மையுடையதாகும். இரண்டில் ஒன்று மட்டுமே இருக்கும்; ஒன்றை அழித்து இன்னொன்று வளரும் தன்மை யுடையதாகும். சான்றாக, சிவில் சமூகத்திற்கும் அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்குமான எதிர்வுகள் இந்த வகையைச் சார்ந்தவையாகும்.
மூன்றாவது, பிரிக்கமுடியாத ஒன்றின்  பொதுவான எதிர்வுகள். ஆனால் எதிர்வுகளாகத் தோற்றமளிக்கும். சான்றாக, கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம்தனிநபர், பொதுநலன் ஆகியவையாகும். இவை உண்மையான தன்று; அதன் எதிர்வு உண்மையானதன்று. தவறான கருத்தின் விளைபொருளாகும்.
மூன்றாவது வகையான எதிர்வுகள் முதலிரண்டு எதிர்வுகளிலிருந்து வேறுபட்டது.  முதலாவது பொதுவான சாரத்தை அடிப்படையாகக் கொண்ட உண்மையான எதிர்வுகள்; இரண்டாவது முற்றிலும் வேறுபட்ட‌ இரண்டு சாரத்தை அடிப்படையாகக் கொண்ட எதிர்வுகள்; மூன்றாவது பொதுவான சாரத்தின் உண்மையான எதிர்வுகள் இல்லை.
மூன்றாவது வகையான எதிர்வை விளக்குவதற்கு பொருள்முதல்வாதத்தையும் கருத்துமுதல்வாத்தையும் எடுத்துக் கொள்வோம். தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க இயற்கையை மனிதன் அதற்கேற்ற வகையில் வடிவமைத்துக் கொள்கின்றான். இந்த இயக்கப் போக்கில் மனித உணர்வு இயற்கை எங்கும் வியாபித்து ஊடுருவியுள்ளது. எனவே  இயற்கை என்பது வெறுமனே பொருளில்லை. அதில் பொருளும் உணர்வும் இணைந்து செயல்படும் களமாகும். கருத்துமுதல்வாதம் உணர்வின் பாத்திரத்தை விளக்கும் அதே நேரத்தில் அதுதான் யதார்த்தம் என்று விளம்புகின்றது. ஆனால் பொருள்முதல்வாதம் பொருளாதாய அம்சங்களை தனியே பிரித்தெடுக்கின்றது. இந்த வகையில், இரண்டும்  இணக்கம் காண முடியாதவையாகும்.
இத்தகைய எதிர்வுகள்  எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதை மார்க்ஸ் ஆராய்கின்றார்.  இந்த மூன்று வகையான எதிர்வுகளையும் தீர்க்க மூன்று வகையான தீர்வுகளை முன்வைக்கின்றார். முதல் வகையான எதிர்வு ஒரு சாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதால் இரண்டுக்கும் இடையே உள்ள எதிர்ப்பு முரண் இணக்கம் காணக் கூடியதாகும். ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குவதால் இரண்டிற்குமிடையே  இணக்கம் அவசியமானது.
இதற்கெதிராக இரண்டாம் வகையான எதிர்வுகள் இணக்கம் காணமுடியாத தாகும். இரண்டு எதிர்வுகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட சாரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இரண்டிற்கும் இடையே உள்ள வேற்றுமையை அகற்ற முடியாது. உண்மையான துருவ நிலைகளுக்கு இடையேயான முரணை எளிதாக தீர்க்கவியலாது.   இரண்டிற்கும் இடையே இணக்கம் காணமுடியாத முரண் நிலவுவதால் போராட்டம் ஒன்றே தீர்வாகும். போராட்டத்தின் அடிப்படையில் ஒன்றை வீழ்த்திவிட்டுதான் ஒன்று வெல்லும் என்று மார்க்ஸ் கூறுகின்றார்.
மூன்றாவது வகையான எதிர்வு, இன்னெரு வேறுபட்ட தீர்வை முன்வைக்கின்றது.  மேற்கண்ட இரண்டு வகைகள் உண்மையான எதிர்வுகள். ஆனால் இது உண்மையான எதிர்வன்று. இரண்டையும் (எதிர்வுகளையும்) இணக்கம் காணமுடியாது. ஆனால் இரண்டு எதிர்வுகளையும் கலைத்து விடவேண்டும் (dissolved). பொருள்முதல்வாதத்திற்கும் கருத்துமுதல்வாதத்திற்கு இடையேயான முரணை சமாதானத்தின் அடிப்படையில் வெல்ல முடியாது.  எதார்த்தம் என்பது பொருளும் உணர்வும் இணைந்திருப்பது என்ற கருத்தின் அடிப்படையில் அணுகவேண்டும்.
அதே போல தனிமனிதன் சமூக இனத்தை சார்ந்தவன்.  சமூகம் என்பது தனிநபர்களுக்கிடையே யான உறவைக் குறிப்பதாகும்.  தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையேயான எதிர்வு என்பது காணாமல் போய்விடுகின்றது.
இந்த மூன்றுவகையான எதிர்வுகளை ஹெகல் வேறுபடுத்தவில்லை.  காரணம், இவர் கருத்துமுதல்வாதி என்பதாகும். முற்றொருமையான கருத்தின் வெளிப்பாடுதான் எதார்த்தம்  என்கின்றார்.   இவர் எதிர்வுகளின் அடையாளத்தை (identity of opposites) முன்வைக்கின்றார். ஆனால் மார்க்ஸ் எதிர்வுகளின் ஒற்றுமையை (unity of opposites) முன்வைக்கின்றார். இதுதான் அடிப்படையான வேறுபாடாகும்.
சான்றாக, உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய இரண்டின் ஒற்றுமையை ஹெகல் சரியாக காண்கின்றார்.  என்ன உற்பத்திச் செய்கின்றோமோ அதை மட்டும்தான் நுகரமுடியும்.  உற்பத்தி செய்யாதவற்றை நுகரமுடியாது. ஆனால் இங்கு இவர் அடையாளத்தை மட்டும் வலியுறுத்துகின்றார். அதன் வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிடுகின்றார். இதன்மூலம் மிகைஉற்பத்தி நெருக்கடி (crisis of overproduction) ஏற்படும் என்பதைக் கவனிக்கத் தவறுகின்றார்.
ஹெகல் முதல்வகையான எதிர்வை மட்டும் கவனிக்கின்றார்.  அதாவது பொதுவான சாரத்தை கொண்ட எதிர்வை மட்டும் காண்கின்றார். இரண்டாவது வகையான எதிர்வை இவர் காண்பதே இல்லை. இந்த எதிர்வைத்தான் மார்க்ஸ் 'அடிப்படையில் வேறுபட்ட முரண்பாடு' (essential contradiction) என்று கூறுகின்றார். இம்மூன்று வகையான எதிர்வுகளை ஒன்றாகக் குறைத்துவிடுகின்றார் என்று மார்க்ஸ்  ஹெகலை விமரிசிக்கின்றார்.
எல்லா எதிர்வுகளும் ஒரே சாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று கூறுகின்றார். அனைத்தையும் இணக்கப்படுத்த முடியும் என்றும் கூறுகின்றார். இணக்கம் காணமுடியாத எதிர்வுகளை ஹெகல் அங்கீகரிக்கத் தவறுகின்றார்.  ஆனால் சில எதிர்வுகள் இணக்கம் காணமுடியாதவை என்று மார்க்ஸ் கூறுவார். இவை பொதுவான சாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காது என்றும் கூறுவார்.
 இந்த தர்க்கத்தின் அடிப்படையில்தான் வர்க்கப் போராட்டம் என்ற கருத்துரையை மார்க்ஸ் உருவாக்குகின்றார். முதலாளித்துவ சமூகத்தின் தோற்றத்தின் போது பாட்டாளிவர்க்கமும்  முதலாளிவர்க்கமும்  ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும். இரண்டிற்கும் இடையில்  சில விசயங்களில் ஒரு பொதுவான அடிப்படையைக் காணவியலும் என்பதை மார்க்ஸ் ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் முதலாளித்துவம் வளரவளர  இரண்டு வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் மாற்றம் ஏற்படுகின்றது. இரண்டு வர்க்கத்திற்கு இடையிலான உறவு  இணக்கம் காணமுடியாததாக மாறுகின்றது. ஒரு வர்க்கத்தின் வாழ்க்கை மற்றொரு வர்க்கத்தின் வீழ்ச்சி அடைவதில்தான் இருக்கும் என்ற நிலை வருகின்றது. இரண்டும் சமாதானபடுத்த முடியாத வகையில் வெட்டி முறிக்கும் தீர்வை நோக்கி செல்கின்றது என்று மார்க்ஸ் கூறுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக