செவ்வாய், 21 ஏப்ரல், 2009

இந்திய தத்துவ முரண்கள் - 4

பன்மையில் ஒருமையும் ஒருமையில் பன்மையும்

பன்மை Vs ஒருமை

இந்திய துணைகண்டம், பல்வேறு இனம், மொழி, பிரதேச வேறுபாடுகளைக் கொண்டதாகும். இந்திய நிலப்பகுதிகள் இயற்கையமைப்பு, தட்பவெட்பம், மண்வளம், நீர்வளம் போன்றவற்றில் பாரதூரமான வேறுபாடுகளை கொண்டு விளங்கின. இவ்வாறு வேறுபட்ட நில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகவும், கணங்களாகவும், சிதறி வாழ்ந்தனர். இவர்களது பண்பாடு, மொழி, சிந்தனை ஆகியவை இயல்பாகவே வேறுபட்டிருக்கின்ற‌ன.

பண்டைய‌ காலத்தில் வைசேடிகரும், சமணர்களும் பன்மைத் தன்மையை அடிப்படையாக கொண்டு தமது தத்துவங்களை உருவாக்கிக் கொண்டனர். இவற்றில் வைசேடிகம் என்பது பொருளின் பன்மைத் தன்மையை அங்கீகரிக்கின்றது. அதே நேரத்தில் பொருளை அறியும் அறிவு தோற்றவியலிலும் பன்முக அறிதல்களை வலியுறுத்தியது.

சமணம் என்பது மொத்த உலகையும், உயிருள்ளவை உயிரற்றவை என பகுக்கின்றது. இரண்டுமே பன்மைத் தன்மை உடையன எனப் பகருகின்றது. சமணத்தின் எல்லாவிதமான கோட்பாடுகளிலும் பன்மை வாதத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. மாறாக, வேதாந்த தத்துவ ஒருமை வாதத்தை ஓதும், பிரம்மம் மட்டுமே ஒரே உயர்ந்த உண்மை, அது நிரந்தரமானது, அழியாதது, மாறாதது, புனிதமானது. பன்மையாக சாட்சியளிக்கின்ற இவ்வுலகம் உண்மையல்ல, வெறும் மாயையே எனக் கூறும்.

இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கம் பொதுவாகப் பன்மைத்தன்மையை வெளிகாட்டியது. அதாவது பக்தி இயக்கமானது மக்கள் உணர்வைப் பிரதிபலித்து நின்றது. வட்டார தன்மையை இனங்கண்டது, மக்கள் பேசும் மொழியைப் பக்தி மொழியாக்கியது. இன்னபிற தன்மைகளையும் அடையாளப்படுத்தியது.

பக்தி இயக்க காலத்தில் நிலவிய தத்துவ போக்குகளில் சங்கர அத்வைதம் மட்டுமே ஒருமை வாதத்திற்கு வக்காலத்து வாங்கியது, பின்னிட்டு தோன்றிய விசிட்டாத்வைதம், துவைதம், சைவம் போன்ற தத்துவங்கள் பன்மைவாதத்தை மேற்கொண்டு வளர்ந்தது.

அத்வைதத்தை பொருத்தவரை, உலகின் வேறுபாடுகள் என்று சொல்லப்படுபவை வெறும் கற்பிதங்களே என்றும், சமூகத்தில் மலிந்துள்ள சாதிய வேறுபாடுகளையும், பொருளாதார வேறுபாடுகளும் வெறும் மாயைகளே என்றும் கூறியது.

பின்னர் தோன்றிய தத்துவங்கள் உலகத்தையும் உயிர்களையும் ஏற்றுக்கொள்ளும் அதேசமயம் அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் அங்கீகரிக்கின்றன.

பிற்காலத்தில் பொதுவுடைமை இயக்கமானது, சமூகத்தை ஒருமைவாத கண்ணோட்டத்துடன் அணுகி வர்க்க போராட்டம் என்று சாரப்படுத்தப்பட்ட ஒற்றை அஜந்தாவுக்குள் எல்லா செயல்பாடுகளையும் கொண்டுவந்தது. ஆனால் சமகாலத்தவரான பெரியார் சமூகத்தின் பன்மை கூறுகளைக் கொண்ட இயக்கத்தைக் கண்டார்.

பின்னாளில் மார்க்சிய - லெனினிஸ்ட்டுகள் கூட சமூகத்தின் பன்மை தன்மையை உணர்ந்தாரில்லை. இருந்தலியம் என்பது மனித இருப்பு/மனிதநேயம் என்ற ஒற்றை தன்மைக்குள் எல்லாவற்றையும் அடக்க முயற்சித்தது. அமைப்பியல்வாதமோ பன்மை தன்மையை உணர்ந்ததாக காட்டிக் கொண்டது.

இந்ததிய துணைகண்டத்தின் பன்மை தன்மைகளை உட்கொண்டு, செரித்துக் கொண்ட பொதுவுடைமை இயக்கம் மட்டுமே வெற்றியை ஈட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக