மேல்கட்டுமானம் Vs அடித்தளம்
மேல்கட்டுமானத்திற்கும், அடித்தளத்திற்கும் உள்ள உறவு இயங்கியல் உறவாகும். இம்முரண்பாடும் இயங்கியலை வளர்த்தெடுக்கவும், பொருள் முதல்வாதத்தை பாதுகாக்கவும் செய்கின்றது. பொதுவுடைமையாளர்களைப் பொருத்தவரை இது ஒரு பழைமையான விவாதம் ஆகும்.
மார்க்ஸ் ஏங்கல்ஸ் காலத்திலேயே இது தீவிர விசாரணைக்கு உட்பத்தப்பட்டது. லெனினும் மாவோவும் இந்தக் கோட்பாட்டை இயங்கியல் ரீதியாக வளர்த்தெடுத்தார்கள். ஆனால் ஸ்டாலின் போன்றோர் எதிர்நிலைக்கு சென்று அடித்தளத்தைப் பலமாக்கினார்கள், மேற்கட்டுமானத்தைப் புறகணித்தார்கள் என்ற பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.
இதன் எதிர்வினையாக, இருத்தலியம், அமைப்பியல் வாதம் போன்றத் தத்துவங்கள் தோன்றின. இவை இரண்டும் மேல்கட்டுமானத்தை விவாதித்தன. அடித்தளத்தைப் புறக்கணித்தன.
இருத்தலியமும், அமைப்பியல் வாதமும் எழுப்பிய நியாயமான கேள்விகளை எதிர்கொள்ளாமல், அடித்தளவாதிகள் குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகினர்.
உலகம் இன்று அடித்தளவாத சமூகம் (ஐரோப்பா) மேல்கட்டுமான சமூகம் (ஆசியா,ஆப்பிரிக்கா இதர) என இரண்டாக பிளவுப்பட்டு கிடப்பது போல காணப்படுகின்றது.
பொதுவாக அடித்தளவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மரபு மார்க்சியர்கள், என்றும், மேற்கோப்பு வாதத்தை உயர்த்திபிடிப்பவர்கள் புதிய மார்ச்சியர்கள் என்றம் அழைககப்படுகின்றனர்.
அடித்தளவாதிகள் எல்லா வகையான முரண்பாடுகளையும் வர்க்கப் போராட்டத்திற்குள் அடைத்துவிடுகின்றனர். மேல்தளவாதிகள் வர்க்க போராட்டத்தைப் புறக்கணித்துப் பிற வடிவிலான போராட்டங்களை மட்டும் ஆதரிக்கின்றனர்.
இருத்தலியமானது மனித இருப்பை மட்டுமே விளக்கியது. மனித மனம், உணர்வுகள், உணர்ச்சிகள், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற தளங்களில் வளர்ந்தது. இந்த கண்ணோட்டத்திலிருந்து உலகை விமர்சித்தது. அமைப்பியல் என்பது மொழியியல், உளவியல் கட்டுமாணங்களை அடிப்படையாக கொண்டு உலகை விளக்க முற்பட்டது.
அடித்தளம் என்பது பொருளீயத்தன்மை வாய்ந்தது. மேற்கோப்பு என்று கருத்து தளத்தைச் சார்ந்தது. இதில் அடித்தளம் சுதந்திரமான இருப்பையும் மற்றது ஒப்பீட்டுரீதியான சுதந்தர இருப்பையும் உடையதாகும். அதாவது அடித்தளம் மேற்கோப்பைத் தீர்மானிப்பதாக அமையும், இந்த உறவு படிப்படியாக வளர்ந்து இவை ஒன்றை ஒன்று தீர்மானிக்கவும், பாதிக்கவும் செல்வாக்கு செலுத்தவும், மாற்றியமைக்கவும் ஆன பரஸ்பர வினையாற்றிக் கொள்கின்றனர்.
மார்க்சின் ‘ஆசிய உற்பத்திமுறை‘ என்ற கருத்திக்கம் அடித்தளம், மேற்கோப்பு ஆகியவற்றிற்கிடையான உறவை இயங்கியல் ரீதியில் மேலும் புரிந்து கொள்ளவும், வளர்த்தெடுக்கவும் செய்வதற்கான துவக்க புள்ளியாகும்.
அன்றைய இந்திய அரசியல் மேற்பரப்பில் எண்ணற்ற மாற்றங்களை கண்டிருந்த போதிலும் அவை சமூக அடித்தளத்தில் எவ்வித சிறு சலனத்தைகூட ஏற்படுத்தவில்லை என்ற மார்க்சின் ஆய்வு, அடித்தள, மேற்கோப்பு ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாட்டின் வேறுபட்ட புதிய அம்சங்களைப் பார்க்கத் தூண்டுகிறது.
அதாவது அடித்தளம் எப்போதுமே மேற்கட்டுமானத்தை பிரதிபலிக்கும் என்பதும் அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே அவை மேற்கோப்பை மாற்றத்தை நிகழ்த்தும் என்பதும் உண்மையல்ல.
மாறாக, மேற்கோப்பு தனக்கென ஒரு தனித்தப் போக்கை சிலநேரங்களில் தீர்மானித்துக் கொள்கின்றது. அதற்கான காரணிகளில் ஒன்று மேற்கோப்பின் மீது ஏற்படும் வலுவான வெளிப்புறத் தாக்கம். இரண்டாவது கட்டுதட்டிப் போன பொருளாதார அடித்தளம்.இங்கு வெளிப்புற செல்வாக்கு என்பது கிரேக்க, ஆரிய, ஐரோப்பிய சிந்தனையில் தலையீடுகளைக் குறிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக