திங்கள், 1 நவம்பர், 2010

சாதியம் இருக்கிறதா‍- 2

பொதுவாக பொருளாதார நிலைமைகளோடு ஒருவகையான உறவை மேற் கொண்டிருந்த போதிலும் அதையும் தாண்டி ஒரு சமூகக் கட்டமைப்பு தன்னிச்சையாகச் செயல்பட்டதைக் காணமுடிகிறது. ஒரு அரசியல் தளத்தின் பாதிப்பைப் பெற்றிருந்தாலும் இந்தச் சமூகக் கட்டமைப்பானது கட்டுக்கோப்பாகக் பாதுக்காத்து வந்துள்ளது சாதியக் கட்டமைப்பின் சிறப்பம்சமாகும்.





இச்சிந்தனைக்கான கரு மார்க்சின் ஆசிய கிராமிய சமூகம் என்ற கருத்தாக்கத்திலிருந்து பெறலாம். அக்கரு வளர்ந்து இன்று சிக்கலான நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.


இச் சாதிய சமூகத்தின் அடிப்படைப் பண்பு படிநிலை கட்டமைப்பு ஆகும். இந்தக் கட்டமைப்பு பல தளங்களை உள்ளடக்கியிருக்கிறது. இக்கட்டமைப்பு பன்மையைக் கொண்டிருக்கும். அதே வேளையில் அந்தத் தளம் ஒவ்வொன்றும் ஒற்றைத் தன்மையை கொண்டிருக்கும். இக்கட்டமைப்பைப் பாதுக்காக்க ஒருவகையான முறையியல் தேவைப்படுகிறது.


படிநிலை கட்டமைப்பிற்குள் தொழில்படும் முரண்பாடே படிநிலை முரண்பாடு‍ எனலாம். சமூகத்திற்குள் இருக்கும் இத்தகைய முரண்பாடு சமூக‌ இயக்கத்தைத் தடுப்பதோடு சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுகட்டை போடவும் செய்கிறது. சமூக இயக்கத்தைக் கட்டிபோட வைக்கிறது.



இதில் பல தளங்களை உள்ளடக்கியிருக்கும். அந்தத் தளங்களுக்குள் முரண்படுவதோடு ஒவ்வொரு தளத்திலும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது.



இக்கட்டமைப்பு முரண்பாட்டு தனிசிறப்பு வாய்ந்ததும் மிகவும் சிக்கலானதும் ஆகும். இதில் பல்வேறு பரிமாணங்களில் மிகவும் சிக்கலான் வகையில் முரண்பாடுகள் செயல்படுகின்றன.



முரண்பாட்டின் இரண்டு அம்சங்களான ஐக்கியமும் போராட்டமும் தனித்தனியாக தொழில்படுவதால் இயக்கத்தின் முடுக்கம் குறைந்து காணப்படுகிறது.



இக்கட்டமைப்பைத் தக்கவைக்கவும் முரண்பாட்டை கூர்மையடையாமலும் தீர்க்க முனையாமலும் இருக்க வைக்க பார்ப்பனீயக் கருத்தியலின் செல்வாக்கு மிகவும் இன்றியமைதாயிருக்கிறது. படிநிலைக் கட்டமைப்புக்கும் பார்ப்பனீயக் கருத்தியலுக்கும் ஒருவகையான ஒத்திசைவு இருப்பதைக் காணலாம்.



இக்கட்டமைப்பிலுள் இயங்கும் முரண்பாடுகளைவிட புறமுரண்பாடுகளே இக்கட்டமைப்பை அசைத்து விட்டிருக்கிறது. சாதியக் கட்டமைப்பிற்கு வெளியே இருக்கும் பொருளாதார அடித்தளம், மேற்கட்டுமான அரசியல், கருத்தியல் போன்றவையே இக்கட்டமைப்பை உடைக்க உதவியிருக்கிறது. மேலும் அதோடு கூடவே சாதிய முரண்பாடுகளும் சேர்ந்து இக்கட்டமைப்பை ஆட்டங்காண வைத்திருக்கிறது.



இக்கட்டமைப்பின் உள்ளிருந்தும் புறத்திலிருந்தும் மேலிருந்தும் அடிதளத்திலிருந்தும் பல்வேறு கூறுகள் தொழில்பட்டாலும், பல்வேறு வகையான முரண்கள் செயல்பட்டாலும் அது தன்னை மறுகட்டமைப்பு செய்வதற்கான தன்மையை இயல்பாகவே கொண்டிருக்கிறது.



அக்கட்டமைப்பில் ஏதேனும் உடைசலோ அல்லது பிளவோ ஏற்படும் போதெல்லாம் மீண்டும் அது வேறுவடிவில் மறுகட்டமைப்பு செய்து கொள்கிறது. இது சாதியக் கட்டமைப்பின் முக்கிய பண்புகளில் முதன்மையானதாகும்.


இந்து சமூக அமைப்பு படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு, படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. முன்னது பலவீனமானது. பின்னது, தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு நிலைக்கும் திறன் கொண்டது என்பது அம்பேத்காரிய வாதம்..





சாதியக் கட்டமைப்பை சமத்துவமின்மைக் கொண்டதாகப் பார்ப்பது ஓர் அணுகுமுறை. சாதியக் கட்டமைப்பை படிநிலை சமத்துவமின்மைக் கொண்டதாக காண்பது மற்றொரு அணுகுமுறை. இதில் முன்னது பெரியாரிய அணுகுமுறையாகும். பின்னது அம்பேத்காரிய அணுகுமுறையாகும். முன்னதைவிட பிந்தையது முன்னேறிய அணுகுமுறையாகும். பிந்தையது இயங்கியல் பூர்வமான அணுகுமுறைக்கு நெருக்கமானதாகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக