ஞாயிறு, 13 நவம்பர், 2011

நூல் விமரிசனம்

அ.கா.ஈஸ்வரன் எழுதிய 'சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்'


கார்ல் மார்க்சு அவர்களின் முக்கியக் கண்டுபிடிப்புகளாக இரண்டு விசயங்கள் என்று இவர் வரிசைப் படுத்துகின்றார். ஒன்று உபரி மதிப்பு விதி, இரண்டு அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய கருத்துக்கோப்பு. நூலாசிரியர் இரண்டாவது விசயத்தை மிகவும் சிரத்தை எடுத்து ஆழமாக மார்க்சு, எங்கல்சு ஆகியோரின் நூல்களிலிருந்தும் கடிதங்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டி நிறுவ முயற்சித்துள்ளார் என்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும். அடித்தளம், மேற்கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றியும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள உறவு பற்றியும் கூறப்பட்டுள்ள மார்க்சிய மூலவர்களின் பெரும்பாலான‌அனைத்து மேற்கோள்களையும் தொகுத்தளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மார்க்சிய மூலவர்களின் கருத்துரைகளில் பொருள்முதல்வாதம் அடிப்படையை மட்டும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் மார்க்சின் மறைவிற்கு பின்னர் எழுந்த தத்துவார்த்த விவாதங்கள், இப்பொருள் குறித்து மேலும் இயங்கியல் ரீதியாக வளர்த்தெடுக்கவேண்டிய தேவை எங்கல்சிற்கு இருந்தது என்பதை ஆசிரியர் மறுக்கின்றார். மார்க்சின் ‘பொருளாதார நிர்ணய’க் கருத்துரைக்கும் எங்கல்சின் ‘இறுதி நிர்ணய’க் கருத்துரைக்கும் உள்ள இயங்கியல் வளர்ச்சிப்போக்கை உள்வாங்க‌ மறுக்கின்றார். எங்கல்சிற்கு பின்னர் இப்பிரச்சனையில் மாவோவின் இயங்கியல் ரீதியிலான பங்களிப்பைப் புறக்கணித்ததன் காரணம் புரியவில்லை. ஒருவேளை இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதுவும் மாவோ ஆற்றவில்லை என்று இந்நூலாசிரியர் கருதலாம்.

அடித்தளம் மேல்கட்டுமானத்தை நிர்ணயிக்கும் என்ற கோட்பாட்டைப் பொருள்முதல்வாத அடிப்படைகளைக் கொண்டு ஆசிரியர் நிறுவியுள்ளாரா என்ற ஐயம் எழுகின்றது. மேலும் எங்க‌ல்சின் க‌ருத்துரைக‌ளையும் க‌டிதங்க‌ளையும் விரிவான‌ அள‌வில் மேற்கோள் காட்டியிருந்தாலும், அதிலுள்ள‌ இய‌ங்கியல் அம்ச‌ங்க‌ளை உள்வாங்க‌வில்லை என்றே தோன்றுகின்ற‌து.

அடித்த‌ள‌ம் மேற்க‌ட்டுமான‌ம் ஆகிய இரண்டையுமே நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌கூறுக‌ளாக‌வும் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ எதிர்வுக‌ளாக‌வும் பார்க்கின்றார். அதாவ‌து சமூக அடித்த‌ள‌ம், பொருள்முத‌ல்வாத‌ அடிப்ப‌டையைக் கொண்ட‌து என்ப‌து நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌க‌ருதுகோளாக‌எடுத்துக் கொள்ள‌லாம். ஆனால் அடித்த‌ள‌ம் மேற்க‌ட்டுமான‌ம் ஆகிய இர‌ண்டுக்குமான ‌உற‌வு நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌த‌ன்று. ச‌மூக‌வ‌ள‌ர்ச்சியைப் பொருத்து, ச‌மூக‌முர‌ண்க‌ளின் இய‌ங்கிய‌ல் கூறுக‌ள் வ‌ள‌ர்ச்சிபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதை ஆசிரியர் மறுக்கிறார். இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பது ஒரு விஞ்ஞானம். அதன் இயங்கியல் கூறுகள் வளர்ந்துக் கொண்டே இருக்கும். இதை மறுப்பது இயக்கமறுப்பியல் சிந்தனையாகும்.

மேல்கட்டுமானக் கூறுகளை மட்டும் உயர்த்திப்பிடிப்பது என்பது பண்பாட்டு மார்க்சியம் என்று ஆசிரியர் கூறுகின்றார். அதே சமயம் மேல்கட்டுமான கூறுகளைப் புறக்கணித்து அடித்தளத்தை மட்டும் நிர்ணயிப்பதாக ஏற்றுக்கொள்ளும் பொருளாதார நிர்ணயவாதம் என்ற‌போக்கு குறித்து தனது கருத்து எதையும் கூறாமல் ஒதுங்கிக்கொள்கிறார். பொதுஉடைமைக் கட்சிகளிடம் ஒரு முக்கியப் போக்காக இருப்பதை ஏன் ஆசிரியர் விமரிசிக்க‌வில்லை. காரணம், பொருளாதார நிர்ணயவாதப்போக்கைச் சார்ந்து இருப்பது இவருக்கு வசதியாக தோன்றுகிறது. ஒருவேளை பொருளாதார நிர்ணயவாதப்போக்கு என்று ஒன்று இல்லை என்று கருதுகிறாரா என்று புரியவில்லை.

பண்பாட்டு மார்க்சியர்கள் மேல்கட்டுமானத்தை மட்டும் உயர்த்திபிடிக்கின்றார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. மேல்கட்டுமானத்தின் கூறுகளையும் நுணுக்கமாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்துள்ளனர் என்பதையும், அவர்கள் அடிக்கட்டுமானத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கும் இடையே உள்ள உறவைக் கண்டறிந்து கூறுயுள்ளனர் என்பதையும் மறுக்கவியலாது.. இவர்களிடம் இருக்கும் இயங்கியல் அம்சங்களை பார்க்க தவறுவது தத்துவ பிழையாகும். அதே போன்று பொருளாதார நிர்ணயவாதத்தின் இயக்கமறுப்பியல் போக்கைக் கண்டும் காணாமல் அலட்சிப்படுத்துவது அதைவிட மாபெரும் தத்துவ பிழையாகும்.

வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற மார்க்சின் கருத்துரை எந்திரவகைப் பட்டதாக மாற்றப்பட்டிருக்கின்றது என்பதற்கு ஒருசான்று, சமூக வளர்ச்சிக் கட்டங்கள் பற்றியதாகும். இனக்குழுச் சமூகம், அடிமை உடைமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம், சோசலிச சமூகம், பொது உடைமை சமூகம் என்ற சமூக வளர்ச்சி எந்திரவகைப்பட்டதாகும். உலகில் எந்த சமூகம் இந்த படியில் கட்டங்களாக வளர்ச்சி பெற்று வந்ததில்லை. இந்த மாதிரியான படிநிலை வளர்ச்சியை மார்க்சிய மூலவர்களும் எப்போதுமே வலியுறுத்தியதில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வரலாற்று கட்டமும் அதற்கே உரித்தான தனித்தன்மைகளுடன் விளங்கும் என்று மார்க்சு தெளிவாக குறிப்பிடுவார்.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேற்கட்டுமானத்தை மாற்றியமைக்கின்றன. அடித்த‌ள‌த்திலிருந்து தோன்றிய‌மேற்க‌ட்ட‌மைப்பு அடித்த‌ள‌த்தை வ‌லுப்ப‌டுத்த‌முடியுமே த‌விர‌அடித்த‌ள‌த்தில் எந்த‌மாற்றத்தையும் மேல்க‌ட்ட‌மைப்பால் உருவாக்க‌முடியாது என்று ஆசிரியர் கூறியிருப்பது கருத்து பிழை.

மேல்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் அடித்தளத்தால் தீர்மானிக்கப்படுகின்றது; மேற்கட்டமைப்பு அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட வகையில் சுதந்திரத்தோடு செயல்படுகின்றது என்பதைதான் மார்க்சியம் வலியுறுத்துகின்றது என்று ஆசிரியர் கூறுகிறார். பொருட்களின் சாராம்சம் அல்லது சாரப்பொருள் என்பதும் சார்பு நிலையானவையே என்று லெனின் கூறுவதையும் சேர்த்து பார்க்கவேண்டும்.

‘லூக்காஸ், கிராம்சி ஆகியோர், ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் வெறும் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாகவும், இதன் மூலம் பொருளாதார காரணங்கள் சமூக அடிப்படை என்பது பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் தவறாக புரிந்து கொண்டு, பண்பாட்டு மார்க்சியம் என்ற சிந்தனைப் போக்கைத் தொடங்கினர். இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல் மார்க்சியத்தின் அடிப்படைக்கு எதிரான பண்பாட்டு மார்க்சியம் என்று மார்க்சின் பெயரைத் தாங்கிக்கொண்டே, மார்க்சியத்தின் அடிப்படையை மறுக்கின்றனர். இதற்கெல்லாம் லூக்காஸ், கிராம்சி போன்றோர்கள் பெரும் காரணமாவார்கள். மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேற்கட்டமைப்பு என்பது, - குறிப்பாக பண்பாடு - அடித்தளத்தின் பிரதிபலிப்பல்ல, மேற்கட்டமைப்பிற்கு தனியான சுதந்திரம் உண்டு என்று பண்பாட்டு மார்க்சியர்கள் கூறுகின்றனர்’ என்று ஆசிரியர் கூறுவதில் உண்மை இருக்கலாம்.

ஆனால் இப்பிரச்சனையை அணுகும் விதத்தில் மாறுபடுகிறோம். இவர் பிரச்சனையை ஒற்றையாகவே பார்க்கிறார். இங்கு இயங்கியல் அணுகுமுறையின் அவசியத்தை அவர் உணரவில்லை. அடித்தளம் மேற்கட்டமைப்பை இறுதியில் நிர்ணயிக்கிறது என்பது மார்க்சியத்தின் அடிப்படையான முடிபாகும் என்ப‌தை பண்பாட்டு மார்க்சிய‌ர்க‌ள் ஏற்றுக்கொள்ளாதவ‌ர்கள் என்பது உண்மை. ஆனால் அவ‌ர்களின் இய‌ங்கியல் ரீதியிலான‌ப‌ங்க‌ளிப்பை நூலாசிரிய‌ர் எளிதாக த‌ள்ளிவிட‌முடியாது. ஹெக‌லின் இயங்கியல்தான் மார்க்சியத்திற்கு வாழ்வளித்தது என்பதை நூலாசிரியர் மறுக்கமுடியுமா?

“அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற எதிர்வுகளுக்கு மார்க்சிய முதலாசிரியர்கள்கூட இவ்வளவு இறுக்கத்தை வழங்கினார்களா என்பது சந்தேகமே. இயங்கியல் எதிர்வுகளை நெகிழ்வாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு ஒன்றிலிருந்து மற்றதை வருவிக்கும் முறையியலை அவர்கள் ஏற்கவில்லை. ஹெகலிய இயங்கியலில் கூட இத்தனை இறுக்கம் கிடையாது” என்ற நா.முத்துமோகனின் கருத்து, மார்க்சின் கருத்தை புரட்டி, சிதைப்பதாகவும் மார்க்சிய கருத்தாக்கத்தை சந்தேகிக்கும் போக்காகவும், மறுதலிக்கும் போக்காகவும் இருக்கிறது என்று ஆசிரியர் மிகவும் கோபம் கொள்கிறார். இதில் நா.முத்துமோகன் பொருளாதார அடித்தளத்தை வலியுறுத்தாமல் விட்டிருக்கலாம். அவரது கூற்று உண்மையில் மார்க்சிய இயங்கியலின் அவசியத்தை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.

“அடித்தளம் மேற்கட்டமைப்μ என்பது வெறும் புரிந்து கொள்வதற்கான வழிமுறையல்ல. “….. வரலாற்று ரீதியாக, பொருளாயதச் சக்திகளை அவற்றுக்குள்ள வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அதுபோல பொருளாயதச் சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களைப் பிரித்துப் பார்த்தால் அவை தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே காட்சியளிக்கும்.” என்ற கிராம்சியின் கருத்தின்மீது தனது விமரிசனத்தை முன்வைக்கும் போது “இதில், பொருளாதார சக்திகளை அதிற்குரிய வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது, என்றும் பொருளாதார சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களை பிரித்துப் பார்த்தால் அது தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே இருக்கும் என்று கூறும் கிராம்சியின் கூற்றில் பொருளாதார சக்திகள் வடிவத்தை (மேற்கட்டமைப்பை) தீர்மானிக்கிறது என்ற மார்க்ஸ் கண்டுபிடிப்பை பற்றி புரிதல் இல்லை. அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற இரண்டையும் சமநிலையில் வைத்துப் பார்க்கிறார். இந்த மார்க்சியத்திற்கு மாறான கருத்து.” என ஆசிரியர் கூறுகின்றார்.

பொதுவாக, முரண்பாட்டின் எதிர்நிலைகள் இணைந்தும் பிரிந்தும் செயல்படுகின்றன. பொருளாதார அடித்தளத்திலிருந்து அதன் மேற்கட்டுமானத்தை தனியே பிரித்து பார்ப்பது இயக்கமறுப்பியல் ஆகும். இரண்டுக்குமுள்ள உறவை பற்றித்தான் கிராம்சி விளக்கியுள்ளார் என எண்ணுகிறேன். ஒரு சமூகத்தில் நிலவும் பொருள் உற்பத்தி முறை அதன் மேற்கட்டுமான அம்சங்களைப் பாதிக்கிறது. சில நேரங்களில் அதைத் தீர்மானிக்கிறது. ஆயினும் பல நேரங்களில் அதுவும் தன் பங்கிற்கு அடித்தளமான பொருள் உற்பத்தி முறையைப் பாதிக்கிறது” இது மாவோவின் கருத்துரையைப் பிரதிபலிக்கும் வரிகளாகும்.

பொருள் சார்புதன்மை யற்றது என்று கூறும் நூலாசிரியர் பொருளின் தனிமுதல் உண்மையும் மறுக்கிறார். மேலும் அதன் வரம்பற்ற தன்மையும் வரம்புக்குட்பட்ட தன்மையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன்மூலம் பொருளை முடிவுற்றதாக கருதுகிறார். ஆகவேதான் சிந்தனையின் சர்வ சுதந்திரத்தை மறுத்து, பொருளை சார்ந்திருக்க வேண்டிய கட்டுப்பட்டை விதிக்கிறார். இதன்மூலம் அறிவின் வளர்ச்சிக்கும் முடிவு கட்டுகிறார்.

மனித அறிவின் சார்புநிலைத் தன்மையை அங்கீகரிக்கும் அதே நேரத்தில் தனிமுதலான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில்தான் அறிவுக்கும் உண்மைக்கும் இடையிலான‌இயக்கவியல் தன்மை புலப்படும். மாறாக, மனித அறிவின் சார்புநிலைத் தன்மையை மட்டும் அங்கீகரித்து, தனிமுதலான உண்மையை மறுப்பது சார்புநிலைவாதம் ஆகும்.

ஆசிரியர் தனது நூலின் முன்னுரையில் எடுத்துக் காட்டியிருக்கும் நோக்கத்தையும் நூலில் காணப்படும் மார்க்சிய மூலவர்களின் மேற்கோள்களுக்கிடையே காணப்படும் அவரது கருத்துக்களையும் சிறிது ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் போது, இவர் ‘பொருளாதார நிர்ணயவாதம்’ என்ற அடிப்படையிலிருந்துதான் இப்பிரச்சனையை அணுகுகிறார் என்பது புலனாகும். மேலும் இப்பிரச்சனையின் இயங்கியல் வளர்ச்சிப்போக்குகளை உள்வாங்க மறுக்கின்றார் என்பது சொல்லாமலே விளங்கும்.

இவ்வாறு, மார்க்சியத்தின் அடிப்படை கண்ணோட்டத்தைப் புரிந்துக் கொள்ளவேண்டு மென்றால் முதன்மையாக‌மார்க்சின் படைப்புகளை முழுமையாக கற்றறிந்திருக்க வேண்டும். அடுத்ததாக‌ அவருக்குப்பின் எங்கல்சு அளித்துள்ள விளக்கங்களும் கருத்துரைகளும் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டும். இது மட்டும் போதாது, லெனின், மாவோவின் பங்களிப்பையும் சேர்த்து ஒருங்கிணைந்த வகையில் உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே அது சாத்தியப்படும்.

மார்க்சிய மூலவர்களுக்கும் பின்னர் பல்வேறு மார்க்சியர்கள் மார்க்சியத்தின் அடிப்படை கூறுகளின் பொருள்விளக்கம் தந்து வேறுபட்ட சூழல்களுக்கு ஏற்ப பொருத்த முயன்றுள்ளனர். அதன் பொருட்டு மார்க்சியத்தின் அடிப்படைகளிலிருந்து வழிவிலகல்களும் திருத்தல்களும் ஏற்பட்டிருக்கலாம். ஏன் மார்க்சியத்தின் அடிப்படை கூறுகளைச் செழுமைபடுத்தி யிருக்கலாம். அவற்றை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ கடந்துதான் செல்லவேண்டுமே அல்லாது மார்க்சிய விரோதமானது என்று அவற்றை முற்றிலும் புறந்தள்ளுவது இன்றைய வளர்ச்சிப் போக்குகளை மறுதலிப்பதாகும்.

7 கருத்துகள்:

  1. மார்க்சு. எங்கெல்சு. லெனின் ஆகியோர் எந்த புதிய கண்ணோட்டமாக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அமைத்தார்களோ, அந்த தத்துவவியலை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், இம் மூன்று ஆசான்களும் எந்த தத்துவவியலை எதிர்த்தார்களே அதை மீண்டும் மார்க்சியத்தினுள் புகுத்த முனையும் புரட்டல் வேலை செய்துவருகின்றனர். பொருள்முதல்வாதத்தின் கூறுகளை எந்த விதத்திலும் புரிந்து கொள்ளாதவர்கள் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் உங்களது முடிவிற்குத்தான் வரநேரிடும்.

    "வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற மார்க்சின் கருத்துரை எந்திரவகைப் பட்டதாக மாற்றப்பட்டிருக்கின்றது என்பதற்கு ஒருசான்று, சமூக வளர்ச்சிக் கட்டங்கள் பற்றியதாகும். இனக்குழுச் சமூகம், அடிமை உடைமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம், சோசலிச சமூகம், பொது உடைமை சமூகம் என்ற சமூக வளர்ச்சி எந்திரவகைப்பட்டதாகும். உலகில் எந்த சமூகம் இந்த படியில் கட்டங்களாக வளர்ச்சி பெற்று வந்ததில்லை. இந்த மாதிரியான படிநிலை வளர்ச்சியை மார்க்சிய மூலவர்களும் எப்போதுமே வலியுறுத்தியதில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வரலாற்று கட்டமும் அதற்கே உரித்தான தனித்தன்மைகளுடன் விளங்கும் என்று மார்க்சு தெளிவாக குறிப்பிடுவார்."

    - ஒவ்வொரு வரலாற்று கட்டமும் அதற்கே உரித்தான தனித்தன்மைகளுடன் விளங்குவதாக மார்கசு தெளிவாக குறிப்பிடுவார் என்று அதாரமற்ற முறையில் கூறுவது சிந்தாந்த புரட்டல்வாதிகளுக்கு கைவந்த கலை தான். தங்களின் விவாதம் முழுவதும் இந்த வகையிலேயே செல்கிறது. “ஜெர்மன் சித்தாந்தம்” என்ற நூலில் மார்க்சும் எங்கெல்சும் சமூக மாற்றத்தை தெரிவித்திருப்பது (மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி I பக்கம் 22 முதல் 28) தங்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.

    "மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்" என்ற கட்டுரையில் லெனின் கூறுகிறார்:-
    "வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பைதை - அது காட்டுகிறது. "

    இவ்வாறு மார்க்சிய மூலவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் சமூக வளர்ச்சி வளரும் என்பதை காட்டினர். இதன் அடிப்படையில், உங்கள் பார்வையில் மார்க்சிய மூலவர்களும் எந்திரவகைப்பட்டவர்களாகவே ஆவார்கள். அவர்கள் வழியில் நான் எழுதியிருப்பதால் எனது நூலை ‘பொருளாதார நிர்ணயவாத’’ வழியில் எழுதியிருப்பதாக கூறும் தங்களின் கருத்து முழுமையாக சரியானது தான்.
    அ.கா.ஈஸ்வரன் அலைபேசி 9283275513

    பதிலளிநீக்கு
  2. "மனித அறிவின் சார்புநிலைத் தன்மையை அங்கீகரிக்கும் அதே நேரத்தில் தனிமுதலான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில்தான் அறிவுக்கும் உண்மைக்கும் இடையிலான‌இயக்கவியல் தன்மை புலப்படும். மாறாக, மனித அறிவின் சார்புநிலைத் தன்மையை மட்டும் அங்கீகரித்து, தனிமுதலான உண்மையை மறுப்பது சார்புநிலைவாதம் ஆகும்."
    என்று எழுதியிருக்கிறீர்கள், "கார்ல் மார்க்ஸ்" என்னும் நூலில் லெனின் "இயக்கவியல் தத்துவ ஞானத்துக்கு முற்றானது, தனிமுதலானது, புனிதமானது ஒன்றுமில்லை." கூறியிருப்பதை நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள், ஆனால் அதனை புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. உண்மையை தனிமுதலாக பார்ப்பது பொருள்முதல்வாதக் கண்ணோட்டட்ததிற்கு எதிரானதாகும்.

    "பொருளாதார அடித்தளம்தான் மேற்கோப்பை நிர்ணயம் செய்யும் என்று மார்க்சோ அல்லது ஏங்கல்சோ எங்குமே கூறவில்லை. அடித்தளம் மேற்கோப்பை நிர்ணயிக்கும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதைவிடுத்து அடித்தளம்தான் மேற்கோப்பைத் தீர்மானிக்கும் என்று கூறவில்லை. இதன்பொருள் என்னவென்றால், அடித்தள‌மும் மேற்கோப்பை நிர்ணயிக்கும், அதே போல‌சில சமயங்களில் மேற்கோப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கும் என்பதாகும். இந்த இயக்கப் போக்கின் இறுதி நிகழ்வாக பொருளாதார அடித்தளமே மேற்கோப்பை நிர்ணயிக்கும் என்று எங்கல்ஸ் கூறியிருப்பதைக் காணலாம். இதற்கிடைப்பட்ட இடைவெளிகள் மேல்கட்டுமானக் கூறுகளால் இட்டு நிரப்பப்பட வேண்டியவையாகும்"
    -இதில் மேற்கட்டமைப்பின் வரம்பையும், சார்பான சுதந்திரத்தையும் மார்க்சிய மூலவர்கள் கூறியதை மறைத்து தப்பும் தவறுமாக விளக்கப்படுத்தும் தங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும விளக்கம் கொடுப்பதென்பது காலவிரயமேயாகும்.

    அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் சமபங்கு முக்கியத்துவம் கொடுப்பதென்பது, கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்பதற்கு அடுத்த மூன்றாம் பாதையாகும். எங்கெல்ஸ் எழுதிய "லுத்விக் பாயர்பாக்" என்ற நூலில் உள்ள (கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றிய விளக்கம்) இரண்டாம் இயலையும். மேலும், "என்ன செய்ய வேண்டும்?" என்ற நூலில் உள்ள லெனின் கருத்தையும் சேர்த்துப் பார்த்து தெளிவடையுங்கள்:-
    "முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோஷலிஸ்டு சித்தாந்தம்.... , நடுவழி ஏதும் கிடையாது (ஏனென்றால் மனிதகுலம் ஒரு "மூன்றாம்" சித்தாந்தத்தைப் படைக்கவில்லை, மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத்தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே சோஷலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவச் சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருளாகும். மூன்றாம் வழி கிடையாது"
    அ.கா.ஈஸ்வரன் அலைபேசி 9283275513

    பதிலளிநீக்கு
  3. மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல், மார்க்சியத்தை வளர்த்தெடுப்பது என்பது மார்க்சியம் எதிர்த்த தத்துவங்களை மீண்டும் மார்க்சியத்தினுள் புகுத்துவதற்கேயாகும். இதனைத்தான் தங்களது படைப்பு முழுவதும் வெளிப்படுத்துகிறது.

    "மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில இயல்புகள்" என்ற சிறு கட்டுரையில் லெனின் கூறுகிறார்.
    "எங்களுடைய போதனை செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வறட்டு சூத்திரம் அல்ல என்றார் எங்கெல்ஸ் - தம்மையும் புகழ் மிக்க தமது நண்பரையும் குறிக்கும் வண்ணம் "எங்களுடைய"என்றால்." இதனைத் தொடர்ந்து லெனின் கூறுகிறார். "பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரை வரலாற்றின் திருப்பங்களையொட்டி பொதுவான, அடிப்படையான குறிக்கோள்கள் மாறுவதில்லை, நிச்சயமாக, அவைகளைப் பற்றி கூறுகிறதில்லை".
    -மார்க்சியத்தை வளர்த்தெடுக்கும் பணியில் பெரும்பங்குவகித்த லெனின் இவ்வாறு கூறுகிறார்.

    மேலும் "நமது வேலைத்திட்டம்" என்ற சிறு கட்டுரையில் லெனின்:-
    "தற்போது சர்வதேச சமூக-ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் பீடிக்கப்ட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சித் தத்துவத்துக்குரிய உறுதி வாய்ந்த அடித்தளமாய்க் கருதப்பட்டுவந்தன, ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன.
    ..
    நாம் முற்றிலும் மார்க்சியத் தத்துவார்த்த நிலைமையே எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்..
    ..
    வளர்த்திடுமாறு மார்க்சும் எங்கெல்சும் நம்மைப் பணித்துச் சென்ற இந்த விஞ்ஞானத்தை ஓரடியுங்கூட இவர்கள் முனனேறச் செய்துவிடவில்லை, புதிய போராட்ட முறைகள் எவற்றையும் இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்துவிடவில்லை. மாறாக, இவர்கள் பிற்பட்ட தத்துவங்களிலிருந்து சிறு கவளங்களைக் கடன்வாங்கி, பாட்டாளி வர்க்கத்துக்குப போராட்டத் தத்துவத்தையல்ல, விட்டுக் கொடுத்துச் செல்லும் தத்துவத்தை - - பிரசாரம் செய்துப் பின்வாங்கியே சென்றிருக்கிறார்கள்"

    ஓடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு பயனெதும் புரிந்திடாத, பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான தங்களின் கண்ணோட்டத்திற்கு மேலே காணும் லெனின் கூற்றை விமர்சனமாக வைத்து முடிக்கிறேன். தங்களது படைப்பை முழுதும் படித்து ஒவ்வொன்றிற்கும் பதில் அளித்தல் என்பது காலவிரயமேயாகும்.

    மார்க்சிய மூலவர்களின் நூல்களை புரிந்து கொள்ளாமல், மார்க்சியத்தை திருத்துபவர்களின் நூல்களில் மூழ்கி கிடக்கும் தங்களின் கருத்துக்கள் வெறும் அபத்தக் குவியலாக காட்சியளிக்கிறது.

    விவாதம் என்பது ஒரு முடிவை நோக்கியேயாகும், ஆனால் தங்களைப் போன்றவர்களின் விவாதம் என்பது, மார்க்சிய அடிப்படைக்களை குழப்புவதும், திருத்துவதும், விவாதித்துக் கொண்டேயிருப்பதும் ஆகும். இந்த விவாத்தில் காலம் கடத்தாமல் எனது ஆக்கப் பணிகளை தொடர்கிறேன்.

    அ.கா.ஈஸ்வரன் அலைபேசி 9283275513

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கடிதம் கிடைத்தது. அதில் நான் கட்டுரையை முழுமையாகப் படிக்கப் போவதில்லை, விவாதிக்கப் போவதில்லை, காலவிரய‌ம் என்று தாங்கள் கூறியிருப்பது கண்டு மிகவும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
      'மார்க்சிய மூலவர்களின் நூல்களை புரிந்து கொள்ளாமல், மார்க்சியத்தை திருத்துபவர்களின் நூல்களில் மூழ்கி கிடக்கும் தங்களின் கருத்துக்கள் வெறும் அபத்தக் குவியலாக காட்சியளிக்கிறது'
      'இதில் மேற்கட்டமைப்பின் வரம்பையும், சார்பான சுதந்திரத்தையும் மார்க்சிய மூலவர்கள் கூறியதை மறைத்து தப்பும் தவறுமாக விளக்கப்படுத்தும் தங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும விளக்கம் கொடுப்பதென்பது கால விரயமேயாகும்'
      'மார்க்சியத்தை வளர்த்தெடுப்பது என்பது மார்க்சியம் எதிர்த்த தத்துவங்களை மீண்டும் மார்க்சியத்தினுள் புகுத்துவதற்கேயாகும். இதனைத்தான் தங்களது படைப்பு முழுவதும் வெளிப்படுத்துகிறது. தங்களின் படைப்பு முழுமையாகப் படிக்கவில்லை, படிக்கப் போவதுமில்லை'
      'விவாதம் என்பது ஒரு முடிவை நோக்கியேயாகும், ஆனால் தங்களைப் போன்றவர்களின் விவாதம் என்பது, மார்க்சிய அடிப்படைக்களை குழப்புவதும், திருத்துவதும், விவாதித்துக் கொண்டேயிருப்பதும் ஆகும். இந்த விவாத்தில் காலம் கடத்தாமல் எனது ஆக்கப் பணிகளை தொடர்கிறேன்'
      என்று கூறியிருக்கிறீர்கள். சரி. நீங்கள் இது போன்ற அபத்தங்களை புறந்தள்ளிவிட்டு போய்விட முடியுமா? இதற்கு முடிவுகட்டி விட்டுதான் நீங்கள் இனி அடுத்த அடியை முன்னால் வைக்க‌முடியும் என்பதை ஏன் மறந்து விட்டீர்கள் என்று தான் புரியவில்லை.
      மார்க்சியக் கோட்பாடுகளிலும், இந்திய தத்துவத்திலும் ஆழமான புரிதலும் அக்கறையும் கொண்ட தங்களின் ஆக்கப்பணிகளுக்கிடையே, தங்கள் தத்துவ பணிகள் குறித்து எனது போன்ற அபத்தங்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிதான் வரும். ஆனால் அதை நீங்கள் முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. அதற்கு நேரம் ஒதுக்கி பதில் சொல்லியே ஆகவேண்டும்.
      இயற்கையில் சமூகத்தில் ஒரே விசயம் திரும்ப திரும்ப ஒராயிரம் முறை நடந்து கொண்டே இருக்க வில்லையா? பழையதானலும் புளித்துப் போனாலும் மீண்டும் மீண்டும் சலிப்படையாமல் விவாதித்துக் கொண்டே இருக்கவேண்டும். கருத்து முதன்மையா அல்லது பொருள் முதன்மையா என்ற விவாதம் எத்தனை ஆயிரம் வருடங்களாக எத்துணை ஆயிரம் பேரால் விவாதிக்கப்பட்டுவருகின்றன! ஆனால் இச்சிக்கல் தீர்ந்து விட்டதா? இன்னமும் விவாதித்துக் கொண்டுதானே இருக்கிறோம். எனது தாழ்மையான கருத்துக்களை தங்கள் முன்வைக்க விரும்புகிறேன். 'மார்க்சியத்தை திருத்துபவர்களின் நோக்கங்களை' முன்னிருத்தாமல் கருத்துக்களின் நிலைபாடுகளின் அடிப்படையில் பதிலளித்தால் என் போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

      நீக்கு
    2. 2. நான் முன்வைத்த‌/வைக்கும் சில கேள்விகள்:
      மார்க்சின் நிர்ணயத்திற்கும் எங்கெல்சின் இறுதி நிர்ணயத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? 'இறுதி நிர்ணயம்' என்று எங்கெல்சு வந்தடைந்த‌ முடிவுக்குக் காரணம் என்ன? அதன் பின்னணி என்ன?
      அடித்தள மேற்கட்டுமானத்தை விமரிசிக்கும் நீங்கள் அடித்தள நிர்ணயவாதத்தை ஏன் விமரிசிக்கவில்லை?
      அடித்தள, மேற்கட்டுமான உறவு குறித்து மாவோ எந்த பங்களிப்பையுமே செய்யவில்லையா? மாவோவின் பங்களிப்பை எவ்வாறு எடுத்துக்கொள்வது?
      உற்பத்தி, மறுஉற்பத்தி என்பதை பொருளாதார அடித்தளமாகச் சுருக்கிப் பார்க்கமுடியுமா?
      பொருளின் மாற்றத்தை குறிப்பாக வரையறுத்து கூறமுடியுமா? நிர்ணயவாதம் என்பது என்ன?
      மதம் தோன்றியது தற்செயலா? அவசியமா?
      எல்லாவற்றையும் பொருளாதார அடிப்படையிலிருந்து விளக்கமுடியுமா? எல்லாவற்றையும் பொருளாதார அடிப்படையிலிருந்து விளக்கமுடியுமா? முடியாது என்றால் அவ்வாறு விளக்கமுடியாத மேல்கட்டுமான கூறுகளின் பங்கு என்ன?
      சமூகம் வ‌ர‌லாற்று ரீதியான‌து ம‌ட்டுமா? அது தர்க்க ரீதியிலானதும், இயங்கியல் ரீதியிலாதும் என்று சேர்த்து புரிந்து கொள்ள வேண்டாமா? பொருள் வ‌ரைய‌றைக்குட்ப‌ட்ட‌தா? வ‌ரைய‌றைக்கு அப்பாற்ப‌ட்ட‌தா?
      பொருள் தனிமுதலானதா? சார்புநிலையானதா? பொருளும் சார்புநிலைவாத அடிப்படையைக் கொண்டவையா? அல்லது அது தனிமுதல் உண்மையா? இதை எவ்வாறு புரிந்துகொள்வது?
      பொருள்முத‌ல்வாத‌ம் சார்புநிலைவாத‌த்தை க‌ட‌ந்து த‌னிமுத‌ல்வாத‌த்தை அடையுமா? அதாவது தனிமுதலான புறநிலை உண்மை என்பது என்ன?
      பொருள் சார்புதன்மையானதுமில்லை, தனிமுதலானதுமில்லை என்று கூறுகிறீர்கள். ஆக பொருள் என்பது என்ன?
      பொருளாதார நிர்ணயவாதம் குறித்து மேல்கட்டுமானவாதிகள்/ பண்பாட்டு மார்க்சியவாதிகள் கூறும் விமரிசனத்திற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்? அவர்கள் மேல்கட்டுமான கூறுகள் குறித்த ஆய்வு பொருள் முதல்வாத அடிப்படையில் இல்லை என்றாலும் அவற்றை முற்றிலும் புறந்தள்ளி விடமுடியுமா?
      ஏற்கனவே நான் கேட்டிருந்த‌ இந்தக் கேள்விகள் உண்மையில் எனது புரிதலுக்கான தேவையிலிருந்தும், நான் முன்னர் வைத்திருந்த கருத்துக்களை மனதளவில் மாற்றிக்கொள்ளும் தயார்நிலையிலிருதும் மட்டுமே கேட்டிருந்தேன். ஆனால் உங்களது பதில்கள் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னமும் அதற்கான தேவை எனக்கு இருப்பதாக‌ நான் உணர்கிறேன்.

      நீக்கு
    3. நான் முன்வைத்த/வைக்கும் சில கேள்விகள்:

      மார்க்சின் நிர்ணயத்திற்கும் எங்கெல்சின் இறுதி நிர்ணயத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? 'இறுதி நிர்ணயம்' என்று எங்கெல்சு வந்தடைந்தமுடிவுக்குக் காரணம் என்ன? அதன் பின்னணி என்ன?

      மார்க்சின் நிர்ணயத்திற்கும் எங்கெல்சின் இறுதி நிர்ணயத்திற்கும் வேறுபாடு ஏதும் கிடையாது. மார்க்சையும் எங்கெல்சையும் பிரித்துப் பார்க்க விரும்புவர்கள் இதில் வேறுபாட்டை காணத் துடிக்கின்றனர்.

      'இறுதி நிர்ணயம்' என்று எங்கெல்சு வந்தடைந்தமுடிவுக்குக் காரணம். மார்க்சிடமிருந்து வேறுபட்ட விளக்கத்திருந்து அல்ல. மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்ற கருத்தை நிர்ணயவாதமாக புரிந்து கொண்டவர்களின் புரிதலின் தவறை சுட்டும் போது விளக்கத்துக்கு பயன்படுத்திய வார்த்தை. இதனை மார்க்சோடு முரண்பட வைப்பது வீண்முயற்சி.

      அடித்தள மேற்கட்டுமானத்தை விமரிசிக்கும் நீங்கள் அடித்தள நிர்ணயவாதத்தை ஏன் விமரிசிக்கவில்லை?

      இதற்கான விமர்சனத்தை எங்கெல்சின் வழியில் எனது நூலில் எழுதியது தங்களின் பார்வையில் படாமல் போனதற்கு காரணம், எல்லவற்றையும் பற்றிய தங்களின் முன் கணிப்பே ஆகும். மேலும் மார்க்சிய விரோதிகளின் நூல்கள் வாசிப்பே இதற்கு காரணமாகும். முதலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை முன்வைக்கும் முறையும் அதன் படி அவர்கள் எழுதிய படைப்புகளையும் படித்து பார்க்க வேண்டும். இதனைப் புரிந் கொண்ட பிறகு மற்றவர்களின் நூலை படித்தால் சுய தெளிவு அதனை அணுகலாம். ஆனால் தவறானவர்களின் வழிகாட்டுதலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களை வாசிக்கப்படும் போது தவறான முடிவிற்கே வரமுடியும்.

      எனது நூலில் நிர்ணய வாதத்தைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் தங்களின் கண்ணுக்குப் படவில்லை என்றால் நான் தொகுத்து தரத் தயாராக இருக்கிறேன். கடிதம் வழியாகவா அல்லது வலைபூ வழியாகவா என்பதை தங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

      அடித்தள, மேற்கட்டுமான உறவு குறித்து மாவோ எந்த பங்களிப்பையுமே செய்யவில்லையா? மாவோவின் பங்களிப்பை எவ்வாறு எடுத்துக்கொள்வது?

      மேற்குறிப்பிட்ட பதிலின் அடிப்படையில் தான் இதற்கும் பதிலளிக்க முடியும். முதலில் மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதனை வளர்த்தவர்களின் படைப்பையும் சிதைத்தவர்களின் படைப்பையும் படிப்பது நல்லது. அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய அடைப்படையை புரிந்து கொள்வதற்கு, நான் லெனினையும் அழைத்துவரவில்லை என்பதை நீங்கள் பார்க்கவில்லை.

      “ஏற்கனவே நான் கேட்டிருந்தஇந்தக் கேள்விகள் உண்மையில் எனது புரிதலுக்கான தேவையிலிருந்தும், நான் முன்னர் வைத்திருந்த கருத்துக்களை மனதளவில் மாற்றிக்கொள்ளும் தயார்நிலையிலிருதும் மட்டுமே கேட்டிருந்தேன்.”
      என்ற தங்களின் கருத்தில் உண்மையிருக்குமாயின். மேலே நான் கூறி வழியில் செல்லும் போது கண்டிப்பாக தங்களின் மற்ற கேள்விகளுக்கு விடை தானே புரியும். இல்லை என்றாலும் விளக்கம் அளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். பின்னைய கேள்விகள் எல்லாம் முன்னைய கேள்விகளின் விடை தெளிவான பின்பே புரிந்திட முடியும். அதனால் முன்னைய கேள்விகளுக்கான விளக்கத்தை மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரிடம் இருந்து புரிந்து கொண்டு தொடர்ந்து செல்லவதே சரியானதாக இருக்கும்.

      எனது முதல் நூல் மார்க்சியத்தை படிக்கும் முதல் வாசகனுக்காக படைக்கவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். மார்ச்சியத்தை சிதைக்க முயற்சிப்பவர்கள் மார்க்சின் இரு கண்டுபிடிப்பான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் உபரி மதிப்பு பற்றி அதிக குழப்புகின்றனர் என்பதை நான் புரிந்திருக்கிறேன். இதன் அடிப்படையில், எனது அடுத்த நூல் முதல் வாசகனுக்கானதாக இருக்கும்.

      அ.கா.ஈஸ்வரன் அலைபேசி 9283275513

      நீக்கு
  4. அண்ணா.நாகரத்தினம்:-
    அடித்தள மேற்கட்டுமானத்தை விமரிசிக்கும் நீங்கள் அடித்தள நிர்ணயவாதத்தை ஏன் விமரிசிக்கவில்லை?

    நூலில் காணப்படும் அடித்தள நிர்ணயவாதம் பற்றிய விமர்சனத்தை காணமுடியாமல் போகும் அளவுக்கு கண்ணை மறைப்பது எது என்பதை முதலில் நீங்கள் ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.

    “அடித்தளம் தான் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதனை வாய்ப்பாடு போல் புரிந்து கொண்டவர்கள் மேற்கட்டமைப்பை அடித்தளமே உருவாக்கிக் கொள்ளும் என்ற தவறான புரிதலுக்கு சென்றுவிடுகின்றனர்.” பக்கம்- 11

    “எங்கெல்ஸ் சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை. என்று எழுதியிருக்கிறார். ஆதே போல் மேற்கட்டமைப்பின் சுயேச்சையை மறுக்கும் போது, மேற்கட்டமைப்பு வரலாற்றில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று தவறாக புரிந்கொண்டுள்ள சித்தாந்திகளின் முட்டாள் தனமான கருத்தை மறுக்கிறார் எங்கெல்ஸ்.” பக்கம்- 12

    இந்நூலின் முன்னுரையிலேயே அடித்தள நிர்ணயவாத தவறான புரிதலை விமர்சித்துள்ளேன்.

    அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்ற முதல் இயலிலேயே நிர்ணயவாதம் விமர்சிக்கப்படுகிறது.

    “மேற்கட்டமைப்பு என்பதின் தன்முனைப்பான செயற்பாட்டை மறுத்திடாமலும், இதன் செயப்பாட்டின் இன்றியமையாததை மார்க்சியம் அறிந்திடாமலும் இல்லை, அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம், மேற்கட்டமைப்பில் உடனே, தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் கூறவில்லை, மேற்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அடித்தளத்தால் தீர்மானிக்கப்படுகிறது. மேற்கட்டமைப்பு, அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட வகையில் சுதந்திரத்தோடு செயல்படுகிறது என்பதைத்தான் மார்க்சியம் வலியுறுத்துகிறது.”- பக்கம் 24

    மேற்கட்டமைப்பு சமூக உணர்வுநிலையும் அதன் வடிவங்களும் என்ற மூன்றாம் இயலின் தொடக்கத்திலேயே நிர்ணயவாதம் மறுக்கப்படுகிறது.

    “சமூக வாழ்நிலை, சமூக உணர்வுநிலையைத் தோற்றுவிக்கிறது என்று சொல்லும் போது, அவை ஒரேவிதமாக வெளிப்படுத்துகிறது என்று பொருள்கொள்ள முடியாது. வர்க்க சமூதாயத்தில் சமூக வாழ்நிலை, மாறுபட்ட சமூக உணர்வுநிலையாகத்தான் பிரதிபலிக்கும். சமூகத்தில் காணும் வர்க்கப் போராட்டத்தின் ஊற்றை இந்தப் பிரதிபலிப்பில் காணமுடிகிறது.”- பக்கம் 44

    எங்கெல்ஸ் அக்டோபர் 27, 1890 ஆண்டு ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதத்தை முன்வைத்து, எழுதியது நூலின் இறுதியில் வருகிறது.

    “பொருளாதார இயக்கத்தின் அரசியல், இதர பிரதிபலிப்புகள் அந்த இயக்கத்தின் மீது செலுத்துகின்ற ஒவ்வொரு எதிர்த்தாக்கத்தையும் நாங்கள் மறுப்பதாக கருதினால், அவர் வெறும் கற்பனையுடன் போராடுகிறார் என்று தெளிவாக இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறுயிருக்கிறார்.” – பக்கம்- 92

    பதிலளிநீக்கு